மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

ஆன்மிக அரசியல்: ரஜினியின் புதிய மந்திரம்!

ஆன்மிக அரசியல்: ரஜினியின் புதிய மந்திரம்!

புலி வருது என்பது கதையாகவே முடிந்துவிடுமோ என்று கவலைப்பட்டவர்களுக்கு, 2017 டிசம்பர் 31 ஒரு நன்னாள். ரஜினி என்ற புலி அரசியலுக்குள் நுழைவது உறுதியான நாள். ஆனால், அது மட்டுமே அவரது ரசிகர்களுக்குப் போதுமா என்று கேட்டால், அதற்கு ரஜினியே பதில் சொல்வது கடினம். காரணம், இதுநாள் வரை அவர் வகுத்து வைத்திருக்கும் சினிமா பாதையும், அவர் தற்போது அறிவித்திருக்கும் புதிய பாதையும் ஒன்றோடொன்று இணைந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதுதான்.

ஒவ்வொரு படமும் ஹிட் ஆகியே தீர வேண்டும் என்பது போல, அவரது அரசியல் பிரவேசம் பலத்த வெற்றிகளைத் தர வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. அதற்கேற்றாற்போல, உள்ளாட்சித் தேர்தல் மிக அருகில் இருப்பதால், அதற்கடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிடுவது நமது இலக்கு என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டார் ரஜினி. அதே நேரத்தில், தனது கட்சியின் பெயர் என்ன, அதன் கொள்கைகள் என்ன, ரசிகர்களைத் தவிர்த்து வேறு யாரெல்லாம் தொண்டர்களாக இருப்பார்கள் என்பது போன்ற பல கேள்விகளுக்கு, அவர் பதில் சொல்லவில்லை. தனது கட்சிக் கொள்கைகளையும் அறிவிக்கவில்லை.

அதற்குப் பதிலாக, அரசியல் ‘பஞ்ச்’ ஒன்றை உதிர்த்திருக்கிறார். தன்னுடையது ‘ஆன்மிக அரசியல்’ என்றிருக்கிறார்; அதுவும், சாதி மதத்துக்கு அப்பாற்பட்டது என்றும் சொல்லியிருக்கிறார்.

தேசிய, பொதுவுடைமை, திராவிட, சாதிய, மதவாத அரசியலைக் கண்டுணர்ந்தவர்களுக்கு, இது கண்டிப்பாகப் புதிய வார்த்தை. ஆனால், ஆன்மிகம் என்ற உடனே, பாஜகவின் மதவாதம் நம் நினைவுக்கு இயல்பாக வந்து தொலைக்கிறது. அதனாலேயே, பாஜகவின் முகமூடியணிந்த முகம் ரஜினி என்ற வாதம் வலுப்பட்டுப் போகிறது. அதற்கேற்றாற்போல, பாஜகவின் அத்தனை தலைகளும் ரஜினியின் அரசியல் அறிவிப்பை வரவேற்றிருக்கிறார்கள்.

பாஜகவினர் ஆதரிப்பதை, அதே கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பது சமீபத்திய வழக்கமாக இருந்துவருகிறது. ரஜினியின் விஷயத்திலும் அதுவே நடக்கிறது. இந்த நேரத்தில், தமிழனின் சிந்தனையறிவைத் தீர்மானிப்பது பாஜக எதிர்ப்பு மட்டும்தானா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இதனாலேயே, ரஜினி ரசிகர்களையும் தாண்டி பலரும் அவரது ஆன்மிக அரசியலை மவுனமாக ஆமோதிக்கின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஒருபடி மேலே சென்று வரவேற்றிருக்கிறார்.

“இதன் மூலமாக, பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளின் மதவாத அரசியலுக்குத் துணை போகமாட்டேன் என்று அவர் உணர்த்துவதாகத் தெரிகிறது. அதேநேரம், கடவுள் நம்பிக்கை சார்ந்த அனைத்து மதத்தினரையும் அணிதிரட்ட விரும்புகிறார் என்றும் தெரிகிறது. மதவாதத்திலிருந்து ஆன்மிக அரசியல் வேறுபட்டு நிற்கிறது என்பதை, எதிர்காலத்தில் அவருடைய செயல்பாடுகள்தான் உறுதிப்படுத்த வேண்டும்” என்றிருக்கிறார்.

இதற்கு நேரெதிராக, பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா, “ரஜினியின் ஆன்மிக அரசியல் பாராட்டுக்குரியது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதரித்த ஆன்மிக பூமி தமிழகம். இடைப்பட்ட காலத்தில் இந்து விரோத ஆங்கிலேய அடிவருடிகள் பிறந்தனர் என்பது விபத்து” என்றிருக்கிறார்.

“அரசியலையும் ஆன்மிகத்தையும் சம்பந்தப்படுத்தக் கூடாது. இது முற்றிலும் ரஜினியின் குழப்பத்தைக் காட்டுகிறதே தவிர, வேறொருன்றுமில்லை” என்றிருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி. மேற்கண்ட மூன்று பேருடைய வார்த்தைகளும் கிட்டத்தட்ட ரஜினியை விமர்சிக்கும் பொதுமக்களின் பிரதிபலிப்புதான்.

ரஜினியின் சினிமா ‘பஞ்ச்’களைப் போலவே, ஆன்மிக அரசியலும் ஹிட்டடிக்குமா என்பது அரசியல்களத்தில் அவரது எதிர்கால அணுகுமுறைகளைப் பொறுத்தது. ஆனால், ரஜினி ரசிகர்களைப் பொறுத்தவரை, அவரது சாதி மற்றும் மத அடையாளங்கள் பொருட்படுத்தத்தக்கதல்ல. இதை, அவரது திரைப்படங்கள் மட்டும் கட்டமைக்கவில்லை. பொதுவெளியில் இருக்கும் ரஜினி பற்றிய பிம்பமும் அவரது மேடைப் பேச்சுகளும் சேர்ந்தே இதை உருவாக்கியிருக்கின்றன.

இதே மனப்பாங்கை, தனது ரசிகர்கள் அல்லாதோரிடமும் உருவாக்குவதற்கான வழிமுறையே ரஜினியின் ஆன்மிக அரசியல் குறித்த அறிவிப்பு. இதனால், அவருக்கென்று தனித்த தொண்டர் குழாம் உருவாகலாம். அது, வேறு பல கட்சிகளிலிருந்து உதிர்ந்து வந்ததாகவும் இருக்கலாம்.

இவையனைத்தையும் தாண்டி, ஆன்மிக அரசியல் என்ற ஒன்று இருக்கிறதா... அது எடுபடுமா என்ற கேள்விகள் எழுவது இயல்பு. ராகவேந்திரா மண்டபத்தில் ஆன்மிக அரசியலே தனது வழி என்று அறிவித்துவிட்டு, போயஸ் கார்டனுக்கு ரஜினி வந்தபோதே இந்த கேள்விகள் எழுந்தன. அந்த இடைவெளியில் அவரை நோக்கி நீண்டது, ஆன்மிக அரசியல் என்றால் என்னவென்ற கேள்வி. அதற்கு, நியாயமான மற்றும் தர்மமான அரசியல் என்று விளக்கம் தந்தார் ரஜினி.

இனிவரும் நாள்களில், ‘எது நியாயம்? எது தர்மம்? எது உங்களுடைய அரசியல்?’ என்று கூட கேள்விகள் எழக்கூடும். ஓர் ஆன்மிகவாதி தன்னைச் சுற்றியிருப்பவர்கள் சொல்லாமலே புரிந்துகொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கலாம். ஆனால், ஓர் அரசியல்வாதியானவன் தான் சொல்வது புரிந்தாலும், புரியாவிட்டாலும் எல்லாவற்றுக்கும் விளக்கம் தந்தாக வேண்டும். எல்லா பிரச்னைகளையும் பேசியாக வேண்டும். ஏனென்றால், ரஜினி இப்போது ஓர் அரசியல்வாதி. அதுவும் ஆன்மிக அரசியல்வாதி.

- உதய் பாடகலிங்கம்

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 1 ஜன 2018