மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

சிறப்புக் கட்டுரை: கொண்டாட்டங்களின் உளவியல், சமூகவியல், அரசியல்!

சிறப்புக் கட்டுரை: கொண்டாட்டங்களின் உளவியல், சமூகவியல், அரசியல்!

அ.குமரேசன்

அலுவலகத்துக்குப் புறப்படுகிறபோதெல்லாம், “தாத்தா திரும்பி வர்றப்ப என்ன வாங்கி வரணும்?” என்று கேட்பேன். குறிப்பிட்ட ஒரு விளையாட்டுப் பொருளை வாங்கிவரச் சொல்வார் இரண்டு வயதுப் பேரர். பெரும்பாலும் இரவு தாமதமாகவே திரும்புவேன் அல்லது மறந்துவிடுவேன் என்பதால் அதை வாங்காமல்தான் வீட்டுக்குள் செல்வேன். இப்படிப் பல நாள்கள். ஒருநாள் மாலையில் விரைவாகவே திரும்பும் வாய்ப்பு அமைந்தது, ஞாபகமும் இருந்தது. முக்கியமாகக் கையில் காசும் இருந்தது. வழியில் இருந்த குழந்தைகளுக்கான கடையில் அதை வாங்கிக்கொண்டு சென்றேன். உறையைப் பிரித்துப் பார்த்த பேரர் முகத்தில் வெளிப்பட்ட ஒளிமிகுந்த வியப்பு, கையில் அதை எடுத்துக்கொண்டு குதித்த குதிப்பு, “அய்ய்ய்” என்று வீட்டுக்குள் சுற்றிச் சுற்றி வந்த களிப்பு...

இது ஒரு கொண்டாட்டம். அடைய நினைத்ததை அடைவது, விடுபட விரும்பியதிலிருந்து விடுபடுவது ஆகிய இந்த இரண்டு நிலைகளிலும் ஏற்படும் உணர்வுதான் கொண்டாட்டத்தின் ஊற்று. வேறு எத்தனையோ காரணங்களுக்காக, என்னென்னவோ சூழல்களில் கொண்டாட்டங்கள் நடக்கின்றன என்றாலும், அவை அனைத்தையும் இந்த இரண்டு நிலைகளுக்குள் பொருத்திப் பார்க்கலாம். எளியதொரு போட்டியில் வெல்வது முதல் வலியதொரு போரில் வெல்வது வரையில், காதல் முன்மொழிவு ஏற்கப்படுவது முதல் கவிதையொன்று கைவருவது வரையில் அடைய நினைத்ததை அடைவதன் கொண்டாட்டம் இருக்கிறது. இருட்டறைக்குள் வெளிச்சம் வருவது முதல் யாருமற்ற இடத்திலிருந்து கூட்டத்துடன் சேர்வது வரையில், பட்டினியின்போது ஒரு கவளம் சோறு கிடைப்பது முதல் தோல்வியின் சோர்வில் அணைப்பின் ஆறுதல் வரையில் விடுபட விரும்பியதிலிருந்து விடுபடுவதன் கொண்டாட்டம் இருக்கிறது. அரசியல், சமயம், சமூகம், அறிவியல், ஊர், குடும்பம், அந்தரங்கம் என எல்லாத் தளங்களிலும் இத்தகைய கொண்டாட்டங்கள் இருக்கின்றன.

கொண்டாட்டத்தின் பல முகங்கள்

வழக்கறிஞராக உள்ள நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தான் வாதாடி வந்த ஒரு சிக்கலான கொலை வழக்கில், காவல் துறையின் ஆதாரங்கள் பொய்யானவை என்பதையும் சாட்சிகள் போலியானவர்கள் என்பதையும் நீதிமன்றத்தில் நிறுவி, குற்றம் சாட்டப்பட்டிருந்த அப்பாவி இளைஞரை விடுதலை செய்த தீர்ப்பைப் பெற்றது பற்றி உணர்ச்சி பொங்கத் தெரிவித்தார். உடனே நான் அவரிடம், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரும் மொழி தெரியாததால் தனக்கு எதிராக வழக்கு சோடிக்கப்படுவதை அறியாமல் மாட்டிக்கொண்டவரும், இரண்டாண்டுகளுக்கு மேல் சிறையில் கிடந்தவருமான அந்த இளைஞரோடு சேர்ந்து இந்த முக்கியமான வெற்றிக்காக ஓர் எளிய விருந்துக்கு ஏற்பாடு செய்யக் கேட்டுக்கொண்டேன். தகவலறிந்த பலரும் இதேபோல் கூறியிருக்கிறார்கள். அந்த இளைஞருக்கு விடுபட்ட கொண்டாட்டம் எனில், நண்பருக்கு வெற்றியை அடைந்த கொண்டாட்டம். வழக்கில் தொடர்பே இல்லாத நண்பர்களுக்கு, இப்படி எத்தனை அப்பாவிகள் சிக்கியிருக்கிறார்கள் என்ற மலைப்பும், அந்த இளைஞரையாவது அவரது இளமைக் காலம் முழுக்க சிறையிருட்டில் கழிந்துவிடுவதைத் தடுத்துக் காப்பாற்ற முடிந்ததில், ஒரு சமூகவுணர்வு சார்ந்த கொண்டாட்டம்.

தனிப்பட்ட வெற்றி ஒரு குதியாட்டத்தோடு கொண்டாடப்படும். கூட்டுச் சேர்ந்து கிடைக்கிற வெற்றி ஒரு விழாவாகவே கொண்டாடப்படும். மனிதர்களின் பரிணாம வளர்ச்சியில், உணவு தேடியலைந்தவர்கள் இயற்கையாய் அது கிடைத்ததை சக மனிதர்களுக்குக் கூக்குரலால் தெரிவித்துக்கொண்டாடினார்கள். எல்லாருமாய்ச் சேர்ந்து தங்களைத் தாக்க வந்த விலங்குகளை விரட்டியடித்ததைக் தழுவிக்கொண்டும் தய்யா தக்கா என்று குதித்தும் கொண்டாடினார்கள். அப்படி அவர்கள் கூக்குரலிட்டதும் குதித்தாடியதும்தான் இன்று பூர்வகுடியினரின் கலைகள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றன. மனிதக் கூட்டத்தின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள், தொழிலோடு சேர்ந்த வளர்ச்சிகள் என அந்தத் தொன்மைக் கொண்டாட்டங்கள் பிற்காலத்தில் பறை உள்ளிட்ட ஆட்டங்களாக, செம்மைப்படுத்திய நாட்டியங்களாக, கதையாடல்களாக, நாடகங்களாக, ஊர் கூடிய விருந்துகளாகப் பரிணமித்தன.

குறிப்பிடத்தக்க சில பெரிய வெற்றிகளை மனிதர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுபடி மறுபடி நினைவுகூர்ந்திட விரும்புகிறார்கள். இந்த வெற்றிக்குக் காரணம் என்று மனிதர்களால் கற்பனை செய்யப்பட்ட கடவுள்களை அடிப்படையாகக்கொண்ட கதைகள் புனையப்பட்டு, அந்த கதை நிகழ்வுகளைக் கொண்டாடுவதன்மூலம் அந்த வெற்றிகள் நினைவுகூரப்படுகின்றன. சமயம் சார்ந்த பண்டிகைகள் இப்படித்தான் வந்தன.

பூமியின் முதல் தொழில் புரட்சியாகிய வேளாண்மை நுட்பம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதுவரையில் யார் வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் உருளலாம், புரளலாம் என்றிருந்த நிலம், வலுத்தவர்களால் கையகப்படுத்தப்பட்டது. காடு “திருத்தி”(?) நாடாக்குவது தொடங்கியது. காடுகளில் தாவரங்களோடும் விலங்குகளோடும் கலந்து வாழ்ந்த மக்கள், காட்டு நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்தபோது, நாடாக்கப் புறப்பட்டவர்கள் அவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றார்கள். அசுரர்கள் என்றும் அரக்கர்கள் என்றும் சித்திரித்தார்கள். அந்தப் பாமரர்கள் அறியாத அன்றைய ஆயுத நுட்பங்களாலும் அரசியல் யுக்திகளாலும் அவர்களை வீழ்த்தினார்கள். கல் ஆயுதங்களை உலோக ஆயுதங்கள் தோற்கடித்தன. உலோக வாள்களையும் ஈட்டிகளையும் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் தூளாக்கின. துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் ஏவுகணைகளும் அணுகுண்டுகளும் விளையாட்டுப் பொம்மைகளாக்குகின்றன...

கொண்டாட்டங்கள் உருவாகும் விதம்

இப்படியான வெற்றிகள் திரும்பத் திரும்பக் கொண்டாடப்படுவதன் மூலம், மக்கள் குறிப்பிட்ட சமயத்துக்கோ நாட்டின் அரசுக்கோ விசுவாசம் மிக்கவர்களாக வார்க்கப்பட்டு வந்திருக்கிறார்கள். பண்டிகைக் கொண்டாட்டங்கள், நாடுகளின் சுதந்திர விழாக் கொண்டாட்டங்கள் ஆகியவற்றில் எந்த அளவுக்கு வரலாற்றுப் பெருமிதங்கள் இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு இப்படிப்பட்ட விசுவாச வார்ப்பு நோக்கங்களும் இருக்கின்றன. மந்தைகள் பட்டியிலேயே அடைத்துவைக்கப்படுகிற தாக்கங்களும் இருக்கின்றன.

இயற்கையான பருவநிலை மாற்றங்கள் குறிப்பிட்ட காலச் சுழற்சியோடு வருவதைக் கண்டுபிடித்தவர்கள் அந்தச் சுழற்சிக்கு “ஆண்டு” என்று பெயரிட்டார்கள். அந்தந்தப் பருவகால வருகையைக் கொண்டாடத் தொடங்கினார்கள். எளிமையாகச் சொல்வதென்றால், கடும் கோடையின் வறுத்தெடுத்தலில் வதங்கிக் கிடக்கிறபோது மழையின் வருகை கொண்டாட்டத்துக்கு உரியதானது. பெரு மழையின் வெள்ளத்தில் மிதந்து தவிக்கிறபோது கோடையின் வருகை கொண்டாட்டத்துக்கு உரியதானது.

பொங்கலும் பொங்கல் போன்ற விழாக்களும் இப்படித்தான் உருவெடுத்திருக்கும் என ஊகிப்பது கடினமல்ல. இயற்கைக்கு நன்றி தெரிவிப்பதாக மட்டும் தொடங்கிய அந்த விழாக்களில் மதம் சார்ந்த வழிபாடுகளும் சடங்குகளும் பிற்சேர்க்கை எனப் புரிந்துகொள்வதும் சிரமமல்ல. பண்டிகைக் கொண்டாட்டங்களில், தங்களுடைய தற்போதைய வசதிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் தாங்கள் நம்புகிற கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிற உணர்வும் இருக்கிறது. இந்த வசதியும் மகிழ்ச்சியும் பல மடங்கு பெருக வேண்டும் என்று அந்தக் கடவுளர்களிடம் விண்ணப்பம் போட்டு வைக்கிற முயற்சியும் இருக்கிறது.

புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடுவதில் கடந்த ஆண்டின் கசப்புகள் தொடரக் கூடாது, இனிமைகள் தொடரகதையாக வேண்டும் என்ற மனப்பூர்வமான எதிர்பார்ப்பும் வாழ்த்தும் பொதிந்துள்ளன.

இப்படியாகத் தொடங்கிய கொண்டாட்டங்கள், சமயச் சார்பு விழாக்களாக, மாமன்னர்களின் ஆதிக்க வெற்றி விழாக்களாக, தலைவர்மார்களின் பிறந்த நாள் விழாக்களாக என்றெல்லாம் அவதாரமெடுத்தன. தமிழகச் சூழலில் பெரிய திரைப்பட நட்சத்திரங்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்களாகவும் திரைப்படங்கள் வெளியாகிற நாளின் கொண்டாட்டங்களாகவும் கூட வடிவமெடுத்துள்ளன.

கொண்டாட்டங்களில் அவசியம்

தோற்றம் எதுவானாலும், தொடர்ச்சி எப்படியானாலும் மக்களுக்குக் கொண்டாட்டங்கள் தேவைப்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. தீபாவளிக்காக, கிறிஸ்துமஸ் வருகைக்காக, ரம்ஜான் நோன்பு துறப்பதற்காக, புத்தரின் பிறப்பு, சிறப்பு, இறப்பு மூன்றையும் கொண்டாடும் ‘வெசாக்’ பௌர்ணமிக்காக, மஹாவீர் போதித்தபடி வெறுப்பைக் கைவிட்டு நேசத்தைக் கோரும் பரியூஷன் மஹாபர்வ நிலவின் தேய்பிறைக்காக, இன்னபிற சமயம் சார்ந்த பண்டிகைகளுக்காக மக்கள் ஆண்டுதோறும் தயாராகிக்கொண்டே இருக்கிறார்கள். வசதிபடைத்தோர் தங்கள் செல்வத்தின் ஒரு பகுதியை இந்தக் கொண்டாட்டங்களுக்கென்றே செலவிடுகிறார்கள். வறுமையில் வாடுவோரும் தங்கள் சொற்ப வருவாயிலிருந்து ஒரு சிறு பகுதியை ஆண்டு முழுக்க இந்தக் கொண்டாட்டங்களுக்காகவே சேமிக்கிறார்கள்.

பண்டிகைகள் மக்கள் சேர்ந்திருக்கிற கொண்டாட்டங்கள் மட்டுமல்ல, சேர்ந்திருக்கும் விருப்பத்தின் வெளிப்பாடுமாகும். ஆகவேதான் இத்தனை விலைவாசியிலும், பண்டிகைக் காலம் நெருங்க நெருங்க ரயில் முன்பதிவுகள் தொடங்கியவுடன் முடிவடைகின்றன. பேருந்து நிலையங்கள் பெருங்கூட்டத்தால் திணறுகின்றன. சாலைகளில் ஆகப்பெரும்பாலான வண்டிகள், ஊருக்குச் சென்று உற்றாரோடு கொண்டாடவிருக்கும் பயணிகளின் உற்சாகமே எரிபொருளாக ஓடுகின்றன.

உருமாறும் கொண்டாட்டம்

ஓர் ஊரே கிளம்பி வேறு ஊருக்குச் செல்கிறது, அந்த ஊர் புறப்பட்டு இந்த ஊருக்கு வருவது போலக் கொண்டாட்ட நேரத்தில் மக்களின் போக்குவரத்து நிகழ்கிறது. ஆனாலும் இதில், தொன்மைக் காலத்தின் கொண்டாட்ட மனநிலை தொடர்கிறது என்றாலும், வேறொன்றை இழந்திருக்கிறோம். அதுதான், ஊர்கூடிக் கொண்டாடுவது என்ற பண்பாடு. தொடக்கத்தில், ஒரு வெற்றியை சமூகக் குடிகள் எல்லோருமாகச் சேர்ந்து, ஒருவர் தோளில் இன்னொருவர் கைபோட்டு ஆடிக் கொண்டாடினார்கள். இன்று, அவரவர் வீட்டுக்குள் கொண்டாட்டங்கள் அடங்கிவிட்டன. மிஞ்சி மிஞ்சிப் போனால், மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே உடனிருக்கிறார்கள். அரிதாக, உற்ற நண்பர்களும் இருக்கிறார்கள்.

இன்றைய பொருளாதார அமைப்பு இதற்கொரு காரணம் என்று சொல்லப்படுகிறது. அது ஒரு தலையாய காரணம்தான் என்றாலும் அது மட்டுமே முழுக்காரணம் அல்ல என்று கருதுகிறேன்.

மதங்களின் தோற்றம் பற்றிய கருத்தாக்கங்களில் ஒன்று, சிதறிக் கிடந்த மக்களை மதம் ஒருங்கிணைத்தது என்பதாகும். அது உண்மையும்கூட. ஆனால், மத அடையாளம் சார்ந்த கொண்டாட்டமே, மக்களை அவரவர் வழிபாடுகளோடும் வீடுகளோடும் ஆலயங்களோடும் சுருக்கிவிட்டன என்பதும் உண்மை.

உணவு உரிமை கூட மதவெறியோடு பிரச்னையாக்கப்படுகிறது. பகைமை நெருப்புக்கு மனித உயிர் பலியிடப்படுகிறது. இந்த வரலாற்றுப் பரிணாம வீழ்ச்சிக் காலத்தில், எங்கும் மௌனமான அச்சம் பரவியிருக்கிறது. அது, தெருவுக்குக்கூட வராமல் வீட்டுக்குள்ளேயே விழாக்களை முடித்துக்கொள்ள அறிவுறுத்துகிறது.

அத்துடன், கொண்டாட்டத்தின் பிரிக்க முடியாத அங்கமாகிய கலை வெளிப்பாட்டிலும் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஊரே கூடி ஆடியது பழங்கதையாகிவிட்டது. இன்று ஆடுவோர் அல்லது கலை நிகழ்த்துவோர் தனியாகவும், பார்வையாளர்கள் தனியாகவும் பிரிக்கப்பட்டுவிட்டார்கள். கலை வெளிப்பாடு வர்த்தகச் சந்தையால் வளைக்கப்பட்டுவிட்டதன் விளைவு இது.

ஜனநாயக மாற்றங்களும், சமத்துவ சமுதாய வளர்ச்சிகளும்கூட இதில் இன்னும் வெகுதொலைவு பயணிக்க வேண்டியிருக்கிறது. மாற்று அரசியலையும் சமூக அமைப்பையும் உறுதிப்படுத்திய இந்த மாற்றங்களால், மாற்றுப் பண்பாட்டை முழுமையாகக் கட்ட முடியவில்லை. எடுத்துக்காட்டாக, சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவை கொண்டாடப்படுகின்றன என்பது உண்மை. ஆனால், அவரவர் மதம் சார்ந்த ஒரு பண்டிகையைக் கொண்டாடுகிற உற்சாக மன நிலையோடுதான் இவ்விரண்டு தினங்களும் கொண்டாடப்படுகின்றனவா? அவரவர் சாதிக்கான சில விழாக்களைக் கொண்டாடுகிற மனநிலையோடுதான் இவ்விரு விழாக்களும் வரவேற்கப்படுகின்றனவா? சுதந்திர தினத்தைக் குடும்பத்தாரோடு கொண்டாடுகிற பண்பாடு வளர்ந்திருக்கிறதா - அது ஒரு விடுமுறை நாள் என்பதைத் தாண்டி? அலுவல்பூர்வமான கொடியேற்று நிகழ்வுகளைத் தாண்டி? அந்த நாளுக்காகப் புத்தாடைகள் வாங்குகிறோமா? இனிப்புகள் தயாரிக்கிறோமா?

முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ள நாடுகளில் மட்டுமல்ல, சமத்துவத்துக்கான சோசலிசத்தைக் கட்டுகிற அரசமைப்பு சாசனம் கோலோச்சுகிற நாடுகளிலும் இந்தச் சிக்கல் இருக்கவே செய்கிறது. மக்களுக்கான மாற்றுப் பண்பாட்டையும் புதிய கொண்டாட்டத்தையும் வழங்குவதில் இன்னும் வெற்றி பெறவில்லை என்ற சிக்கல். மாற்றுச் சமுதாயங்கள் மேலும் மேலும் வெற்றி பெறுவதையொட்டி மாற்றுப் பண்பாடுகளும் நிலைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

சமத்துவம், சம நீதி, பகுத்தறிவு, உண்மையான ஜனநாயகம், மனித உரிமைகள் என்ற லட்சியங்களைத் தாங்கிப் புறப்பட்டுள்ள இயக்கங்கள் அத்தகைய மாற்றுப் பண்பாடுகளை, கூட்டுக் கொண்டாட்டங்களை உருவாக்கிப் பரப்புகிற கடமையையும் ஏற்றுச் செயல்பட வேண்டியிருக்கிறது.

கொண்டாட்டம் தேவை. தனிமனித மன உளைச்சல்களும், உளவியல் சார்ந்த வன்மங்களும், கோரமான வன்முறைகளும் தவிர்க்கப்பட வேண்டுமானால் அதற்குக் கொண்டாட்டமே நம்பகமான வழி. விசிலடித்துக் கொண்டாடுவது உட்பட அந்த வழியில் இணையட்டும். புத்தாண்டுப் பிறப்பையொட்டி வழியில் எதிர்ப்படுவோருக்கெல்லாம் வாழ்த்துச் சொல்வதிலும், வாழ்த்துப் பெறுவதிலும் உள்ளது போல் பொதுவான விழாக்களுக்கான கொண்டாட்டப் பரவசம், கிரிகோரியன் காலண்டர் புத்தாண்டு வழிபாட்டுக்காக இந்து ஆலயங்களை நள்ளிரவில் திறக்க நீதிமன்றம் தடை விதிக்கக் கோருவது போன்ற வழக்குகளை மீறி, பரவலாகட்டும். எல்லோருமாகச் சேர்ந்து ஆட்டம் போடுகிற எளிய செயல்பாடு பொதுவான பண்பாடாகட்டும். தங்களுக்குப் பிடித்தமான தலைவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டோரின் சிறிய சிறிய வெற்றிகளுக்குக் கூட தெருவில் இறங்கிக் குத்தாட்டம் போடுகிற, பாலின வேறுபாடற்ற மனநிலை, முற்போக்கான மாற்றங்களுக்கான கொண்டாட்டங்களாகப் பரிணமிக்கட்டும்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017