மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

முத்தலாக் மசோதா: ஸ்டாலின் கண்டனம்!

முத்தலாக் மசோதா: ஸ்டாலின் கண்டனம்!

முத்தலாக் மசோதாவை மத்திய அரசு அவசர அவசரமாகத் தாக்கல் செய்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மூன்று வருடச் சிறைத் தண்டனை என்பதைச் சேர்த்துள்ளதற்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (டிசம்பர் 29) வெளியிட்ட அறிக்கையில், “முத்தலாக் சட்ட விரோதம் என்று அறிவிக்கும் வகையில், ‘முஸ்லிம் பெண்கள் திருமணப் பாதுகாப்புச் சட்ட மசோதா’வை அவசர அவசரமாகக் கொண்டுவந்து, மத்திய பா.ஜ.க. அரசு மக்களவையில் நிறைவேற்றி இருப்பதுடன், அதில் ‘மூன்று வருடச் சிறைத் தண்டனை’ என்ற கடுமையான பிரிவைச் சேர்த்திருப்பதிலிருந்து, இஸ்லாமிய பெண்களின் நலனில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே நியாயமான அக்கறை இருப்பதாகத் தெரிய வில்லை” என்று குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், “சட்டம் இயற்றுவதில் காட்டியிருக்கும் இந்த அவசரம் உள் நோக்கம் நிரம்பியதாக இருக்கிறது. குறிப்பாக, ’முத்தலாக் முறையை ரத்து செய்ய பாராளுமன்றம் சட்டம் கொண்டு வரலாம்’ என்றுதான் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதே தவிர, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பில் எந்த இடத்திலும் இடம் பெறவில்லை” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்லாமிய பெண்களின் தனி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், என்பதில் பெண் விடுதலைக்காகவும் பெண்ணுரிமைகளுக்காகவும் நூறாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடிவரும் திராவிட இயக்கத்தின் வழித்தோன்றலான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எப்போதும் ஆர்வமும், அக்கறையும் உண்டு. அதேசமயத்தில், ஷரியத் சட்டத்திற்கு உள்ளும், ஒரு மதத்தின் சம்பிரதாயங்களுக்குள்ளும் அரசாங்கம் மூக்கை நுழைத்து, இப்படியொரு மசோதாவை அவசரமாகக் கொண்டு வருவது சந்தேகங்களை எழுப்புகிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், "இஸ்லாமியப் பெண்களுக்கு உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமே பாஜக அரசின் நோக்கமாக இருந்திருந்தால், உச்சநீதி மன்றத் தீர்ப்பு வெளியிடப்பட்ட கடந்த நான்கு மாதங்களில் இஸ்லாமிய அமைப்புகளுடனும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திடமும் மத்திய சட்ட அமைச்சகம் கலந்தாலோசனையை நடத்தியிருக்கலாம். அப்படியொரு ஆலோசனை நடத்துவதற்கு மத்திய. அரசுக்கு மனமில்லையென்றால், இந்த மசோதாவைப் பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பி, அதில் பங்கேற்றுள்ள அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்கும் வழிமுறைகளையும் கடைப்பிடித்திருக்கலாம்” என்று விமர்சித்துள்ளார்.

“எவ்வித ஆலோசனைகளையும் மேற்கொள்ளாமல் விட்டதோடு, பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு இந்த மசோதாவை அனுப்ப வேண்டியதும் இல்லை" என்று மத்திய சட்ட அமைச்சர் ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்று இந்த மசோதா விவாதத்தின்போது கூறியிருப்பது வியப்பை அளிப்பது மட்டுமல்ல, சட்டம் இயற்றுதலில், மக்களவையில் உள்ள பெரும்பான்மையை எதேச்சதிகாரமாகப் பயன்படுத்தவே மத்தியில் உள்ள பாஜக அரசு விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது. இது ஆரோக்கியமான பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு எந்த வகையிலும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்காது” என்று வேதனைத் தெரிவித்துள்ள அவர் இஸ்லாமிய மக்களின் மதரீதியான சட்டத்திற்குள் புகுந்து மசோதாவைக் கொண்டு வரும் முன்பு, ‘நாட்டு ஒற்றுமை, ஒருமைப்பாடு, இஸ்லாமிய பெண்களின் நலன்’ போன்றவற்றை மனதில் வைத்து, இந்த மசோதாவைப் பாராளுமன்ற நிலைக்குழுவிற்குப் பா.ஜ.க. அரசு அனுப்பியிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மூன்று வருடச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய ‘கிரிமினல்’ நடவடிக்கையாக இந்த சட்ட மசோதாவைக் கொண்டு வந்திருப்பது தேவையற்றது என்று கூறியுள்ள அவர், “பாராளுமன்ற நிலைக்குழுவிற்கும் அனுப்பாமல், கடுமையான சிறைத் தண்டனைக்கும் வழி வகுக்கும் இந்த மசோதா இஸ்லாமிய பெண்களின் எதிர்காலத்திற்கு ஏற்ற சமூக சீர்திருத்த நடவடிக்கைதானா என்பதை, பாஜக அரசு ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017