மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

கூத்து வாத்தியார்கள்: 8

கூத்து வாத்தியார்கள்: 8

ஜெயராமன் வாத்தியார்: கூத்தரும் கூத்துப்பிரதி ஆசிரியரும் - 2

இரா.சீனிவாசன், மு. ஏழுமலை

ஜெயராமன் வாத்தியார் ஒரு சிறந்த கூத்துக் கலைஞராக விளங்கியதோடு, கூத்துப் பனுவல் உருவாக்கும் ஆளுமை கொண்டவராகவும் இருப்பது குறிப்பிடத் தக்கது. ஒரு கூத்துக் கலைஞன் என்னும் நிலையிலிருந்து கூத்துப் பனுவல் உருவாக்க ஆளுமையாளராகவும் உருவான சூழலைப் பற்றிக் கேட்டபொழுது அத்தகைய பரிமாணத்தைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

‘நான் திருக்கோவிலூரில் வாழ்ந்துகொண்டிருக்கும் பொழுது பல கூத்துகள் ஆடின அனுபவத்தால் நாம் ஏன் கூத்துப் பிரதிகளை எழுதக் கூடாது என்று தோன்றியது. சரி எழுதலாம் என்று முடிவு செய்து நான் எழுத முயற்சியும் செய்தேன். இப்படி உருவான எண்ணத்திற்கு உருவம் கொடுப்பதற்காக திருக்கோவிலூருக்கு அருகில் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவனூர் மலைக்கு ரயில் தண்டவாளத்திலேயே நடந்து செல்வேன். ஒரு கதையை மையமாகக் கொண்டு வேடங்களைப் பிரித்து ஒவ்வொரு வேடத்துக்கும் அறிமுகப் பாடல், வசனம், இரண்டு பாத்திரங்கள் சந்திக்கும் நிலை என வகைப்படுத்தி, அந்தந்தச் சூழலுக்கேற்பப் பாடல்களை மெட்டமைத்து எழுதுவேன். இவ்வாறு பாடல் எழுதும்பொழுது பல காகித நோட்டுகள் வீணாகும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முயற்சி செய்வேன். இப்படிப் பலமுறை மலைக்குச் செல்வதும், ஈடுபாடு இருக்கும் வரை எழுதுவதும், தொய்வு ஏற்பட்டால் வீட்டுக்கு திரும்புவதுமாகத்தான் என் கூத்துப் பிரதி உருவாக்க முயற்சி தொடர்ந்தது. இத்தகைய முயற்சியில் சில கூத்துப் பிரதிகளை உருவாக்கியும் நிகழ்த்தியும் இருக்கிறேன். கேட்ட கலைஞர்களுக்கு எழுதியும் கொடுத்துள்ளேன்.

தொடர்ந்து கூத்துப் பனுவலை உருவாக்கும் உத்திகளைப் பற்றி விரிவாகக் கூறினார். ஒரு கூத்து வாத்தியார் கூத்து ஒன்றைக் கற்றுக்கொடுக்கும் பொழுது கூத்தர்களுக்கு அந்தந்த வேடங்களுக்கேற்ற பாடல்களையும் வசனங்களையும் எழுதிக் கொடுத்துப் பாடம் செய்யச் சொல்வார். பாடல் ஒத்திகை, அடவு ஒத்திகை முதலானவற்றின் மூலம் நிகழ்த்துதலைக் கற்றுக் கொடுப்பார். இந்நிலையில், ஒரு கூத்தர் தான் ஏற்கும் வேடத்திற்குரிய பாடத்தினை மட்டும் மனனம் செய்து, அடவு முதலான அடிப்படைகளை அறிந்துகொண்டால் போதும்.

ஆனால், ஒரு கூத்துப் பனுவலை உருவாக்கும்பொழுது அனைத்து வேடங்களுக்கான பாடங்களையும் ஒருவரே உருவாக்க வேண்டிய சூழல் இருப்பதால், ஒரு கதையைத் தேர்வு செய்தல், கதைத்கேற்ற ஆண், பெண் பாத்திரங்களை உருவாக்குதல், பாடல்களை இராக, தாளங்களின் அடிப்படையில் அமைத்தல், நெருப்பு போன்ற வசனங்களை உருவாக்குதல் முதலான அடிப்படைகளுடன் கூடிய பன்முக ஆளுமை என்பது கூத்துப் பனுவல் ஆசிரியருக்கு இன்றியமையாததாகும்.

நான் ஒரு கூத்துப் பிரதியை உருவாக்கும்பொழுது, ஒரு கூத்துப் பிரதியை உருவாக்குவதற்கான சில அடிப்படைகளை மனத்தில் கொள்வதோடு, எனக்குரிய சில உத்திகளையும் பின்பற்றுவேன். அவை என்னவென்றால், எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்ற மூன்று நிலைகளை ஒரு கூத்துப்பிரதி உருவாக்கத்திற்குப் பயன்படுத்துவேன். எடுப்பு என்பது எதைப்பற்றிக் கூத்துப் பிரதி செய்யப்போறோம் என்பது பற்றிய சிந்தனை. தொடுப்பு என்பது எந்தப் பாத்திரத்தை எந்தப் பாத்திரத்தோடு தொடர்புபடுத்திக் கதையை உருவாக்கப் போகிறோம் என்பது. முடிப்பு என்பது கதையை எத்தகைய சூழலில், எந்த நிலையோடு (துன்பியல், இன்பியல்) முடிப்பது என்பதாகும்.

(கட்டுரையாளர் முனைவர் இரா.சீனிவாசனோடு ஜெயராமன் வாத்தியார்)

இவைமட்டுமன்றி, கதையைத் தேர்ந்தெடுத்த பிறகு சுருக்கமான கதை வடிவம், வேடங்கள், காட்சிகள் முதலானவற்றையும் அமைத்துக்கொள்வேன். பாடல்கள் அமைப்பதற்குத் தேவையான மெட்டுகளையும் எதுகை, மோனை முதலிய தொடைகளையும் பெறுவதற்குத் திருப்புகழ், சித்தர் பாடல்கள், தனிப்பாடல்கள், தேவாரம் முதலானவற்றையும் படிப்பேன். இவ்வாறு பல்வேறு நிலையிலான செயல்பாடுகளும் தெருக்கூத்துப் பிரதி உருவாக்கத்தில் அவசியமானவை.

தெருக்கூத்துப் பனுவலுக்கான கதையைத் தேர்ந்தெடுப்பது முதன்மையானது என்பதோடு, அக்கூத்திற்கான பாடல்களை அமைப்பதும் அரிதானது. ஒவ்வொரு வேடத்திற்கும் திரைப்பாட்டு, போற்றி விருத்தம், வருகைப் பாடல், தருக்கப் பாடல் எனப் பல நிலைகளில் பாடல்களை அமைக்க வேண்டும். ஆண் வேடங்களான தருமன், கண்ணன், பலராமன், நாரதர், விதுரர், சகாதேவன் முதலான சாந்தமான வேடங்களுக்கு ஒரு வகையான பாடல்களும், துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சாரசந்தன், சிசுபாலன், வீமன், அருச்சுனன், கீசகன் முதலான துடியான வேடங்களுக்கு விரைவுநடைப் பாடல்களும் இருக்க வேண்டும். அதற்கேற்ப இராக, தாளங்களும் மாறும்.

பெண் வேடங்களைக் காணும்பொழுது பார்வதி, பேரண்டச்சி, தாசி முதலான பாத்திரங்களை ஏற்கும் வேடதாரிகள் குதிப்பாங்க. அதனால், அதற்கேற்ற பாடல்களை அமைக்க வேண்டும். திரௌபதி, பொன்னுருவி, சீதை முதலான பாத்திரங்கள்கள் குதிப்பது குறைவு, அதனால் அதற்கேற்ற முறையில் பாடல்களை எழுதவேண்டும். இவை மட்டுமின்றி, பாடல் வகைகளான விருத்தம், தரு, கந்தார்த்தம், கொச்சகம், திபதை, சீசபத்தியம் முதலானவற்றைத் தாள, ராகத்தோடு பொருந்தியதாகவும் அமைக்க வேண்டும்.

பன்னிரு தாள வகைகளைத் தெருக்கூத்தில் பயன்படுத்தினாலும் பெரும்பான்மையாக ஆதிதாளம், ஏகதாளம், அடதாளம், ரூபகதாளம் ஆகிய நான்கு வகைத் தாளங்களே பயன்படுத்தப்படுகின்றன. இவற்றோடு கொச்சகம் என்பது பெண்ணின்மீது மையல் கொள்ளுதல் முதலிய இடங்களிலும் குறத்தியின் அறிமுகப்படலான ‘செஞ்சிபதி ஆளும் அம்மன்’ என்னும் பாடல் முறையிலும் வருவதாகும். இந்தப் பாடலில் 4 ஜதி, 4 தாளம், 4 அடவு வரும். இந்தக் கொச்சக முறையிலான பாடலைப் பாடும்பொழுது பின்னணி இசை உண்டு. கந்தார்த்தம் என்பது கோபமான சூழலில் வருவது. பின்பாட்டும் தாளமும் வராது. தரு என்பது தாளத்துடன்கூடிய பாடல் வகை. பெரும்பான்மையாக கவி 4 வரியாகவும், விருத்தம் 8 வரியாகவும் அமையும். இத்தகைய இன்றியமையாத அடிப்படைகளும் ஒரு தெருக்கூத்துப் பனுவல் ஆசிரியர் அறிந்திருக்க வேண்டியது அவசியம். இத்தகைய பல்வேறு பின்னணி அறிவுகளோடுதான் ஒரு தெருக்கூத்துப் பனுவலை உருவாக்குகிறோம்.

இப்படிப் பார்த்துப் பார்த்து உருவாக்கியதுதான் பிரம்மனின் தலைவிதி, முத்துநகர் மோகனா திருமணம், மதுரைவீரன் வாள்முனி சண்டை, கருமாரியம்மன் நாடகம் ஆகியவை. இவற்றில் முத்துநகர் மோகனா திருமணம், மதுரைவீரன் வாள்முனி சண்டை ஆகிய பனுவல்கள் சண்முகானந்தா பிரஸ் பாலசுந்தர முதலியார் அவர்களால் வெளியிடப்பட்டன. கருமாரியம்மன் நாடகம் இரத்தினநாயகர் சன்ஸ் பதிப்பகம் வெளியிட்டது. என்னுடைய ஆசை என்னவென்றால், நான் உயிரோடு இருக்கும்பொழுதே என்னுடைய பனுவல்களின் வெளியீடுகளைப் பார்க்க வேண்டுமென்பது தான். ஆனால், இப்பொழுதெல்லாம் அதற்கான சாத்தியக் கூறுகள் மிக அரிதாகவே உள்ளன. பேனாவை கையில் எடுத்தாலே சலிப்பு வருகிறது. யார் கூத்துப் பிரதிகளையெல்லாம் வெளியிடப் போகிறார்கள் என்ற எண்ணம் தோன்றுகிறது.

தெருக்கூத்துப் பனுவலை உருவாக்கி அதை நிகழ்த்துதலுக்குக் கொண்டுவரும்பொழுது முதலில், வேடதாரிகளை ஒன்று சேர்ப்போம். வேடதாரிகளின் முகவெட்டு, உடல்வாகு, குரல் முதலான அடிப்படைகளைக் கொண்டு வேடத்தைப் பிரித்துக் கொடுப்போம். குறிப்பாக, பெண் வேடத்திற்குரிய வேடதாரியைத் தேர்ந்தெடுக்கும் பொழுது முகக்கவர்ச்சியையும், குரலையும் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் பெண் பாத்திரம் எடுப்பாக இருக்கும். இப்படி கூத்தர்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, நான் இயற்றிய கூத்துப் பிரதியிலிருக்கும் பாடல்களை வேடதாரிகளுக்கேற்ப எழுதிக்கொடுத்து, நான்வைத்த மெட்டில் பாடிக் காண்பிப்பேன். அந்த மெட்டிலேயே மனனம் செய்யச் சொல்வேன்.

சில நாட்கள் கழித்துப் பாடல் ஒத்திகை நடக்கும். அப்பொழுது வேடதாரிகள் தாங்கள் பாடும் பாடல்களில் உள்ள குறைகளைப் போக்கிக் கொள்வர். இதைத் தொடர்ந்து அடவு ஒத்திகையும் நடைபெறும். இறுதியாக அரங்கேற்றமும் நிகழும். இந்த நிலையில் தூர்வாசர் கர்வபங்கம், கனகராணி கல்யாணம் ஆகிய கூத்துகளைக் கற்றுக்கொடுத்திருக்கிறேன். இவ்வாறு ஒரு பிரதியை எழுதி ஒத்திகை பார்த்து அரங்கேற்றம் செய்வது கூத்து வாத்தியாரின் கடினமான பணியாக இருக்கும். கூத்தில் நடிக்கும் கலைஞனின் பணியும் சாதாரணமானது அல்ல. ஒரு கூத்து வாத்தியாரின் பனுவலுக்கு உயிர் கொடுப்பவனே ஒரு கூத்துக் கலைஞன் தான்.

ஒரு வயோதிகக் கலைஞனும் முகத்தில் பவுடர் போடுற வரைக்கும் தலையைத் தொங்கப் போட்டுட்டு உட்கார்ந்திருப்பான். பவுடரப் போட்டுட்டா போதும் தலைக்கட்டு, பாலமணிக்கட்டு, காதுக்கட்டு, கிரீடக்கட்டு, மீசைக்கட்டு, சுங்குக் கட்டு முதலாகக் கொண்டையில் கட்டுகிற கட்டையெல்லாம் கட்டுவதோடு, புஜக்கட்டு - 4, மார்புப் பதக்கக் கட்டு, கைக்கட்டு - 2, டவல்கட்டு (எட்டுச் சேலைகள் கட்டப்படும் - தெற்கத்திபாணி) என்று 32 கட்டுக் கட்டி ஆடினாதான் மனுஷன். இத்தனை இறுக்கமான கட்டுகளைக் கட்டி, நாலு குதிகுதித்த பிறகுதான் அந்த கட்டுகள் சற்று இறுக்கம் குறையும். இவ்வளவு உடல் வலியும் கூத்துக் கலைஞனுக்கு இருக்கிறது. இத்தனை வலிகளையும் தாங்கி ஆடுகிற கலைஞர்கள் தான் பேரும் புகழும் பெற்ற கலைஞர்கள் என்று கூறியதிலிருந்து ஒரு கூத்து வாத்தியாருக்கும் கூத்துக் கலைஞனுக்குமான உருவாக்கப் பின்னணியைப் புரிந்துகொள்ள முடிந்தது.

ஒரு கூத்துப் பனுவல்உருவாக்கம், பனுவலைக் கலைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்தல், கலையைக் கற்றுக்கொள்வதிலும் நிகழ்த்துவதிலும் கலைஞனுக்கு உள்ள வலி முதலானவற்றைப் பகிர்ந்துகொண்ட ஜெயராமன் ஆசிரியர் ஒரு கலைஞன் கூத்துக் களத்தில் பின்பற்ற வேண்டிய நேர்மையையும் பொறுப்புணர்வையும் குறித்து மிக விரிவாக கூறினார்.

(இறுதிப்பகுதி மாலை 7 மணி பதிப்பில்)

ஜெயராமன் வாத்தியார்: கூத்தரும் கூத்துப்பிரதி ஆசிரியரும் - 1

கலையைக் காற்றில் கரைத்த கலைஞர்

திரௌபதி வழிபாடு: விரிவடையும் அர்த்தங்கள்

கமலக்கண்ணன் வாத்தியார்

குமாரசாமித் தம்பிரான்

திருவேங்கடம் வாத்தியார்

தங்கவேல் ஆசிரியர்

மண்ணு வாத்தியார்

த.ரங்கசாமி வித்துவான்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017