மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

சிறப்புத் தொடர்: முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்!

சிறப்புத் தொடர்: முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்!

அருள்செல்வன்- நேர்காணல்: 2

(கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சுற்றுச்சூழல் சம்பந்தமான பிரச்சினைகளைப் போக்கும் பணியில் நீண்ட வருடங்களாக அருள்செல்வன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். களப் பணியாளர். எப்போதும் இன்முகம் காட்டி, மக்கள் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுப்பவர்; கடலூரில் ஏற்பட்டிருக்கும் பல ஆக்கபூர்வமான சுற்றுசூழல் மாற்றங்களில் இவருடைய பங்களிப்புக்கும் முக்கிய இடம் இருக்கிறது.)

சந்திப்பு: தமயந்தி

பெட்ரோ கெமிக்கல் முதலீட்டுத் தளமாக அரசு அறிவித்தது எவ்வித பாதிப்பை ஏற்படுத்தும்?

இந்த பெட்ரோ கெமிக்கல் பெட்ரோல் இன்வெஸ்ட்மென்ட் ரீஜியன்(PCPIR) என்பது கடலூரில் இருக்கக்கூடிய தைக்கால்தோணித்துறை என்ற இடத்தை ஒரு எல்லையாகவும், நாகையில் இருக்கிற மாமாக்குடி என்ற ஒரு பகுதியை ஒரு எல்லையாகவும் கொண்டு சுமார் 250 சகிமீ பரப்பில் இந்தத் திட்டம் அமையவுள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பாலான பகுதி விவசாய நிலமாகும். ஏற்கெனவே சில இடங்கள் கையகப்படுத்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இதன்மூலம் விளைநிலங்களின் பகுதி குறையும். விவசாயத்துறையில் கூலி வேலைகளில் ஈடுபட்டிருக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பதற்கான ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள், எண்ணூரில் இருந்து குழாய் பதித்து கச்சா எண்ணெய் கொண்டு வருதல், எரிவாயு குழாய் பதித்துக் கொண்டு வருதல், 3000 கோடி ரூபாய் செலவில் 300 எம்எல்டி கடல்நீரைச் சுத்திகரிக்கும் ஒரு தொழில்திட்டம், பெட்ரோல் இரசாயன மண்டலத்தில் உரத்தொழிற்சாலை, பெட்ரோலிய சுத்திகரிப்பு சார்ந்த தொழில் திட்டங்கள், அதை ஊக்குவிக்கும் வகையில் புதிய துறைமுகங்கள் அமைத்தல், மாநில சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக, நான்கு வழிச்சாலைகளாக மாற்றுதல் என பல திட்டங்கள் இதைச் சார்ந்து இங்கு மேம்படுத்தப்பட இருக்கின்றன.

கடலூரில் ஏற்கெனவே கடலரிப்பு பெருமளவில் இருப்பதாகப் பல்வேறு அரசு அறிக்கைகள் கூறுகின்றன. அதுபோக, அதிக அளவு மாசு பாதிப்பு இருக்கிறது என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை கொடுத்திருக்கிறது. இதையெல்லாம் மீட்டெடுக்காமல், அபாயகரமான தொழிற்சாலைகளை மேலும் அமைப்பது என்பது சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கும். மேலும் இது கடற்கரைக்கு மிக அருகில் அமைக்கப்பட இருக்கின்றன. இதற்கான மூலப்பொருட்கள் கொண்டுவருவதற்காக கடலைப் பயன்படுத்தவும், அதற்காக கடற்கரையைச் சுற்றி கட்டமைப்புகள் ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கின்றன. கடலுக்கு உள்பகுதியில் கட்டமைப்புகள் போகும்போது ஒரு பகுதியில் மணல் குவிப்பும், மற்றொரு பகுதியில் கடல் அரிப்பும் ஏற்படும். இதனால் மீனவ மக்கள் தங்கள் இடங்களை இழக்க வேண்டிய நிலை உண்டாகும். அவர்களது சாதனங்களை நிறுத்தி வைக்கக்கூடிய இடங்கள் பறிபோக வாய்ப்புகள் இருகின்றன. மீனவர்களுடைய பாரம்பரிய உரிமைகள் பாதிக்கப்படும் அச்சம் இருக்கின்றது. அதுபோல, நிலவுரிமை என்பது சமூக அந்தஸ்து சார்ந்த ஒன்று.

49 கிராமங்களிலிருந்து ஏறக்குறைய இருபத்தேழாயிரம் ஹெக்டர் நிலம் இந்தத் திட்டத்திற்காக எடுக்கப்போவதாக ஒரு அறிவிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. 19-07-2017 தமிழ்நாடு ஊரக நகர திட்டமிடல் சட்டத்தின் கீழ் 22,938 ஹெக்டர் நிலம் கையகப்படுத்த ஆணை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் கடலூரில் 30 கிராமங்கள், நாகையில் 19 கிராமங்கள். இவ்வளவு நிலம் கையகப்படுத்தும்போது, அந்த நிலப்பயன்பாடு மாற்றத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகள், அதுசார்ந்த பல்லுயிர் சூழல் இவையெல்லாம் பெரிய அளவில் இருக்கும். இதன் தாக்கம் அருகே அமைந்திருக்கிற மற்ற இடங்களிலும் பிரதிபலிக்கும். பொதுவாக மோட்டார் வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தால் அபராதம் விதிக்கப்படும். அதுபோல, லாரியில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பாரம் ஏற்றிச் சென்றால் அபராதம் விதிக்கப்படும். அதைப்போலவே, சுற்றுச்சூழலைப் பொறுத்த வரையில் அந்தப் பகுதியின் தாங்குதிறனைக் கண்டறியும் முறையான ஆய்வு மேற்கொள்ளாமல், மேலும் மாசுபடுத்துகிற திட்டங்களை அறிவிப்பது வாழ்வாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஊறுவிளைவிக்கும்.

மேற்சொன்ன பிரச்சினைகளைச் சரிசெய்வதில் அரசின் செயல்பாடு என்னவாக இருக்க வேண்டும்?

Marine impact assessment என்று சொல்லப்படக்கூடிய கடலில் ஏற்பட்டிருக்கிற தாக்கங்கள் என்ன, கடலில் இருக்கிற தாவரங்கள், விலங்கினங்கள் உள்ளிட்டவைகளில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன, அதில் முன்னேற்றம் இருக்கிறதா, பாதிப்பு இருக்கிறதா, என்ன வகைகள் அழிந்து அல்லது அருகி இருக்கின்றன, எத்தனை வகைகளில் வளர்ச்சி குன்றி இருக்கிறது அல்லது பெருகி இருக்கிறது என்பன போன்ற கடலின் தாக்க மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய முறையான ஆய்வு நிறுவனம் இந்த மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். இந்த ஆய்வு நடவடிக்கைகள் வெளிப்படையானவைகளாக இருக்க வேண்டும். அந்த ஆய்வில் உள்ளூர் மீனவ மக்களின் பங்கேற்பும் இருக்க வேண்டும். இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில்தான் மற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

கடலரிப்பு பிரச்சினை இன்றைக்கு பெரிய அளவில் இருந்து கொண்டு இருக்கிறது. இதற்குத் தீர்வு என்பது கற்களைக் கொட்டுவதுதான் என்பது அனைவருடைய மனதிலும் ஆழமாகப் பதிய வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த அரிப்பு இப்போது ஏன் வேகமாக இருக்கிறது என்பதற்குக் காரணம் மனித செயல்பாடுகள்தாம். இயல்பாக இருக்கிற அரிப்பை, சரிசெய்வதற்காக நாம் எடுக்கிற முயற்சிகள் இன்னும் மோசமானதாக அதை மாற்றிவிடுகிறது. ஆகவே, அறிவியல்பூர்வமான அணுகுமுறைக்குத் திரும்பி யுத்திகளைக் கையாளுவது அவசியம்.

இது மாதிரியான திட்டங்களுக்காக, போக்குவரத்திற்காக, சரக்குக் கையாள்வதற்காக புதிய புதிய துறைமுகங்களை அமைப்பதற்கு மாறாக, ஏற்கெனவே இருக்கிற துறைமுகங்களை வலுப்படுத்தி அதைப் பயன்படுத்தலாம். அதிக எண்ணிக்கையில் துறைமுகங்களைக் கட்டுவது மீனவர்களின் இயல்பான நடவடிக்கைகளைப் பாதிப்பதுடன், அவர்களது இயல்பான உரிமைகளைப் பறிப்பதாகவும் இருக்கும். ஆகவே, இவ்விதம் செய்வதை அரசு நிறுத்த வேண்டும்.

எந்த ஒரு திட்டத்திற்காகவும் விவசாய நிலத்தைக் கையகப்படுத்தக்கூடாது. குறிப்பாக, வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் நிலப்பயன்பாடு மாற்றம் செய்யக்கூடாது. விளைநிலங்கள் விளைநிலங்களாகவே வைக்கப்பட வேண்டும். இருக்கிற விளைநிலங்களில் பாரம்பரியமான முறைகளில் புதிய உத்திகளைக் கையாண்டு உணவுக்கான உத்தரவாதத்தைக் கொடுக்க வேண்டும். கடலூர் பேரிடரால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டம். குறுகிய காலப்பயிர், நீண்டகாலப் பயிர், நீண்டகாலப் பயிர் என்று பலவகை பயிரிடல் முறைகள் நம்மிடம் இருந்தன. இப்போது இது மாறி, ஒரே பயிர், ஒரு வருட பயிர் என்ற முறைக்கு சென்றுவிட்டது. இதனால் மழை வந்தாலோ, புயல் வந்தாலோ ஒட்டுமொத்த இழப்பு நேரிடுகிறது. ஆகவே, விவசாயிகள் விவசாயமே வேண்டாம் என்ற நிலைக்கு கொண்டுபோய் விடப்பட்டனர். இதை மாற்றி, பாரம்பரிய முறையான பலபயிரிடல் முறைகள் கொண்டுவரப்பட வேண்டும். அதைப்போல, இரசாயனம் சார்ந்த வேளாண்மை இல்லாமல், இயற்கை வழியில் செய்பவர்களுக்கு அரசு மானியங்கள் கொடுத்து அதை ஊக்கப்படுத்த வேண்டும். அப்படி செய்யப்படும்போது, மக்கள் மாற்றுத் தொழிலுக்குப் போகாமல் விவசாயத்திலே பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள முடியும். அதே நேரத்தில் வளர்ச்சித் திட்டங்கள், உள்ளூர் வளங்களைப் பயன்படுத்துவதாகவும், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதாகவும், சுற்றுச்சூழலுக்கு எந்தவிதத்திலும் கேடு விளைவிக்காததாகவும் இருக்க வேண்டும்.

ஒரு இடத்தில் அரசு தொழிற்திட்டத்தை அனுமதித்திருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த இடம் ஏற்கெனவே நிலம், நீர், காற்று என எல்லாவற்றிலும் மாசுபட்டிருக்கிறது. இருந்தும், அந்த இடத்தில் இருக்கிற மாசுகளைக் குறைப்பதற்கு மாறாக, மேலும் மாசுபடுத்தக்கூடிய திட்டங்களை அனுமதிக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும். எந்தவொரு திட்டமும் வருவாய், லாபம் என்பதை மட்டும் பார்க்காமல், அந்தப் பகுதி மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் உண்டாக்காததையும் உறுதி செய்ய வேண்டும். ஒட்டுமொத்த பாதிப்பு சம்பந்தமான ஆய்வு (Cumulative Impact Assessment) செய்யப்பட வேண்டும். அந்த முடிவின் அடிப்படையிலே அரசு ஒரு திட்டத்திற்கான முடிவை எடுக்க வேண்டும். ஏற்கெனவே ஏற்பட்டிருக்கும் பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க முடியாத சூழல் இருக்கும்போது அரசு அந்தத் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது. இப்படி ஒரு நிலைப்பாட்டை அரசு எடுக்கும்போது கண்டிப்பாக மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

இந்தச் சுற்றுசூழல் பாதிப்பு எப்படி கடலூரின் பொருளாதாரத்தைப் பாதிக்கும்?

(நேர்கணலின் அடுத்த பதிப்பு மாலை 7 மணிப் பதிப்பில்)

பகுதி-1

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

4 நிமிட வாசிப்பு

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

ஞாயிறு 31 டிச 2017