மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

சிறப்புத் தொடர்: முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்!

சிறப்புத் தொடர்: முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்!

அருள்செல்வன்-நேர்காணல்-3

(கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சுற்றுச்சூழல் சம்பந்தமான பிரச்சினைகளைப் போக்கும் பணியில் நீண்ட வருடங்களாக அருள்செல்வன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். களப் பணியாளர். எப்போதும் இன்முகம் காட்டி, மக்கள் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுப்பவர்; கடலூரில் ஏற்பட்டிருக்கும் பல ஆக்கபூர்வமான சுற்றுசூழல் மாற்றங்களில் இவருடைய பங்களிப்புக்கும் முக்கிய இடம் இருக்கிறது.)

சந்திப்பு: தமயந்தி

கடலூரைப் பொறுத்தவரையில் பிரதானமான தொழில்கள் என்பது விவசாயம், மீன்பிடி, நெசவு, உப்பளம் ஆகியவை. அதிலும் முக்கியமானவை விவசாயமும் மீன்பிடித்தலும். நிலமும் பாதிப்பிற்குள்ளாகிறது, கடலும் பாதிப்பிற்குள்ளாகிறது. இதன்காரணமாக தொழில் செய்யமுடியாததால் இவர்கள் சுயசார்பை இழந்து, தொழிற்சாலைகளில் வேலை கிடைக்குமா அல்லது தொழிற்திட்டங்களில் வாய்ப்புகள் இருக்குமா என்ற சார்பு நிலைக்குள் தள்ளப்படுகிறார்கள். அந்நியச்செலாவணியை ஈட்டித் தருவதில் மீன்பிடித்தல் பெரிய பங்குவகிக்கிறது. நாம் சாதாரணமாக கடல்கரையை ஒட்டிய மீன்பிடிப்புதான் செய்கிறோம், ஆழ்கடல் மீன்பிடிப்பு அல்ல. இந்த எல்லாத் திட்டங்களும் கடற்கரையினருகே செய்யப்படுவதால் இவர்களது தொழிலில் பாதிப்பு ஏற்படுகிறது. மீன்கள் இடம்பெயர்ந்து கடலுக்கு உள்ளே சென்றுவிடுகின்றன. ஆகவே மீன்பிடித்தலில் அதிக நேர விரயம், டீசல் விரயம் ஏற்படுகிறது. அதிக கடல் போக்குவரத்து, மாசு காரணமாக மீன்கள் எண்ணிக்கையில் குறைவது, சில இனமே அழிவது என பலவகைகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

விவசாயத்தைப் பொறுத்தவரையில் இந்தச் சுற்று வட்டாரங்களில் சரியான வருவாய் ஈட்ட முடியாததினால் விவசாயத்தைக் கைவிடும் சூழல் நிலவுகிறது. மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த மாசு காரணமாக ஏற்படக்கூடிய உடல் உபாதைகளுக்குச் செலவிடப்படக்கூடிய மருத்துவ செலவு. தங்களது வருமானத்தில் பெரும்பகுதி மருத்துவத்திற்காக செலவிடப்படுவதாக அந்த மக்கள் கூறுகிறார்கள்.

அரசின் சட்டதிட்டங்களை எப்படி அரசு அதிகாரிகள் மீறுகிறார்கள்?

இந்திய அரசியல் சாசனம் பிரிவு 21இன் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வதற்கான உரிமையைக் கொடுத்திருக்கிறது. அதன் கீழ்தான் உணவுக்கான உரிமை, வாழிடத்திற்கான உரிமை, கல்விக்கான உரிமை போன்றவை வருகின்றது. சொல்லப்போனால், மற்ற திட்டங்களைவிட இவையே போதுமானவைகளாக இருக்கும். சுத்தமான காற்றைச் சுவாசிக்கவும், நீரைப் பருகவும், ஆரோக்கியமாக வாழவும் உரிமையைக் கொடுத்திருக்கிறது. ஆனால், இதை உறுதிப்படுத்துவது அரசியல் சாசனத்தின்கீழ் இயங்கக்கூடிய அரசின் நிறுவனங்கள்தான். அப்படியொரு பிரச்சினையை ஒரு குடிமகன் சொல்லும்போது, அதைக் காதுகொடுத்து கேட்டு, சரி செய்கிறோம் என்று சொல்வதே ஒரு பெரிய விஷயமாக இருக்கிறது.

சுற்றுச்சூழல் சம்பந்தமான பிரச்சினைகளை, தொழிற்சாலைகளில் நடக்கும் விதிமுறைமீறல்களைச் சுட்டிக்காட்டும்போது, அந்த விஷயத்தில் அவர்கள் ஒரு பரிந்துரை நிறுவனம்போல செயல்படுகிறார்கள். மேலதிகாரியிடம் சொல்லிவிட்டோம், நாங்கள் ஆவணங்களைப் பார்க்கும்போது எல்லாம் வரம்புக்கு உட்பட்டு இருந்தது என்பன போன்ற பதில்களைத்தான் சொல்கிறார்கள். இவர்களது கைகள் கட்டிப்போடப்பட்டிருக்கின்றனவா, முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லையா, ஏன் இதுமாதிரி செய்கிறார்கள் என்று சில நேரங்களில் யோசிக்கிற அளவுக்குத்தான் நிலைமை இருக்கிறது.

அபாயகரமான கழிவுகளையோ, பொருட்களையோ ஒரு இடத்திலிருந்து கொண்டு செல்கிறார்கள் என்றால், அந்த வாகனத்தில் என்ன பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறது, ஏதேனும் விபத்து ஏற்பட்டால் யாரை உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டும், என்ன முதலுதவிகள் செய்யப்பட வேண்டும் என்ற விஷயங்கள் தெளிவாக மூன்று பக்கங்களிலும் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. அந்த வாகனத்தை ஓட்டக்கூடிய ஓட்டுனருக்கும் குறைந்தபட்சம் அதுபற்றிய தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும். அதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பெற்றவராக அவர் இருக்க வேண்டும். இவையெல்லாம் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. அதைப்போல எடுத்துச் செல்லப்பட வேண்டியம், முறையும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால், இவையெல்லாம் பின்பற்றப்படுகின்றனவா என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வட்டாரப் போக்குவரத்துத் துறை, போக்குவரத்துக் காவல் துறை போன்ற பல துறையினர் கண்காணிக்க வேண்டும். இது ரசாயனமா ரசாயனமில்லையா என்று சொல்ல வேண்டியது மாசுக் கட்டுப்பாடு வாரியம், அதை கவனமின்றி எடுத்துச் செல்கிறார்களா, அதி வேகமாக எடுத்துச் செல்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டிய பொறுப்பு மற்ற இரு துறைகளும் செய்ய வேண்டியது. ஆகவே, துறைகளுக்கு இடையே ஒருங்கிணைவு இருக்க வேண்டும். அது இல்லை என்பது ஒரு பிரச்சினை.

இரண்டாவது, மாவட்ட அளவில் இருக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து தலைமை அலுவலகத்திற்கு பரிந்துரைதான் செய்ய முடியும். தலைமை அலுவலகம்தான் முடிவு எடுக்க வேண்டும். இவ்விதமாக முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் சரியான முடிவை எடுக்காமலிருப்பது ஒரு பிரச்சினை. நிலத்தடி நீர் மட்டத்தைத் தெரிந்துகொள்வதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்கிறது. அந்த ஆய்வறிக்கை முடிவெடுக்கும் அதிகாரியிடத்தில்தான் வருகிறது. மனிதர்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய இரசாயனத்தன்மை அதில் இருக்கிறது என்று தெரியவந்தால், உடனடியாக அவர் அந்தத் தகவலை அந்தக் குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியருக்கோ, ஊராட்சி மன்றத்திற்கோ தெரிவிக்க வேண்டும். அதுபோலத் தெரிவிக்காமல் கிடப்பில் போட்டுவிடுகின்றனர்.

சமீபத்தில், நீர் மாதிரி எடுத்த ஆய்வறிக்கையை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வாங்கி, அதைப் பார்த்தபோது, மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி ஒன்றில் இருந்த தண்ணீரில் கனஉலோகங்கள் இருந்தது தெரிய வந்தது. இவை புற்றுநோய் உருவாக்கக்கூடிய அபாயகரமான நச்சுப்பொருட்கள். இந்த மாதிரியை எடுத்து ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம். யார் இந்த மாசுக்குக் காரணம் என்ற நடவடிக்கை எடுப்பது ஒரு பக்கம் இருந்தாலும், உடனடியாக மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் செயல்படத் தவறிவிட்டார்கள்.

கடலூரில் நிலத்தடி நீர் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறது?

தொழிற்சாலைத் திட்டங்களுக்காகவும், மற்றும் பல காரணங்களுக்காகவும் அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் கடல்நீர் உட்புகுதல் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. 1986இல்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன் அடிப்படையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டது. அதற்கு முந்தைய காலங்களில் பெரிய அளவில் சட்டதிட்டங்களோ, கட்டமைப்புகளோ, கண்காணிப்பு நிறுவனங்களோ இல்லாததினால், அவரவர் தங்களுக்குத் தெரிந்த வகையில் நடவடிக்கைகள் செய்தார்கள். அது பெரிய அளவில் நிலத்தடி நீர் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு உதாரணம், ஈச்சங்காடு என்ற பகுதியில் இருக்கிற ஓடையில் மழைகாலங்களில் பல நிறங்களில் தண்ணீர் ஓடுவதைச் சொல்லலாம். நிலத்திலிருந்து தண்ணீர் கொப்பளிக்கும். சிவப்பு, மஞ்சள் நிறங்களில் ஏடு போன்று படியும், எண்ணெய் போன்று மிதக்கும், சில மருந்து வாடைகள் அடிக்கும். இதைப்போன்று பல அரசு அறிக்கைகளே தண்ணீர் பெருமளவில் மாசுபட்டிருப்பதை தெள்ளத்தெளிவாக உறுதிப்படுத்துகிறது. இதற்காக மாற்று இடங்களில் இருந்து குடிநீர் வழங்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை பசுமைத் தீர்ப்பாயம் இட்டுள்ளது. அதற்கான செலவீனங்களை மாசு ஏற்படுத்தும் தொழில் நிறுவனங்கள் ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வழக்கு இன்னும் நிலுவையில்தான் இருக்கிறது.

மீனவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் உள்ளன?

முகத்துவாரங்கள் துண்டிக்கப்பட்டுப் போனதால் கடலுக்குப் போகிற வழி தடைபட்டிருக்கிறது. கடல் அரிப்பின் காரணமாக அவர்கள் வசிக்கிற இடம், படகுகள் இருக்கிற இடம், மீனவர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வருகிற நிலப்பரப்பு குறைந்துகொண்டு வருகிறது. வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் கடற்கரையை ஒட்டி பல கட்டமைப்புகள் உருவாக்கப்படுவதினால், அவர்களுடைய இயல்பான புழக்கங்கள் தடைபடுகிறது. கடல்கள் அவர்களுக்கு அன்னியப்பட்டுப் போய்விடுமோ என்கிற அச்சமும் உருவாகியிருக்கிறது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பாக வைக்கிறோம் என்ற பெயரில் ஐநூறு மீட்டர் தொலைவில்தான் குடியிருப்புப் பகுதிகள் அமைக்கப்பட்டன. சில பகுதிகள் பல கிலோ மீட்டர் தூரத்திலும் அமைக்கப்பட்டிருக்கின்றன.கடலூரை மட்டுமே எடுத்துக்கொண்டால், கடலை மீனவர்களிடமிருந்து அந்நியப்படுத்திவிடுவார்களோ என்ற அச்சம் இருக்கின்றது.

மீன்பாடு அதிகரிக்க கடலூரில் மேற்கொள்ள வேண்டிய முறைமைகள் என்னென்ன?

மீன்பிடி தடைக்காலங்களில் மட்டுமே மீன் உற்பத்தி அதிகரித்துவிடுகிறதில்லை. அங்கிருக்கிற சூழலும் மாசில்லாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நல்ல ஒரு வளர்ச்சி இருக்கும். நமது நாட்டின் புரத உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் கடல் உணவு பெரும்பங்கு வகிக்கிறது. அதை நஞ்சில்லாமல் கொடுக்க வேண்டியது அவசியம். அதை உறுதிப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல அவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்த வேண்டும். புதிய தொழில்நுட்ப உத்திகளை மீனவர்களுக்கு சொல்லித் தர வேண்டும்.

தானே புயல் நினைவுகள்...?

(நேர்காணலில் அடுத்த பகுதி நாளைக் காலை 7 மணிப் பதிப்பில்)

பகுதி-1

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017