மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

தேசாந்திரி பதிப்பக விழா: சொற்களால் மனிதர்களைத் தொடுவேன்!

தேசாந்திரி பதிப்பக விழா: சொற்களால் மனிதர்களைத் தொடுவேன்!

தினேஷ் பாரதி

தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் எஸ்.ராமகிருஷ்ணன். நாவல், சிறுகதை, கட்டுரை, வரலாறு, நாடகம், நேர்காணல், மொழிபெயர்ப்பு, திரைப்படம், சிறார் நூல்கள், உலக இலக்கியப் பேருரைகள் என பலதரப்பட்ட துறைகளில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். முன்னணிப் பதிப்பகங்கள் பலவற்றின் மூலமாகவும் தன்னுடைய புத்தகங்களை வெளியிட்டவர், தற்போது புதிதாக தேசாந்திரி என்ற பெயரில் சொந்தமாகப் பதிப்பகம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

இந்தப் பதிப்பகத் தொடக்க விழா டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யக் கலாசார மையத்தில் நடைபெற்றது. இதில் எஸ்.ரா.வின் ஏழு புதிய நூல்கள் வெளியிடப்பட்டன. இந்த நிகழ்வில் அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், சினிமா பிரபலங்கள் என பல துறை சார்ந்த பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

தோழர் நல்லகண்ணு

தலைமையுரை ஆற்றிய தோழர் நல்லகண்ணு, “தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் முக்கியமானவர் எஸ்.ராமகிருஷ்ணன். அவருடைய படைப்புகளைத் தமிழர்கள் மட்டுமல்லாது பிற நாட்டைச் சேர்ந்தவர்களும் அங்கீகரித்துள்ளனர். அவருடைய பெரும்பாலான படைப்புகள் பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. எழுத்தின் மூலம் வாழ முடியும் என்பதை உலகத்துக்கு அறிவித்துவருகிறார்” என்றார்.

எழுத்தாளர் ராகுல சாங்கிருதயானுடன் எஸ்.ராவை ஒப்பிடும் அவர், “ராகுல்ஜியின் எழுத்துகளில் உன்மைத் தன்மை இருக்கும். பல ஊர்களைச் சுற்றிய அனுபவம் இருக்கும். அதேபோல ராமகிருஷ்ணனின் படைப்புகளில் இருப்பதை நான் பார்க்கிறேன். ராகுல்ஜியின் படைப்புகளை எப்படி எல்லா தரப்பினரும் கொண்டாடுகிறார்களோ அப்படி ராமகிருஷ்ணனையும் கொண்டாடுவார்கள். ராகுல்ஜியின் இடத்தில் நான் ராமகிருஷ்ணனைப் பார்க்கிறேன்” என்றார்.

இயக்குநர் லிங்குசாமி

துணையெழுத்து என்ற கட்டுரைத் தொகுப்பின் மூலமே எஸ்.ரா. தன்னைக் கவர்ந்ததாகச் சொல்லும் இயக்குநர் லிங்குசாமி, தன்னுடைய சண்டக்கோழி, பீமா படங்களில் அவரோடு பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து பேசிய அவர், “எதைப் பற்றிக் கேட்டாலும் சொல்லக்கூடிய நினைவாற்றல் எப்படி வந்தது, கடந்து வந்த பாதையில் வெவ்வேறு மனிதர்களைச் சந்தித்த அனுபவம் என்ன, உங்களால் எப்படி தொடர்ந்து இவ்வளவு எழுத முடிகிறது?” என்ற மூன்று கேள்விகளை முன்வைத்து விடைபெற்றுக்கொண்டார்.

லிங்குவின் கேள்விகளுக்கு எஸ்.ரா. பதில்

லிங்குவின் கேள்விகளுக்கு பதிலளிக்க வந்த எஸ்.ரா., “உலகத்து இலக்கியங்கள் குறித்து என்னால் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். ஆனால், என் பிறந்த நாள் தேதி உட்பட எண்களை என்னால் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாது” என்று தன்னுடைய நினைவாற்றல் குறித்தும் ஞாபக மறதி குறித்தும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சாதாரணமா ஓர் அரங்கத்துக்குப் போனா எந்த இடத்துல பார்க்கிங் விட்டேன்னு எனக்குத் தெரியாது. அதனால கஜினி பட ஹீரோ மாதிரி தான் நானும் போட்டோ எடுத்துக்கிற பழக்கம் உள்ளவன். ஆனா, தஸ்தாயெவ்ஸ்கி கதையில இந்த கேரக்டர் எந்த இடத்துல.. எத்தனாவது பக்கத்தில வருதுன்னு எந்த நைட்டில கேட்டாலும் என்னால சொல்ல முடியும். அதே மாதிரி மகாபாரதத்தில் இருக்கிற அத்தனை கதாபாத்திரங்களும் எத்தனை பேர் எந்தெந்த இடத்தில வர்றாங்கன்னும் எனக்குத் தெரியும். அப்போ நான் நினைப்பேன். மூளையில ஒரு பகுதி வேலை செய்யுது. ஒரு பகுதி வேலை செய்யலன்னு” என்று அவர் சொல்ல அரங்கமே சிரிப்பலையில் நிறைந்தது.

நாம் எதை ஆழ்ந்து படிக்கின்றோமோ அதுதான் நமக்கு நினைவுகளாக வரும் என்று சொல்லும் எஸ்.ரா, “ஒரு மருத்துவர் எப்படி இன்னிக்கு எத்தனை பேருக்கு மருத்துவம் பார்த்தோம் என்று நினைக்கிறாரோ, ஒரு ஆசிரியர் எப்படி இன்னிக்கு எத்தனை பேருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தோம் என்று எண்ணுகிறாரோ... அப்படித்தான் நானும் இன்னிக்கு என்ன எழுதினோம்னு நினைத்தபடி எழுத்தை மட்டுமே எண்ணி வாழ்ந்து வருபவனாகஇருக்கிறேன்” என்றார்.

“வாழ்க்கையில் நமக்குத் திரும்பக் கிடைக்காத ஒன்று இந்த நாட்கள்தான். ஒவ்வொரு நாள்லயும் ஏதாவது செய்திடணும்; இழக்கக் கூடாது என்று நினையுங்கள். அதே மாதிரி உங்களோட கூட இருக்கிறவங்களைக் கொண்டாடுங்க. அவங்களோட சேர்ந்து இருங்க. ஏன்னா, அந்தச் சந்தர்ப்பம் திரும்ப வராது. வெவ்வேறு ஊர்கள்ல வெவ்வேறு மனித முகங்களை நான் பார்த்திருக்கேன். ஆனா, அத்தனை அனுபவங்களையும் நம்மளால பதிவு பண்ண முடியாது. மனிதனோட மிகப் பெரிய துயரமே அவனது நினைவுகள்தான். ஆனா, அந்த நினைவுகள் இல்லாம மனிதனால வாழ முடியாது. நம்மள அடுத்த கட்டத்துக்கு கூட்டிப் போறதும் நினைவுகள்தான்” என்று லிங்குவின் கேள்விகளுக்கு பதிலுரைத்தார் எஸ்.ரா.

இயக்குநர் வசந்த பாலன்

இயக்குநர் வசந்த பாலன் பேசுகையில், “என்னோட முதல் படத்துக்கு ராமகிருஷ்ணன் சார்தான் வசனம் எழுதினார். அந்தப் படம் தோல்வி அடைந்தது. அதுக்கப்புறம் தொடர்ந்து நாலு வருஷம் அவரோட நட்புறவில் இருந்தேன். அப்போ அவரோட துணையெழுத்து உருவாவது பத்தி பேசுவார். ஒரு தடவை பொய்யான சினிமா உலகத்தில கட்டமைக்கப்பட்டதுதான் மழைன்னு சொன்னார். அப்போதான் எனக்கு வெயில்ல பிடிக்க ஆரம்பிச்சது. அப்புறம் தான் நான் வெயில்ல கொண்டு வந்தேன். அவரோட 20 வருடங்களா பயணிச்சு வர்றேன். ஒரு தடவைகூட தன்னோட கவலையை, துக்கத்தை, துயரத்தைப் பகிர்ந்துகொண்டதில்லை. மாறாக சந்தோஷத்தை மட்டுமே பகிர்ந்துகொண்டார்” என்றார்.

“இந்த நூற்றாண்டின் இரண்டு மகத்தான எழுத்தாளர்கள் என இருவரைச் சொல்வேன். ஒருவர் ஜெயமோகன். மற்றொருவர் எஸ்.ராமகிருஷ்ணன் சார்” என்றார் வசந்த பாலன்.

நடிகர் பார்த்திபன்

இந்த அரங்கமே ஒரு விரித்த புத்தகம் மாதிரி இருக்கிறது என உரையாடலைத் தொடங்கிய பார்த்திபன், “எழுதுறகிறவர்கள் எல்லாம் எழுத்தாளன் ஆக முடியாது. எழுத்தாளன் எல்லாம் எஸ்.ராவாக முடியாது” என பஞ்ச் வசனத்துடன் ஆரம்பித்தார்.

“எஸ்.ரா ஒரு கதை சொல்லி கிடையாது. அவர் ஒரு அனுபவச் சொல்லி. அவரோட அனுபவத்தைத்தான் அவருடைய புத்தகத்தில் பார்க்கிறேனே தவிர, அதை வெறும் கதையா பார்க்குறது இல்ல. எஸ்.ராவின் பழைய நண்பன் நான். என்னை நடிக்க வைப்பதற்காக ‘நூறு சதவிகித அழகி’ என்ற கதையை என்னிடம் சொன்னார். அது கிட்டத்தட்ட நாலஞ்சு வருஷமாச்சு. பொதுவா பாக்யராஜ் சாரோட அசிஸ்டெண்ட் நல்லா கதை சொல்லுவாங்கன்னு பேரு. ஆனா, எஸ்.ரா சொன்ன அந்தக் கதையை என்னால யார்ட்டயும் சொல்லவே முடியல. அந்தளவுக்குப் பிரமாதமா கதை சொன்னார்” என்று அவரை புகழ்ந்து பேசினார் பார்த்திபன்.

இயக்குநர் ராஜு முருகன்

“நான் ஓர் எழுத்தாளனாக, சினிமாக்காரனாக இயங்குவதற்கு எஸ்.ரா. தான் காரணம். அவர்தான் என்னுடைய எழுத்துகளுக்கு முன்னோடியாக இருக்கிறார். இடது சாரி சிந்தனைகளோடும், அறத்தோடும், மானிடப் பண்போடும் வழுவாது எழுதிக்கொண்டுவரும் மிக முக்கியமான படைப்பாளி அவர். எஸ்.ராவோட கட்டுரைகளைப் படிச்சிட்டுத்தான் தொடர்ந்து பயணப்படணும்னு எண்ணம் தோணுச்சு. அதேபோல அவருடைய அனுபவங்கள கூகுள் மேப்பாக வைத்துப் பயணப்பட்டிருக்கேன். உலக சினிமாவையும், அரசியல் பார்வையையும் சமகால தலைமுறைக்கு அறிமுகம் செய்வதை எஸ்.ராவின் மிக முக்கியமான பங்காக நான் கருதுகிறேன். ஒரு சமூகத்தை அடுத்த தளத்துக்கு அழைத்து செல்லக்கூடிய எழுத்தை ஒரு நாற்காலியை செய்வதைப் போல எழுத்தாளன் செதுக்கிக்கொண்டே இருக்கிறான். அவனுடைய படைப்பு இந்தச் சமூகத்தை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய நாற்காலியாக இருக்கிறது. அப்படி இந்த தமிழ்ச் சமூகத்துக்கான நாற்காலியை எஸ்.ராவின் எழுத்துத் தயாரித்துக் கொண்டிருக்கிறது” என்று எஸ்.ராவின் இடது சாரி சிந்தனை குறித்தான போக்கினை சுட்டிக் காட்டினார் ராஜு முருகன்.

ஆவணப்பட இயக்குநர் பேரா. சொர்ணவேல்

“20 வருஷத்துக்கு முன்னாடி இருந்தே எஸ்.ராவுடன் பழக்கம். எழுத்திலிருந்து ஊடகத்துக்கு வந்தது என்னுடைய வேலையின் போதுதான். மெக்பத் நாடகத்தை தழுவி ‘காலுறைக்கு ஆசை’ என்ற பெயரில் ராஜ் டிவிக்காக தொடர் ஒன்றை தயார் செய்து வெளியிட்டோம். அதனைத் தொடர்ந்து ‘வாழ்க்கைப் பாடம்’ என்ற பெயரிலும் ஐந்து எபிஸோட் பண்ணோம். அதுக்கும் ராமகிருஷ்ணன்தான் எழுதினார். நாங்கள் சந்திக்கும்போது உலக சினிமாவைப் பற்றியும், உலக இலக்கியங்கள் பற்றியும் தொடர்ந்து கலந்துரையாடுவோம்; விவாதிப்போம். கிறிஸ்து நன்னாளில் ராமகிருஷ்ணன் தொடங்கியிருக்கும் தேசாந்திரி பதிப்பகம் வெற்றி நடைபோட வாழ்த்துகிறேன்” என்று தனக்கும் எஸ்.ராவுக்கும் இடையிலான நட்புறவைப் பகிர்ந்து கொண்டார் ஆவணப்பட இயக்குநரும் பேராசிரியருமான சொர்ணவேல்.

பத்திரிகையாளர் சமஸ்

சுஜாதாவுக்குப் பிறகு வாசகர்களைக் கவரக்கூடிய எழுத்தாளர்களுள் எஸ்.ரா குறிப்பிடத்தக்கவர் என்று கூறிய சமஸ், “வெறுமனே எழுதுறவர் மட்டுமில்லாமல் தொடர்ந்து வாசிக்கிறவராகவும் இருக்கிறார். அதே சமயம் வாசகர்களைப் படிக்கத் தூண்டியவராகவும் இருக்கிறார்” என்றார்.

“தமிழ்ல ஒவ்வோர் ஆண்டும் தமிழின் சிறந்த பத்துப் புத்தகங்கள் என்ற பட்டியலை வெளியிடுவோம். அதே மாதிரி இந்த ஆண்டுக்கான பட்டியலுக்காக ஒரு மாசமா ஒர்க் பண்ணிட்டு இருக்கோம். இது விஷயமா பலரிடம் சிறந்த 10 புத்தகங்கள் குறித்து கேட்போம். அப்படி பேசும்போது, ஒவ்வொரு வருஷமும் எஸ்.ராவோட பேரு அடிபடும். பலரும் ஏன் எஸ்.ராமகிருஷ்ணன்கிட்டயே கேட்கறீங்கன்னு மெயில் வரும். உள்ளபடியே இந்த வருஷத்துக்கான புத்தகங்களைப் படிச்சிட்டேங்களான்னு ஒரு நூறு பேர்ட்ட கேட்கும்போது படிச்சிட்டேன்னு சொல்றவங்கள விரல்விட்டு எண்ணிடலாம். அப்படி விரல் விட்டு என்னும் நபர்களுள் ஒருவராக ராமகிருஷ்ணன் இருக்கார். ராமகிருஷ்ணன் எழுதுறதைத் தாண்டி தொடர்ந்து படிக்கிறவராக இருக்கார். அவருடைய புத்தகங்களைத் தாண்டி வேறு எந்த மாதிரியான புத்தகங்களைக் கொண்டு வர்றாருன்னு பார்ப்போம்” என்று பேசினார்.

எழுத்தாளர் பிரபஞ்சன்

“தேசம் முழுவதும் நடந்து தேசத்தை தனக்குள் வைத்திருபவன் எவனோ அவனே தேசாந்திரி” எனத் தனது பேச்சைத் தொடங்கிய பிரபஞ்சன், “கிட்டத்தட்ட 100 புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கேன். ஒரு 40 புத்தகம் வரும்போதே எல்லாரும் பதிப்பகம் தொடங்கச் சொன்னார்கள். நான்தான் மறுத்து விட்டேன். ஆனால், சரியான தருணத்தில் ராமகிருஷ்ணன் பதிப்பகத்தைத் தொடங்கியிருக்கிறார். இது நல்ல தருணம். அவர் வெற்றி பெறுவார் என்கிற பரிபூரண நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

“இவ்வளவு எழுதுகிறாரே எப்படி எழுதுகிறார் என்று எல்லாரும் கேட்கிறார்கள். காரணம் அவரிடம் அவ்வளவு வாசிப்பு இருக்கிறது. அதனால்தான் இவ்வளவு அவரால் எழுத முடியுது. உள்ளே போனது வெளியே வந்துதானே ஆகனும்” எனச் சொல்லியபடி சிரித்தார்.

“ஒரு புத்தகத்தை முகர்ந்து பார்க்கும்போது புதுவிதமான வாசனை வரும். அது ஒருவிதமான எழுத்து போதை. அதேபோல ஓர் எழுத்தாளனோட புத்தகத்தை முகர்ந்து பார்த்தா அந்த எழுத்தாளனோட வாசனை அடிக்கும். அந்த வாசனை எழுத்தை நேசிக்கிற ஒவ்வொருவருக்கும் கிடைக்கும். வேணும்ன்னா அந்தப் புத்தகத்தை (வெளியீட்டு புத்தகங்களை நோக்கி) முகர்ந்து பாருங்க. எஸ்.ராவோட வாசனை அடிக்கும்” என உணர்ச்சி மேலெழும்ப சொன்னார்.

தமிழருவி மணியன்

உபபாண்டவம் நாவல் மூலமே எஸ்.ரா தனக்கு அறிமுகமானதாக கூறும் தமிழருவி மணியன், அந்தப் புத்தகம் தந்த பாதிப்பிலிருந்து இன்னும் மீள முடியவில்லை என்றார்.

தொடர்ந்து பேசியவர், “பரந்து பட்ட வாசிப்பு என்பது ஒரு படைப்பாளனுக்கு மிக முக்கியமானது. வாசிப்பு ஒருபக்கமும் அதேசமயம் யோசிப்பு ஒருபக்கமும் இருந்தால்தான் நல்லதொரு படைப்பு தோன்றும். வாழ்ந்ததையும், வாழ்க்கையயும் சொல்வதுதான் உண்மையான படைப்பு. வாழ்வை நேராகக் கண்டு இயல்பாகச் சொல்வதுதான் ஒரு நல்ல இலக்கியம். அப்படியாக, வாழ்க்கையை மையப்படுத்தி அதிலிருந்து விலகாமல் எழுத்துகளை வழங்குபவர் எஸ்.ரா. அவரது படைப்புகளில் அழகியல் உணர்வு இருக்கும். நிறைய எழுதினால் அந்த எழுத்தின் அளவும், அதன் சுவையும் பழுதுபட்டுப் போகும் என்பார்கள். ஆனால், எஸ்.ராவின் எழுத்துகள் அப்படி இல்லை. அவர் எவ்வளவு எழுதினாலும் அதன் அளவும், சுவையும் அடர்த்தியாகவே இருக்கிறது” என்றார்.

தஸ்தாவெஸ்கி உள்ளிட்ட உலக இலக்கிய எழுத்தாளர்களும் புதுமைப்பித்தன் உள்ளிட்ட தமிழ் எழுத்தாளர்களும் வறுமையில் வாடியவர்கள் எனச் சொல்லும் அவர், “வாழ்வின் அனுபவங்களை மையப்படுத்தி நல்ல இலக்கியம் உருவெடுக்க வேண்டும். நம்முடைய படைப்பிலக்கியத்தை ஒரு பருந்து பார்வை பார்க்கும்போது எஸ்.ராவைப் போன்ற மனிதர்கள் அரிதினும் அரிதாகத்தான் கிடைக்கிறார்கள். ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, தி.ஜானகிராமன் ஆகியோருக்கு அடுத்தபடியாக பிரபஞ்சனைப் பார்க்கிறேன். பிரபஞ்சனுக்குப் பிறகு எனக்கு பிடித்தவர்கள் நான்கு பேர். அவர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், கல்யாண்ஜி (வண்ணதாசன்). இவர்களுள் ஒவ்வொருவருக்கும் ஒரு நடை, ஒரு தனித்தன்மை இருக்கிறது” என்ற பாகுபாட்டை விளக்கினார்.

எஸ்.ராவின் எழுத்துக்களில் வியப்பது குறித்து பேசிய தமிழருவி மணியன், “எஸ்.ரா. எடுத்தாளுகிற கருப்பொருளும், அக்கருப்பொருளுக்கு வழங்கக்கூடிய வார்த்தைகளும் சமூகம் சார்ந்ததாகவும் ரசனை மிகுந்ததாகவும் இருக்கிறது. எழுதுவது மட்டுமல்லாமல் அவர் பேசுவதும் எழுதுவதும் ஒரே தளத்தில் பயணிக்கும். தீவிர தன்மைக்கொண்ட வாசகர்களைத் தன்பால் ஈர்ப்பது அரிதினும் அரிது. அந்த ஆற்றலை பெற்றிருக்கிற எஸ்.ராவின் பேனாவுக்கு வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசி முடித்தார்.

எஸ்.ராமகிருஷ்ணன்

வாழ்த்துரை வழங்கிய அத்தனை பேருக்கும் முதலில் நன்றி தெரிவித்து தனது உரையை ஆரம்பித்த எஸ்.ரா., “நான் எழுத்தாளனாக இருந்தாலும் என்னை யாரேனும் நீங்கள் எழுத்தாளனாக இருக்க விரும்புகிறீர்களா அல்லது வாசகனாக இருக்க விரும்புகிறீர்களா என்று கேட்டால் நான் வாசகனாக இருக்க விரும்புவதையே தேர்வு செய்வேன். ஏன்னா வாசகனாக இருப்பவர்களுக்குத்தான் ஏராளமான எழுத்தாளர்கள் கிடைப்பார்கள்” என்றார்.

பதிப்புத் துறை சார்ந்து பேச ஆரம்பித்தவர், “பதிப்பகம் நடத்தி நொடித்து போனவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், அந்த நொடித்துப் போனவர்கள் செய்த மகத்தான செயல்களை நாம் தெரிந்துகொள்வதே இல்லை. சக்தி பிரசுராலயம்னு ஒரு பதிப்பகத்தை சக்தி வைகுந்தம் நடத்தினார். டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி போன்ற ரஷ்யப் படைப்புகளைத் தமிழுக்கு கொண்டுவந்தார். குறிப்பாக டால்ஸ்டாயின் ‘வார் அண்ட் பீஸ்’ நாவலைத் தமிழில் கொண்டுவந்தார். அதற்கான ராயல்டியையும் அந்த படைப்பாளிகளுக்கு அனுப்பி வைத்தார். அதை ரஷ்ய அரசாங்கம் தமிழ் நாட்டிலிருந்து யாரது அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்று அறிந்து ராயல்டி எதுவும் தர வேண்டாம் என கூறியதோடு ரஷ்ய இலக்கியங்களை மொழிபெயர்ப்பு செய்வதற்கான உதவிகளையும் செய்தது அந்த அரசு. உலகத்தில் எந்த ஓர் அரசும் இப்படி செய்ததில்லை. சக்தி வைகுந்தம் பதிப்புத் துறையில் நொடித்துப் போனாலும் அவர் செய்த காரியம் மகத்தானது. அப்படி உலகத்து இலக்கியங்களை வல்லிக்கண்ணன், பாஸ்கரன், கிருஷ்ணையா போன்றோர் தமிழுக்குக் கொண்டுவராமல் போயிருந்தால் நான் எல்லாம் வந்திருக்கவே மாட்டேன்” என்றார்.

கிறிஸ்தவப் புனித நூலான பைபிள் குறித்துப் பேசியவர், “சின்ன வயதிலிருந்தே நான் பைபிள் படித்து வருகிறேன். அதில் சாலமோனின் பாடல்களுக்கு நிகரான காதல் பாடல்கள் பிற இலக்கியங்களில் இல்லை என்றே சொல்லுவேன். நாம் படிக்கிற பைளின் மொழியாக்கத்தை செய்தவர் ஆறுமுக நாவலர். அவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர். கிறிஸ்துவ மொழியாக்கத்தை ஒரு சைவ மரபைச் சார்ந்தவர் செய்திருப்பதைப் பாருங்கள்” என்று சொல்லி ஆச்சர்யம் கொள்ள செய்ததோடு, க.நா.சு. மொழிபெயர்த்த ‘தேவமலர்கள்’ நூலில் இடம்பெற்றிருந்த சம்பவங்களை விவரித்துச் சிலாகித்துப் பேசினார்.

“என்னுடைய கரங்களால் உங்களைத் தொட அனுமதிக்க மறுக்கலாம். ஆனால், என் சொல்கொண்டு உங்களைத் தொடுவேன். என் பாட்டன் காலத்துச் சொல் என்னைத் தீண்டி இருக்கிறது. சங்க இலக்கியங்கத்தை படிக்கும்போது சொல்லுக்கு எடை இருப்பதை உணர்ந்தேன். பல நூற்றாண்டுகளைக் கடந்த அந்த சொல் என்னைத் தீண்டியது. சொற்களால் மனிதர்களைத் தொடுபவன்தான் இலக்கியவாதி. எனவே, நான் சொற்களால் உங்களைத் தொடுவேன்” என்றார்.

சொல்லின் மிகப்பெரிய பிரச்னை மௌனம்தான் எனச் சொல்லும் அவர், “உலகில் மிகப்பெரிய எடை கொண்ட ஏதாவது இருக்கிறதென்றால் அது மௌனம்தான். மனிதர்களின் மௌனத்துக்கு இணையான எடையுள்ள பொருள் எதுவும் இல்லை. அதிலும் பெண்களின் மௌனத்தை எடுத்துக் கொண்டால், ஒரு தட்டில் பெண்ணின் மௌனத்தையும் மறுதட்டில் உலகத்து சந்தோஷங்களையும் வைத்தாலும் ஈடே ஆகாது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தைப் போல உலகத்துத் துயரங்களை மாற்றுவதற்கான முயற்சிகளைத் தான் எழுத்தாளர்கள் மேற்கொள்கிறார்கள். இலக்கியமும் எழுத்தாளர்களும் இல்லையென்றால் உலகம் மோசமாகியிருக்கும். மொத்த உலகத்தையும் அழித்துவிட்டு ஒரே ஒரு ஷேக்ஸ்பியரை எழுப்பிவிட்டால் அவர் மொத்த உலகத்தையும் தன் எழுத்துகளால் உருவாக்கிவிடுவார்” என்று சொல்லின் வலிமை குறித்த ஒரு சம்பவத்தையும் பதிவிட்டார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

திங்கள் 1 ஜன 2018