மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

சிறப்புப் பார்வை: காணாமல்போன உணர்வுப் போராட்டம்!

சிறப்புப் பார்வை: காணாமல்போன உணர்வுப் போராட்டம்!

மதரா

நூற்றாண்டு கண்டுள்ள தமிழ் சினிமாவில் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் மட்டும் பாதிக்கும் மேல் இருக்கும். காதலைச் சலிக்கச் சலிக்கப் பேசும் தமிழ் சினிமாவில், காதலின் உளவியலை நுட்பமாகப் பேசிய படங்கள் வெகு சொற்பமே. காதலித்துவிட்டு மணம் முடிக்க முடியாமல் போன காதலர்கள் கட்டாயத்தின்பேரில் வேறு யாருடனோ திருமணம் செய்துகொண்டு வாழும்போது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பழைய காதலியையோ காதலனையோ சந்திக்கும்போது எழும் உணர்ச்சிகளையும் மனப் போராட்டங்களையும் பதிவுசெய்ய முயற்சித்துள்ள படம் தங்கர் பச்சானின் ‘களவாடிய பொழுதுகள்’.

பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவான இந்தப் படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தங்கர் பச்சானின் ‘சருகுகள்’ குறுநாவலை தழுவி உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்கியதோடு தங்கர் பச்சானே ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். பி.லெனின் படத்தொகுப்பு செய்துள்ளார். பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

டாக்ஸி டிரைவரான பொற்செழியன் (பிரபு தேவா) சாலையில் விபத்துக்குள்ளாகி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் சௌந்தர்ராஜனை (பிரகாஷ் ராஜ்) மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றுகிறார். அப்போது தனது முன்னாள் காதலி ஜெயந்திதான் (பூமிகா) அவரது மனைவி எனத் தெரியவருகிறது. அதன்பின் இருவருக்குள்ளும் நடக்கும் உளவியல் போராட்டத்தை உணர்வுபூர்வமாகக் கூற முயற்சித்துள்ளார் இயக்குநர்.

படத்தில் வில்லன் என்று யாருமில்லை. பூமிகாவின் தந்தையின் செயலும் ஒரே காட்சியில் வந்துமுடிகிறது. சூழ்நிலையும் கண்ணியத்தை கட்டிக்காக்கும் போராட்டமுமே பிரதான கதாபாத்திரங்களுக்குப் பெரும் சவாலாக இருக்கின்றன. பிரபு தேவா, பிரகாஷ் ராஜ், பூமிகா, இன்ப நிலா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.

லெனின் படத்தொகுப்பில் அதிக வெட்டுகள் அற்ற நீண்ட காட்சிகள் படத்தை யதார்த்தமாக்க முயற்சிக்கின்றன. ஆனால், மேம்போக்கான காட்சியமைப்பில் அவை பலனளிக்காமல் போகின்றன.

எரிச்சலூட்டும் இடைச்செருகல்கள்

கதை பழைய காதலர்களின் மனவோட்டங்களோடு பயணமாகும்போது சம்பந்தமில்லாமல் கதாநாயகனின் சமூகச் சிந்தனையை வெளிப்படுத்தியே ஆக வேண்டும் எனப் படம் முழுக்க வரும் வசனங்களும் சில காட்சிகளும் அந்நியப்பட்டு நிற்கின்றன. அந்த இடங்களில் எல்லாம் பிரபு தேவா மறைந்து தங்கர் பச்சானே துருத்திக்கொண்டு தெரிகிறார். படத்துக்குத் தேவையில்லாவிடினும் இடம்பெறும் குத்துப் பாடலைப் போலவே ‘சேரன் எங்கே சோழன் எங்கே...’ பாடலையும் பார்க்க முடிகிறது. பெரியார், ஜீவா, அண்ணாதுரை ஆகியோர் தோன்றி அறிவுரை வழங்கும் காட்சிகள் கதையோட்டத்துக்குச் சம்பந்தமில்லாத இடைச்செருகல்களே.

கதாநாயகன் பணத்தைப் பெரிதாக எண்ணாதவன் எனப் படத்தின் தொடக்கத்திலிருந்தே கூறப்படுகிறது. கதாநாயகிக்கும் அவனது குணம் தெரியும். இருப்பினும் அவனது வறுமை காரணமாக அவனுக்கு உதவ முயற்சிக்கிறாள். அதை அவன் நிராகரிக்கிறான். ஆனால், மாறி மாறி ஒவ்வொரு முறையும் அதைவிட அதிகமான பணம் தர முயல்வதும் அதை அவன் மறுப்பதுமாகக் காட்சிகள் அமைக்கப்படுவது அயர்ச்சியை உண்டுபண்ணுகிறது. அவன் சிறைக்குச் சென்றதற்கான காரணமே கதாநாயகியின் தந்தைதான் என்று கூறிய பின்னரும் அதுபற்றி எந்தவிதமான அதிர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் சதா அவனை “ஏன் என்னை விட்டுப் போனாய்?” என்று கேட்டுக்கொண்டிருப்பது கதாநாயகனை மட்டுமல்லாமல் ரசிகனையும் சோதிக்கிறது.

எதிர்கொள்ளப்படாத சவால்

பழைய காதலர்கள் சூழ்நிலை காரணமாகச் சந்திக்க நேரும்போது ஏற்படும் உணர்வு நிலையை இருவரும் எப்படிக் கையாளுகின்றனர் என்பதுதான் படத்தின் அடிநாதம். இத்தகைய உணர்வு நிலையின் ஊசலாட்டங்களையும் தத்தளிப்புகளையும் கையாள்வது இருவருக்குமே சவாலான அனுபவம். இந்த உணர்வு நிலையை அதன் உள் அடுக்குகளோடும் சிக்கல்களோடும் நுட்பமாகச் சித்திரிக்கும் சவாலை எதிர்கொள்ளாமல் அதன் கனத்தைக் குறைத்துவிடுகிறார் இயக்குநர். கதாநாயகி உறவுகொள்ளத் துடிப்பதும் அதற்கான சூழ்நிலைகளை வலுகட்டாயமாக உருவாக்குவதும் கதாநாயகன் அதை பல இடங்களில் தவிர்த்துச் செல்வதுமே அதிகமாகக் காட்டப்படுகின்றன. இருவருக்குமுள்ள மனநெருக்கடியை வெளிக்கொண்டு வராமல் கதாநாயகனைப் பரிசுத்தமானவனாக்கி, கதாநாயகியை உணர்வுபூர்வமாகப் பலவீனமானவளாக்கி, கதையைத் தட்டையாக மாற்றிவிடுகிறார். அதாவது, படைப்புரீதியான சவாலை எதிர்கொள்ளாமல் நழுவிவிடுகிறார்.

இருவருக்குமுள்ள உணர்வுப் போராட்டங்களைப் பார்வையாளரும் உணர வேண்டுமானால் அவர்கள் இருவருக்குமிடையே இருந்த காதலின் அழுத்தத்தை உணர்த்தியிருக்க வேண்டும். அலுப்பை ஏற்படுத்தும் காதல் காட்சிகள் அதைப் பார்வையாளருக்குக் கடத்தத் தவறிவிட்டன. பிளாஷ் பேக் காட்சிகளுக்கு மிகக் குறைவான நேரமே வழங்கப்பட்டிருந்தாலும் அழுத்தமான ஒன்றிரண்டு காட்சிகளால் காதலின் அழுத்தத்தை உணர்த்தியிருக்க முடியும். இதே தங்கர் பச்சான் இயக்கிய அழகி படத்தின் இரு பாடல்களின் மாண்டேஜ்களில் அவர்களின் இளம் பிராயத்து வாழ்க்கையே அழகாகக் கடத்தப்பட்டிருக்கும். பார்வையாளரும் தன் வாழ்க்கையோடு அதைத் தொடர்புபடுத்திப் பார்ப்பதற்கான வெளி அதில் இருந்தது. இந்தப் படத்தில் அது தவறவிடப்பட்டிருந்ததால் திரையில் நடப்பவற்றோடு பார்வையாளர் அந்நியப்பட்டு நிற்கிறார். எல்லாமே எல்லாமே யாருக்கோ நடப்பதுபோலவே உணரவைக்கின்றன.

அழகியும் களவாடிய பொழுதுகளும்

வேறொரு பின்னணியில் உருவாக்கியிருந்தாலும் அழகி படத்துக்கும் களவாடிய பொழுதுகளுக்கும் நிறைய தொடர்பிருக்கிறது.

பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள தனது காதலனை அல்லது காதலியைத் தன்னோடு அழைத்துவந்து அவர்களுக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்க முயலும் பாத்திரங்கள் இரண்டு படங்களிலுமே உள்ளன. அழகியில் பார்த்திபன் என்றால் இதில் பூமிகா. ஆனால் அவர்களது வருகையை இவர்களது வாழ்க்கைத் துணைகள் அணுகுவதில் சில வேறுபாடுகள் உள்ளன. இதில் பிரகாஷ் ராஜ் பிரபு தேவாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். அவரது தொழிலில் மட்டுமல்லாமல் மருத்துவமனையில் பூமிகா அனுமதிக்கப்பட்டிருக்கும்போதும் பிரபு தேவாவைப் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு பெங்களூரு போகும் அளவுக்கு உள்ளது. வழக்கமான நம் தமிழ் சினிமாவில் காதலர்கள் சேர முடியாமல் போகும்போது காதலியின் கணவன் வில்லன் போன்று சித்திரிக்கப்படுவார். ஆனால், வில்லன் நடிகரான பிரகாஷ் ராஜ் நடித்திருந்தாலும் அந்தக் கதாபாத்திரத்தைப் பக்குவப்பட்ட மனிதனாக தங்கர் பச்சான் படைத்திருப்பது கவனிக்கத்தக்கது. படத்தின் இறுதியில் உண்மை தெரிந்த பின்னரும்கூட அது தொடர்கிறது.

ஆனால், அழகியில் நந்திதா தாஸின் இருப்பு தேவயானியைத் தொந்தரவு செய்கிறது. நந்திதா வேலைக்காரியாகவே வந்து போகிறார். இதில் பிரபு தேவாவின் மனதைப் புரிந்துகொள்ளாமல் செயல்படுபவராகவே அவர் மனைவி இன்ப நிலா கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. க்ளைமாக்ஸ் காட்சியில் அவள் சொல்லும் ஒரு வசனத்தைத் தவிர, வேறு எங்கும் அவள் பக்குவமாக நடந்துகொள்வதாகச் சித்திரிக்கப்படவில்லை.

இரு படங்களிலும் ஆண் கதாபாத்திரம் சமூகம் கற்பித்துள்ள இந்த ஒழுக்க வரையறைக்குள் கறாராக நிற்கிறது. பரந்த மனம் உள்ளவர்களாக ஆண்கள் சித்திரிக்கப்படுகிறார்கள். அழகியில் நந்திதாவுக்குக் கணவன் இல்லை. இதில் பூமிகாவுக்குக் குழந்தை இல்லை. இந்தக் காரணம் பெண் கதாபாத்திரத்தை ஆண் கதாபாத்திரத்தோடு நெருங்கச் செய்வதாகக் காட்டப்படுகிறது. ஆனால், அவனோ கறாராக விலகிச்செல்கிறான். ஆண் பெண் சித்திரிப்பில் இருக்கும் இந்த வேற்றுமை படத்தின் பலவீனங்களில் ஒன்று. இந்த வேறுபாடு ஆண் மையச் சிந்தனையிலிருந்து எழுவதாகவே தோன்றுகிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

செவ்வாய் 2 ஜன 2018