மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

விமர்சனம்: பலூன்

விமர்சனம்: பலூன்

படத்தின் தொடக்கத்திலேயே அனபெல், இட், கான்ஜூரிங் ஆகிய படங்களிலிருந்து உருவாக்கப்பட்ட கதைதான் இது என்பதைச் சொல்லி நன்றி தெரிவித்துவிடுகிறார் இயக்குநர்.

சினிமா இயக்குநராக விரும்பும் குட்டி (ஜெய்), ஒரு பேய்க் கதையைத் உருவாக்க எண்ணி தன் அண்ணன் மகன் பப்பு, தன் துணை இயக்குநர்கள் (யோகி பாபு), மனைவி ஜாக்குலின் (அஞ்சலி) ஆகியோருடன் ஊட்டிக்கு வந்து ஒரு பெரிய பங்களாவில் தங்குகிறார்.

அந்த ஊரில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் சில விசித்திரமான மரணங்கள் நடந்திருப்பதைக் கேள்விப்பட்டு அதை வைத்து ஒரு பேய்க் கதை எழுத நினைத்துத் தகவல்களைச் சேகரிக்கிறார் குட்டி. ஆனால், குட்டி வசிக்கும் வீட்டிலேயே சில விசித்திர சம்பவங்கள் நடக்கின்றன. பேயுடன் விளையாடும் பப்புவை ஒரு கட்டத்தில் பேய் பிடித்துக்கொள்வதோடு பிறகு ஜாக்குலினையும் பேய் பிடிக்கிறது. அந்தப் பேய்க்கும் குட்டிக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் மீதிக் கதை.

படத்தின் முதல் பாதி உள்ள விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் குறைகிறது. ஜெய்யின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் எந்த உயிரோட்டமும் இல்லாததால், அவை நம்மீது தாக்கம் செலுத்தாமலே கடந்துவிடுகின்றன. வசனங்களில் அழுத்தம், யதார்த்தம் இரண்டுமே இல்லை.

படம் தொடங்கி ஒரு மணி நேரம் வரை, வீட்டுக்குள் இருப்பவர்களைப் பேய் பயமுறுத்தும் காட்சிகளே இடம்பெற்றிருப்பதால் சற்று சோர்வூட்டுகிறது. பிறகு சற்று சூடுபிடிக்கும் கதை, இடைவேளைக்குப் பிறகு வரும் ஃப்ளாஷ் பேக் காட்சியில் மீண்டும் அலுப்பூட்டுகிறது.

பல காட்சிகள், திரும்பத் திரும்ப வருவதுபோல தோன்றுவது படத்தின் பலவீனம். பேய் குறித்த அச்சத்தை ஏற்படுத்த திடீர் திடீரென்ற சத்தங்கள், உருவங்கள் வேகமாக மறைவது போன்றவற்றின் மூலமே திகிலை ஏற்படுத்துகிறார் இயக்குநர். இதுவே திரும்பத் திரும்ப நடப்பதால், பயம் ஏற்படுவதற்குப் பதிலாகப் பழகிய காட்சிகளைப் பார்ப்பதைப்போல இருக்கிறது.

படத்தின் தொடக்கத்தில் தயாரிப்பாளர்கள், சாதிச் சங்கத்தினரால் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்த காட்சிகள் ரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.

படத்தின் பெரிய ஆறுதல் யோகி பாபு. துணை இயக்குநராக வரும் யோகி பாபு தான் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் சிரிக்கவைக்கிறார். எந்த வசனமும் காட்சியும் யோகி பாபுவின் ‘கவுன்ட்டர்’ இல்லாமல் முடியவில்லை. முதல் பாதியின் சுவாரஸ்யத்துக்கு முக்கால்வாசிப் பொறுப்பு இவர்தான்.

சண்டைக் காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் நடிப்பில் நல்ல மார்க் வாங்கும் ஜெய், எமோஷனல் காட்சிகளில் ஜஸ்ட் பாஸ் மார்க் வாங்கவே சிரமப்படுகிறார். அஞ்சலி, ஜெய்யின் நண்பராக வரும் கார்த்திக் யோகி, முன்கதையில் ஜெய்க்கு ஜோடியாக வரும் ஜனனி ஐயர், ‘பப்பு’வாக வரும் சிறுவன் என மற்றவர்களும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் பெரிதாக மனதில் நிற்காவிட்டாலும் முதல் பாதி முழுவதும் பின்னணி இசையால் மிரட்டியிருக்கிறார். ஆர்.சரவணனின் ஒளிப்பதிவு திகில் காட்சிகளின்போது கேமரா அசைவுகள், லைட்டிங் ஆகியவை படத்துக்குக் கூடுதல் பலம். படத்தொகுப்பில் காட்சிகளை நேர்த்தியாகக் கோத்திருக்கிறார் ரூபன்.

சமீபத்திய ஹாலிவுட் படங்களிலிருந்துதான் சுட்டிருக்கிறேன் எனத் தொடக்கத்திலேயே இயக்குநர் சொல்லியிருப்பதற்கு ஏற்ப, ஒவ்வொரு காட்சியும் ஒரு ஹாலிவுட் பேய்ப் படத்தை நினைவூட்டுகிறது. குறிப்பாக ‘இட்’ படத்தின் பல காட்சிகள் நம் கண்முன் வந்து போகின்றன. படத்தின் இசையிலும் ஹாலிவுட் படங்களின் சாயல் அழுத்தமாகத் தென்படுகிறது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017