மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

உள்ளாட்சி எல்லை: திரளும் எதிர்க்கட்சிகள்!

உள்ளாட்சி எல்லை: திரளும் எதிர்க்கட்சிகள்!

கடந்த 28ஆம் தேதி வெளியிடப்பட்ட தமிழக உள்ளாட்சி எல்லைகளுக்கான வரைவு பட்டியல் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமென்றும், இது குறித்த கருத்துகளை ஜனவரி 2ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டுமென்ற காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென்றும், தமிழக தேர்தல் ஆணையருக்கு திமுக மற்றும் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் கடந்த 2016ஆம் ஆண்டு முடிவடைந்தது. அதன்பின், உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தியாக வேண்டும் என்று காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பிறகும் தேர்தலை நடத்தாமல், நீதிமன்றத்திடம் தேர்தல் ஆணையம் வருத்தம் தெரிவித்தது. உள்ளாட்சி எல்லைகளை வரையறுக்கும் வேலைகள் முடிவடைந்ததும், தேர்தல் அறிவிப்பு வெளியிடவுள்ளதாகத் தெரிவித்தது.

இதன்படி டிசம்பர் 28ஆம் தேதியன்று, தமிழக உள்ளாட்சி எல்லை வரைவு பட்டியல் மாவட்ட ஆட்சியர்களாலும், மாநகராட்சி ஆணையர்களாலும் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியல் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதியிலுள்ள அலுவலகங்களில் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றும், வரைவு மீது பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆட்சேபணை அல்லது கருத்து தெரிவிக்க, ஜனவரி 2ஆம் தேதிவரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது பற்றிய கருத்துகளை, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் நேரிலோ அல்லது பதிவுத்தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டது. .

புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை நாட்கள் வருவதால், ஆட்சேபணை தெரிவிப்பதற்கான காலக்கெடுவை ஜனவரி 25ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று தமிழகத்திலுள்ள கட்சிகள் கருத்து தெரிவித்தன. அதோடு, ஆளும் கட்சிக்கு சாதமாகவும் எதிர்கட்சிகளின் வாக்குகளை சிதறடிக்கும் வகையிலும் இந்த வரைவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில், இன்று (டிசம்பர் 31) உள்ளாட்சி எல்லைகளுக்கான வரைவு பட்டியல் தொடர்பான கருத்துகளைத் தெரிவிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரியும், வெளிப்படையாக இந்த பட்டியலை பார்வைக்கு வைக்கக் கோரியும் திமுக சார்பில் தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தார் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.

இதே கருத்தை வலியுறுத்தி, தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தமிழக தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில், வார்டுகளின் மறு வரையறை குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கருத்து கேட்காமல் ரகசியமான முறையில் அறிவித்திருப்பது, ஜனநாயகத்திற்கு புறம்பான நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.

”தயாரிக்கப்பட்டுள்ள வார்டுகளின் மறுவரையறை என்பது நிலப்பரப்பின் தொடர்ச்சி இல்லை எனவும், மறுவரையறை செய்துள்ள வார்டுகளின் மக்கள்தொகை மிகவும் ஏற்ற இறக்கமாக இருக்கிறது என்று தகவல்கள் வருகின்றன. எனவே, வார்டு எல்லைகளை மறு வரையறை செய்வது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஜி.ராமகிருஷ்ணன்.

aa

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017