மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

ரஜினி என்ட்ரி: வரவேற்பும் எதிர்ப்பும்!

ரஜினி என்ட்ரி: வரவேற்பும் எதிர்ப்பும்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவது உறுதி என அறிவித்துள்ளது, அரசியல் தலைவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது அரசியல் வரவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின்: ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதால் ரஜினிக்கு வாழ்த்துகள். அவரது அரசியல் அறிவிப்பால் திமுகவுக்கு சாதகமோ, பாதகமோ இல்லை. அதைப் பற்றி கவலைப்படவில்லை. திமுக தனது கொள்கைகளை முன்னிறுத்தி அரசியல் பயணத்தை மேற்கொள்ளும்.

மு.க.அழகிரி: ரஜினிக்கு வாழ்த்துகள். அவருடைய எண்ணங்கள் நிறைவேற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது நெருங்கிய நண்பர். எனது தந்தைக்கும் அவரைப் பிடிக்கும். அவரது வருகை அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். விரைவில் அவரை நேரில் சந்திக்கவுள்ளேன்.

டி.டி.வி.தினகரன்: அரசியலுக்கு ரஜினிகாந்த் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலில் பல கட்சிகள் உருவாகலாம். ஆனால், வெற்றி என்பது மக்களின் கைகளில்தான் உள்ளது. அரசியலில் ஈடுபட வேண்டும் என்று முடிவெடுத்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழிசை சௌந்தரராஜன் – தமிழக பாஜக தலைவர்: அரசியலில் குதிக்கிறேன் என்று துணிச்சலாக ரஜினிகாந்த் அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன். ரஜினிக்கும் ரஜினியின் அறிவிப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த அவரது லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது வாழ்த்துகள். இன்றைய சூழ்நிலையில், ஓர் ஊழலற்ற நிர்வாகத்தை தருவதற்காகத் தான் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறியிருப்பதையும் வரவேற்கிறோம். தமிழகத்தில் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு மேலும் பலம் தேவைப்படுகிறது. களங்கம் இல்லாத களத்தை உருவாக்கப்போவதாகக் கூறியதற்கும் பாராட்டுகள். நாடாளுமன்றத் தேர்தல் குறித்துத் தேர்தல் நடைபெறும்போது முடிவெடுப்பதாக ரஜினி கூறியுள்ளார். அவர் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பார் என்பது எனது கணிப்பு.

நடிகர் கமல்: சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துகள். வருக... வருக!

நாராயணசாமி - புதுச்சேரி முதல்வர்: யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம்; கட்சி ஆரம்பிக்கலாம். முடிவை எடுக்க வேண்டியது மக்கள்தான். ரஜினிக்கு வாழ்த்துகள். தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் பெரியாரின் கொள்கையைக் கடைப்பிடிப்பவர்கள். தமிழர்களின் மனப்பக்குவம் என்பது தனித்துவமிக்கது. ஆன்மிகமும் திராவிடமும் இல்லாமல் தனியாகச் சிந்தித்து முடிவெடுப்பார்கள். ரஜினி அறிவிப்புக்குப் பின்னால் பாஜக உள்ளதா என்பது போகப்போக தெரியும்.

அமைச்சர் ஜெயக்குமார்: யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள்தான் இறுதி எஜமானர்கள். அவர்கள்தான் அரசைத் தீர்மானிக்க முடியும். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நடிகர் ரஜினிக்கு வாழ்த்துகள். அவர் அதிமுகவை விமர்சித்ததாகக் கூறுவதை ஏற்க முடியாது. திமுகவைக் கூட விமர்சித்திருக்கலாம்.

திருமாவளவன் – விடுதலைச் சிறுத்தைகள்: ரஜினியின் அரசியல் அறிவிப்பை வரவேற்கிறேன். ஆன்மிக அரசியல் என்பதையும், மதவாத சக்திகளுக்கு எதிரான அரசியல் என்பதையும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இதன் மூலமாக இடதுசாரிகளுடனும் சேராமல், பாஜகவுடனும் சேராமல் தனி வழியில் அவரது அரசியல் இருக்கும் என நினைக்கிறேன். அவரது நிலைப்பாடுகள் தெரிந்தபிறகே ஆதரவு கொடுப்பது குறித்து முடிவு செய்ய முடியும்.

முத்தரசன் – இந்திய கம்யூ மாநிலச் செயலாளர்: கடந்த ஓராண்டு ஆட்சியின் சீர்கேடுகள்தான் நான் அரசியலுக்கு வரக் காரணம் என ரஜினி கூறியிருக்கிறார். மற்ற கட்சிகளும் இதையே கூறி வருகிறோம். சட்டமன்றத் தேர்தல் வருகிற வரை அரசியல் பேச வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். எனவே, அவரது கொள்கைகள் அப்போதுதான் தெரியும். அப்போதுதான் அது பற்றி கருத்து கூற முடியும்

சீமான் – நாம் தமிழர்: ரஜினியை எதிர்த்து அரசியல் செய்வோம். அவரது வரவு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ரஜினியை பாஜக இயக்குவதாகச் சந்தேகம் உள்ளது. ஒரே நாளில் கட்சி அமைத்து ஆட்சியைப் பிடிப்பது இனி தமிழகத்தில் சாத்தியமில்லை. ஆன்மிக அரசியல் என்று எதோ புதிதாகச் சொல்லியுள்ளார். காத்திருந்து பார்ப்போம். நாங்கள் போராடுவோம், அவர் கோட்டையில் போய் ஆட்சி செய்வார். ரஜினியின் அறிவிப்பு சந்தர்ப்பவாதமானது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017