மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

கூத்து வாத்தியார்கள்: 8

கூத்து வாத்தியார்கள்: 8

ஜெயராமன் வாத்தியார்: கூத்தரும் கூத்துப்பிரதி ஆசிரியரும் - 1

இரா.சீனிவாசன், மு. ஏழுமலை

தெருக்கூத்துக் கலைக்காகவே தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து வேறு தொழிலில் ஈடுபடாமல் வாழும் கூத்து ஆளுமையாளர்கள் பலர். அவர்களில் தென்னாட்டுப் பாணி என்னும் தெற்கத்திப் பாணியில் உருவான கலைஞர்களில் ஜெயராமன் வாத்தியாரும் ஒருவர். விழுப்புரம் சார்ந்த கூத்துக் கலைஞர்களிடையே புகழ்பெற்ற கலைஞர் இவர். 82 வயது நிரம்பிய முதுமையிலும் தெருக்கூத்துப் பனுவல்களை உருவாக்குவதிலும், சிறந்த கூத்தர்களை உருவாக்குவதிலும் ஈடுபட்டு, தன் மீதமுள்ள வாழ்நாள்களையும் தெருக்கூத்துக் கலை வளர்ச்சிச் செயல்பாடுகளுக்காகச் செலவிட்டு உழைத்து வருபவர். எதிர்காலத்தில் அறிவியல் தொழில்நுட்ப உலகத்திலும் தெருக்கூத்துக்கலை வளர வேண்டும் என்ற ஆர்வத்தோடு வாழ்கின்ற தெருக்கூத்து வாத்தியார்களில் ஜெயராமன் அவர்களும் ஒருவர்.

பல்வேறு பரிமாணங்கள் பெற்ற தெருக்கூத்துக் கலைஞர்களின் அனுபவங்களைப் பதிவு செய்யும் நோக்கில் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அறிந்த நண்பர் திலக் அவர்கள் ஜெயராமன் வாத்தியாரைப் பற்றிக் கூறினார். கலைஞர்களைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே காலம் தாழ்த்திவிட்டு, ஒருநாள் அக்கலைஞரைச் சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டுச் சென்று பார்க்கும்போது, ‘அவர் இப்பொழுது உயிரோடு இல்லையே’ என்ற பதிலைக் கேட்டு மனம் வருந்திய அனுபவம் இருந்ததால், உடனே ஜெயராமன் வாத்தியாரைச் சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டோம்.

08.04.2016 அன்று அவரைச் சந்தித்து விடுவது என்ற முடிவுடன் சென்றோம். அச்சந்திப்பு தெருக்கூத்துக் கலை சார்ந்த ஒப்பனை, நடிப்பு, அடவு, பாடல், வசனம், இசை முதலானவை குறித்தும், தெருக்கூத்துப் பனுவல் உருவாக்க நிலையில் பின்பற்ற வேண்டிய திட்டமிடல்கள் குறித்த பன்முகப் பரிமாணங்களை உணர்த்துவதாக அமைந்தது. ஜெயராமன் வாத்தியார் அவர்களின் நிகழ்த்துதல் திறனையும், கூத்துப் பனுவல் படைப்பாளுமையையும் பகிர்ந்துகொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஜெயராமன் வாத்தியார் 13.04.1935ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை ரயில்வே துறையில் பணி செய்துகொண்டிருந்ததால் புதுச்சேரி, விழுப்புரம், திருக்கோவிலூர் என்று தந்தையின் பணி மாறுதல் காரணமாகப் பல ஊர்களில் வளர்ந்துள்ளார். பல்வேறு ஊர்களில் வாழ்ந்த நிலையில் திருக்கோவிலூரில் வாழ்ந்து வரும்போது, வடதமிழகத்தின் அடையாளமாக விளங்கக்கூடிய தெருக்கூத்துக் கலையை அறிவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இவர் வாழ்ந்த ஊர்ப்பகுதியில் இருந்த ‘சக்தி நாடக சபா’ என்னும் நாடகக் குழுவினரை நெருக்கமாக கவனித்துவந்துள்ளார். நாடகம் நடிக்கும் விருப்பத்தினால் அந்த நாடகக் குழுவில் சேர்ந்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட அவருடைய தந்தை தடுத்துள்ளார். ஆனாலும், சிறிது நாளில் இந்த நிலை மாறியது. விழுப்புரத்துக்கு அருகில் உள்ள முண்டியம்பாக்கம் என்னும் ஊர் மக்கள் மல்லிகைப்பட்டு முருகேசப்பிள்ளை என்னும் கூத்து வாத்தியாரிடம் பத்மாசூரன் என்னும் கூத்தைக் கற்றுக்கொண்டிருந்தனர். ஒத்திகை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இவர் கேள்விப்பட்டுத் தனக்கும் ஒரு வேடம் வழங்கும்படி கேட்டிருக்கிறார்.

இவருடைய ஆர்வத்தைக்கண்ட மல்லிகைப்பட்டு முருகேசப்பிள்ளை வாத்தியார் கிருஷ்ணன் வேடத்தை வழங்கியிருக்கிறார். இவ்வாறுதான் இவருடைய கூத்துப் பணி தொடங்கியிருக்கிறது. இதைத்தொடர்ந்து குறவஞ்சி, அருச்சனன் தபசு, கர்ணன் மோட்சம், பவளக்கொடி மாலை, அல்லி அருச்சுனன், சுந்தரி மாலை முதலிய மகாபாரதம், ராமாயணம், புராணம் சார்ந்த பல்வேறு கூத்துகளில் பங்கேற்றுள்ளார். சில ஆண் வேடங்களையும் பெரும்பான்மை பெண் வேடங்களையும் புனைந்து நிகழ்த்திய பெருமைக்குரியவர். திரௌபதி, பொன்னுருவி, பெருந்திருவாள் (12 சிறந்த குறத்தி வேடக்கூத்தர்களுடன் பெருந்திருவாள் வேடமிட்ட பெருமைக்கு உரியவர்), அல்லி, குறவஞ்சி, செல்லியம்மன், கருமாரியம்மன், பார்வதி முதலான பெண் வேடங்களில் புகழ் பெற்றவர்.

இவ்வாறு விழுப்புரம், திண்டிவனம், திருக்கோவிலூர் பகுதி சார்ந்து பெரும் தெருக்கூத்துக் கலைஞராக விளங்கிய இவர், தன்னுடைய தாய், தந்தை இறப்புக்குப் பிறகு 1955இல் சென்னைக்குக் குடிபெயர வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. இந்த நிலையில், ஒரு தனியார் தொழிற்சாலையில் வாழ்வாதாரத்துக்கான பணியைத் தேடிக்கொண்டு வாழ்ந்துவந்தார். இந்த நிலையில், மீண்டும் கூத்துக் கலைஞனாகத் தொடர்வதற்கான வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

(கட்டுரையாளர் முனைவர் இரா.சீனிவாசனோடு ஜெயராமன் வாத்தியார்)

அதைப்பற்றிக் கூறும்போது, “ராயபுரத்தில் நான் ஏற்கெனவே ஆடிய பத்மாசூரன் என்னும் கூத்தைச் சிலர் சேர்ந்து ராஜரத்தினம் நாயக்கர் என்பவரைக் கொண்டு கற்றுக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்த நான் தினமும் அந்த ஒத்திகை நடக்கும் இடத்துக்குப் போவேன். சில நாள்களில் சுருதிப்பெட்டியைத் தள்ளுகின்ற வேலையும் செய்தேன். தாளமும் போடுவேன். ஏற்கெனவே கூத்தாடியவன் என்பதை நான் அவர்களிடம் கூறவில்லை. இவ்வாறு ஒத்திகை முடிந்து அரங்கேற்றம் செய்வதற்குச் சில நாள்களே இருந்த நிலையில், மோகினி வேடமிட வேண்டியவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ராஜரத்தின நாயக்கரிடம் ‘நான் கூத்துக்குத் தர வேண்டிய பங்குப் பணத்தைக் கொடுத்துவிடுகிறேன். மோகினி வேடத்துக்கு வேறு யாரையாவது தயார் செய்து கொள்ளுங்கள்’ என்றார்.

இதைக்கோட்ட ராஜரத்தின நாயக்கர், அரங்கேற்ற நாள் நெருங்கிவிட்ட நிலையில் யாரைத் தயார் செய்வது என்று கவலைப்பட்டார். இதைப் பார்த்துக்கொண்டிருந்து நான் அவரிடம் சென்று மோகினி வேடத்தை நான் செய்யட்டுமா என்றேன். என்னை ஏற இறங்கப் பார்த்த அவர் கூத்தைப்பற்றி என்ன தெரியும் என்று கேட்டார். தினமும் நான் இங்கு வந்துகொண்டு இருக்கிறேன். அவர் பாடும் பாடல்களும், வசனமும் ஓரளவுக்குத் தெரியும். இருக்கிற நாள்களில் பாடத்தை ஏத்திக்கிறேன் என்று கூறினேன். மற்ற கூத்தர்கள் தயங்கிய நிலையில், ‘சரி நீயே மோகினி வேடத்தைச் செய்’ என்று நம்பிக்கையோடு கூறினார். நானும் தைரியமாகச் செய்தேன். நான் நன்றாகச் செய்ததைப் பார்த்த ராஜரத்தின நாயக்கர் ‘ரொம்ம நல்லா செய்தே. டேய் இனிமேல் நீ எதற்கும் கவலைப்படத் தேவையில்லை’ என்று ஊக்கம் அளித்தார்.

பிறகு, 25 நபர்களைக் கொண்டு சபா வைத்துக் கூத்தாடினேன். 1955 முதல் 1960 வரை 219 கூத்துகளை நிகழ்த்திப் பேரும் புகழும் பெற்றேன். 1962இல் குப்பம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு தண்டையார்பேட்டையிலேயே தற்போது வரை வாழ்ந்து வருகிறேன். நான் சென்னையில் தண்டையார்பேட்டைக்கு வரும்போதே இங்கு கடும்பாடி செட்டு, பொன்னியம்மன் செட்டு, செங்கேணியம்மன் செட்டு என்று மூன்று கூத்துக்குழுக்களில் 40 கலைஞர்கள் இருந்தனர். அதில் கோபால் வாத்தியார் (86 வயது) மட்டும்தான் தற்போது உயிரோடு உள்ளார். அவர் சிவன் வேடமிடுவதில் சிறப்பானவர். அந்த அளவுக்குக் கூத்துக் கலைஞர்களும் பிரியர்களும் இந்தப் பகுதியில் வாழ்ந்திருந்தார்கள்” என்று விரிவாக தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

(அடுத்த பகுதி மதியம் 1 மணி பதிப்பில்)

கலையைக் காற்றில் கரைத்த கலைஞர்

திரௌபதி வழிபாடு: விரிவடையும் அர்த்தங்கள்

கமலக்கண்ணன் வாத்தியார்

குமாரசாமித் தம்பிரான்

திருவேங்கடம் வாத்தியார்

தங்கவேல் ஆசிரியர்

மண்ணு வாத்தியார்

த.ரங்கசாமி வித்துவான்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017