மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

2017 பெண்களுக்கான ஆண்டா?

2017 பெண்களுக்கான ஆண்டா?

மணிக்கொடி

ஆண்களை முதன்மைப்படுத்தும் போக்கு நமது மரபுக்குப் புதிதல்ல. சங்க இலக்கியங்களிலிருந்தே தொன்றுதொட்டு வருவதுதான். வள்ளித் திருமணம் கூத்துகூட முருகனின் பிரதாபங்களையே அதிகம் பேசும். இப்படிப்பட்ட சமூகத்தில் திரைப்படங்களிலும் அது பிரதிபலிக்கத்தானே செய்யும்?

இந்த ஆண்டு எப்படி? பெண்களுக்குச் சிறிதளவேனும் திரைப்படங்களில் முக்கியத்துவம் கிடைத்ததா?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு…

தமிழ் சினிமாவில் பெண் பாத்திரப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தவர்களில் இயக்குநர் கே.பாலசந்தரைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பெண்ணையே மையமாகக்கொண்ட படங்களை 1970களிலேயே அவர் எடுத்திருக்கிறார். பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, கோமல் சுவாமிநாதன், ருத்ரய்யா ஆகியோரும் இவ்விஷயத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். மணிரத்னம் படங்களிலும் பெண் பாத்திரப் படைப்புகள் சிறப்பாக இருந்தாலும் அவர்கள் மேல்தட்டுப் பெண்களாக இருப்பார்களே தவிர, சாமானியப் பெண்களாக இருக்க மாட்டார்கள்.

இந்தப் போக்கு தொடரவில்லை. ஆண்களே திரையை ஆக்கிரமித்துக்கொள்ளும் படங்கள்தான் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் அதிகம் வந்துகொண்டிருக்கின்றன. பெண்கள் இடம்பெற்றாலும் அவர்களுக்கென்று தனித்த ஆளுமையுடன் பாத்திரங்கள் அமைவது அபூர்வம். அழகுக்கும் கவர்ச்சிக்கும் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறார்கள்.

சமூகத்தின் எல்லாத் துறைகளிலும் பெண்கள் மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். தொழிலதிபர்களாய், விண்வெளி நிபுணர்களாய், பொறியாளர்களாய், பைலட்டுகளாய், இரவு நேரக் கால் சென்டர் ஊழியர்களாய் எனப் பலவிதங்களிலும் உயர்ந்திருக்கிறார்கள். ஆனால், அந்த முன்னேற்றங்களை இன்றைய தமிழ் சினிமா காட்டுகிறதா என்றால் கேள்விக்குறிதான்.

எனினும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பெண்களை மையப்படுத்தும் படங்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. 2017ஆம் ஆண்டில் பெண்களை மையப்படுத்தி வந்த சில திரைப்படங்களைப் பார்ப்போம்.

மகளிர் மட்டும் எழுப்பிய சுதந்திரக் குரல்

திருமணப் பந்தத்துக்குள் நுழைந்துவிட்டாலே பெண்களின் வாழ்க்கை ஒரு வட்டத்துக்குள் அகப்பட்டுவிடும் என்ற எண்ணத்தையும் பெண்களை அடிபணியவைத்து ஆட்டிப்படைக்கும் குடும்ப அமைப்பையும் கேள்விக்குள்ளாக்கும் முயற்சி பிரம்மாவின் இயக்கத்தில் வெளிவந்த மகளிர் மட்டும். கழுத்து நிறைய நகைகளோடு, நடு ராத்தியில் தனியாக நடந்து வருவது மட்டுமே அல்ல பெண் சுதந்திரம்; மனதுக்குப் பிடித்தவனைத் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதும்தான் என்னும் பார்வையை உரக்கக் கூறியது மகளிர் மட்டும்.

திருமணமான பெண்கள் பலரின் கனவாக இருக்கும் பல விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது. சமூகத்திலும் குடும்பத்திலும் பெண்களின் இடம் என்னவாக உள்ளது என்பதைச் சொன்ன விதத்தில் பெண்களின் அருமையையும் அவர்கள் அனுபவிக்கும் வலியையும் தெளிவுபடுத்தியது. மிகைப்படுத்தப்பட்ட விஷயங்கள் சில இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி மகளிர் மட்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

சுயமரியாதையை நிலைநிறுத்தும் தரமணி

சமூகத்தின் இருவேறு அடுக்குகளில் வாழும் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எதிர்பாராமல் அரும்பி மலரும் காதலையும், அதனால் விளையும் உறவுச் சிக்கலையும் சொல்வதுதான் தரமணி. நவீன வாழ்க்கை முறையும் சுதந்திரப் போக்கும் சுய மரியாதையும் கொண்ட இன்றைய பெண்ணுக்கு இன்றைய ஆண்களிடமிருந்து வரும் தொல்லைகளும் ஆபத்துகளும் என்ன என்பதை இயக்குநர் ராம் அழுத்தமாகச் சித்திரித்திருந்தார்.

முதலில் ஒரு பெண்ணை சுய மரியாதை கொண்டவளாகக் காண்பித்ததே பாராட்டுக்குரியது. ஒரு பெண் தன் காதலியாக அல்லது மனைவியாக ஆன நொடியிலிருந்து அவளுடைய செயல்களை, நடை, உடை, பாவனைகளைக் கண்காணிக்கத் தொடங்கும் ஆணின் வக்கிர புத்தியை ராம் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

ஆனால், இன்னும் எத்தனைக் காலம்தான் தறுதலை மன்னன்களை உருகி உருகிக் காதலிக்கும் பெண்களை நம் தமிழ் சினிமா காட்டப்போகிறதோ! படத்தின் நாயகி அதிகம் ஸ்டீரியோ டைப் ஆண்களையே எதிர்கொள்வதாகக் காட்டியிருப்பதும் படம் சொல்ல வரும் செய்தியைப் பலவீனப்படுத்தியது.

இப்படிச் சில குறைகள் இருந்தாலும் நவீன வாழ்வின் அடையாளங்கள், சுதந்திர உணர்வு, உணர்வுபூர்வமான பலவீனங்கள், சக மனிதர்களிடத்தும் விலங்குகளிடத்தும் நேசம், நேர்மை, தைரியம் ஆகிய குணங்களைச் சரியாகப் பிரதிபலித்து சுயசார்போடும் சுயமரியாதையோடும் ஒரு பெண்ணைத் திரையில் காட்டியமைக்குப் பாராட்டுகள். அநீதியைச் சுட்டெரிக்க மிகையான ஆவேசம் காட்டாமல் கனிவோடு உயர்ந்து நிற்கிறது ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம்.

மாற்றத்தை முன்னெடுக்கும் பெண்ணின் அறம்

அடிப்படைத் தேவையான தண்ணீரைக்கூட வழங்காமல் இருக்கும் அரசு நிர்வாகத்தின் முகத்திரையைக் கிழித்தெறிந்தது கோபி இயக்கியுள்ள அறம். ஒரு பெண்ணாக மனிதாபிமானத்துடன் செயல்பட்டதோடு இல்லாமல் ஓர் அதிகாரிக்கு உரிய பணியைக் கச்சிதமாகச் செய்து பாராட்டுகளைப் பெறுகிறார் கலெக்டர் மதிவதனி.

மதிவதனி கதாபாத்திரத்தில் வேறு எவரையும் பொருத்திப் பார்க்க முடியாத அளவுக்கு நடிப்பில் நியாயம் செய்திருக்கிறார் நயன்தாரா. கூரிய பார்வை, கம்பீர நடை, பக்குவ நடிப்பு, நுண்ணிய உணர்வுகளை வெளிப்படுத்தும் கனிவு எனத் திரை ஆளுமையில் புதிய பரிமாணத்தைத் தொடுகிறார். உச்ச நட்சத்திரமாக வலம்வரும் நயன்தாரா தனக்கென கதையில் தனியாக எந்த முன்னுரிமையும் கேட்காமல் நடித்து திரைக்கதைக்கும் ரசிகர்களுக்கும் மத்தியில் நியாயமாக நின்றுள்ளார்.

‘நான் ஒரு ஜனநாயகவாதி. எனக்கு பவர் பாலிடிக்ஸ் தெரியாது. என்னால் மக்களைக் குறைசொல்ல முடியாது. ஓர் அடிமையால் இன்னொரு அடிமைக்குச் சேவை செய்ய முடியாது’ என மதிவதனி பேசும் வசனங்கள் திரையில் அரசியல் பேசும் ஆண்களுக்குச் சவால் விடுகின்றன.

பெண்ணின் நிலையைப் பேசும் அருவி

முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் நடிகைகளுக்கு அமைவது என்பது அரிதிலும் அரிதானது. குறிப்பிட்ட சில படங்களில் நடித்த பிறகே அத்தகைய வாய்ப்பு கிடைக்கும். நயன்தாரா போன்றவர்களும் இதற்கு விலக்கு அல்ல. ஆனால், இப்படி எந்தவொரு பின்னணியும் இல்லாமல் தன் முதல் படத்திலேயே வலுவான வேடத்தைப் பெற்று, அதைச் சிறப்பாகச் செய்து பாராட்டுகளை அள்ளுகிறார் அதிதி பாலன். அறிமுகப் படத்திலேயே தனது தேர்ச்சியான நடிப்பை வெளிக்காட்டியுள்ள முறையும் கதாபாத்திரத்தை நம்பகத்தன்மையுடன் திரையில் கொண்டுவர அதிதி எடுத்துக்கொண்ட சிரமம் ஒவ்வொரு காட்சிகளிலும் மிக அழகாகத் தெரிகிறது.

குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட பெண்ணின் சோகம், குலுங்கிச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை என இரண்டுக்கும் நடுவே தடுமாறாமல் பயணிக்கிறது அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ள அருவி. பாதிப்புக்குள்ளான பெண்ணை அவளுடைய பலவீனமான நிலையைப் பயன்படுத்திக்கொண்டு சுரண்டும் ஆண்களைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர். குற்றம் இழைத்தவர்கள்மீது வெறுப்பை ஏற்படுத்தாத விமர்சனமாக அமைந்துள்ள சித்திரிப்பு இயக்குநரின் பக்குவத்தைக் காட்டுகிறது.

திருநங்கைகளைப் பெரும்பாலும் கேலிக்கும் கேளிக்கைக்கும் உரிய கதாபாத்திரங்களாகவே காட்டிவரும் தமிழ் சினிமாவில் அருவி பாராட்டத்தக்க விதிவிலக்கு.

பெண்ணை மையப்படுத்திய இந்தப் படங்களைத் தவிர வேறு சில படங்கள் பெண்ணுக்குக் கதையில் முக்கியத்துவம் அளித்திருக்கின்றன.

விக்ரம் வேதா படத்தில் தொழிலில் ஈடுபாடுள்ள வழக்கறிஞராகவும் அன்பான மனைவியாகவும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் பாத்திரம் அமைந்திருந்தது. கணவனின் பணியுடன் முரண்படும் நிலை வந்தபோதும் தனக்கான தொழில் தர்மத்தை விட்டுக்கொடுக்காத ஆளுமைகொண்ட பெண்ணைச் சித்திரித்த இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி பாராட்டுக்குரியவர்கள். மாதவன், ஷ்ரத்தா இருவரையும் வழக்கமான கணவன் மனைவியாக இல்லாமல் வேறு பரிமாணத்தில் காட்டியிருந்தார்கள் இயக்குநர்கள்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017