மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: 2017ல் வெற்றி கண்ட தென்னிந்திய பெண்கள்!

சிறப்புக் கட்டுரை: 2017ல் வெற்றி கண்ட தென்னிந்திய பெண்கள்!

நாட்டின் உண்மையான வளர்ச்சி பெண்களின் முன்னேற்றத்தில் உள்ளது. பெண்கள் கல்வி அறிவு பெற்று ஆட்சித்துறை, தொழில்துறை, அறிவியல் துறை, விளையாட்டுத்துறை, மருத்துவத்துறை, சட்டத்துறை, காவல்துறை, இலக்கியத்துறை போன்ற துறைகளில் பணியாற்றுவதுடன் வெற்றிநடை போட்டு வருகின்றனர். 2017 ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளிலும், தனி மனித சுதந்திரத்திலேயும் பல பெண்கள் வெற்றி கண்டுள்ளனர். அப்பெண்களைப் பற்றி ஒரு பார்வை.

கவுசல்யா

இந்த சமூகத்தில் பல ஆணவ கொலைகள் நடந்துள்ளது. ஆனால், முதன்முறையாகக் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தூக்குத் தண்டனை அதிக அளவில் அளிக்கப்பட்டது சங்கர் படுகொலை விவகாரத்தில் தான். ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக 2016 மார்ச் 15ஆம் தேதி உடுமலை பேருந்து நிலையம் அருகே கவுசல்யா- சங்கர் ஜோடியை சரமாரியாக ஒரு கும்பல் வெட்டியது. அதில் சங்கர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தகவுசல்யா பலமுறை தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.பின்னர் மன உறுதியோடு தன் கணவரை கொன்றவர்களுக்கு தண்டனைப் பெற்று தரும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கவுசல்யாவின் தாய் தந்தை உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். ஒன்றரை ஆண்டுகளாக நடந்த வழக்கில் டிசம்பர் 12 ஆம் தேதி கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, கூலிப்படை தலைவன் உள்படப் 6பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் என்றால் குற்றவாளிகள் தான். சாதிய கவுரவ கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் படைப்பதுதான் சங்கருக்குரிய நீதியாக நான் கருதுகிறேன் என பெண் போராளியாக வெற்றி கண்டுள்ளார்.

ஹாதியா

இஸ்லாம் மதத்துக்கு மாறி 2௦16ம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி ஷாகின் ஜெகான் என்ற இஸ்லாமிய இளைஞரைக் காதல் திருமணம் செய்துகொண்டவர் கேரள பெண் ஹாதியா. இவருடைய இந்த மாற்றத்தால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், 11 மாதங்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் கூறிய ஹாதியா, எனக்கு என் சுதந்திரம் வேண்டும் எனத் தனது நிலையில் உறுதியாக இருந்தார். தற்போது, சேலம் ஹோமியோபதி கல்லூரியில் அவர் படித்து வருகிறார். ஒருவரின் தனிமனித உரிமையை எவரும் பறிக்க கூடாது என்பதற்காகப் போராடி வெற்றி கண்டுள்ளார்

பிவி சிந்து

2016 ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தங்க பதக்கம் வென்ற பிவி சிந்து(22) இந்தியாவின் தங்க மகளாகப் போற்றப்படுகிறார். கிரிகெட் மட்டுமே பார்க்கும் கூட்டத்தை அன்று ஒலிம்பி போட்டியைக் காண வைத்தார் சிந்து. இந்தாண்டு சையத் மோடி ஜிபிஜி, இந்தியா ஓபன், கொரியா ஓபன் ஆகியவற்றைக் கைப்பற்றினார். ஹாங்காங், துபாய் சூப்பர் சீரிஸில் 2வது இடத்தைப் பிடித்தார். பேட்மிண்ட்ன உலகத் தரவரிசையில் 2வது இடத்திற்கு முன்னேறிய சிந்து, தற்போது 3வது இடத்தில் உள்ளார். 2018 சீசனில் முதல் இடத்தைக் கைப்பற்றும் நம்பிக்கையுடன் வெற்றி கண்டுள்ளார்.

மிதாலி ராஜ்

பெண்கள் கிரிக்கெட்டில் இதுவரை 186 போட்டிகளில் பங்கேற்று 6,190 ரன்களை குவித்தவர் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் (35). பெண்கள் கிரிக்கெட்டில் 6,000 ரன்களை கடந்த முதல் மற்றும் ஒரே வீராங்கனை என்ற பெருமை பெற்றதுடன் உலக சாதனையையும் படைத்தார். ஆண்கள், பெண்கள் என இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு முறை இந்திய அணியை உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு (2005 மற்றும் 2017) அழைத்துச் சென்று வெற்றி கண்டுள்ளார்.

கிரேஸ் பானு

திருநங்கைகளின் உரிமைக்கு ஆதரவாகவும், சமூக அநீதிகளை எதிர்த்தும் போராடி வருபவர் திருநங்கை கிரேஸ் பானு. பொறியியல் பட்டப்படிப்பை முடித்து மாநிலத்தின் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரியாக சாதனைப் படைத்தவர். இவர் மூன்றாண்டுகளுக்கு முன் தாரிகா பானு என்னும் திருநங்கையை தத்தெடுத்துக் கொண்டார். அவரின் கல்விக்காக போராடினார். இந்தாண்டு சித்த மருத்துவ படிப்பில் தாரிகா சேர்ந்துள்ளார். தாரிகாவுக்காக போராடி மருத்துவ இடம் பெற்று கொடுத்து கிரேஸ் வெற்றி கண்டுள்ளார்.

அகாய் பத்மாஷலி

திருநங்கைகளின் உரிமைக்காக நீண்ட காலமாகப் போராடிவருபவர் திருநங்கை அகாய் பத்மாஷலி. இவரது தொடர்ச்சியான போராட்டங்களை அங்கீகரிக்கும் வகையில் 2016ஆம் ஆண்டு அமைதி மற்றும் கல்விக்கான இந்திய மெய்நிகர் பல்கலைக்கழகம் (Indian Virtual University for Peace and Education) அவருக்குக் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்தியாவில் முதன்முறையாகக் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றார். டெல்லியில் டிசம்பர்1ஆம் தேதி முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அகாய், நான் ஒரு பாலியல் தொழிலாளி. நான் ஒரு குற்றவாளி என் மீது பிரிவு 377-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனக்கான குரலை நான் எவ்வாறு உயர்த்துவது? என ஒட்டுமொத்த திருநங்கைகளுக்காகவும் இவர் எழுப்பிய கேள்வி மூலம் வெற்றி கண்டுள்ளார்.

டிஐஜி ரூபா மெளட்கில்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சசிகலா சிறைக்குள் சொகுசு ஏற்பாடு செய்துகொள்வதற்காக கர்நாடக சிறைத் துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்தார் என புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் சிறைத் துறையின் முன்னாள் டிஐஜி ரூபா மெளட்கில். சிறப்பாக பணியாற்றியதாக இவருக்கு ஜனாதிபதிப் பதக்கம் வழங்கி கவுரவித்தார். தனது உயர் அதிகாரிக்கு எதிராகவே போர்க்கொடி தூக்கியதால், நாடு முழுவதும் அறியப்படும் ஆளுமையாக ரூபா வெற்றி கண்டுள்ளார்.

ஸ்வாதி லக்ரா

ஐதராபாத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக, 2014ஆம் ஆண்டு 'ஷி குழு' (SHE) என்ற பிரிவு அமைக்கப்பட்டது. இந்த குழு ரகசிய கேமராக்களுடன், மக்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளிலும் ரோந்து சென்று, குற்றங்களில் ஈடுபடுவோரை, வீடியோ எடுத்து, அவர்களை கைது செய்யும். ஐதராபாத் நகர காவல்துறை கூடுதல் ஆணையர் ஸ்வாதி லக்ராவின் தலைமையிலான ஷீ குழு சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில்,“விநாயக சதுர்த்தியின் போது 30 ஆண்கள் பெண்களை பாலியல் ரீதியாக தொடும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பெண்களுக்கு எதிரான 3,516 பாலியல் தொல்லை வழக்குகளில்,ஷி குழு 1400 பேரைப் பிடித்துள்ளது. ஷி குழு மூலம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை 20% குறைத்து ஸ்வாதி லக்ரா வெற்றி கண்டுள்ளார்.

ரூபா அழகிரிசாமி

இந்தாண்டு இந்திய கடற்படையில் மூன்று பெண்கள் கடற்படை ஆயுத ஆய்வாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். அதில், புதுச்சேரியைச் சேர்ந்த ரூபா அழகிரிசாமி (25), கடற்படை ஆயுத ஆய்வாளராகத் தேர்ச்சி பெறுவதற்கு 5 முறை முயன்று தோல்வி அடைந்தார். ஆனால், முயற்சியைக் கைவிடாமல் போராடிப் பல நிலைகளில் பயிற்சி எடுத்து 6வது மற்றும் இறுதி முயற்சியின் மூலம் கடற்படை ஆயுத ஆய்வாளராகத் தேர்வாகி வெற்றி கண்டுள்ளார்.

ஐஏஎஸ் ரோகினி

ரோகினி ராம்தாஸ் பாஜிபக்கரே செலம் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராக ஆகஸ்ட் மாதம் பதவியேற்றார். செப்டம்பர் மாதம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் கருத்தராஜபாளையம் என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சென்ற ஆட்சியர் ரோகிணி ஆய்வு நடத்தினர். அங்கு ஆசிரியர் இல்லாததால் அவரே பாடம் நடத்தினார். அவர் பதவியேற்ற நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் தன்னுடைய அதிரடி நடவடிக்கைகளாலும், மாற்றுத் திறனாளிகளிடம் கனிவோடு நடந்து கொள்வது, திட்டங்களை அதிரடியாகச் செயல்படுத்துவது என சேலம் மக்களிடம் மட்டுமல்லாமல் தமிழக மக்களின் உள்ளத்திலும் இடம் பிடித்து வெற்றி கொண்டுள்ளார்.

திவ்ய பாரதி

2016ஆம் ஆண்டு ‘கக்கூஸ்’ என்ற பெயரில் துப்புரவு பணியாளர்கள் எதிர் கொண்டு வரும் கொடுமைகளை விவரித்து ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டவர் திவ்யபாரதி. இப்படத்தைத் தமிழகத்தில் வெளியிட தடை விதிக்கப் பட்டது. அதே நேரத்தில் கேரள மாநிலத்தில் இந்த ஆவணப்படத்துக்கு விருது வழங்கப்பட்டது. மேலும், அண்ணா பல்கலைக் கழக டீன் சித்ரா செல்வியின் கைகளில் தலித்துகள் தவறாக நடத்தப்பட்டதாக ஜூலை மாதம் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டார். 2009ஆம் ஆண்டு சக மாணவர் உயிரிழந்தது தொடர்பாக சட்டம் பயின்று வந்த திவ்யபாரதி உட்பட 7 மாணவர்கள் பிரேத கிடங்கிற்குள் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக திவ்ய பாரதி மீது வழக்கு தொடரப்பட்டது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவருக்கு தொடர் பாலியல் மிரட்டல்களும் கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. எனினும் அனைத்து மிரட்டல்களையும் சவால்களையும் எதிர்த்து வெற்றி கண்டுள்ளார்.

மருத்துவர் ஷிம்னா அசீஸ்

கேரளா மலப்புரத்தை சேர்ந்த மருத்துவ அதிகாரி டாக்டர் ஷிம்னா நூற்றுக்கணக்கான பெற்றோர்களுக்கு முன்னால், குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருந்த போது, ஒரு குழந்தையின் பெற்றோர். அந்த தடுப்பூசியில் நீங்கள் போட்டுக்கொள்ள முடியுமா என சவால் விடுத்தனர். அதை ஏற்ற டாக்டர் ஷிம்னா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இவரின் இந்த செயல்பாடு மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முன்வந்தனர். தடுப்பூசி குறித்த மக்களின் பயத்தை உடைத்தெறிந்ததன் மூலம் இவர் வெற்றி கண்டுள்ளார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

திங்கள் 1 ஜன 2018