மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

சிறப்புத் தொடர்: முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்!

சிறப்புத் தொடர்: முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்!

அருள்செல்வன் - நேர்காணல்: 4

(கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சுற்றுச்சூழல் சம்பந்தமான பிரச்னைகளைப் போக்கும் பணியில் நீண்ட வருடங்களாக அருள்செல்வன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். களப் பணியாளர். எப்போதும் இன்முகம் காட்டி, மக்கள் பிரச்னைகளுக்குக் குரல் கொடுப்பவர்; கடலூரில் ஏற்பட்டிருக்கும் பல ஆக்கபூர்வமான சுற்றுசூழல் மாற்றங்களில் இவருடைய பங்களிப்புக்கும் முக்கிய இடம் இருக்கிறது.)

சந்திப்பு: தமயந்தி

தானே புயல் நினைவுகள்...?

தானே புயலின்போது உண்டான அந்தக் காற்றின் சத்தம் மறக்க முடியாதது. ‘வீழ்ந்தது மரங்கள் மட்டுமல்ல, எங்கள் வாழ்க்கையும்தான்’ என்று ஒரு வாசகம் படித்தேன், தானே புயலைப் பற்றி. எண்ணிலடங்கா மரங்கள் அடியோடு சாய்ந்து கிடந்தன. எந்த இடத்தைப் பார்த்தாலும் வெட்ட வெளிகளைப் பார்க்கும் ஒரு நிலை இருந்தது. தண்ணீர், பால், உணவுப் பொருட்கள் என ஒவ்வொரு பொருளுக்கும் சிரமப்பட்டதை மறக்கவே முடியாது. மின்சாரம் இல்லாத ஒரு முந்தைய காலத்தின் அனுபவத்தை அது கொடுத்தது. எல்லா இடங்களுமே வெறிச்சோடிக் காணப்பட்டது. முந்திரி விவசாயிகள், தென்னை விவசாயிகள், வாழை விவசாயிகள் என ஒவ்வொருவரும் தங்கள் இழைப்பைச் சொல்லி மாளாத அந்த வலிகள் வருத்தங்களின் நினைவுகள். மனிதர்களுக்கே இவ்வளவு கஷ்டம் என்றால் பறவைகள், கால்நடைகள் பட்டிருக்கிற கஷ்டங்களை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. மரங்கள் போய்விட்டது என நாம் நினைக்கிறோம். ஆனால், பறவைகளுக்கு அவைகளின் வாழிடம் மற்றும் உணவு எல்லாமே அவைதான்.

பேரிடர் மேலாண்மை இச்சேதங்களில் எப்படி மேற்கொள்ளப்பட்டது?

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், சுனாமிக்குப் பின்னர்தான் இம்மாதிரியான விஷயங்கள் பரவலாகப் பேசப்பட்டன. ஓர் இடம் எனக்கு நினைவுக்கு வருகிறது. சாமியார்பேட்டை என்றொரு கிராமம். அந்தக் கிராமத்தில் தானே புயலுக்கு முன்பாக முன்னெச்சரிக்கையாகப் படகுகளை எல்லாம் பத்திரமாக நிறுத்தி வைத்திருந்தார்கள். பெரிய வளாகங்கள், கோயில்களில் உணவுபொருள்கள், தண்ணீர், ஜெனரேட்டர், டீசல், அவசர மருந்துகள் என எல்லாவற்றையும் ஊரிலுள்ள ஒருவரே ஊர்மக்களின் உதவியோடு ஒருங்கிணைத்திருந்தது மறக்க முடியாத ஒரு விஷயம். நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி, அங்கிருந்து வெளியேறுவது எப்படி என்பதெல்லாம் சுனாமிக்குப் பிறகு பேசப்பட்டிருந்தாலும், தானே புயலில் பேரிடர் மேலாண்மை முழுமையானதாக இருக்கவில்லை. அதற்குக் காரணம் என்னவெனில் ஒவ்வொரு பேரிடர் சமயங்களிலும் பெற்ற படிப்பினைகளைச் சரிவர எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டார்கள் என்பதுதான்.

தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் சிப்காட்டின் ஒரு தொழிற்சாலையை ஆய்வு செய்யச் சொன்னதே, அது நிகழ்ந்ததா?

இந்தப் பகுதிகளில் நிறைய ஆய்வுகள் நடக்கும். அந்த ஆய்வின் அடிப்படையில் குறிப்பிட்ட நிர்வாகத்தின் மேலேயோ, தொழிற்சாலையின் மேலேயோ நடவடிக்கை எடுப்போம். அந்த நடவடிக்கையின் மேல் தடையாணை வாங்கிவிடுவார்கள். அல்லது உத்தரவு வருவதற்கு முன்னமே, அதை ஏற்றுக்கொண்டு, நடைமுறைப்படுத்தினதாக ஆதாரங்களைத் தயார் செய்து சமர்ப்பித்துவிடுவார்கள். பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யும் ஆவணங்கள் வெளிப்படையாகத் தெரிவதில்லை. ஆகவே, இது நடந்ததா, இல்லையா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எனக்குத் தெரிந்தவரையில் சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

கடலூர்வாழ் மக்களின் பிரதான தொழில் என்ன? அதன் வரலாறு...

கடலூர் என்று சொன்னாலே பிரதான தொழில் என்பது விவசாயமும் மீன்பிடித்தலும்தான். பெரிய அளவில் நிலப்பரப்பு, அபரிமிதமான நீர், நல்ல சூழல். முப்போகமும் விவசாயம் பயிர் செய்யப்பட்டு வந்தது. உள்நாட்டு மீன்பிடியும் இருந்திருக்கிறது. கடல்நீர் மீன்பிடியும் நடந்திருக்கிறது. தடவிப்பிடித்தல், மூழ்கிப் பிடித்தல், வலைபோட்டுப் பிடித்தல், தூண்டில் போடுதல் என பல்வேறு மீன்பிடி முறைகள் பின்பற்றப்பட்டிருக்கின்றன. விவசாயம் சார்ந்த வேலைகளான மாடு வளர்த்தல், ஏர்க்கலப்பை செய்தல், மரவேலைகள், இரும்பு வேலைகள், கூலி வேலைகள், மீன்பிடி சாதனங்கள் செய்தல், படகு கட்டுதல், வலை பின்னுதல், மீன் எடுத்தல், மீன் காய வைத்தல் போன்ற வேலைகள் செய்திருக்கிறார்கள். நெசவுத்தொழில், அதுசார்ந்த உபதொழில்கள் செய்திருக்கிறார்கள். அதுபோக, சிறிய பகுதி உப்பளங்கள் இருந்திருக்கின்றன.

உப்பனார் ஆற்றில் குப்பைகள் கொட்டுவதன் மூலம் ஆயிலை (மாங்குரோவ்) காடுகள் எப்படி பாதிக்கப்படுகின்றன?

உப்பனார் ஆறு நேரடியாகக் கடலோடு தொடர்புடையது. ஒருபக்கம் கிராமங்களும், இன்னொரு பக்கம் தொழிற்சாலைகளும் அமைந்திருக்கின்றன. சிப்காட் ஒட்டியுள்ள பகுதிகளில் மாங்குரோவ் காடுகள் இருந்தது என்று சொல்லமுடியாது. பெரும்பான்மையான சதுப்பு நிலக்காடுகள் இருந்தது பரங்கிப்பேட்டைக்கு அந்தப்பக்கம் பிச்சாவரம், பிள்ளை பகுதிகளில்தான். மற்றபடி ஆங்காங்கே ஐந்து, பத்து மரங்கள் என இந்தப் பகுதிகளில் இருந்தது. சுனாமிக்குப் பின்னர்தான் அலையின் சீற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக உயிர் அரண் (Bio Shield) என்ற கருத்தின் அடிப்படையில் ஆங்காங்கே மரங்கள் வைக்க ஆரம்பித்தார்கள். மற்றபடி ஆற்றில் மாசுகள் இருப்பதினால் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்குப் பாதிப்பு நிச்சயமாக இருக்கத்தான் செய்யும். அந்த பாதிப்பின் அளவை ஆய்வுகள்தான் உறுதிப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு சேதத்திலும் இறந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலெடுக்கப்படுகிறதா? இறந்தவர்களுக்கான இழப்புத் தொகை, அரசின் வாக்குறுதிகள் என்னவாயின?

கண்டிப்பாக ஒவ்வொரு சேதத்திலும் இறந்தவர்களின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

சிப்காட்டில் புதிய ஆலைகளை அரசு திறந்தால் என்ன ஆபத்துகள் இருக்கும்?

சிப்காட்டைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே ஒரு ஆய்வு நிறுவனம் மோசமான பாதிப்பு இருப்பதாகச் சொல்லியிருக்கின்றது. மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நயினார் சுந்தரம் அவர்களும் தன்னுடைய ஆய்வில் இங்கு சுற்றுச்சூழல் மாசு இருப்பதாகக் கூறி, மேற்கொண்டு ஆலைகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். இந்திய மக்கள் தீர்ப்பாயம் என்ற ஒரு தனியார் நிறுவனமும் மோசமான பாதிப்புகள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறது.

மத்திய வனத்துறை அமைச்சகமும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் சேர்ந்து 2009இல் ஆய்வு செய்து 2010இல் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். 2011 மற்றும் 2013 ஆண்டுகளில் பாதிப்பின் தீவிரத்தை அறிந்துகொள்ள தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நீர், நிலம், காற்று ஆகிய மூன்றிலும் இடரார்ந்த பாதிப்புகள் இருக்கிறது என அதில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆகவே, இருக்கக்கூடிய ஆலைகளை விரிவாக்கம் செய்யக்கூடாது எனவும் மேற்கொண்டு ஆலைகள் அமைக்கப்படக் கூடாது எனவும் மத்திய சுற்றுச்சூழல் வளத்துறை அமைச்சகம் ஒரு தடை கொண்டுவந்தார்கள்.

ஆனால், தொழிற்சாலைகளும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் சேர்ந்து 80 புள்ளிகள் அளவில் இருக்கிற மாசுக்களை நாங்கள் பெருமளவில் கட்டுப்படுத்திவிடுவோம் என்று கூறிய செயல்திட்ட அறிக்கையைக் கருத்தில்கொண்டு அந்தத் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் விரிவாக்கமும் செய்யப்பட்டிருக்கின்றன, புதிய ஆலைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆலைகள் அமைக்கப்பட்டால் தாங்குதிறன் பாதிக்கப்பட்டு சூழல் இன்னும் மோசமாகிவிடும். அந்தப் பாதிப்புகளின் வெளிப்பாடு ஒரு விவரமான, ஆழமான ஆய்வு மேற்கொண்டால் மட்டுமே தெரியவரும்.

சிப்காட்டின் தண்ணீர் 130 அளவீடு விஷத்தன்மை அதிகமுள்ளதாக டி.என்.பிசிபி 41 இடங்களில் தண்ணீர் எடுத்து சொல்லியுள்ளது. எதனால் இத்தனை விஷத்தன்மை?

சிப்காட் வளாகத்தில் குறிப்பிட்ட இடைவெளிகளில் நிலத்தடி நீர்மட்டத்தைக் கண்காணிக்க வேண்டியது மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொறுப்பு. அதற்கு மாதிரி எடுப்பதற்கு 11 இடங்களைத் தேர்வு செய்கிறார்கள். 2 மக்கள் பயன்பாடு உள்ள இடம், மீதி 9 இடங்களும் தொழிற்சாலை வளாகத்தினுள் போடப்பட்டுள்ள சோதனை ஆழ்துளைக் கிணறுகள். இதில் வெளியில் மக்கள் பயன்பாடு உள்ள இடத்தில் இருந்து எடுத்த சோதனைதான் கனஉலோகங்கள் கலந்திருப்பதாகக் காட்டியது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் பெரும்பாலான நேரங்களில் வேடிக்கைதான் பார்க்கிறது. அதன் நடவடிக்கைகள் முழுமையாக திருப்தி அளிக்கக்கூடிய வகையில் இல்லை. ஏனென்றால் இன்றைக்கும் மழைக்காலங்களில் ரசாயனக் கழிவுகள் கலந்து வருவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் மக்கள் சொல்கிறார்கள். இவையெல்லாம் சட்ட விரோதமான கழிவு வெளியேற்றங்கள் ஆகும். இப்பொழுதே இப்படி இருக்கிறதென்றால், இவ்வித கட்டுப்பாடுகள் எல்லாம் இல்லாத காலத்தில் எப்படி இருந்திருக்கும்? சில நிறுவனங்கள் ஆள்துளைக் கிணறுகளில் மாசுபட்ட நீரைச் செலுத்துவது, திறந்த வெளிகளில் ரசாயனக் கழிவுகளைச் சேமித்து வைப்பது, ஆறுகளில் கலந்துவிடுவது போன்ற மாசுபாட்டிற்குக் காரணமான செயல்களைச் செய்கின்றன.

உங்களின் போராட்ட வடிவங்கள் வெற்றி பெற்றுள்ளதாக உணர்ந்திருக்கிறீர்களா?

(நேர்காணலின் அடுத்த பகுதி மதியம் 1 மணி பதிப்பில்)

பகுதி-1

பகுதி-2

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

திங்கள் 1 ஜன 2018