மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: விவசாயிகளின் மன உளைச்சலும் தற்கொலைகளும்!

சிறப்புக் கட்டுரை: விவசாயிகளின் மன உளைச்சலும் தற்கொலைகளும்!

2017ஆம் ஆண்டு நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் பல நடைபெற்று அவர்களது பிரச்னைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. கடந்த மாதம் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 184 விவசாயிகள் குழு டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. தமிழக விவசாயிகள் ஜந்தர் மந்தரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இரண்டுகட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உற்பத்தி, சந்தை மற்றும் விலைகளில் உள்ள பல்வேறு வகையான பிரச்னைகள் விவசாயத் துறை வருமானத்தில் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தி வருகின்றன.

எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாய ஆணையம் (2006), கிராமப்புறங்களில் விவசாயம் மோசமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. சமீபத்திய விவசாய வளர்ச்சி விகிதங்கள் நிலையற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012-13ஆம் ஆண்டில் 1.5 சதவிகிதமாக இருந்த வளர்ச்சி விகிதம் 2013-14இல் 5.6 சதவிகிதம் உயர்ந்தது. 2014-15இல், 0.2 சதவிகிதம் குறைந்து, 2015-16இல் 0.7 சதவிகிதமாக அதிகரித்தது. 2016-17இல் தற்காலிக மதிப்பீடாக 4.9 சதவிகிதமாக உள்ளது. இந்தப் போக்கு விவசாயத் துறை மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதையும், நிலையற்று இருப்பதையும் தெளிவுபடுத்துகிறது.

ஏன் இந்த நெருக்கடி?

இதற்கு முக்கியக் காரணம், விவசாய நிலங்களை மக்கள் ஆக்கிரமிப்பதே ஆகும். இந்தியாவின் சராசரிப் பண்ணையின் அளவே சிறியதாக உள்ளது. 100 ஹெக்டர் பண்ணை நிலப்பரப்பில் 1.15 ஹெக்டர் நிலப்பரப்பே விவசாயத்துக்குரியதாக உள்ளது. நிலம் கையகப்படுத்துதல் காரணமாக இவையும் 1970-71 முதல் குறைந்துவருகிறது.

மொத்தமுள்ள பண்ணை அளவில் 72 சதவிகிதம் சிறிய அளவிலான நிலப்பரப்பாக (2 ஹெக்டருக்குள்) உள்ளது. இதுபோன்று சிறிய அளவில் பண்ணைத் தொழில் செய்வதால் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றன.

உற்பத்தி, வானிலை, இயற்கைப் பேரிடர், விலை, கடன், சந்தை ஆகியவற்றில் உள்ள அபாயங்களை எதிர்த்துப்போராடும் விவசாயிகளுக்கு கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். விளைபொருளுக்கு லாபகரமான விலையை வழங்க வேண்டும் என்பதே குறைந்தபட்ச கோரிக்கையாக உள்ளது.

பயிர் உற்பத்தி எப்போதும் ஆபத்தான நிலையிலேயே உள்ளது. ஏனெனில் பூச்சிகள், நோய்கள் தாக்கம், விதைகள் மற்றும் நீர்ப்பாசனம் போன்ற உள்ளீடுகளின் பற்றாக்குறை ஆகியவை மகசூல், உற்பத்திக் குறைவுக்குக் காரணமாக அமைகின்றன.

குறைவான விலை, சந்தையில் போதிய உள்கட்டமைப்பு இல்லாதது, இடைத்தரகர்கள் மூலம் விளை பொருள்களை விற்றல் ஆகியவற்றால் விவசாயிகள் நிதி நெருக்கடிக்கு ஆளாகுகின்றனர்.

சொத்து ஆதாரங்களை வைத்துக் கடன் வாங்குதல், கடன் கொடுப்பவர்களின் ஆதிக்கம், குறுகிய கால மற்றும் நீண்டகால கடன்களுக்கான மூலதனப் பற்றாக்குறை ஆகியவை நிலையான வருமான மற்றும் லாபம் ஈட்டமுடியாததற்குக் காரணமாகும். இதுதவிர வறட்சி, வெள்ளம், குறைந்த நீர்ப் பாசனம், பருவநிலை மாற்றம் ஆகியவற்றாலும் விவசாயம் பாதிப்படைகிறது

விளை பொருள்களின் விலை!!!

விளை பொருள்களை விளைவிக்கக்கூடிய விவசாயிகளுக்கு அவற்றின் விலை ஏற்ற இறக்கத்தால் நிச்சயமற்ற ஒருதன்மையே நிலவுகிறது. இதற்கு வியாபாரிகளின் யூக வணிகம் மற்றும் பதுக்கல் நடவடிக்கைகளே காரணம்.

மத்திய அரசு 2016-17 ஆண்டுகளில் நடத்திய ஆய்வின் முடிவில், இந்த விலை நிச்சயமற்ற தன்மைக்கு வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவின் திறனற்ற செயல்பாடுகளே காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. பயிர் சேதம், விளை பொருள்களைப் பாதுகாக்க இயலாமை, உற்பத்தி வீழ்ச்சி மற்றும் அதிகரிப்பை எதிர்கொள்ள இயலாமை என விவசாயிகளுக்குப் பல நெருக்கடிகள் இதனால்தான் ஏற்படுகின்றன.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வேளாண் நிபுணர் லக்விந்தர் சிங், அம்மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் கடந்த சில பத்தாண்டுகளாக ஆய்வு மேற்கொண்டார்.

வேளாண்மைக்குத் தேவைப்படும் இடுபொருள்களான விதை, உரங்கள், பூச்சி மருந்துகள் ஆகியவற்றின் விலை மிக வேகமாக உயர்ந்திருக்கிறது. ஆனால், விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் விளை பொருள்களின் விலை அந்த வேகத்துக்கு உயரவில்லை என்பதுதான் லக்விந்தர் சிங்கின் ஆய்வுகள் சொல்லும் அவலம்.

இந்தச் சூழல் நிலவினால் விவசாயம் எப்படிச் செழிக்கும்? விவசாயத்துக்குத் தேவையான மூலதனம் என்பது கடந்த சில ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்திருப்பதும் இந்திய விவசாயிகள் கடுமையாக அவதியுறுவதற்கான முக்கியக் காரணமாகிறது. இது விவசாயத்தை விட்டு வெளியேறுவதற்கான நெருக்கடியைத் தருகிறது.

இத்தகைய காரணிகள்தான் விவசாயத்தை லாபகரமற்ற தொழில் என்ற நிலைமைக்குக் கொண்டுவந்து விட்டன. இதன்மூலம் சிறு, குறு விவசாயிகள் தங்கள் நிலைமைக்கு மீறிய பெருந்தொகையைக் கடன் வாங்கி, அதைத் திருப்பிச்செலுத்த முடியாமல் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

காணாமல் போகும் இந்திய விவசாயிகள்

இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளால் பூச்சி மருந்துகளைக் குடித்து விவசாயிகள் தங்களை மாய்த்துக்கொள்கின்றனர். தேசிய அளவில் ஆண்டுதோறும் 12,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக தேசியக் குற்றப் பதிவு அறிக்கை தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு மட்டும் 11,400 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். ஆனால், இந்த ஆண்டு தமிழகத்தில் வறட்சியால் 30 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்துகொண்டதாகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

2013-15 காலகட்டத்தில் மத்திய அரசின் புள்ளிவிவரப்படி மாநிலம் வாரியாக விவசாயிகளின் தற்கொலை விவரம் வருமாறு: மகாராஷ்டிரா 11,441, கர்நாடகா, 3,740, மத்தியப்பிரதேசம் 3,578, தெலங்கானா 2,747, சத்தீஸ்கர் 2,152, ஆந்திரா 2,014, கேரளா 1,989, தமிழகம் 1,606.

தமிழக விவசாயிகளின் நிலை!

“2016-17ஆம் ஆண்டு மார்ச் வரை தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் வரலாறு காணாத வறட்சி காரணமாக மாரடைப்பு மற்றும் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். இதில் 82 பேர் குடும்பத்தினருக்கு மட்டுமே தலா ரூ.3 லட்சம் வீதம் நிவாரணம் வழங்கப்பட்டது. எஞ்சியுள்ளவர்கள் வேறு பிரச்னைகளால் மரணமடைந்தார்கள் என்று காரணம் காட்டி அவர்களுக்கு அரசால் நிவாரணம் வழங்கப்படவில்லை” என்று விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

“கடந்த ஆண்டு வறட்சியின் பிடியால் பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு அறுவடை ஆய்வறிக்கை அடிப்படையில் இழப்பீடுகளுக்கான தொகை ரூ.2,300 கோடியை மத்திய மாநில அரசுகள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கியன. இதைப் பெற்றுக்கொண்ட காப்பீட்டு நிறுவனங்கள் இன்னும் 40 சதவிகித விவசாயிகளுக்குக் காப்பீடு வழங்காமல் அலைக்கழிக்கின்றன” என்று அவர் குற்றம்சாட்டினார்.

“தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடனை குண்டர்களை வைத்து வசூல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த அனுமதி மூலம் திருவண்ணாமலை மாவட்ட விவசாயி ஞானசேகரன் (54) பெற்றிருந்த கடனை வசூலிக்க முயன்றபோது எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இவ்வாறு பல பிரச்னைகளில் தமிழக விவசாயிகள் உள்ளனர் என்று வேதனை தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்துக்கு மேல்தான் விவசாயிகள் பயிரிடத் தொடங்கினர். காலம் கடந்து சாகுபடி செய்ததால் பொங்கல் தாண்டி பிப்ரவரியில்தான் அறுவடை செய்ய முடியும். அதுவும் காவிரியிலிருந்து தொடந்து தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே பயிரைப் பாதுகாக்க முடியும். இந்த ஆண்டு திருவாரூர், நாகை மாவட்டங்கள் வெள்ளத்தாலும், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், தேனீ, கொங்கு மண்டல மாவட்டங்கள் வறட்சியாலும் கன்னியாகுமரி புயலாலும் பாதிக்கப்பட்டன.

எனவே வறட்சி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை ஆய்வு செய்து தனித்தனியாகப் பட்டியலாக வெளியிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்று பாண்டியன் கேட்டுக்கொண்டார்.

விவசாயத் துறைக்கான நெருக்கடிகளைத் தீவிரமாக ஆராய்ந்து, அவற்றை வகைப்படுத்தி உரிய தீர்வுகளைக்காண்பதன் மூலமே விவசாயத்தை லாபகரமான தொழிலாகவும், விவசாயிகளின் வருமானத்தைச் சீராக்கவும் முடியும்.

2018ஆம் ஆண்டிலாவது இந்திய விவசாயிகளின் மன உளைச்சலும் தற்கொலைகளும் குறையுமா?

புள்ளிவிவரங்கள் நன்றி: தி இந்து நாளிதழ்

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

திங்கள் 1 ஜன 2018