மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

பொருளாதார அலையில் 2017

பொருளாதார அலையில் 2017

2017ஆம் ஆண்டை நிறைவு செய்து 2018ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். கடந்த பத்தாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 2017ஆம் ஆண்டைப்போல பெரும் சரிவைக் கண்டிருக்காது என்றே கூறலாம். பாஜகவின் மூன்றரை ஆண்டுக்கால ஆட்சியைக் கடந்து வந்துள்ளோம். 2017ஆம் ஆண்டின் முதல் பாதியைப் பணமதிப்பழிப்பும், இரண்டாம் பாதியை ஜிஎஸ்டியும் சரிநிகராகத் தாக்கியது. இந்த இரண்டு சீர்திருத்தத் திட்டங்களும் யாரை பாதித்தோ இல்லையோ, ஒட்டுமொத்த சிறு குறு நடுத்தர நிறுவனங்களையும் ஏழை எளிய மக்களையும் கடுமையாகவே பாதித்தது. மற்றொருபக்கம் இந்தியச் சாலைகளையும், தொலைக்காட்சிகளையும் விவசாயிகள் போராட்டம் ஆக்கிரமிக்க, பொது விநியோகத் திட்டத்தில் இருந்து மண்ணெண்ணெய் நிறுத்தப்பட்டதும், சமையல் எரிவாயுக்கு வரும் ஏப்ரல் முதல் மானியம் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பும் மத்திய அரசின் மீது விமர்சனத்தை மேலும் அதிகரித்தன.

2017 - ஒரு வருடத்தில் இந்திய பொருளாதாரத்தில் என்னென்ன முக்கிய நிகழ்வுகளும், தாக்கங்களும் நடந்து என்பதைச் சுருக்கமாகக் காண்போம்.

பணமதிப்பழிப்பின் தாக்கங்கள்

2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 8ஆம் தேதி புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாதவையாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. புழக்கத்தில் இருந்த 86 சதவிகித ரூபாய் தாள்கள் ஒரே இரவில் செல்லாதவையாக்கப்பட்டு வங்கிகள் மூலமாக புதிய 2000 மற்றும் 500 ரூபாய் தாள்கள் விநியோகம் செய்யப்பட்டது. பணப்புழக்கம் சீராக பல மாதங்கள் ஆனது. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 34 நாள்களில் வேலைவாய்ப்பு 60 சதவிகிதம் குறையுமென்றும், வருவாய் இழப்பு 50 சதவிகிதமாக இருக்குமென்றும் அனைத்திந்திய உற்பத்தியாளர் கூட்டமைப்பு (ஏ.ஐ.எம்.ஒ) ஜனவரி இரண்டாம் வாரத்தில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த நடவடிக்கையால் வீடு விற்பனைத்துறை 20 முதல் 30 சதவிகிதம் சரிவடையுமென்று ஃபிட்ச் நிறுவனம் ஜனவரியில் கூறியது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலமாக நவம்பர் 9 முதல் ஜனவரி 10 வரையிலான காலத்தில் 1,100 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.5,400 கோடி கறுப்புப் பணம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு ஏப்ரல் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையினால் நூற்றுக்கணக்கனோர் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறியது.

ஆர்எஸ்எஸ்ஸின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், துக்ளக் இதழின் ஆசிரியருமான ஆடிட்டர் குருமூர்த்தி, “மத்திய அரசானது பணமதிப்பழிப்பு, வங்கிக் கடன் தொடர்பான சட்டங்கள், சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஒரே சமயத்தில் அடுத்தடுத்து மேற்கொண்டுள்ளது. இவையனைத்தும் ஒரே சமயத்தில் பொருளாதாரத்தால் ஏற்கப்படாது. இவை அவசர கதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளாகும். நோக்கம் நல்லதாக இருந்தாலும் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மோசமான முறையில் அமல்படுத்தப்பட்டிருப்பதால் அதன் பலன்கள் கிடைக்கவில்லை. உயர் மட்ட நிர்வாகத்தில் ரகசியக் காப்பு இல்லாததால் கறுப்புப் பணத்தை வைத்திருந்தவர்கள் எளிதாகத் தப்பிவிட்டனர். உயர் மதிப்பு நோட்டுகளைத் திரும்பப் பெற்றதால் முறைசாரா துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இத்துறை 90 சதவிகித அளவிலான வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. எனவே, பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் வேலைவாய்ப்பு உருவாக்கம் தடைப்பட்டுள்ளது” என்றார். ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு மூளையாகச் செயல்படுபவர்களில் ஒருவரான குருமூர்த்தியின் இந்தப் பேச்சு பாஜக மேற்கொண்ட சீர்திருத்தம் என்ற முழக்கத்துக்கு ஒரு பின்னடைவாகவே கருதப்பட்டது.

விவசாயிகள் போராட்டம்

முந்தைய காலங்களில் வறட்சியும், புயலும் வாட்டியெடுத்து இழப்பைச் சந்தித்த இந்திய விவசாயிகளுக்குச் சற்றே வித்தியாசமான கடுமையான இழப்பைச் சந்திக்க வைத்து சாலைகளில் இறங்கிப் போராடவும், தற்கொலை செய்யவும் வைத்த ஆண்டு 2017. வழக்கத்துக்கு மாறாக அபரிமிதமான வளர்ச்சியைக் கண்ட இந்திய விவசாயிகள் அவற்றை விற்க சந்தையில்லாமல், உற்பத்திப் பொருள்களைச் சாலைகளில் கொட்டி போராடினர். சாகுபடிக்குச் செலவிட்ட பணத்தைக் கூட எடுக்க முடியாமல் விவசாயிகளின் போராட்டம் கடந்த ஆண்டின் சுவடுகளாக மாறியது என்றே சொல்லலாம்.

மிளகு விலை வீழ்ச்சியால் ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா விவசாயிகளும், காய்கறிகள் மற்றும் பருப்பு விலை வீழ்ச்சியால் மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட பல வடமாநில விவசாயிகளும், வறட்சியால் தமிழக விவசாயிகளும் தங்கள் வாழ்வாதாரம் இழந்தனர். மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகளின் போராட்டக்களத்தில் நடத்தப்பட்ட காவல் துறை துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பரிதாபமாக இறந்தனர்.

பொது கணக்கு ஆய்வகம் (சி.ஏ.ஜி) ஜூலை 21 அன்று நாடாளுமன்றத்தில் அளித்த அறிக்கையில், “கடந்த நிதியாண்டில் (2016-17) காப்பீட்டு நிறுவனங்கள் பெற்ற பிரீமியத் தொகையின் மதிப்பு ரூ.15,891 கோடியாகும். அதில் ரூ.5,962 கோடி மட்டுமே காப்பீட்டுத் தொகையாக விவசாயிகளால் பெறப்பட்டது. மீதமிருந்த ரூ.10,000 கோடியைக் காப்பீட்டு நிறுவனங்களே லாபமாகப் பெற்றன” என்று தெரிவித்துள்ளது. ஆக, விவசாயிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்ட பயிர்க் காப்பீட்டுத் திட்டமும், விவசாயிகள் அவதிக்குள்ளான காலத்தில் அவர்களுக்கு உதவவில்லை.

ஜியோ கட்டணச் சேவை தொடக்கம்!

இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் பெரும்புயல் என்றே ஜியோவைச் சொல்லலாம். 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய தொலைத்தொடர்புத் துறையில் கால் பதித்தது. 4ஜி நெட்வொர்க்கில் இலவச அறிவிப்புடன் களம்கண்டது ஜியோ. 2016ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை இணையச் சேவை, வாய்ஸ்கால் மற்றும் எஸ்.எம்.எஸ் என அனைத்தையும் இலவசமாக ஜியோ வழங்கியதால் ஒட்டுமொத்த தொலைத்தொடர்புத் துறையையும் பெரும் நட்டத்துக்கு உள்ளானது. இதையடுத்து ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு ஆஃபர் என இலவச சலுகையை மார்ச் 31 வரை நீட்டித்தது. ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களும் டிராயிடம் ஜியோ இலவச சலுகையால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக முறையிட்டன. இதையடுத்து மார்ச் 31ஆம் தேதியோடு ஜியோவின் இலவச சலுகைகள் முடிவுற்று, கட்டணச் சேவை தொடங்கியது. ஜியோ பிரைம் திட்டத்தில் இணைய ஏப்ரல் 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம்!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி விலையைப் பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை இனி தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படும் என்று மத்திய அரசு 2017ஆம் ஆண்டு மே மாதம் அறிவித்தது. இதன்படி முதல்கட்டமாக இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் சோதனை முயற்சியாக மே மாதம் 1ஆம் தேதி புதுச்சேரி, விசாகப்பட்டினம், ஜாம்ஜெட்பூர், சண்டிகர் ஆகிய பகுதிகளில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு முன்னர் மாதத்துக்கு இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

உள்நாட்டு உற்பத்தி சரிவு!

பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், விளைவுகள் குறித்தும் மேலே சொல்லியிருந்தோம். அதில் முக்கியமான ஒன்று உள்நாட்டு உற்பத்தி சரிவு. இந்தியாவின் ஜி.டி.பி. கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 5.7 சதவிகிதமாகச் சரிந்தது. இதற்கு முந்தைய காலாண்டில் (ஜனவரி-மார்ச்) ஜி.டி.பி. 6.1 சதவிகிதமாகவும், 2015-16ஆம் நிதியாண்டில் 7.8 சதவிகிதமாகவும் இருந்தது. அதேபோல வேலையின்மை விகிதமும் 5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் வேலையின்மை விகிதம் 3.8 சதவிகிதமாகவே இருந்தது.

ஜிஎஸ்டி

பணமதிப்பழிப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்கள் முழுமையாக மீண்டு வருவதற்குள் ஜூலை 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது. 0, 5, 12, 18, 28 என ஐந்து வரித் திட்டங்களில் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை சிறு குறு நடுத்தர நிறுவனங்களை கடுமையாகப் பாதித்தது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையும் சிறிது காலம் முடங்கிவிட்டது என்றே சொல்லலாம். பணியிழப்புகளும் அதிகரித்தது. ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, கட்டுமானம், தோல் பொருள் தயாரிப்புத் துறை, கைவினைப் பொருள்கள் தயாரிப்புத் துறை எனப் பல தரப்பட்ட தொழில்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரிக்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக நவம்பர் 11 அன்று கவுகாத்தியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 175 பொருள்கள் 28 சதவிகித வரியிலிருந்து 18 சதவிகிதமாகவும், 12 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டது.

ஒரே நாடு, ஒரே வரி என்ற முழக்கத்தோடு கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டியில் பெட்ரோல், டீசல், ரியல் எஸ்டேட், இயற்கை எரிவாயு போன்றவை சேர்க்கப்படாதது விவாதங்களை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. மத்திய அரசு இவற்றை ஜிஎஸ்டியில் இணைக்கத் தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

வைப்புத்தொகை காப்புறுதிச் சட்டம்

மத்திய அரசு 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிதி சீரமைப்பு தொடர்பான எஃப்.ஆர்.டி.ஐ. மசோதாவைத் தாக்கல் செய்தது. இந்தச் சட்டத்தின்படி வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் முடங்கும் சூழல் உருவானால் அந்நிறுவனங்களில் பொதுமக்கள் டெபாசிட் செய்து வைத்திருக்கும் பணத்தை எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறாமல் நிலுவையில் இருக்கும் இந்தச் சட்டத்துக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

எளிதாகத் தொழில் செய்யும் நாடுகள் பட்டியல்

உலக நாடுகளில் எளிதாகத் தொழில் செய்யும் நாடுகளின் பட்டியல் குறித்து உலக வங்கி ஆய்வு நடத்தி அக்டோபர் 31ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. 190 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 2017ஆம் ஆண்டு இந்தியா 30 இடங்கள் முன்னேறி 100ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஜிஎஸ்டியின் மூலம் எளிமையாக்கப்பட்டதே இந்தப் பட்டியலில் இந்தியா முன்னேறியதற்கு முக்கியக் காரணம் என்று வங்கியாளர்களும், பொருளாதார நிபுணர்களும் கூறினர். இருப்பினும் 190 நாடுகளில் இந்தியாவுக்கு 100ஆவது இடம் என்பதே பின்னடைவாகவே கருதப்படுகிறது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுத்தம்!

ஆர்காம் எனப்படும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் அனைத்துவகை மொபைல் சேவைகளும் டிசம்பர் 1ஆம் தேதி நிறுத்தப்பட்டது. வருவாய் இழப்பிலும், கடன் சுமையிலும் சிக்கியுள்ள இந்நிறுவனத்தின் சேவைகளை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுத்தியுள்ளது. இதன்படி இந்நிறுவனத்தின் 2ஜி மற்றும் 3ஜி சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற இயலாது. 4ஜி சேவை மட்டுமே தொடரப்படும் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது. 2006ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் குழுமத்தின் சொத்துகளை முகேஷ் மற்றும் அனில் அம்பானி சகோதரர்கள் தனியாகப் பிரித்துக்கொண்ட பிறகு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு, 96,668 கோடி ரூபாயிலிருந்து 6 மடங்கு அதிகரித்து 6 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆனால், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேபிட்டல், ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஆகிய நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 56 ஆயிரத்து 600 கோடி ரூபாயிலிருந்து 17 சதவிகிதம் சரிந்து 47,017 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. 45,000 கோடி ரூபாய் கடனில் சிக்கிய ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் ஸ்பெக்ட்ரம், டவர்கள் உள்ளிட்டவற்றில் ரூ.25 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் விற்கவும் திட்டமிட்டுள்ளது. இதன் பங்குகளை முகேஷ் அம்பானி வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏர் இந்தியாவின் பங்குகள் விற்பனை!

பொதுத்துறை விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா மிகுந்த கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. இந்நிறுவனத்துக்குத் தற்போது சுமார் 50,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் உள்ளது. இதனால் ஏர் இந்தியா விமான நிறுவனத்தைத் தனியார்மயமாக்கி அதன் பங்குகளை விற்பனை செய்வதற்கான மத்திய அமைச்சரவை மட்டத்திலான முதல் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் 21-07-17 அன்று நடந்தது. இக்கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, நிலக்கரித் துறை அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தின் முடிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான அசோக் கஜபதி ராஜூ பேசுகையில், “மக்களிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. ஏர் இந்தியா நிறுவனப் பங்குகள் விற்பனைக்கான இறுதி முடிவு எடுத்த பின்னர் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிப்போம்” என்றார். அதன்பிறகு பல்வேறு முன்னணி விமானச் சேவை நிறுவனங்கள் ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க முன்வந்திருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகிக்கொண்டே இருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இவ்வாறு 2017ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரச் சூழலில் எண்ணற்ற மாற்றங்களைக் கண்டிருந்தோம். பாஜகவின் பொருளாதார நிலைப்பாடுகளை எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி ஒத்த கருத்துடைய பாஜகவின் மூத்த தலைவர்களும் கண்டித்திருந்தனர். குறிப்பாக யஷ்வந்த் சின்ஹா அண்மையில், ”நான் இப்போது பேச வேண்டும்” என்ற தலைப்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் செப்டம்பர் 27ஆம் தேதி கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையில் இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியைக் கண்டித்து மோடி தலைமையிலான அரசைக் கடுமையாகச் சாடி எழுதியிருந்தார். இப்படியாக 2017 பொருளாதாரத்தில் ஏற்றத்தை விட இறக்கத்தையே அதிகம் கண்டிருந்தது. இவற்றின் பலனை அனுபவிக்க சிறிது காலமாகும் என்பதுதான் மத்திய அரசின் பெரும் பதிலாக இருந்தது.

தொகுப்பு: பிரகாசு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

திங்கள் 1 ஜன 2018