மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

சிறப்புத் தொடர்: முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்!

சிறப்புத் தொடர்:  முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்!

அருள்செல்வன்- நேர்காணல்: 5

(கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சுற்றுச்சூழல் சம்பந்தமான பிரச்சினைகளைப் போக்கும் பணியில் நீண்ட வருடங்களாக அருள்செல்வன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். களப் பணியாளர். எப்போதும் இன்முகம் காட்டி, மக்கள் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுப்பவர்; கடலூரில் ஏற்பட்டிருக்கும் பல ஆக்கபூர்வமான சுற்றுசூழல் மாற்றங்களில் இவருடைய பங்களிப்புக்கும் முக்கிய இடம் இருக்கிறது.)

சந்திப்பு: தமயந்தி

உங்களின் போராட்ட வடிவங்கள் வெற்றி பெற்றுள்ளதாய் உணர்ந்திருக்கிறீர்களா?

இது ஒரு தனிநபர் முயற்சி கிடையாது. இது ஒரு ஆதரவு செயல்பாடு. மாசுவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒரு முன்னெடுப்புதான் இது. இது ஒரு கூட்டு செயல்பாடு. அறிவியல்பூர்வமான உண்மைகளை ஒருவர் எனக்குச் சொல்கிறார், மாதிரி எப்படி எடுப்பது என்று மற்றொருவர் எனக்குச் சொல்லுகிறார், மாதிரியை ஆய்வு செய்வதில் இன்னொருவர் உதவுகிறார், மாதிரி எடுக்க வேண்டுமென்று ஊரிலிருந்து ஒருவர் கேட்கிறார், இப்படியாக இது ஒரு கூட்டுப்பணி.

உதாரணத்திற்குச் சொல்வதென்றால், மக்கள் சொல்வார்கள், ஒரு குறிப்பிட்ட துர்நாற்றம் வீசுகிறது. அது வீசும்போதெல்லாம் தலை வலிக்கிறது என்று. இது ஒரு சாமானியன் சொல்வது. விஞ்ஞான அடிப்படையில் இதைச் சொல்ல வேண்டுமென்றால் இதை ஆவணப்படுத்தும் ஒரு முறை அவசியமாகிறது. அதை நாங்கள் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம். கேள்விகளாகத் தயார் செய்து, அவர்களிடம் கொடுத்து அதற்கு அவர்களிடம் பதிலைப் பெற்று சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புகிறோம். வாயால் மக்கள் சொல்லும்போது அது மதிக்கப்படாமல் இருந்தது. அதே விஷயம் ஆவணப்படுத்தப்படும்போது அதற்கான மதிப்பும், அதன்மீது நடவடிக்கை எடுக்கும் அணுகுமுறையே மாறுகிறது. அதாவது, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு என்ன வடிவத்தில் அதைக் கொடுக்க வேண்டுமோ, அதைக் கொடுக்கும் உத்திகளைக் கற்றுக்கொடுக்கும்போது, அது அடுத்த நிலைக்குச் செல்வதற்கு உதவியாக இருக்கிறது.

வாயுக் கோளாறு என்ற பெயரில் அப்படிப்பட்ட ஒரு ஆய்வை மேற்கொண்டு, ஆய்வறிக்கை வெளியிட்டோம். தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) எளிதில் ஆவியாகக்கூடிய படிம வேதிப்பொருள் பற்றிய மாதிரி சேகரித்து அதில் ஆய்வு செய்வதை, உள்ளூர் மக்களின் பங்களிப்போடு செய்தது. அந்த ஆய்வின்போது உள்ளூர் கண்காணிப்புக்குழு இணையான கண்காணிப்பை செய்ததன் விளைவாக, எப்பொழுது ஆய்வு செய்கிறவர்கள் வருகிறார்கள், காற்று இந்தத் திசையிலிருந்து இத்தனை மணியிலிருந்து வீசியது, இத்தனை மணிக்கு திசை மாறியது, குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் இல்லை, எனவே இந்த சாதனம் வேலை செய்யவில்லை, அல்லது இந்த சாதனம் வைக்கப்பட்ட இடம் மறைவான பகுதி, ஆகவே மாசுபட்ட காற்று இந்தச் சாதனத்திற்குள் வரவில்லை, ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நாளில் அந்தத் தொழிற்சாலை முழுமையான கொள்ளளவில் இயங்கவில்லை, அதனால் மாசு அந்த சாதானத்தில் படியவில்லை என அவர்களது மக்கள் போராட்டத்துக்குத் தயாரான ஆவணங்களை அவர்களே தயார் செய்யும் யுத்திகளைக் கற்றுக்கொண்டு தங்களைத் தயார்படுத்திக்கொள்கிறார்கள். அதை இந்தப் பகுதிகளில் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

கேள்வி கேட்பவர்கள், புகார் செய்கிறவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகி இருப்பதைப் பார்க்கும்போது கண்டிப்பாக இந்த யுத்திகளில் 100 சதவீதம் வெற்றியை அடைந்துவிட்டோம் என்று சொல்ல முடியவில்லை என்றாலும், வெற்றியின் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியும். அந்தப் புகார்களின் அடிப்படையில் அங்கு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

உதாரணத்திற்கு, ஒரு தொழிற்சாலை மூடப்பட்டிருக்கிறது. ஒரு தொழிற்சாலையில் இருந்து மருத்துவமனையில் இருந்து வருவதைப் போன்ற மருந்து துர்நாற்றம், பொதுக்கழிப்பிடத்தைப் போன்ற, மனிதக் கழிவுகளைப் போன்ற துர்நாற்றம் வருவதாகச் சொல்லுவார்கள். இதை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்பிக்கொண்டு வந்தார்கள். பின்னர் அதை ஆவணப்படுத்திக் கொடுக்கும்போது, மாசுக் கட்டுப்பாடு வாரியம் அந்தக் கழிவுகளை உடனே உலர்த்திவிட வேண்டும் என்று தொழிற்சாலைக்கு உத்தரவிட்டது. ஈரமாக இருப்பதால்தான் துர்நாற்றம் வீசுகிறது என்று சொல்லி, செலவு செய்து, அந்தக் கழுவுகளை உலர்த்தும் ஒரு அமைப்பை நிறுவினார்கள். இது மாதிரியான மாற்றத்தை நோக்கிய பயணத்தில் ஒரு நகர்வை அது உண்டாக்கியது.

சட்டத்திற்குட்பட்டே, யாருக்கும் இடையுறு இல்லாதவாறே எங்கள் போராட்ட வடிவங்கள் இருக்கும். முறையாக குறைதீர்க்கும் நாளில் சென்று முறையிடுவது, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியைச் சந்திப்பது என சட்டத்திற்குட்பட்ட வழிமுறைகளில் நாங்கள் செயல்படுவதினால், எங்கள் அழுத்தத்தின் காரணமாகப் பல நன்மைகள் நடந்திருக்கின்றன. மாதா மாதம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மக்கள் பிரதிநிதிகளிடம் குறை கேட்கும் நிலைக்குக் கொண்டுவந்தோம். காலாண்டுக்கொருமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சுற்றுச்சூழல், உடல் ஆரோக்கியம் பற்றி பேசுவதற்கான ஒரு தளத்தை உருவாக்கினோம். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட அலுவலகம் அந்தப் பகுதியில் அமைத்திருப்பது எங்கள் போராட்டத்தின் வெற்றியே.

ஆனால், மாசுக் கட்டுப்பாடு என்பது முழுமையாக வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மாறாக, எதிர்திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். மாசுபடுத்தும் புதிய தொழிற்சாலைகளை அனுமதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் பல்வேறு தரப்பட்ட மக்களின் நேரடி, மறைமுக ஆதரவு, ஊடக ஆதரவு உண்டு. புகாருக்கு மதிப்பளித்து அதிகாரிகளின் உடனடி நடவடிக்கைகள் போராட்டங்கள் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன என்பதைச் சொல்கின்றன.

முந்திரித் தொழிலின் இன்றைய நிலை என்ன? கடலூர் பொருளாதாரத்தை அது மீட்டுத் தருமா?

தானே புயலானது தலைமுறைகளைக் கண்ட முந்திரி மரங்களைப் பெருமளவில் அழித்தது. முந்திரியானது ஏற்றுமதி செய்யக்கூடிய, அந்நிய செலாவணியை ஈட்டித் தரக்கூடிய ஒரு பொருள். இலட்சக்கணக்கான மரங்கள் அழிந்ததும், அதைச் செறிவுபடுத்தக்கூடிய, மீட்டெடுக்கக்கூடிய திட்டங்களை அறிவித்தார்கள். ஆனால் அதெல்லாம் என்னவானதோ தெரியவில்லை. முந்திரி பயிர் செய்து கொண்டிருக்கும்போதே கடன் வாங்கி, வட்டிக் கட்ட முடியாமல் சிரமப்பட்டவர்கள் பலர் இருக்கின்றார்கள். இந்தச் சூழலில், முந்திரி அழிந்த பிறகு, அடுத்த கன்றுகள் வளரும்வரை அவர்களுக்கு அதில் இருந்து வருவாய் கிடைப்பதில்லை. மீன்படி தடைக்காலம் வரும்போது இடைக்கால நிவாரணம் அரசு தருகிறது. அப்படி ஒரு திட்டமும் இவர்களுக்கு இல்லை.

கிடைக்கிற முந்திரிகளை மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றுவதில் அரசு உதவ வேண்டும். முந்திரி ஏற்றுமதி மண்டலமாக அறிவித்தும், எந்தப் பணிகளும் செய்யப்படவில்லை. கோவாவில் முந்திரிப் பழங்களை பானங்கள் செய்ய பயன்படுத்துகிறார்கள். நாம் அதைப் பன்றிகளுக்குத்தான் போட்டுக் கொண்டிருந்தோம். சமீப காலமாகத்தான் குறைந்த விலைக்கு விற்கிறோம். ஜாம் செய்வது, ஊறுகாய் செய்வது என கிடைக்ககூடிய எல்லாப் பொருட்களையும் முழுமையாக பலனைத் தரும்படி எப்படி மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவது என்பதில் சம்பந்தப்பட்ட துறைகள் ஈடுபட வேண்டும்.

பொருளாதார அடிப்படையில் மட்டும் இதைப் பார்க்கக் கூடாது. இலட்சக்கணக்கான மரங்கள் அழிந்திருக்கும்போது, அதுசார்ந்த பல்லுயிர்ச் சூழலையும் கணக்கில்கொள்ள வேண்டும். அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி இதனை மீட்டெடுக்க வேண்டும். உள்ளூர் மக்களின் பாரம்பரிய அறிவையும் இதில் பயன்படுத்த வேண்டும். பல காலமாக அறிவியல் கொண்டு ஆராய்ச்சி மட்டுமே செய்து கிடைக்கும் தரவுகளைவிட, பாரம்பரிய அறிவையும் சேர்க்கும்போது சிறப்பான முடிவுகளைப் பெற முடியும்.

நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள் என்று காந்தி சொன்னார். கிராமங்கள் உயிர்வாழ விவசாயம் முக்கியம். கிராமங்கள் என்று சொல்லும்போது, கொத்தடிமைத் தனத்தையோ, சாதியப் பாகுபாட்டையோ நாம் ஆதரிக்கவில்லை. அதிலிருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகளைப் போக்கி, அனைவருக்குமான வெற்றிகரமான தொழிலாகக் கொண்டுவர வேண்டும். விவசாயத்தில் ஒன்றும் கிடைக்காது என்று சொல்லக்கூடிய அளவில் இன்று நிலைமை மாற்றப்பட்டுவிட்டது. இது நிலப் பயன்பாடு மாற்றத்திற்கு வழி செய்துவிடுகிறது. இந்த மனநிலை மாறவேண்டும். விவசாயிகள் ஸ்திரத்தன்மையோடு இருக்கக்கூடியதைப் பொறுத்துதான் மற்ற வளர்ச்சிகளும் அமையும். நமது பாரம்பரிய முறைகள், விதைகளைப் பாதுகாத்து இவைகளை மேற்கொள்ளும்போது பொருளாதார அடிப்படையில் மட்டுமல்லாமல், ஆரோக்கியமான ஒரு சூழலையும் உருவாக்க முடியும். மற்றபடி, உடனடியாக முந்திரி பொருளாதாரத்தை மீட்டுத் தருமா என்பது கேள்விக்குறியான ஒன்றுதான்.

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு கடலூரில் ஏன் போடப்பட்டது?

(நேர்காணலின் நிறைவுப் பகுதி மாலை 7 மணிப் பதிப்பில்)

பகுதி-1

பகுதி-2

பகுதி-3

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 1 ஜன 2018