மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

சிறப்புத் தொடர்: முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்!

சிறப்புத் தொடர்:  முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்!

அருள்செல்வன் - பகுதி 1

(கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சுற்றுச்சூழல் சம்பந்தமான பிரச்னைகளைப் போக்கும் பணியில் நீண்ட வருடங்களாக அருள்செல்வன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். களப் பணியாளர். எப்போதும் இன்முகம் காட்டி, மக்கள் பிரச்னைகளுக்குக் குரல் கொடுப்பவர். கடலூரில் ஏற்பட்டிருக்கும் பல ஆக்கபூர்வமான சுற்றுசூழல் மாற்றங்களில் இவருடைய பங்களிப்புக்கும் முக்கிய இடம் இருக்கிறது.)

சந்திப்பு: தமயந்தி

கடலூருக்கும் உங்களுக்குமான உறவு பற்றி...

கடலூரில் அரசு தலைமை மருத்துவமனையில்தான் நான் பிறந்தேன். அதிலிருந்தே கடலூருக்கும் எனக்குமான அந்த உறவு தொடங்கிவிட்டது. அப்பாவின் உறவினர்கள் வீடுகள் கடலூர் அருகில் உள்ளன. துணி எடுக்க வேண்டுமெனில் கடலூருக்குத்தான் வருவேன். எங்கள் குலதெய்வ கோயில் கடலூரில்தான் இருக்கிறது. ஒவ்வொரு வருஷமும் தை மற்றும் ஆடி மாதங்களில் பொங்கல் வைத்து வழிபடுவதற்கு அங்கே வருவதுண்டு. எங்கள் தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாதபோது கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்துத்தான் சிகிச்சை கொடுத்தார்கள். ஆகவே, அப்போதும் அங்கே வருவதுண்டு. தை மாதத்தில் ஐந்தாம் நாள் ஆற்றுத் திருவிழா பெண்ணை ஆற்றில் நடக்கும். கடலூரைச் சுற்றிலும் இருக்கிற பகுதிகளில் இருந்துவந்த அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்தி சாமி வாகனங்கள் வரிசையாக அங்கே நிறுத்தப்பட்டிருக்கும். அந்தத் திருவிழாவுக்கு வந்துபோவதும் உண்டு. கடற்கரை அனுபவம் என்பது மாசி மகம் திருவிழாவின்போது ஏற்பட்டது. தேவனாம்பட்டணம் என்ற ஊரில் நடக்கும் மாசி மகத்துக்கு எனது அப்பா அழைத்து வருவார். சுற்றி இருக்கிற ஊர்களில் இருந்து நிறைய மக்கள் அந்தத் திருவிழாவுக்கு வருவார்கள். அப்போதுதான் கடல், கடற்கரை, கடலலை, வலையைப் போட்டு மீன் பிடிப்பது என ஒவ்வொன்றின் மீதும் பிரமிப்பு உண்டானது. கிராமங்களில் பொதுவாக டென்ட் கொட்டகைகள்தான் இருக்கும். கட்டட திரையரங்குகள் என்றால் எங்கள் கிராமத்தில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் இருக்கும் கடலூர் நகரத்துக்குத்தான் வர வேண்டும். கிராமத்தில் பழைய திரைப்படங்கள்தான் திரையிடுவார்கள். புதிய திரைப்படங்கள் பார்க்க வேண்டுமெனில் கடலூர்தான் வந்தாக வேண்டும். டென்ட் கொட்டகைகளில் தரை டிக்கெட் என்றால் மண்ணிலும், அதற்கடுத்து மர பெஞ்சிலும் உட்கார்ந்து படம் பார்ப்போம். முதல் வகுப்பு டிக்கெட் என்றால் அதே மர பெஞ்சில் பின்னால் சாய்வதற்கு சாய்வுப் பலகையும் அடிக்கப்பட்டிருக்கும். ஆனால், நகரத்தில் பெரிய கட்டடங்களில் திரையரங்குகள் இருக்கும். தனியாகப் பெரும்பாலும் அனுப்ப மாட்டார்கள். பெரியவர்களுடன்தான் படம் பார்க்க வருவேன். துணி எடுக்க வேண்டுமென்றால் கடலூரில் இருக்கும் மாமாவிடம் சொல்லி அனுப்பி வைப்பார்கள். புதுவை செல்ல வேண்டுமென்றால் கடலூர் வந்துதான் செல்ல வேண்டும். அதேபோல் ரயிலில் செல்வதற்கும் கடலூர் வந்ததுதான் செல்ல வேண்டும். துறைமுகத்துக்கு என்னை அழைத்துச் சென்று எனது அப்பா விளக்கிக்காட்டினது மங்கலாக நினைவில் இருக்கிறது. கப்பல்களைப் பார்ப்பதற்கு மிக பிரமிப்பாக இருக்கும். வீட்டில் சின்ன கடிகாரத்தைப் பார்த்த எனக்கு பெரிய மணிக்கூண்டைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கும். இவ்வளவு பெரிய மணியை யார் இங்கே கட்டி வைத்தார்கள் என எண்ணி வியந்திருக்கிறேன். ஹோட்டல்களில் பானைகளிலோ, சில்வர் அல்லது பித்தளை பாத்திரத்திலோ தண்ணீர் வைத்திருப்பார்கள். தண்ணீர் தாகம் எடுத்தால் அதை மொண்டு குடித்தது நினைவில் இருக்கிறது. அதிக நெருக்கடியில்லாத, ஆரவாரமில்லாத, மரங்களடர்ந்த அந்தக் கடலூர் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.

அரசின் மெத்தனக்கள் எதிலிருந்து ஆரம்பிக்கின்றன?

ஒரு புயல் அல்லது மற்ற ஏதேனும் பாதிப்புக்குட்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கும்போது, அதை மற்ற துறைகளில் கலந்து ஆலோசிக்காமல், வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறதா என சரியான ஆய்வு மேற்கொள்ளாமல் கொடுக்கப்படக்கூடிய அந்த ஒதுக்கீடு வெள்ளத்தில் பாதிக்கப்பட காரணமாகிறது. ஒரு நலத்திட்டத்தில் செய்யப்படக்கூடிய உதவி பல்நோக்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல், சரியாகப் பரிசீலனை செய்யப்படாமல் மற்றொரு பாதிப்புக்கு வழிவகுக்கிறது. இதிலிருந்தே அரசின் மெத்தனப்போக்கு ஆரம்பிக்கிறது.

ஒன்று, துறைகள் சரியாக ஒருங்கிணைக்கப்படாமை. இரண்டாவது, படிப்பினைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாத போக்கு. மூன்றாவது, ஒரு நலத்திட்டம் மற்றொரு பாதிப்புக்கு வழிவகுக்கிறதா என்று ஆய்வு செய்யாமை ஆகியவை இவற்றுக்குக் காரணம் என நினைக்கிறேன்.

நாகர்ஜுனா ஆலை எப்படி மாசுபடுத்துகிறது? அதன் அரசியல் பின்புலம் என்ன?

நாகர்ஜுனா ஆலை இன்னமும் செயல்படவே ஆரம்பிக்கவில்லை. கட்டுமான நிலையில்தான் இப்போதும் இருக்கிறது. கட்டுமானத்துக்கென நிலத்தை முதல்கட்டமாக கையகப்படுத்தி நிலத்தைச் சமன்படுத்தும்போதே ஏராளமான மணல் திட்டுகளைச் சேதப்படுத்திவிட்டார்கள். பழைமையான மணல் திட்டுகளையும் மணல் குன்றுகளையும் அழித்துத்தான் ஆலை அமைக்கப்பட்டிருக்கிறது. பேரிடர் காலங்களில் இயற்கையான பாதுகாப்பாக இந்த மணல் திட்டுகள் அமைந்திருந்தன. அதுமட்டுமல்லாத கடல் தண்ணீர் புகாதபடி அழுத்தத்தைச் சமன் செய்யும் ஓர் அரணாக இருந்து வந்தன. அது மட்டுமல்லாமல், இந்தத் திட்டத்துக்கான இயந்திரங்களைக் கடல் மார்க்கமாகக் கொண்டுவருவதற்காக கடற்கரை ஓரம் பனை மரங்களைப் புதைத்து வழி ஏற்படுத்தி இருக்கிறார்கள். அனுமதியில்லாமல் இதைச் செய்திருக்கிறார்கள். இதனால் கடலுக்கும் கடற்கரைக்கும் பாதிப்பை உண்டாக்கியிருக்கிறார்கள். 2014இல் செயல்பாட்டுக்கு வரும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். பின்னர் தானே புயலில் நிறைய பாதிப்புகள் ஏற்பட்டபடியால் இன்னும் காலதாமதம் ஏற்படும் என்று சொன்னார்கள். இன்னும் இயங்காத நிலையில், கட்டுமானத்தின்போதே இயற்கை அரண்கள், குடிசைகள் மற்றும் பலவிதங்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று அங்கே இருக்கிற மக்கள் மூலமாக நமக்குத் தெரியவருகிறது.

அரசியல் பின்புலம் என்பதைப் பொறுத்தவரையில், மத்திய மாநில அரசுகள் இதற்கு ஆதரவாக இருப்பது என்பதற்கு உறுதிப்படுத்தக்கூடிய விதத்தில் சமீபத்தில் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டுத்தளம் (PCPIR - Petro Chemical Petrol Investment Region) என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். அந்தத் திட்டத்தில் நாகர்ஜுனா ஆலை முக்கிய நிறுவனம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. புயலுக்குப் பின்பு பெரியளவில் நடவடிக்கை எதுவுமில்லை. வெகுவிரைவில் பணியைத் தொடங்கப் போவதாகப் பத்திரிகை செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இது செயல்பட ஆரம்பித்தால் மட்டுமே மற்ற எந்தவிதமான பாதிப்புகள் இருக்கின்றன என்று தெரியவரும்.

கடலூரின் 5 வாய்க்கால்களைச் சீரமைக்க 30 கோடி... செய்தி நிஜமாகுமா?

வாய்க்கால்களைச் சரி செய்வதில் 30 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதில் ஊழல் நடந்திருக்கிறது. ஆகவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பல அமைப்புகள் கோரிக்கை முன்வைத்தன. ஆனால், இதுவரைக்கும் அரசோ, அந்தத் துறை அதிகாரிகளோ அது சம்பந்தமான எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை. அது நம்மாலும் நிரூபிக்க முடியவில்லை. ஆனாலும், மக்கள் மத்தியில் இவ்வளவு ரூபாய் செலவிடப்பட்டிருக்குமா என்ற சந்தேகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

கெடிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மாற்று இடம் உள்ளதா?

கண்டிப்பாக இருக்கிறது. குடிசை மாற்று வாரியம் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. வேறு எங்கும் இருக்க வசதியில்லாததினால்தான் அங்கு மக்கள் போய் வசிக்கின்றனர். யாரும் சமீப காலங்களில் அங்கு வந்து குடியேறினவர்கள் அல்ல. வெகுகாலமாகவே அங்கு இருந்துவரும் மக்கள்தான் அவர்கள். கண்டிப்பாக அவர்களுக்கு மாற்று குடியிருப்பு வசதி செய்துதர வேண்டும். அதற்கான வாய்ப்புகள், இடவசதிகள் நிறையவே இருக்கின்றன. பல்வேறு திட்டங்களின் மூலம் அரசு நிலமில்லாதவர்களுக்கு அதற்கான துறை மூலம் ஏற்பாடு செய்து கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதுபோல, அரசு நினைத்தால், ஆட்சியாளர்கள் நினைத்தால் கொடுக்கலாம்.

பெட்ரோ கெமிக்கல் முதலீட்டுத் தளமாக அரசு அறிவித்தது எவ்வித பாதிப்பை ஏற்படுத்தும்?

(நேர்காணலின் அடுத்த பகுதி மதியம் 1 மணி பதிப்பில்)

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017