மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

இசை வலம் 15: ஜெய பேரிகை கொட்டிய ஜெயஸ்ரீ

இசை வலம் 15: ஜெய பேரிகை கொட்டிய ஜெயஸ்ரீ

கிருஷ்ண பாகவதர்

இடம்: எத்திராஜ் திருமண மண்டபம் (இந்தியன் ஃபைன் ஆர்டஸ்)

கலைஞர்: ஜெயஸ்ரீ வைத்தியநாதன் (வாய்ப்பாட்டு)

வயலின்: பரூர் ஹரினி ஸ்ரீவத்ஸா

மிருதங்கம்: மணிக்குடி எஸ்.சந்திரசேகர்

கடம்: எஸ். ஹரிஹர சுப்ரமணியம்

உச்ச ஸ்தாயியில் மெச்சத் தகுந்த விதத்தில் சஞ்சாரிப்பதும் உடனே தடங்கலின்றி சவுக்க காலத்துக்குச் சாதாரணமாகக் கீழே இறங்கி மகிழ்விப்பதும் பல ஆண்டுகள் செய்த நீண்ட சாதகங்களின் மூலமே சாத்தியமாகும். அவ்வாறு பெற்ற சாதகத்தின் பயனைத் தன் பலமாகக் கொண்டு இனிமையான கச்சேரியை வழங்கினார் ஜெயஸ்ரீ வைத்தியநாதன். எந்த ஒரு பிரபலப் பாடகியுடனும் ஒப்பிட முடியாத, ஆனால் டி.கே.பட்டம்மாளை நினைவுபடுத்தும் கம்பீரம் கலந்த ஜெயஸ்ரீயின் வித்தியாசமான குரல் வளம், எழுச்சியும் கனிவும் இணைந்த கலவையாகத் திகழ்கிறது.

சென்னையின் புகழ்பெற்ற மருத்துவ நிலையம் ஒன்றில் உயர் அதிகாரியாகப் பணியாற்றினாலும் கணவன், இரு பிள்ளைகள் என்ற குடும்பப் பொறுப்புடன், மன நிறைவு தரும் கர்னாடக இசையிலும் தேர்ச்சி பெற்ற கலைஞராக விளங்குகிறார் ஜெயஸ்ரீ. மனனம் செய்து பாடம் ஒப்பிக்கும் மாணவனின் வேகத்தில் ஸ்வரங்களை அடுக்கும் ஜெயஸ்ரீயின் சங்கீத சாதனைகள் ஏறுமுகமாகவே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

விறுவிறுப்பான பயணம்

கச்சேரியின் தொடக்கமாக அமைந்த பேகடா ராக, ‘வா முருகா வா வடிவழகா’ என்ற ஆர்.வேணுகோபால் இயற்றிய பாடலில் தொடங்கிய விறுவிறுப்பு அதன் அடுத்த பாடலாக அமைந்த சுபபந்துவராளி ராகத்திலும் எதிரொலித்தது. பொதுவாக, மென்மையான இந்த ராகம், ‘என்ன இந்த மாதிரி ஆகிவிட்டதே, நான் என்ன செய்வேன்’ என்ற சோக உணர்வை வெளிப்படுத்தும். இந்த ராகத்தில் அமைந்த ‘பரிபாஹிமாம் ஸ்ரீ தாசரதே பரவாஸி தேவ’ என்ற கீர்த்தனை கர்னாடக நிலப்பரப்பின் மன்னராக மட்டுமின்றி கர்னாடக இசையில் விற்பன்னராகவும் திகழ்ந்த மைசூர் சாமராஜ உடையார் இயற்றிய பல சிறந்த பாடல்களில் ஒன்று.

அட்சர சுத்தமாக இதைப் பாடிய ஜெயஸ்ரீ, அதில் ‘சாகேத பூதே ஈசா சர்வேசா’ என்ற பதத்தில் நிகழ்த்திய, ஸ்வர பிரஸ்தாபங்களுக்கு முந்தைய நிரவல் அசத்தலாக இருந்தது. ஸ்ருதி சுத்தி லயத்துடன் கூடிய மிருதங்க, கட, மோர்சிங்க் என்னும் முத்தரப்பு ஒத்துழைப்பு இந்தப் பாடலுக்கு மேலும் அழகு சேர்த்தது. பின்னர் பாடிய ஆஹரி ராக மாயம்மா யனினே (சியாமா சாஸ்திரி) கீர்த்தனைக்கு அடுத்து வந்த மத்யாமாவதி ராக ஆலாபனை குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விதமாக விளங்கியது.

சொல் அடுக்கு, இலக்கணச் சுத்தம் ஆகியவைகளுக்குச் சான்றாகத் திகழும் தீட்சிதர் கிருதிகள் சில ராகங்களில் அளிக்கும் சுகம் அலாதியானது. ‘தர்ம சம்வர்த்தனி தனுஜஸம் மர்த்தனி’ என்ற அந்தப் பாடல் மத்யாமவதி ராகத்தின் தனிச் சிறப்புகளின் விளக்கமாகத் திகழும் பாடல். பெயருக்கு ஏற்ற விதத்தில் மத்திய கதியைப் பிரதானமாகக்கொண்டு சவுக்க கதியும் துரித கதியும் இந்த ராகத்தில் துள்ளி விளையாடும். தரைத் தளத்துக்கும் எட்டாவது மாடிக்கும் சில நொடிகளில் நொடியில் சென்று வரும் மின் தூக்கியைப் போன்று அநாசயமாக ராக ஆலாபனை செய்து வியப்பிலாழ்த்தினார் ஜெயஸ்ரீ.

இதன் பிறகு பாடிய ‘எடுல ப்ரோதுலோ தெலிய ஏகாந்த ராமய்யா’ என்ற தியாகய்யரின் சக்ரவாக ராகப் பாடலை நிரவல் சகிதம் நிறைவு செய்த ஜெயஸ்ரீ அடுத்து எடுத்துக்கொண்டது லதாங்கி ராக பாபனாசம் சிவனின் ‘ஸ்ரீ ஜகதாம்பிகே தயாபரி சுந்தரி’ என்ற பாடல். இந்தத் தமிழ்ப் பாடலின் ஆழ்ந்த பொருள் செறிவு மிக்க வரிகள், பாடலைப் பாடிய அழகுக்கு அழகு சேர்த்தன. குறிப்பாக ‘பாரினில் பொருளும் உறவும் பந்தமும் சாஸ்வதமோ’ என்ற அனுபல்லவியின் ஒவ்வொரு வார்த்தைகளும் நிலையா வாழ்க்கையின் யதார்த்த மொழிகளாக நின்றன.

வரவேற்கத்தக்க புதுமை

வழக்கமாக எங்கும் புழக்கத்தில் இருக்கும் விதத்தில் கூடுதலான சவுக்க காலத்தில் நீலாம்பரி ராகத்தைப் பாடாமல், சற்று அதிகமான மத்திம கதியில் ‘காணாமல் வீணீலே காலம் கழித்தோமே’ என்ற முத்துத் தாண்டவர் பாடலை ஜெயஸ்ரீ பாடியது வரவேற்கத்தக்க புதுமையாக இருந்தது.

ஆலாபனையுடன் அடுத்துப் பாடிய ‘விண்ணும் மண்ணும் அளந்த விஸ்வ ருபனே ஸ்ரீனிவாசா கோவிந்தனே’ என்ற தர்மவதி பாடலிலும் நிரவலின் பரப்பை ஸ்வரங்களில் விஸ்தாரமாக விரித்தது பாடகிக்கு இசை மீதுள்ள இறுக்கமான பிடிப்பை மட்டுமின்றி, புதுமைகள் செய்ய விழையும் அவரது துடிப்பையும் எடுத்துக்காட்டியது.

‘ரஞ்சனி ம்ருது பங்கஜ லோசனி’ என்ற தஞ்சாவூர் சங்கர அய்யரின் காதுக்கினிய ராக மாலிகை, ‘கண்டேன் உந்தன் கருவிழி அழகை’, ‘ஜனனி ஜகத் காரணி பூரணி’ என்ற துக்கடாகளுக்குப் பிறகு ஜெயஸ்ரீ கச்சேரியின் நிறைவாகப் பாடிய ‘ஜய ஜய துர்கே’ என்ற ரேவதி ராக நாராயண தீர்த்தம், அருணா சாயிராம் அடிக்கடி பாடும் அபங்கை நினைவுபடுத்தியது.

பிற்சேர்க்கை

பக்க வாத்தியமாக மட்டுமின்றிப் பக்க பலமாகவும் நின்று தனி ஆவர்த்தனத்தில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய பரூர் ஹரினியும் (வயலின்) மணிக்குடி சந்திரசேகரும் (மிருதங்கம்) மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.

இசை வலம்-1

இசை வலம்-2

இசை வலம்-3

இசை வலம்-4

இசை வலம்-5

இசை வலம்-6

இசை வலம்-7

இசை வலம்-8

இசை வலம்-9

இசை வலம்-10

இசை வலம்-11

இசை வலம்-12

இசை வலம்-13

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017