மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

சண்டே சக்சஸ் ஸ்டோரி: முஸ்தபா (ஐடி ஃப்ரெஷ் ஃபுட்ஸ்)

சண்டே சக்சஸ் ஸ்டோரி: முஸ்தபா (ஐடி ஃப்ரெஷ் ஃபுட்ஸ்)

கூலித் தொழிலாளியான தந்தை, பள்ளிக்கே செல்லாத தாய். இவர்களுக்குப் பிறந்த மகன் ஆறாம் வகுப்பிலேயே தேர்ச்சி பெறாமல் தோல்வி. ஆனால், இன்று அந்த மகன் ரூ.150 கோடி மதிப்பிலான நிறுவனத்தின் அதிபர். அவர்தான் பி.சி.முஸ்தபா. அவரைப் பற்றி இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.

மேலே குறிப்பிட்டது போல மிக வறுமையான, ஓர் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தவர் முஸ்தபா. இவர்தான் குடும்பத்தின் மூத்த மகன். இவருக்கு மூன்று தங்கைகள் இருந்தனர். கேரளாவின் வயநாட்டுக்கு அருகிலுள்ள சென்னலோடு கிராமத்தில்தான் முஸ்தபா பிறந்தார். இது மிகவும் பின்தங்கிய ஒரு கிராமமாகும். இந்தக் கிராமத்தில் அப்போது ஆரம்பப் பள்ளிகள் மட்டுமே இருந்தன. மின்சார வசதியும் இல்லை. சாலை வசதியும் இல்லை. உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டுமானால் நான்கு கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து செல்ல வேண்டும். இதனால் இந்தக் கிராமத்தின் பல குழந்தைகள் ஆரம்பப் பள்ளிகளுக்குப் பிறகு படிக்கச் செல்லவே இல்லை.

அப்படியொரு நிலை முஸ்தபாவின் தந்தை அகமதுவுக்கும் ஏற்பட்டது. நான்காம் வகுப்பு படிக்கும்போதே பள்ளியை விட்டு நிறுத்தப்பட்டு காபி தோட்டத்திற்குக் கூலி வேலைக்கு அனுப்பப்பட்டார். முஸ்தபா கணிதப் பாடத்தில் சிறந்த மாணவனாகவும், மற்ற பாடங்களில் சராசரி மாணவனாகவும் திகழ்ந்தார். ஆனால் ஆறாம் வகுப்பில் தோல்வியடைந்த பிறகு படிப்பில் ஆர்வம் குறைந்துவிட்டது. ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்த பின்பும், விடுமுறை நாள்களிலும் அப்பாவுடன் சேர்ந்து அவருடைய பணிக்கு உதவி செய்வார்.

“தன்னுடன் வேலைக்கு வந்துவிடுமாறு அப்பா கேட்டார். ஆனால், என்னுடைய கணித ஆசிரியர் மேத்யூ நான் பள்ளியிலிருந்து நிற்பதை விரும்பவில்லை. என்னுடைய தந்தையிடம் பேசி, மீண்டும் கல்வியைத் தொடர ஒரு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டார். என்னிடமும், பள்ளிக்கு வருகிறாயா அல்லது கூலி வேலைக்கு வருகிறாயா என்று கேட்டார். நான் தந்தையின் முகம், ஆசிரியரின் முகம், இருவரையும் சற்று நேரம் உற்றுப் பார்த்தேன். பிறகு சொன்னேன். நானும் உங்களைப் போலவே ஆசிரியராக வேண்டும் என்று...” இது பிஸ்டார் என்ற ஊடகத்துக்கு இவர் அளித்துள்ள பேட்டி.

அதன்பிறகு மீண்டும் பள்ளிக்குச் சென்றுள்ளார். ஆனால், தன்னுடன் படித்தவர்கள் எல்லாம் மேல்வகுப்புக்குச் செல்ல, இவர் மட்டும் ஜூனியர் மாணவர்களுடன் மீண்டும் அதே வகுப்பில் அமர்ந்திருந்தார். இதை அவமானமாகக் கருதியுள்ளார். இந்தியும் ஆங்கிலமும் இவருக்குச் சற்று படிக்கச் சிரமமாக இருந்துள்ளது; தடுமாறினார். பள்ளி முடிந்த பிறகு ஆசிரியர் மேத்யூ இவருக்கு கற்றுக் கொடுத்தார்.

அதைப் பயன்படுத்தி, விடாமுயற்சியுடன் படித்தார். 7ஆம் வகுப்பில் முதல் மாணவனாகத் தேர்ந்தார். இது மற்ற எல்லா ஆசிரியர்களுக்கும் ஆச்சர்யமாக அமைந்தது. பத்தாம் வகுப்பிலும் முதல் மாணவனாகத் தேர்ந்தார். அன்றைய நாள்களில் மேத்யூ ஆசிரியர்தான் முஸ்தபாவுக்கு ரோல் மாடல். அவரைப் போல கணித ஆசிரியர் ஆக வேண்டுமென்று கருதினார்.

பத்தாம் வகுப்பு முடித்த பின்னர் கிராமத்திலிருந்து வயநாட்டுக்கு இவருடைய குடும்பம் குடிபெயர்ந்தது. அங்கிருந்து கோழிக்கோட்டில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினார். இவர் கோழிக்கோடு சென்று படிக்க விரும்பியது இவருடைய தந்தைக்குப் பிரச்னையாக இல்லை. அதற்கான செலவுகள்தான் சுமையை ஏற்படுத்தும் என்று கருதினார்.

பிறகு தந்தையின் நண்பர் உதவியுடன் தங்கும் விடுதியில் இலவசமாகத் தங்கச் சலுகை பெற்று கோழிக்கோட்டில் உள்ள ஃபாரூக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு முஸ்தபாவுக்கு இலவச உணவும் வழங்கப்பட்டது. இவருடன் சேர்த்து 15 மாணவர்கள் இலவச விடுதியில் தங்கிப்படித்தனர். இலவச விடுதியில் தங்கிப் படித்ததாலோ, என்னவோ மற்ற மாணவர்கள் இவரை ஏளனத்துடன் பார்த்துள்ளனர். இது முஸ்தபாவின் மன அமைதியைக் கெடுத்துள்ளது. வேறு ஒருவரின் உணவைச் சாப்பிடுவது போன்ற உணர்வும் ஏற்பட்டுள்ளது. சில மாணவர்கள் இதைக் கேலி செய்துள்ளனர். இது நல்ல அனுபவமாக இல்லை. ஆனால், தான் படித்த படிப்பை வைத்து வறுமையை ஒழிக்க வேண்டுமென்ற எண்ணம் அங்குதான் உதித்துள்ளது.

அதன் பிறகு பொறியியல் நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். ரீஜினல் பொறியியல் கல்லூரியில் (இன்று தேசிய தொழில்நுட்ப நிறுவனமாக மாறியுள்ளது) இடம் கிடைத்தது. இங்குதான் தொழில்முனைவோராக வேண்டுமென்று முடிவெடுத்தார். ஆனால் 1995ஆம் ஆண்டில் கல்லூரி முடித்த பின்பு மன்ஹட்டன் அசோசியேட்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் வேலைக் கிடைத்தது. பெங்களூருவில் இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தில்பணியில் சேர்ந்த சில நாள்களிலேயே மோட்டோரோலாவில் வேலைவாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஸ்டார்ட் அப் நிறுவனத்திலேயே தொடர்ந்தார். பின்னர் அங்கிருந்து அயர்லாந்து அனுப்பப்பட்டார்.

அயர்லாந்தில் இருந்த மூன்றே மாதங்களில் சிட்டி யூனியன் வங்கியில் வேலைக் கிடைத்தது. இதனால் அங்கிருந்து துபாய் சென்றார். அப்போதே (1996) லட்சத்தில் ஊதியம் பெற்றார். இவர் வேலைக்குச் சென்ற பிறகு தங்கைகளைப் படிக்க வைத்தார். 2000ஆம் ஆண்டில் திருமணமும் செய்துகொண்டார். சென்னலோடு கிராமத்தில் சிறு வயதில் குழந்தையாக முஸ்தபாவை பார்த்த அக்கிராம மக்களுக்கு முஸ்தபாவின் வளர்ச்சி வியப்பாகவே இருக்கும்.

அதன் பிறகு நீண்ட முடிவுக்குப் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக 2003ஆம் ஆண்டில் இந்தியா திரும்பினார். அப்போது அவரிடம் 15 லட்ச ரூபாய் இருந்தது. ஆனாலும், உறவினர் ஒருவரைப் பார்த்து ரூ.25,000 முதலீடு செய்து ஒரு தொழிலைத் தொடங்கினார். இவருடன் நசீர், சாம்சு, ஜாபர், நவ்சாத் ஆகிய நால்வரும் கைகோத்தனர். இவர்கள் நான்கு பேரும் ரூ.25,000 முதலீடு செய்தனர். 550 சதுர அடியில் ஒரு சிறிய கடை வைத்து இட்லி, தோசை மாவு அரைத்து கடைகளுக்கு விநியோகம் செய்தனர். தொடக்கத்தில் இரண்டு கிரைண்டர்களும், ஒரு சீலிங் இயந்திரமும் மட்டுமே வாங்கினர். கடைக்கு ஐடி ஃப்ரெஷ் ஃபுட்ஸ் (ஐடி - இட்லி, தோசை) என்று பெயர் வைத்தனர்.

தொடக்கத்தில் அருகில் உள்ள 20 கடைகளுக்கு விநியோகம் செய்ய இலக்கு வைத்தனர். முதல் ஆறு மாதங்களிலேயே 100 பாக்கெட்டுகளை தினசரி விற்க ஆரம்பித்தனர். இதையடுத்து இயந்திரங்களை அதிகரித்தனர். தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 10 பாக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்தனர். தொடக்கத்தில் புதிய பிராண்டுகளை கடைக்காரர்கள் வாங்க மறுத்ததால் சலுகைகளை வழங்கினர். நாசர் மட்டுமே தொடக்கத்தில் கடையைப் பார்த்துக்கொண்டார்.

பிறகு ரூ.6 லட்சம் முதலீடு செய்து கடையை விரிவுபடுத்தினார்கள். 15 கிரைண்டர்கள் வாங்கப்பட்டது. கூடுதலாகப் பணிக்கு 5 பேர் நியமிக்கப்பட்டனர். 2007ஆம் ஆண்டில் முஸ்தபா எம்.பி.ஏ. படித்து முடித்தார். பின்னர் நிறுவனத்தின் தலைவராக இணைந்தார். சந்தைப்படுத்தலையும், கணக்கு வழக்குகளையும் அவரே கவனித்தார். இரண்டே ஆண்டுகளில் உற்பத்தி கொள்முதலை தினசரி 3,500 கிலோவாக உயர்த்தினார். கடைகளின் எண்ணிக்கையும் 300 முதல் 400ஆக அதிகரித்தது. அப்போது 30 பேர் பணிபுரிந்தனர்.

தேவை அதிகரித்துள்ளது. எனவே நிறுவனத்தைத் தொழில்துறை பகுதிக்கு மாற்றத் திட்டமிட்டு, 2008ஆம் ஆண்டில் 40 லட்ச ரூபாய் செலவு செய்து ஹோஸ்கோட்டில் 2,500 சதுர அடியில் ஆலை அமைத்தனர். அமெரிக்காவிலிருந்து 5 பெரிய வெட் கிரைண்டர்கள் இறக்குமதி செய்தனர். 2008ஆம் ஆண்டில் தொழிலை விரிவுபடுத்தி வடை மாவு மற்றும் ராவா மாவு போன்றவற்றை அறிமுகப்படுத்தினர். தொழில் வளர்ச்சியடைந்ததையடுத்து 2012ஆம் ஆண்டில் சென்னை, மங்களூரு, மும்பை, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நிறுவனங்களைத் தொடங்கினர். மற்ற பகுதிகளில் உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து வர்த்தகம் மேற்கொண்டனர்.

2013ஆம் ஆண்டில் துபாயிலும் நிறுவனம் தொடங்கப்பட்டது. துபாயில் இட்லி மாவு தேவை மிக அதிகமாக இருந்தது. இதை இவர்களால் எளிதில் சரிக்கட்ட இயலவில்லை. அக்டோபர் 2015ஆம் ஆண்டிலேயே இந்நிறுவனம் 50,000 கிலோ மாவு ஒரு நாளைக்கு உற்பத்தி செய்தது. நிறுவனத்தின் மொத்த முதலீடு ரூ.4 கோடியாக அதிகரித்துள்ளது. வருவாய் ரூ.100 கோடியாக உயர்ந்தது.

2005ஆம் ஆண்டில் ஒரு நபருடன் ஒரு நாளைக்கு 10 பாக்கெட் தயார் செய்த ஒரு நிறுவனம், 2015ஆம் ஆண்டில் 1,100 பணியாளர்களைக் கொண்டு ஒரு நாளைக்கு 50,000 பாக்கெட்டுகள் தயார் செய்யும் வகையில் மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. 2020 மற்றும் 2021ஆம் ஆண்டில் நிறுவனத்தின் மதிப்பை ரூ.1,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களின் எண்ணிக்கை 5,000 ஆக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2016-17ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.150 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு தற்போது 20,000 கடைகள் நாடு முழுவதும் உள்ளன. ரூ.50,000 முதலீட்டில் தொடங்கிய நிறுவனத்தின் பயணம் இன்று ரூ.150 கோடிகளைத் தாண்டியிருக்கிறது. தொழில்முனைவோராகச் சாதிக்கத் துடிப்பவர்களுக்கு முஸ்தபா சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017