மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

நாடாளுமன்றத்தை தென்னிந்தியாவில் நடத்துங்கள்!

நாடாளுமன்றத்தை தென்னிந்தியாவில் நடத்துங்கள்!

நாடாளுமன்றக் கூட்டத் தொடரை தென்னிந்தியாவுக்கு மாற்றுங்கள் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் வைத்த கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தற்போது நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நவம்பர் மாதமே தொடங்க வேண்டிய இந்த கூட்டத் தொடர் டெல்லியில் நிலவிய கடுமையான காற்று மாசுபாடு, குஜராத் சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றால் கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை தள்ளிப் போனது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 5 ஆம் தேதி முடியும் இந்த குளிர் காலக் கூட்டத் தொடர்தான் கடந்த பத்து வருடங்களில் மிகக் குறுகிய காலம் நடக்கும் தொடராக அமைந்துள்ளது. 14 அமர்வுகள் மட்டுமே இந்த தொடரில் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கு அரசியல் ரீதியான காரணங்கள் பல சொன்னாலும், தலைநகர் டெல்லியின் சுற்றுப் புறச் சூழலும் முக்கியமான ஒரு காரணியாகிவிட்டது. டெல்லியில் தற்போது கடுமையான பனி மூட்டம் நிலவுகிறது. டெல்லி உட்பட வட மாநிலங்களிலும் இதே நிலைமைதான். இதனால் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கே பெரிதும் சிரமப்படுகிறார்கள்.

இந்த நிலையில்தான் நேற்று (டிசம்பர் 28) நாடாளுமன்றத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் நவநீத கிருஷ்ணன், ‘’டெல்லியில் வசிப்பதற்கே ஒவ்வொருவரும் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. இது வாயுக்கள் நிறைக்கப்பட்ட அறை போல ஆகிவிட்டது. டெல்லி மனிதர்கள் வாழ தகுதியில்லாத நகரமாக மாறிக்கொண்டு வருவதை டெல்லியின் சுற்றுப் புற மாசுபாடு உறுதிப்படுத்தி வருகிறது. மாசுபாடு இல்லாத தூய்மையாக வாழ்வது என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் அரசியல் அமைப்பு சட்டம் அளித்திருக்கும் உரிமை. ஆனால் அந்த உரிமை டெல்லியில் கிடைக்காது போலிருக்கிறது.

இந்நிலையில் இந்த அவையின் பரிசீலனைக்கு நான் ஒரு முக்கியமான வேண்டுகோளை வைக்கிறேன். நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத் தொடரை ஏன் தென்னிந்திய நகரங்களுக்கு மாற்றக் கூடாது? பெங்களூரிலோ, சென்னையிலோ இந்த நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்தலாமே?

இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இது ஏற்றதாக இருக்கும். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது வித்தியாசமான புத்துணர்ச்சியாக இருக்கும்’’ என்று பேசினார்.

இதற்கு பதிலளித்த சுற்றுப் புறசூழல் அமைச்சர் ஹர்ஷவர்தன், ‘’நாம் மிகைப்படுத்தப்பட்ட தரவுகளை வைத்துக் கொண்டு பேச இயலாது. அறிவியல் ஆய்வுகள்தான் டெல்லியைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டதை உறுதிப்படுத்த வேண்டும்’’ என்றார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017