மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

வந்தார் ரஜினிகாந்த்

வந்தார் ரஜினிகாந்த்

பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், ‘அரசியல் கட்சித் தொடங்கி வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’ என்று ரஜினிகாந்த் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், ரஜினி அரசியலுக்கு வருவதாக செய்திகள் வெளியாகி, அதே வேகத்தில் அடங்கிவிடும். இந்த நிலையில் கடந்த மே மாதத்தில், ‘போர் வரட்டும் பார்த்துக் கொள்வோம்’ என்று தன்னுடைய ரசிகர்களுடனான சந்திப்பில் கூறினார்.

மீண்டும் கடந்த 26ஆம் தேதி தொடங்கிய ரசிகர்கள் சந்திப்பில், ‘வரும் 31ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன்’ என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். தொடர்ந்து நான்கு நாள்கள், மூன்று நாள்கள் என்று சஸ்பென்ஸும் வைத்திருந்தார். இந்த நிலையில் அந்த சஸ்பென்ஸை உடைத்து, தான் அரசியலுக்கு வரப்போவது உறுதி என்று அறிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆறாவது நாளாக இன்று (டிசம்பர் 31) ரசிகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “எனக்கு அரசியலுக்கு வருவது குறித்து பயம் இல்லை. மீடியா குறித்துதான் பயம். பெரிய பெரிய ஜாம்பவான்களே மீடியாவைப் பார்த்து பதறுகிறார்கள். நானே இன்னும் குழந்தை. ஊடகங்கள் என்னிடம் ஏதாவது கேட்க, அதற்கு நான் ஏதாவது சொல்ல அது உடனே விவாதமாகி விடுகிறது. நேற்று முன்தினம் ஒரு ஊடக நண்பர் உங்களின் கொள்கை என்ன என்று கேட்டார். எனக்கு தலைசுற்றிவிட்டது. நான் நைஸ் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். சோ என்னிடம் முன்பே கூறியுள்ளார், இந்த மீடியாக்களிடம் மட்டும் ஜாக்கிரதையாக இருங்கள் என்று. அவர் என் பக்கத்தில் இருந்திருந்தால் 10 யானை பலமாக இருந்திருக்கும். அவர் ஆத்மா என்றும் என்னுடன் இருக்கும்” என்றார் ரஜினிகாந்த்.

“அனைத்தையும் ஏற்கெனவே முடித்து விட்டேன். இனி அம்புவிட வேண்டியதுதான் பாக்கி. நான் அரசியலுக்கு வரப்போவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளும் போட்டியிடுவோம். அதற்கு முன்பு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் இதுகுறித்து முடிவெடுப்பேன்” என்று தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தினார்.

“நான் பணத்துக்காகவோ, புகழுக்காகவோ அரசியலுக்கு வரவில்லை. நான் கனவிலே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஆயிரம் மடங்கு அதைக் கொடுத்துவிட்டீர்கள். பதவிக்கு வர வேண்டும் என்று நினைத்திருந்தால் 96ஆம் ஆண்டிலேயே வந்திருப்பேன். அப்போது என்னைத் தேடி பதவி வந்தது. வேண்டாம் என்று ஒதுக்கி வைத்துவிட்டேன். 45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை இல்லை. 68 வயதில் வருமா? அப்படி வந்தால் நான் ஆன்மிகவாதி என்று சொல்வதற்கே தகுதியற்றவன் ஆகிவிடுவேன்” என்று தெரிவித்தார்.

“அரசியல் மிகவும் கெட்டுப்போய் விட்டது. ஜனநாயகம் சீர்கெட்டுப் போய் விட்டது. கடந்த ஓராண்டில் தமிழகத்தில் நடைபெற்ற சில அரசியல் சம்பவங்கள் தமிழர்களைத் தலைகுனிய வைத்துவிட்டது. ஒவ்வொரு மாநில மக்களும் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள்.

இந்த நேரத்தில் நான் முடிவெடுக்கவில்லை என்றால் என்னை வாழவைத்த தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய ஜனநாயக ரீதியாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற குற்ற உணர்ச்சி சாகும்வரை என்னுடன் வரும். மாற்ற வேண்டும். அனைத்தையும் மாற்ற வேண்டும். அரசியலை மாற்ற வேண்டும். உண்மையான, நேர்மையான, நாணயமான வெளிப்படையான நிர்வாகம் அமைய வேண்டும். சாதி, மதச் சார்பற்ற ஓர் ஆன்மிக அரசியலைக் கொண்டுவர வேண்டும். அதுதான் என்னுடைய நோக்கம். ஒரு கட்சி ஆரம்பித்து, தேர்தலில் நின்று ஆட்சியமைப்பது என்பது சாதாரண விஷயமில்லை என்பது எனக்குத் தெரியும். கடவுள் அருள், மக்கள் ஆதரவு இரண்டும் எனக்குக் கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.

தற்போது எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக் கட்சியினர் பல விதத்திலும் மக்களைக் கொள்ளையடித்துக் கொண்டுள்ளனர். பழைய காலத்தில் ராஜாக்கள் மற்ற நாட்டில் சென்றுதான் கொள்ளையடிப்பார்கள். ஆனால், இவர்கள் ஜனநாயகம் என்ற பெயரில் சொந்த நாட்டிலேயே கொள்ளையடிக்கிறார்கள். இதை மாற்ற வேண்டும். எனக்குத் தொண்டர்கள் தேவையில்லை. காவலர்கள்தான் வேண்டும். இந்தக் காவலர்களைக் கண்காணிக்கும் பிரஜைதான் நான். இதற்குக் காவலர் படை வேண்டும். அதை நாம் உருவாக்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு கட்சி ஆரம்பித்து செயல்திட்டங்கள் வகுப்போம். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மூன்றாண்டுகளில் பதவி விலகுவோம். என்னுடைய மந்திரம் உண்மை, உழைப்பு, உயர்வு. என்னுடைய கொள்கை நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும். வரும் சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய படையும் இருக்கும்.”

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017