மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

2017: போராட்டங்களின் வருடம்!

2017: போராட்டங்களின் வருடம்!

2017ஆம் ஆண்டு போராட்டத்தின் தொடக்கமாகவே அமைந்தது. தமிழக மாணவர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் தங்களது வாழ்வுரிமைக்காகப் போராட வேண்டியதாக அமைந்திருந்தது 2017. இதில் ஒரு சில போராட்டங்களே வெற்றியைக் கண்டன. 2017ஆம் ஆண்டு முடிவடைய இருந்தாலும் மக்களின் போராட்டம் என்பது தொடர்கதை...

ஜல்லிக்கட்டுப் போராட்டம்

‘வாடி வாசல் திறக்கும்வரை வீடு வாசல் செல்ல மாட்டோம்’ என்று தமிழக பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக பீட்டா அமைப்பை எதிர்த்தும் ஜல்லிகட்டுக்கு அனுமதி கேட்டும் 2017ஆம் ஆண்டின் முதல் போராட்டம் தொடங்கியது. குழந்தைகள், மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் ஜனவரி 23 முதல் ஆறு நாள்கள் ஒற்றுமையாகப் போராடியது உலகையே திரும்பிப் பார்க்க வைத்து வெற்றியைக் கண்டது. 2017இன் முக்கிய நிகழ்வாக இது கருதப்படுகிறது.

இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட முதல் போராட்டம் வெற்றி கண்டதையடுத்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால், அவை அனைத்தும் வெற்றிக்கு வழி வகுக்கவில்லை என்றே கூறலாம்.

லாரி ஸ்டிரைக்

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்கள் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மார்ச் 30 முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களைச் சேர்ந்த 30 லட்சத்துக்கும் அதிகமான லாரிகள் ஓடவில்லை 10 நாள்கள் ஸ்டிரைக் நீடித்ததால் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்தது. பின்னர் மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, வேலை நிறுத்தப் போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் திரும்ப பெற்றனர்.

மருத்துவர்கள் போராட்டம்

மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. புதிய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. மேலும், நீட் தேர்வும் கட்டாயமாக்கப்பட்டது இதை எதிர்த்து ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 17 நாள்கள் போராட்டம் நடத்தப்பட்டது. தர்ணா, வாயில் கறுப்புத்துணி கட்டி போராட்டம் நடத்துதல் என பல்வேறு வகையில் மருத்துவர்கள் போராடினர்.

அப்போது, சட்டவிரோதமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோர்மீது அத்தியாவசிய சேவை பராமரிப்புச் சட்டத்தின் (எஸ்மா) கீழ் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் மே 5ஆம் தேதி மாலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டம்

ஜூன் 30ஆம் தேதி, கதிராமங்கலம் பந்தநல்லூர் சாலையில் தனியார் நிலத்தில் போடப்பட்டிருந்த எண்ணெய்க் குழாயில் கசிவு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் வர வேண்டுமெனக் கோரி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தைத் தொடங்கினர். இன்றுடன் (டிசம்பர் 31) 221 நாளை எட்டியுள்ளது. இந்தப் போராட்டத்தால் 800க்கும் மேற்பட்டோர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. #SAVE TN KATHIRAMANGALAM என்ற ஹாஷ்டேக்கில் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் ட்வீட் செய்யப்பட்ட இந்தப் போராட்டம் 2017இன் மறக்க முடியாத நிகழ்வாகும்.

இதுபோன்று நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் திரும்ப பெறக் கோரி நடைபெற்ற போராட்டம் 174ஆம் நாளன்று தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஒப்பந்தம் ஜெம் லெபாரட்ரிஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. எனினும் மக்களின் ஒப்புதல் இல்லாமல் திட்டத்தைச் செயல்படுத்த மாட்டோம் என மத்திய அமைச்சர் உறுதியளித்ததைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

ஜாக்டோ ஜியோ போராட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் அமலாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 6ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒன்பது நாள்கள் நடைபெற்ற இந்தப் போராட்டம் நீதிமன்ற உத்தரவையடுத்து வாபஸ் பெறப்பட்டது. இந்த வழக்கில் ஆசிரியர்கள் சிலர் நீதிபதி கிருபாகரனை விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததால் பெரும் சர்ச்சை கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லி சென்று ஜந்தர் மந்தர் பகுதியில் ஜூலை 16ஆம் தேதி முதல் இரண்டுகட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டை ஓடுகளை மாலையாக அணிதல், பிச்சை எடுத்தல், தூக்குக்கயிறு மாட்டுதல், ஒப்பாரி வைத்தல், பாதி மீசை, தலை மழித்தல், குட்டிக்கரண போராட்டம், நிர்வாணப் போராட்டம் என்று ஒவ்வொரு நாளும் ஒரு வடிவத்தில் போராடியது தமிழக மக்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.

டாஸ்மாக் போராட்டம்

தமிழகம் முழுவதும் குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிராகப் பெண்கள் தொடர்ந்து குரல் கொடுத்தனர். மதுக்கடைகளையும், மதுபாட்டில்களையும் அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் டாஸ்மாக் வேண்டும் என்று ஆண்கள் சிலர் போராடினர். இந்தப் பரபரப்புக்கிடையே திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் சந்திப்பில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி, ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் ஈஸ்வரி என்ற பெண்ணைத் தாக்கியது 2017இன் நீங்கா வடுவாக உள்ளது.

நீட் போராட்டம்

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரி தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றபோதும் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர முடியாமல் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகக் கருத்து எழுந்த நிலையில் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு நீட் தேர்வே காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நீட் தேர்வை எதிர்த்தும், அனிதாவுக்கு நீதி கேட்டும் அரசியல் கட்சியினரும், பள்ளி கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டது 2017ஆம் ஆண்டின் மறக்க முடியாத சம்பவமாகும்.

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

போக்குவரத்துத் துறை ஊழியர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை, ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 14ஆம் தேதி சென்னை அண்ணாசாலையில் உள்ள பல்லவன் இல்லம் அருகே காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதற்கு திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. காட்டுத்தீ போல மற்ற மாவட்டங்களுக்கும் இப்போராட்டம் பரவியதால் கடலூர், விழுப்புரம், மதுரை மாவட்டங்களிலும் போக்குவரத்து ஊழியர்கள் ஆங்காங்கே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகமே ஸ்தம்பித்துப் போனது.

செவிலியர்கள் போராட்டம்

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் டிசம்பர் 27ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏழை எளிய நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதியுறும் நிலை ஏற்பட்டது. பின்பு உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து செவிலியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். இந்த வாக்குறுதியை ஏற்றுச் செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

மீனவர்கள் போராட்டம்

குமரி மாவட்டத்தில் ஓகி புயலில் சிக்கி இன்னும் கரை திரும்பாத மீனவர்களை உடனடியாகக் கண்டுபிடித்துத் தரக் கோரி ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் டிசம்பர் 1 முதல் போராட்டத்தைத் தொடங்கினர். சாலை மறியல், ரயில் மறியல் எனப் போராட்டம் வலுக்கத் தொடங்கியதால் மாவட்டமே திகைத்து நின்றது. மீனவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இன்றும் நானூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீட்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது.

பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்

நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கக் கோரி டிசம்பர் 26 முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் போராட்டத்துக்குப் பலன் கிடைக்குமா, கிடைக்காதா என்பது ஜனவரி 5ஆம் தேதி வழங்கவிருக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலே உள்ளது.

இதுபோன்று 2017ஆம் ஆண்டு போராடினால்தான் வாழ்க்கை என்ற நிலையை ஏற்படுத்தியது. தனி மனிதர், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ஆண்டு போராட்டத்தை சந்தித்தனர். 2018ஆம் ஆண்டாவது போராட்டம் இல்லாமல் தொடருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

- கவி

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017