4 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

2016-17ஆம் நிதியாண்டில் இந்தியாவின் அமைப்பு சார்ந்த துறைகளில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதுகுறித்து இந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’2016-17ஆம் நிதியாண்டில் இந்தியாவின் அமைப்பு சார்ந்த துறைகள் ஒரு நாளைக்கு 1,100 பணியிடங்கள் வரை உருவாக்கியுள்ளன. மொத்தமாக 4.16 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 2015-16ஆம் நிதியாண்டை ஒப்பிடும்போது 2016-17ஆம் நிதியாண்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம் அமைப்பு சார்ந்த துறைகளில் 2 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அமைப்பு சார்ந்த துறைகளில் 2016-17ஆம் நிதியாண்டில் முதல் மூன்று காலாண்டுகளில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளை விட பணமதிப்பழிப்புக்குப் பிறகான இறுதிக் காலாண்டில் (ஜனவரி - மார்ச்) வேலைவாய்ப்பு உருவாக்கம் அதிகமாக இருந்தது. அதாவது 2016-17ஆம் நிதியாண்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் 45 சதவிகிதம் அளவு ஜனவரி - மார்ச் வரையிலான காலத்தில் தான் உருவாக்கப்பட்டுள்ளது.