மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

வைரமுத்துவுக்கு ஞானபீடம்? ஜெயமோகன் எதிர்ப்பு!

வைரமுத்துவுக்கு ஞானபீடம்? ஜெயமோகன் எதிர்ப்பு!

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட இருப்பதாக வெளியாகும் செய்திகளுக்கு தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரும் இலக்கிய விமர்சகருமான ஜெயமோகன் எதிர்வினை ஆற்றியுள்ளார்.

இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருது ஞானபீட விருதாகும். ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 16 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்தியாவின் 16 முக்கியமான எழுத்தாளர்களின் ஒப்புதல் மற்றும் பல்கலை துணைவேந்தர்களின் பரிந்துரைகளின்படி இவ்விருது அறிவிக்கப்படும். இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைதள பக்கத்தில் எதிர்வினை ஆற்றியுள்ளார். “பாரதிய ஜனதா கட்சியில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பொறுப்பிலிருப்பவர்கள் சிலர் இதற்கான தனிமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தருண் விஜயை அழைத்துக் கூட்டம் நடத்தியது, மோடி கவிதைகளை வெளியிட்டது என அவர் சென்ற சில ஆண்டுகளாக படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தார். மோடி எதிர்ப்பில் அன்றாடம் குமுறும் நம் ஊடகங்கள், அறிவுஜீவிகள்கூட இச்செயல்களைப்பற்றி ஏதும் சொல்லாமல் அடக்கியே வாசித்தன. ஆகவே ஐயம் உறுதியாகிறது” என்று ஜெயமோகன் கூறியிருக்கிறார்.

வைரமுத்துவின் இலக்கியத் தகுதி

வைரமுத்துவின் இலக்கியத் தகுதி என்ன என்பது குறித்த தன் மதிப்பீட்டையும் ஜெயமோகன் பதிவுசெய்திருக்கிறார்:

“வைரமுத்து தமிழின் வளமான இலக்கிய மரபின் தொடர்ச்சி அல்ல. எவ்வகையிலும் நவீனத் தமிழிலக்கியத்தின் முகம் அல்ல. அவர் ஒரு பரப்பியல் எழுத்தாளர், இலக்கியமறியா பொது வாசகர்களுக்கு மட்டும் உரியவர். அவருடைய எழுத்து இலக்கியத்தின் அடிப்படை இயல்புகள் என்று கருதப்படும் மொழியமைதி, வடிவ ஒருமை, அந்தரங்க நேர்மை, நுண்மடிப்புகள் கொண்டது அல்ல. செயற்கையாகச் செய்யப்பட்டவை அவை.

ஞானபீடம் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளான மூத்த படைப்பாளிகளுக்கே இங்கு பெரும்பாலும் வழங்கப்பட்டுள்ளது. பிற இந்திய மொழிகளில் அவ்விருதைப் பெற்றவர்களின் பெரும்பாலானவர்கள் இந்திய இலக்கிய மேதைகள். அவ்வரிசையில் வைரமுத்து தமிழின் பிரதிநிதியாக வைக்கப்படுவாரென்றால் அது தமிழிலக்கியச் சூழலை சிறுமை செய்வதாகவே அமையும். தமிழிலக்கியத்தையே அவரைக்கொண்டு பிறர் மதிப்பிட ஏதுவாகும். ஆகவே இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய முயற்சி” என்று ஜெயமோகன் எழுதியிருக்கிறார்.

“சென்ற ஆண்டுகளில் இந்தியச்சூழலில் இன்று அறியப்பட்ட எந்த மேதைக்கும் நிகரான பெரும்படைப்பாளிகள் சிலர் தமிழிலிருந்து ஞானபீடத்திற்கு முன்வைக்கப்பட்டனர். லா.ச.ராமாமிருதம், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கி.ராஜநாராயணன் என. அவர்கள் அனைவரும் திறமையான உள்குத்துகள் வழியாக தோற்கடிக்கப்பட்டனர். இன்று வைரமுத்து மேலேறிச் செல்கிறார்” என்று தன் வருத்தத்தைப் பதிவுசெய்திருக்கிறார்.

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

4 நிமிட வாசிப்பு

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

வெள்ளி 29 டிச 2017