மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

2017: இந்தியப் பொருளாதார நிகழ்வுகள்!

2017: இந்தியப் பொருளாதார நிகழ்வுகள்!

சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தியது முதல் அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தைத் தனியார்மயமாக்குவது வரை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2017ஆம் ஆண்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

ஏப்ரல் 1 : எஸ்பிஐ வங்கிகள் இணைப்பு!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஐந்து துணை வங்கிகளும் பாரதிய மகிளா வங்கியும் அதனுடன் ஒன்றிணைக்கப்பட்டது. இதன் மூலம் அவ்வங்கியின் சொத்து மதிப்பு ரூ.32 லட்சம் கோடியாக உயர்ந்ததோடு, உலகின் மிகப்பெரிய 50 வங்கிகளுக்குள் எஸ்பிஐ தன்னையும் இணைத்துக் கொண்டது.

ஜூன் 28: ஏர் இந்தியா தனியார்மயமாக்கல்!

ரூ.52,000 கோடி கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவையும் அதன் ஐந்து துணை நிறுவனங்களையும் பங்கு விற்பனை வாயிலாகத் தனியார்மயமாக்குவதற்கு மத்திய அமைச்சரவைக் குழு தனது ஒப்புதலை வழங்கியது.

ஜூன் 16: எரிபொருள் விலை நிர்ணயம்!

ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைப் போன்று இந்தியாவும் தினசரி பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையைத் தினசரி மாற்றம் செய்யும் நடவடிக்கையைத் தொடங்கியது.

ஜூலை 1: சரக்கு மற்றும் சேவை வரி!

அனைத்து மறைமுக வரிகளையும் ஒன்றிணைத்து ஒரே வரி விதிப்பு நடைமுறையைக் கொண்டு வரும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது. இதில் 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு கட்டங்களாக வரி முறை அமலானது.

ஜூலை 25: பங்குச் சந்தையில் உச்சம்!

தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிப்டி புதிய உச்சத்தைத் தொட்டு 10,000 புள்ளிகளை எட்டியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகபட்சமாக இந்த உயர்வு ஏற்பட்டதால் சர்வதேச முதலீட்டாளர்களின் பார்வை அதிகளவில் இந்தியா மீது திரும்பியது.

அக்டோபர் 24: வங்கி மேம்பாட்டுக்கு மூலதனம்!

வங்கித் துறை மேம்பாட்டுக்காகவும், கடன் வழங்குதலை அதிகரிக்கவும், தனியார் முதலீடுகளை உயர்த்தவும் அரசு சார்பாக வங்கித் துறைக்கு ரூ.2.11 லட்சம் கோடி மூலதனம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அக்டோபர் 31: எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சம்!

உலக வங்கி வெளியிட்ட எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா அதிரடியாக 30 இடங்கள் முன்னேறி முதன்முறையாக முதல் 100 இடங்களுக்குள் நுழைந்தது.

நவம்பர் 17: மூடிஸ் கடன் மதிப்பீட்டு உயர்வு!

முந்தைய 14 ஆண்டுகளில் அதிகபட்சமாக இந்தியாவின் கடன் பெறும் தகுதி மதிப்பீட்டுக் குறியீடு இரண்டு கட்டங்கள் முன்னேறியதாக மூடிஸ் நிறுவன மதிப்பீட்டறிக்கை வெளியானது.

செப்டம்பர் 25: பிரதமரின் ஆலோசனைக் குழு!

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமரின் ஆலோசனைக் குழு பிபெக் டெப்ராய் தலைமையில் புத்துயிர் பெற்றது.

டிசம்பர் 28: வங்கி திவால் குறியீட்டில் மாற்றம்!

வங்கி திவால் சட்டத்தைப் புதுப்பித்து வங்கித் துறை மேம்பாட்டுக்கான முயற்சியில் சட்டத் திருத்த நடவடிக்கையில் அரசு ஈடுபட்டது. இந்த ஆண்டில் அமலாகவுள்ள இச்சட்டத்தின் வாயிலாகச் சிறிய முதலீட்டாளர்களின் வட்டித் தொகை பாதுகாக்கப்படும்.

டிசம்பர் 29: பங்குச் சந்தையில் இந்தியா ஆதிக்கம்!

2017ஆம் ஆண்டின் முடிவில் உலகளவில் இந்தியப் பங்குச் சந்தை சிறந்த செயல்பாட்டுடன் தனது ஆண்டை நிறைவு செய்துள்ளது. மும்பைப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் தேசியப் பங்குச் சந்தை நிப்டி ஆகிய இரண்டும் 28 மற்றும் 29 சதவிகித வளர்ச்சியைப் பதிவுசெய்திருந்தன.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

திங்கள் 1 ஜன 2018