மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

சிறப்புத் தொடர்: முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்!

சிறப்புத் தொடர்:  முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்!

அருள்செல்வன்- நேர்காணல்: 6

(கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சுற்றுச்சூழல் சம்பந்தமான பிரச்சினைகளைப் போக்கும் பணியில் நீண்ட வருடங்களாக அருள்செல்வன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். களப் பணியாளர். எப்போதும் இன்முகம் காட்டி, மக்கள் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுப்பவர்; கடலூரில் ஏற்பட்டிருக்கும் பல ஆக்கபூர்வமான சுற்றுசூழல் மாற்றங்களில் இவருடைய பங்களிப்புக்கும் முக்கிய இடம் இருக்கிறது.)

சந்திப்பு: தமயந்தி

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு கடலூரில் ஏன் போடப்பட்டது?

இந்தியாவிற்கே முன்மாதிரியாக, டெங்கு பரவுகிறது என்றதும், மக்கள்மீது கொண்டிருந்த அக்கறையின் காரணமாக, அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த திருவாளர் ராஜேந்திர் ரத்னு 144 தடை உத்தரவு பிறப்பித்தார். மட்டுமல்லாமல் நிறைய கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அரசு அலுவலகங்களைச் சுத்தமாக வைத்திருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் வாரம் ஒரு நாள் எல்லாரும் சேர்ந்து தூய்மைப் பணிகள் (Mass Cleaning) மேற்கொள்ளப்பட்டது. டெங்குவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதுதான் மாநில அளவில் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. சிலர் இவைகளை எதிர்த்தாலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அதிகாரிகள் அனைவருமே இறங்கி வேலை செய்தார்கள்.

கடலூர் நிஜமாகவே கடலாடும் ஊராக மாற வாய்ப்புகள் உள்ளனவா? ஆம் என்றால் அவை என்ன?

கடலூர் பன்முகத்தன்மை கொண்ட ஒரு ஊர். அனைத்து தரப்பட்ட பணிகள் செய்யும் மக்களும் இருக்கிறார்கள். ஏற்கெனவே சொன்னதுபோல, புதிய புதிய துறைமுகங்கள் உருவாக்குவது, பல தொழில் திட்டங்களுக்கு விவசாய நிலங்களை நிலப்பயன்பாடு மாற்றம் செய்வது என்பன போன்றவை கடலின் நிலைத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு உயிரோட்டமான கடற்கரை என்பது மணல் இயக்கத்தைப் பொறுத்தது. மணல் ஆற்று முகத்துவாரங்களில் இருந்து வரும். ஆனால், இன்றைக்கு பெரும்பாலான முகத்துவாரங்கள் ஆழமில்லாமல் மூடிவிட்டன. நம்முடைய செயல்பாடுகளின் காரணமாக இந்த மணல் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆகவே, இந்த மாதிரியான திட்டங்கள் ஈடு செய்யமுடியாத இழப்புகளை ஏற்படுத்தும்.

நம்முடைய இந்தச் செயல்பாடுகளினால் மீன் ஆழக் கடலுக்குள் பெயர்ந்து விடுவதால், கரையைச் சார்ந்த நம் பாரம்பரிய மீன்பிடி முறைகள் பயன்தராமல் போய்விடும். உள்கட்டமைப்புகள் உருவாகும். ஆனால் இதனால் பயன்பெறப் போவது யார்? எத்தனைத் துறைமுகங்கள் மீனவர்களுக்குப் பயன்தரப் போகிறது? எத்தனை மீனவர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்? இப்படிப் பார்த்தால், கடலூர் கடலாடும் ஊராக மாற வாய்ப்பு இருக்கிறதா என்றால் அது ஒரு கேள்விக்குறிதான். வளர்ச்சித் திட்டங்கள் வேண்டுமென்பதை நாம் மறுக்கவில்லை. அதே சமயம், அங்கிருக்கும் சூழலுக்குக் கேடு வராமல் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதுதான் சரியானதாக இருக்கும்.

மற்றபடி, வளர்ச்சி என்பது பேப்பரில் கணக்குப்போட்டுச் சொல்லலாமே ஒழிய உண்மையான வளர்ச்சியாக இருக்காது. உண்மையான வளர்ச்சி என்பது மக்களுடைய வாழ்க்கைத்தர மேம்பாடுதான். பொருளாதார இலாபத்தை மட்டுமே பார்ப்பதுதான் பிரச்சினையாகி விடுகிறது. கடலூர் கடலாடும் ஊராக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது, ஆனால், இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

கடலூருக்காக ஆத்மார்த்தமாகப் பணியாற்றிய ஒரு அரசு அதிகாரியை நீங்கள் சுட்டிக் காட்ட இயலுமா?

ஒவ்வொரு விஷயத்தில் ஒவ்வொரு அதிகாரியின் பணியைச் சொல்லலாம். நான் ஏற்கெனவே சொன்னதுபோல, ஆட்சியர் ராஜேந்திர ரத்னு பிளாஸ்டிக் ஒழிப்பு, பூஜ்ஜிய கழிவு நிலை, டெங்கு ஒழிப்பிற்காக 144 தடை, நீர் பிடிப்புப் பகுதிகளை மீட்டெடுப்பதற்கான நீர் நடை, கடற்கரை சுத்தப்படுத்தும் முகாம் போன்றவற்றைச் செய்திருக்கிறார். எல்லாவற்றையும் பெயரளவில் இல்லாமல் அவரே இறங்கி வந்து செய்வார். 12-12-12 என்று அரசுப் பதிவேட்டில் பதிவானது பிளாஸ்டிக் தடை. அதாவது 12ஆம் தேதி, 12ஆம் மாதம், 12ஆம் வருடம்(2012) அறிமுகப்படுத்தப்பட்டது. இப்படியாக முன்மாதிரியான ஆட்சியர் என்று அவரைச் சொல்லலாம். அவருக்கு முன் இருந்த ககன்தீப் சிங்பேடியையும் சொல்லலாம். இன்னும் நிறைய அதிகாரிகள் இருக்கிறார்கள். அவரவர் தம்தம் தகுதியின் அடிப்படையில் செய்து கொண்டிருக்கிறார்கள். மேலே நான் சொன்னவர்கள் எல்லாம் வெளியே தெரிந்தவர்கள். நமக்குத் தெரியாமல் நிறையே பேர் இருக்கலாம். என்னுடைய குறுகிய கால பணிகளில், நான் பார்த்த அளவில், அனுபவத்தில் மட்டுமே நான் இதைச் சொல்லுகிறேன். இப்போதிருக்கிற கடலூர் மாவட்ட ஆட்சியர் பிரஷாந்த் வட்நேர் அவர்கள், முன்னால் பணியாற்றிய மாவட்ட வழங்கல் அலுவலர் தங்கவேல் என பலரைச் சொல்லலாம். இதைப்போல பலர் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் வெளியே தெரிவதில்லை.

உங்கள் குடும்பம் போராடுவதை எப்படி பார்க்கிறது? அவர்களின் சிரமங்களை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?

குடும்பத்திற்கான நேரத்தைச் செலவிட முடியாது. சொல்கிற நேரத்திற்கு வீட்டிற்குப் போக முடியாது. முக்கியமான வேலை இருக்கும்போதுதான் ஏதேனும் பிரச்சினை வரும். பிறந்தநாள், திருமண நாள் போன்ற குடும்ப நிகழ்வுகளில், திருவிழாக்களில் கலந்துகொள்ள முடியாமல் போகும். வீட்டில் இருக்கிறவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால்கூட சில நேரம் உதவ முடியாது. வீட்டிலிருக்கிறவர்கள் சிரமத்தை உணர்ந்திருக்கலாம். ஆனால், நாம் செய்கிற பணிகளைக் குறித்து குடும்பத்தில் வெளிப்படையாகச் சொல்லும்போதும், அதின் பயனாகக் கிடைத்த நன்மைகளை அவர்கள் அறியும்போதும் புரிந்துகொள்கிறார்கள். அப்போது நமக்கு உதவிகரமாக இருப்பார்கள். அவர்களுக்கு அதைப் புரிய வைக்க வேண்டியது நம்முடைய கடமை.

வழக்கமாக அலுவலகத்திற்குச் செல்பவர்கள், அலுவலக நேரம் முடிந்ததும் வீட்டு வேலைகளைச் செய்வார்கள். ஆனால் நமக்கு அப்படி இல்லை. எப்போதுமே பல சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கும். சக மனிதர்களைப்போல கேளிக்கை, பொழுதுபோக்கு என்று இருக்க முடியாது. இதெல்லாம் உணருகிறோம். ஆனால் அதைச் செய்யமுடியாது. ஏனென்றால் அவசர காலத்தில், தேவை கருதி செய்ய வேண்டிய உதவிகளில்தான் நமது தலையீடு இருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் அதுதான் முக்கியத்துவம் பெறுகிறது.

ஒரே நேரத்தில் பல எதிர்பாராத பணிகள் வரும்போது அதைக் கையாளுவது என்பதுதான் சிரமமானது. அதைத் தவிர்ப்பதைப் பற்றி நான் சொல்லவில்லை. அனுபவத்தின் வழியே பக்குவப்படும்பொழுது அதை எளிதாகக் கையாள முடியும். திட்டமிடப்படாத பணிகள் திடீரென வரும்போது, எந்தப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதைச் சரியாகச் செய்தாக வேண்டும்.

செயல்பாட்டாளராக இருப்பதால் எதை இழந்திருப்பதாக நினைக்கிறீர்கள்?

விரும்பி ஒரு செயலைச் செய்யும்போது அதில் இழப்பு என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. யாராவது அதில் வலிந்து தள்ளியிருந்தாலோ, அல்லது எதையாகிலும் எதிர்பார்த்து உள்ளே நுழைந்திருந்தாலோ இழப்புகளைக் குறித்து சிந்திக்க வாய்ப்பிருக்கிறது. எடுத்துக்கொண்ட சில பணிகளைச் செய்ய முடியவில்லையே என்ற ஒரு வருத்தம் மட்டும்தானே இருக்குமே ஒழிய இழப்பு என்று சொல்வதற்கில்லை. யாருக்கு வேலை செய்கிறோமோ அவர்களாலேயே அவமானப்பட நேரிடலாம் என்று காந்தி சொல்லுவார். இதெல்லாம் நம்மைப் பக்குவப்படுத்தி இருக்கிறது. மக்களோடு இணைந்து வேலை செய்யும்போது வெளிப்படைத்தன்மை, நேர்மை, கலந்தாலோசித்து முடிவெடுப்பது இவையெல்லாம் இருந்தால் அப்படி ஒரு சூழலைத் தவிர்க்கலாம்.

(நிறைவு)

பகுதி-1

பகுதி-2

பகுதி-3

பகுதி-4

பகுதி-5

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 1 ஜன 2018