மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

இளைஞர்களுக்காக மாதிரி நாடாளுமன்றம்!

இளைஞர்களுக்காக மாதிரி நாடாளுமன்றம்!

ஆண்களின் துணையின்றி ஹஜ் யாத்திரை செல்வதற்காக, இந்த ஆண்டு சுமார் 1,300 பெண்கள் விண்ணப்பித்திருப்பதாக, தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார் நரேந்திர மோடி. மனதின் குரல் நிகழ்ச்சியின் 39ஆவது பகுதி, நேற்று (டிசம்பர் 31) ஒலிபரப்பானது. 2017ஆம் ஆண்டின் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சி என்பதால், இதற்கு எதிர்பார்ப்பு நிலவியது. இதில் பேசிய பிரதமர் மோடி, இருபத்தோராம் நூற்றாண்டின் இளைஞர்களுக்கு இந்தப் புத்தாண்டு சிறந்ததாக அமையப் போகிறது என்று தெரிவித்தார்.

“21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்த அனைவருக்கும், இந்த ஆண்டில் 18 வயது பூர்த்தியாகி விடும். இவர்கள் அனைவரும் இந்த ஆண்டு வாக்காளர்களாக மாறப்போகின்றனர். ஒரு வாக்கு என்பது ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம். அது நம் நாட்டையே அடியோடு மாற்றிவிடும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும், இளைஞர்களுக்காக மாதிரி நாடாளுமன்றம் அமைக்க வேண்டும். இதன் மூலமாக, வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய விவாதங்களை மிகப்பெரிய இயக்கமாக முன்னெடுத்து, இந்தியாவின் எதிர்காலத்தை மாற்ற வேண்டும். தங்களது வாக்கின் மூலமாகப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும். வறுமை, சாதி, மதம், பயங்கரவாதம், ஊழல் ஆகியவற்றை ஒழித்து, இளைஞர்கள் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும்” என்று மோடி வேண்டுகோள் விடுத்தார்.

“இஸ்லாமிய பெண்கள் ஹஜ் புனித யாத்திரைக்கு ஆண் துணையுடன் செல்ல வேண்டுமென்ற விதி, இந்த ஆண்டு முதல் தளர்த்தப்பட்டிருக்கிறது. இதனால், ஆண்களின் துணையின்றி ஹஜ் யாத்திரை செல்வதற்காக, இந்த ஆண்டில் சுமார் 1,300 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

நகர்ப்புறங்களில் ஸ்வாச் பாரத் இந்தியா திட்டத்தினால் அடைந்த தூய்மை குறித்து ஆய்வு செய்ய வரும் ஆண்டில் ஜனவரி 4 முதல் மார்ச் 10 வரை கருத்துகள் கேட்கப்படும் என்று கூறினார் மோடி. அதேபோல, சமீபத்தில் காஷ்மீர் நிர்வாகத் தேர்வில் வெற்றி பெற்ற அஞ்சும் பஷீர்கான் கட்டாக் பற்றியும் தன் பேச்சில் குறிப்பிட்டார். “தன்னம்பிக்கையான, நேர்மறையான விஷயங்களைக் குறிப்பிடும்போது, காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர் அஞ்சும் பஷீர் கான் கட்டாக் பற்றி சொல்ல வேண்டும். தீவிரவாதத்தினால் ஏற்பட்ட கஷ்டங்களைக் கடந்து, அவர் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுகிறார்; காஷ்மீர் நிர்வாகத் தேர்வில் பெற்றி பெற்றிருக்கிறார்” என்று புகழாரம் சூட்டினார்.

வரும் 2018ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாகவே, நேற்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் அதிகம் பேசினார் பிரதமர் மோடி.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 1 ஜன 2018