மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

கூத்து வாத்தியார்கள்: 8

கூத்து வாத்தியார்கள்: 8

ஜெயராமன் வாத்தியார்: கூத்தரும் கூத்துப்பிரதி ஆசிரியரும் - 3

இரா.சீனிவாசன், மு. ஏழுமலை

நிகழ்த்து கலைகளில் நாவல்ஸ், தெருக்கூத்து என்ற இரண்டையும் எடுத்துக்கொள்வோம். நாவல்ஸ் கலையில் பொய் சொல்லலாம். கலையைப் பார்ப்பவர்களில் கேள்வி கேட்பவர்கள் குறைவு. பெரும்பாலும் கேள்வி கேட்மாட்டார்கள். ஆனால், தெருக்கூத்துக் கலை அப்படியல்ல. ஒரு வேடமோ, ஒரு பாடலோ, ஒரு வசனமோ விட்டுவிட்டாலும், தவறாகப் பாடினாலும், பேசினாலும் பத்துப்பேர் கேள்வி கேட்பார்கள். அப்படிதான் ஒருமுறை கர்ணன் மோட்சம் கூத்து ஆடிக்கொண்டிருந்தோம். அப்பொழுது நான் கர்ணனின் மனைவி பொன்னுருவி வேடம் அணிந்திருந்தேன். அப்பொழுது வரும் முக்கியமான பாடல்.

“பொன்னுருவி இரவுதனில் பள்ளி சேர்ந்து

புறந்தந்த மஞ்சத்தின் மீதிலேதான்

மின்னலைப்போல ஒளியுள்ள சுந்தரவல்லி

மேன்மையுடன் இருவருமாய் உறங்கும்போது

பின்னமுடன் பின்னிருந்து அசரிரீ வாக்கு

பிரியமுடன் செவியில்கேட்குதென்று

வண்ணமுள்ள சுந்தரமே என் தாய் வீட்டில்

வகைமோசம் எது வருமோ அறிகிலேனே’’

இது பொன்னுருவி தன் தோழி சுந்தரவல்லியிடம் தான் உறங்கும்பொழுது வந்த கனவு பற்றியும், அந்த கனவினால் தன் தாய் வீட்டிற்கு ஏதேனும் தீமை வருமோ என்று அஞ்சுவதாகவும் கூறும் பாடல். இந்தப் பாடலைப் பாடாமல் வேறொரு பாடலுக்குப் போய்விட்டேன்.

அப்பொழுது உடனே ஒரு பாட்டி எழுந்தாள். ‘கூத்த நிறுத்துங்கயா. பாட வேண்டிய முக்கியமான பாடலைப் பாடாமல் என்ன கூத்த நீங்க நடத்தறது. இந்த இராத்திரி கூத்துக்கு எவ்வளவு தாம்பூலம் பேசுனீங்களோ அதை வாங்கிட்டுப் போயிடுங்க’ என்று ஆவேசமாக பேச ஆரம்பித்தாள். இன்னும் சிலபேரும் ஒரு முக்கியமான பாடலை விட்டுட்டீங்களே. அந்தப் பாடல் தானே இந்தக் கூத்தின் உயிரான பாடல் என்று கேட்க ஆரம்பித்தாங்க.

பிறகு, இல்லிங்க அடுத்துதான் அந்தப் பாடல் வரும் என்று சமாதானம் சொல்லியும் கேட்கலை. எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று பேசினாங்க. சிறிதுநேரம் கழித்து ஒரு வழியா சமாதானம் ஆனாங்க. இந்தச் சூழ்நிலையில் அந்தப் பாடல் காட்சியை மிக உருக்கமாக நிகழ்த்திப் பெயர் பெற்றேன். இந்த மாதிரியான அனுபவம் எல்லாம் உண்டு. பாக்குற சனங்கள் எல்லாம் சாதாரணவர்கள் அல்ல. எல்லாக் கதையும் பாடலும் வசனமும் தெரிந்தவர்கள். அவர்கள் முன்னால் நிகழ்த்தும்பொழுது கூத்துக் கலைஞனுக்கு நேர்மையும் பொறுப்பும் ஈடுபாடும் இருக்கணும். அப்பொழுதுதான் பேர் வாங்க முடியும்.

தேர்ந்தெடுத்த கலைஞர்களை எதிர்ப்பார்த்துத்தான் நிகழ்த்துவதற்குக் கூப்பிடறாங்க. ஒருமுறை நான் எழுதின கருமாரியம்மன் நாடகத்தை நான்தான் நடிக்கணும் என்று வேடந்தாங்கல் என்னும் ஊரில் திருவிழாவுக்காக நிகழ்த்துவதற்கு எங்க குழுவை அழைத்தார்கள். மழை வேண்டும் என்று வேண்டுதல் கொண்டு திருவிழா செய்தார்கள். பவுடர்போட்டு நாலு வேஷம்தான் வெளியில வந்தது. மழைன்னா மழை பெய்தது. ஊர்க்காரங்க நாங்க பேசின பணத்தைவிட அதிகமாகக் கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள். நம் கலைமீது மக்களுக்கு இருக்கிற நம்பிக்கையைவிட கலைஞனுக்குக் கலைமேல நம்பிக்கையும் பக்தியும் கூடுதலா இருக்க வேண்டும்.

(படம் :ஜெயராமன் வாத்தியார்)

‘அந்தக் காலத்துல 150 ரூபாய் ஒரு இரவுக் கூத்து நிகழ்த்துவதற்கு வாங்கி கூத்தாடுறவங்க, இசை இசைக்கிறவங்க, சாமன்செட்டை தூக்கி வருகிறவங்க, சேலைக்கு கஞ்சி போடுறவங்க என்று 20 பேர்வரைக்கும் பங்கிட்டுக்கொள்வோம். காசுக்காக ஆடினவங்க அப்போ இல்ல. கலைக்காகவும் பேரும்புகழுக்காகவும் ஆடினாங்க. இப்பொழுது கலைஞர்கள் காசுக்காக ஆடுகிற நிலைமையும் உருவாயிடுச்சி. முகத்தில அரிதாரம் பூசினாலே ஆயிரம் ரூபாய் கேட்கிறான். இன்னிக்கி நிலைமையில இதுவும் நியாயமாகத்தான் படுகிறது. நான் 60 வருடமாகக் கூத்தாடியும் எந்தச் சொத்தம் சேர்த்து வைக்கவில்லை. என்னிடம் இருந்த ஆர்மோனியப் பெட்டி, மிருதங்கம், தாளம், கிரீடம், புஜக்கட்டு முதலான அனைத்துப் பொருட்களையும் நம் பெயரைச் சொல்லட்டும் என்று கலைஞர்களுக்கு இலவசமாகவே கொடுத்துவிட்டேன். இப்பொழுது என்னிடம் இருப்பது நான் பெயர்பெற்ற செல்லி, காளி ஆகிய வேடங்களுக்கான அலங்காரப் பொருட்கள் தான். இதுதான் என் பிள்ளைகளுக்கு என் நினைவாக விட்டுச் செல்லும் சொத்து’ என்று தன் நினைவுகளையும் பகிரும்பொழுது கண்கலங்கி நம்மையும் கண் கலங்கச் செய்தார். ஒரு கலைஞனின் வார்த்தையில் சொல்ல முடியாத கலை ஆர்வத்தை உணர்ந்தோம்.

‘இந்தத் தெருக்கூத்தின்மீது பைத்தியமே ஆயிடுச்சி. இதைத்தவிர வேறொரு சிறந்த கலையும் இல்லை. சினிமாவை இன்றைக்குக் கொண்டாடுகிறோம். அந்தச் சினிமாவுக்குக் கதை, திரைக்கதை, பாடல் எழுதுதல் மற்றும் பின்னணி பாடுதல், இசை, இயக்கம், ஒப்பனை, வசனம் எழுதுதல் மற்றும் பேசுதல் முதலானவற்றைச் செய்வதற்கு எத்தனையோ பேர் வேலை செய்யணும். நடிக்கிறவங்களும் ஒரு காட்சியைப் பத்து முறையானாலும் நடிக்கலாம். ஆனால், தெருக்கூத்துக் கலையில அப்படி இல்ல. ஒரு கலைஞனுக்கான வேலை அனைத்தையும் அவனே செய்யனும். பாடுதல், ஆடுதல், நடித்தல், பேசுதல் என்று எல்லாத்தையும் செய்கிற திறமை தெருக்கூத்துக் கலைஞனுக்கு இருக்க வேண்டும். இந்தத் திறமையை மக்கள் அங்கீகரிக்கிறாங்க. அரசும் கூடுதலான அங்கீகாரத்தைக் கொடுக்க வேண்டும். ஏதோ என்னால முடிந்த அளவுக்குத் தெருக்கூத்துக் கலையின் வளர்ச்சிக்குச் செய்திருக்கிறேன். செய்துகொண்டும் வருகிறேன். நாம இருக்கிறவரைக்கும் தெருக்கூத்துக் கலையைக் காப்பாற்ற வேண்டியது தான். ஏனென்றால், இது மக்களுக்கான கலை. இன்னும் என்ன செய்ய முடியும் என்னால்’ என்று கூறினார். பள்ளிப் படிப்பைக்கூட முழுமையாக முடிக்காத ஒருவர் கலையை நேசித்தல், அக்கலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு கூத்துப் பனுவலை உருவாக்குதல், நிகழ்த்துதல், நிகழ்த்தலின் பொழுது ஒரு கலைஞனாக இருந்து மேற்கொள்ளும் நேர்மை, பொறுப்புணர்வு, பக்தி ஆகியவற்றையும் புரிந்துகொள்ள முடிந்தது.

தான் நிகழ்த்தும் தெருக்கூத்துக் கலை தன்மீதும் கலைமீதும் நம்பிக்கை கொண்ட மக்களுக்காக என்பதை நன்கு உணர்ந்துள்ளார் இவர். பன்முக ஆளுமைகளைத்தன் கைப்பொருளாகக் கொண்டு கூத்துக்குச் சேவை செய்துவரும் ஜெயராமன் வாத்தியார் போன்ற கலைஞர்கள் உள்ளவரை தெருக்கூத்துக் கலை வளர்ந்துகொண்டேதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஜெயராமன் வாத்தியார்: கூத்தரும் கூத்துப்பிரதி ஆசிரியரும் - 1

ஜெயராமன் வாத்தியார்: கூத்தரும் கூத்துப்பிரதி ஆசிரியரும் - 2

கட்டுரையாளர்கள் பற்றிய குறிப்பு

முனைவர் இரா. சீனிவாசன்

20 ஆண்டுகள் ஆசிரியப் பணி, மாநிலக் கல்லூரியில் இணைப் பேராசிரியர். பதிப்பாசிரியர், ஆய்வாளர்.

முனைவர் பட்டம்: தமிழ் இலக்கண மரபுகள்

பன்முக நோக்கில் திரௌபதி வழிபாடு என்னும் பொருளில் பேராய்வுத் திட்டத்தை முடித்துள்ளார்.

நல்லாப்பிள்ளை பாரதத்தை (18 பருவம், 131 சருக்கம், 13,946 பாடல்கள்) சந்திபிரித்துப் பதிப்பித்துள்ளார்.

தமிழ் இலக்கண மரபுகள், ஐந்திலக்கணம், நல்லாப்பிள்ளை பாரதம் (இரண்டு தொகுதிகள்), தமிழகத்தில் பாரதம் - வரலாறும் கதையாடலும், ஓர்மைவெளி, மணிமேகலையில் சமயமும் மெய்யியலும், சுழலும் மச்சேந்திரம், தொல்காப்பியச் செய்யுளியல்: புலனெறி இலக்கிய வழக்கு, மண்சிற்பங்கள், தெருக்கூத்து ஆக்கம் நிகழ்த்துதல் இரசித்தல், மகாபாரதக் கீர்த்தனை ஆகிய புத்தகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், புதியபனுவல் - தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழி வெளிவரும் ஆய்விதழ் (அச்சு & இணையம்) செம்மொழி நிறுவன நிதியுதவியுடன் நடத்திய இரண்டு பயிலரங்குகள், ஒரு கரத்தரங்கு ஆகியவை இவரது பங்களிப்புகள்.

முனைவர் மு. ஏழுமலை

சோளிங்கர் என்னும் வைணவத் தலத்திற்கு அருகில் உள்ள கரிக்கல் என்ற ஊரைச் சேர்ந்தவர். பச்சையப்பன் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களில் படித்தவர். சென்னை மாநிலக்கல்லூரியில் ‘நாட்டார் பெண்தெய்வ வழிபாட்டின் அரசியல், பொருளாதாரம் - வேலூர் மாவட்டம்’ என்ற பொருளில் முனைவர்பட்ட ஆய்வை முடித்துள்ளார். பன்முக நோக்கில் திரௌபதி வழிபாடு (2008 - 2011), ‘தெருக்கூத்து பனுவல் உருவாக்கமும் நிகழ்த்துதலும்’ ஆகிய இரண்டு பெருந்திட்ட ஆய்வுகளிலும் ஆய்வு உதவியாளர். தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் பங்கேற்று 40 ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியுள்ளார். இவருடைய முனைவர்பட்ட ஆய்வேட்டை உலகத்தமிழராய்ச்சி நிறுவனம் நூலாக வெளியிட்டுள்ளது.

கலையைக் காற்றில் கரைத்த கலைஞர்

திரௌபதி வழிபாடு: விரிவடையும் அர்த்தங்கள்

கமலக்கண்ணன் வாத்தியார்

குமாரசாமித் தம்பிரான்

திருவேங்கடம் வாத்தியார்

தங்கவேல் ஆசிரியர்

மண்ணு வாத்தியார்

த.ரங்கசாமி வித்துவான்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017