மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

காலம் வரும்… எல்லாம் மாறும்…

காலம் வரும்… எல்லாம் மாறும்…

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் 2ஆம் கட்டச் சந்திப்பு சென்னை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் கடந்த டிசம்பர் 26 அன்று தொடங்கியது. இதுவரை காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மதுரை ஆகிய மாவட்ட ரசிகர்களைச் சந்தித்தார். 4ஆம் நாளான இன்று கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். முதல் நாள் சந்திப்பின்போது, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 31ஆம் தேதி அறிவிப்பதாக ரஜினி கூறியிருந்தார். இதையடுத்து அவரது சந்திப்பு ரசிகர்கள் மட்டத்தில் மட்டுமல்லாது அரசியல் மட்டத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இன்றைய சந்திப்பின்போது, “நான்காவது நாளாக உங்களைச் சந்திக்கிறேன். இன்னும் இரண்டு நாட்கள்தான் உள்ளன எனக் கூறி நிறுத்தினார். 31ஆம் தேதி அரசியல் அறிவிப்பை வெளியிடுவேன் என்று அவர் கூறியிருந்ததால் ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர். பின்னர், "நான் உங்களைப் பார்ப்பது இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது. அதன் பின்னர் உங்களை மிஸ் பண்ணுவேன்” என்று விளக்கமளித்தார்.

பின்னர் மீண்டும் பேச்சைத் தொடங்கிய அவர், “கோயம்புத்தூர் எனக்கு மிக முக்கியமான இடம். நிறைய நண்பர்கள் உள்ளனர். சுவாமி சச்சிதானந்தரின் ஆசிரமம் இருக்கிறது. மிகப்பெரிய ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர். நிறையப் படித்தவர். ஒரு கட்டத்தில், பழனி சுவாமிகள் என்பவரிடம் சிஷ்யனாகச் சேர்ந்தார். பிறகு இமயமலைக்குச் சென்றார். அங்கே சிவானந்த சுவாமிகளிடம் தீட்சை வாங்கி, சச்சிதானந்த சுவாமிகளானார். பிறகு அவரின் குருநாதர் வழிகாட்டுதலின்படி, அமெரிக்காவுக்குப் போய் ஆன்மிகமும் தியானமும் பரப்பு என்று சொல்ல, அங்கே சென்றார்.

மதத்தைப் பரப்பச் சொல்லவில்லை. ஆன்மிகத்தைப் பரப்பச் சொன்னார். அங்கே இவரிடம் கற்றுக்கொண்ட தொழிலதிபர்கள், மிகப்பெரிய டாக்டர்கள், நடிகர்கள், இசைக்கலைஞர்கள் எனப் பலரும் உண்டு. அந்த நாட்டில், பென்சில்வேனியாவில் 700 ஏக்கரில் அவருக்கு ஆசிரமம் இருக்கிறது.

இவர் சொல்லித்தான் பாபா படம் எடுத்தேன். அந்தப் படத்தை அவரும் பார்த்தார். அவர் மகாசமாதி ஆவதற்கு முன்னதாகக் கடைசியாக அவரைப் பார்த்தது நான் தான். இதுவொரு பாக்கியம் எனக்கு!

அதேபோல, தயானந்த சரஸ்வதி சுவாமிகள் கோவையில், ஆனைக்கட்டியில் ஆஸ்ரமம் அமைத்து சேவைகள் செய்தார். இவர் என் குருநாதர் மட்டுமல்ல. மார்க்கதரிசியும் கூட! இப்படி எனக்கும் கோவைக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு” என்று தனது ஆன்மிக நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

காலம் வரும்

மேலும், “ஒருமுறை நண்பரின் இல்லத் திருமணம். சிவாஜி சார், நான் எனப் பலரும் விமானத்தில் சென்று, கோவை விமான நிலையத்தில் இறங்கினோம். அங்கே என்னைப் பார்த்ததும் ஏகப்பட்ட கூட்டம். என் பேரைச் சொல்லி, வாழ்க வாழ்க என்று கோஷம் போட்டபடி முன்னே வருகின்றனர். எனக்கோ தயக்கம். கூச்சம். பக்கத்தில் எவ்வளவு பெரிய மேதை இருக்கிறார். அவர் இருக்கும் போது என் பெயரைச் சொல்லி வாழ்க கோஷம் போட்டால் எப்படி இருக்கும் எனக்கு.

இதையெல்லாம் பார்த்த சிவாஜி சார், ’என்னடா... என்னடா நழுவுறே. இது உன் காலம்டா. உன்னோட காலம். நல்ல படங்களாக் கொடுடா. வாடா... முன்னே வாடா’ என்று அழைத்துக்கொண்டு, பத்திரமாக காரிலேற்றி அனுப்பிவைத்தார்.

அவருடைய குணம் அப்படிப்பட்டது. பணமும் காசும் இருந்தால் யார் வேண்டுமானாலும் மரியாதை கொடுப்பார்கள். இப்படியான குணங்கள் இருந்தால்தான் மதிப்பு கிடைக்கும். இன்றைக்கும் எம்.ஜி.ஆருக்கு இவ்வளவு மதிப்பு இருப்பதற்கு அவரின் குணங்களே காரணம். யாராக இருந்தாலும் குணம் நன்றாக இருந்தால், அவர் எத்தனை நூற்றாண்டுகளானாலும் மதிக்கப்படுவார்.

அதன் பிறகு பல வருடங்கள் கழித்து, அதே கோவைக்கு வந்தேன். விமான நிலையத்தில் கூட்டம். என்னிடம் வந்து, ’சார்... அந்த நடிகர் வந்திருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் அதிகம். அதனால் கொஞ்ச நேரம் பொறுத்திருங்கள். அவர் போனதும் போய்விடலாம்’ என்றார்கள். நான் சிவாஜி சார் சொன்னதை நினைத்துக்கொண்டேன். காலம். இது அந்த நடிகருடைய காலம். இப்படி காலமும் நேரமும் மாறும். காலம் மாறினால் அந்த இடத்துக்கு வேறு ஆட்கள் வருவார்கள். அது சினிமாவாகட்டும், அரசியலாகட்டும். காலம்தான் எல்லாமே” என்று பேசினார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017