மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

குஜராத்: துணை முதல்வரை வளைக்கும் காங்கிரஸ்?

குஜராத்: துணை முதல்வரை வளைக்கும் காங்கிரஸ்?

தனக்கு ஆதரவான 10-15 எம்எல்ஏக்களோடு வந்தால், துணை முதல்வர் நிதின்படேலை நாங்கள் வெளியிலிருந்து ஆதரிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார் குஜராத்திலுள்ள லத்தி தொகுதியின் எம்எல்ஏ விர்ஜி தும்மர். இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.

குஜராத் மாநில துணை முதல்வராக, பாஜகவின் சார்பாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் நிதின் படேல். கடந்த முறை துணை முதல்வராக இருந்தபோது, இவர் வசம் நிதி மற்றும் நகர விரிவாக்கத் துறைகள் இருந்தன. ஆனால், இம்முறை இவருக்கு இந்த துறைகள் தரப்படவில்லை; சுகாதாரம், சாலைகள் மற்றும் கட்டிடத்துறையே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனால் நிதின் படேல் மன வருத்தத்தில் இருப்பதாகச் செய்திகள் வெளியானது.

இதனையடுத்து, பாஜகவில் இருந்து நிதின் படேல் உடனடியாக வெளியேற வேண்டுமென்று குரல் கொடுத்தார் பட்டிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி தலைவர் ஹர்திக். இவர், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக குஜராத்தில் குரல் கொடுத்தவர். இந்த நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் நிதினுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுராஷ்டிரா பகுதியிலுள்ள அம்ரேலி மாவட்டத்தின் லத்தி தொகுதி எம்எல்ஏவான விர்ஜி தும்மர், ” நிதின் தனக்கு ஆதரவான 10-15 எம்எல்ஏக்களோடு தனியாக வந்தால், அவருக்கு நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு தரத் தயாராக இருக்கிறோம்” என்று அறிவித்திருக்கிறார்.

”நிதின் படேல் வசமிருந்த நல்ல துறைகள் பறிக்கப்பட்டு, மற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலன்களுக்காகவும், குஜராத் வளர்ச்சிக்காகவும், அவருடன் இணைந்து செயலாற்றத் தயாராக இருக்கிறோம். ஒரு நண்பனாக, அவரை பாஜக பயன்படுத்திக்கொள்கிறது என்பதைச் சொல்ல விரும்புகிறேன்” என்றிருக்கிறார்.

ஆனால், காங்கிரஸ் கட்சி விர்ஜி தும்மரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ”எந்தப் பயனும் இல்லை என்றானபிறகு, மூத்த தலைவர்களை ஓரம் கட்டுவது பாஜகவின் வழக்கம். கேசுபாய் படேல், ஆனந்திபென் படேல் மற்றும் கோர்தான் ஸதாபியா போன்ற படேல் இனத்தலைவர்களே இதற்கு உதாரணம். தற்போது, நிதின் படேலின் முறை வந்திருக்கிறது. அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டது பாஜகவின் உட்கட்சி பிரச்சனை என்பதால், இதுபற்றி மேற்கொண்டு பேச காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. தும்மரின் கருத்தைப் பொறுத்தவரை, அது அவரது சொந்த விருப்பம் மட்டுமே” என்று தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான மனீஷ் தோஷி.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017