மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

இசை வலம் 13: வசப்படுத்திய வசுதா ரவி

இசை வலம் 13: வசப்படுத்திய வசுதா ரவி

கிருஷ்ண பாகவதர்

நாள்: டிசம்பர் 28, மாலை

இடம்: மயிலை பேதாச்சி அரங்கம்

கலைஞர்: வசுதா ரவி (வாய்ப்பாட்டு)

வயலின்: எம். ராஜீவ்

மிருதங்கம்: விஜய நடேசன்

வளரும் கலைஞர்கள் வரிசையில் குறிப்பிடத் தக்க முக்கியப் பாடகியாக விளங்குகிறார் வசுதா ரவி. இனிமையான குரலும் இமலாயப் பயிற்சியும் கனிவான புன்சிரிப்பும் கொண்ட வசுதா, வெகு விரைவில் கர்னாடக இசை உலகில் தனக்கென்று தனியான ஒரு இடத்தைத் தக்கவைத்துக்கொள்வார் என்பதை இவருடைய தற்போதைய கச்சேரிகள் உறுதிப்படுத்துகின்றன.

வளமான இசைப் பின்புலத்தைத் தன் வலிமையாகக் கொண்டு இவர் தொடங்கியிருக்கும் இசை வலம் எப்படி இருக்கப்போகிறது என்பதன் முன்மாதிரி டிசம்பர் 28 அன்று மாலை மயிலை பேதாச்சி அரங்கில் நடந்த கச்சேரியில் நன்றாகப் புலப்பட்டது.

கலைப் பின்புலம்

தந்தை வழிப் பாட்டனார் பேராசிரியர் நாகபூஷணம், இசைப் புயல் டைகர் வரதாச்சாரியின் மாணவர். தாய் வழி உறவினர் இசை நிபுணர் பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி. கை பிடித்த கணவர், மிருதங்க மற்றும் தபேலா வித்துவான். மாமியாராய் வாய்த்தவர் கேந்திரா வித்யாலா பள்ளியில் 40 வருடங்களாக இசை ஆசிரியர்.

குழந்தைப் பருவம் முதலே காதில் நுழைந்த கர்னாடக இசையை முறையாகக் கற்க, இவரின் குருவாக அமைந்தார் முனைவர் மஞ்சுளா ஸ்ரீராம். சுமார் 20 வருடங்களாகத் தன் குருவிடம் இசைப் பாடத்தை மட்டுமின்றி வாழ்க்கைப் பாடத்தையும் சேர்த்தே கற்றதாக வசுதா ரவி பெருமையுடன் கூறுகிறார்.

எம்.பி.ஏ. படித்து அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகள் பணி புரிந்த பிறகு, தன் அன்பு கணவர், ஆசை மகன் சகிதம் இந்தியா வந்து தற்பொழுது முழு நேரக் கர்னாடக இசைப் பாடகியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள விரும்பும் வசுதா ரவியின் விருப்பம் ஏறக்குறைய நிறைவேறிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

‘ஸ்வாமி நின்னே கோரி’ என்ற ஸ்ரீராக வர்ணத்துடன் தொடங்கிய கச்சேரியின் இனிமை இறுதிவரை இருந்தது. ஆனால் அடுத்தடுத்து எடுத்துக்கொண்ட கீர்த்தனைகளுடன் அரங்கில் இருந்த ரசிகர்கள் முற்றிலும் இணைய இயலவில்லையோ என்ற தோன்றிய சந்தேகத்தைத் தவிர்க்க இயலவில்லை. இரண்டாவதாகப் பாடிய கௌளை ராக மைசூர் வாசுதேவசாசரியார் கீர்த்தனை ப்ரணமாம்யஹம் ஸ்ரீ கௌரி என்ற ஆலாபனை, ஸ்வர பிரஸ்தானங்களுடன் கூடிய பாடல், அடுத்து வந்த அம்புஜம் கிருஷ்ணா இயற்றி எஸ் ராமனாதன் மெட்டமைத்த அரவிந்த லோசனனே என்ற நீதிமதி ராகப் பாடல், பிறகு ஒலித்த லலிதா மாம் பாஹிதயா என்ற செங்கல்வராய சாஸ்திரியின் யதுகுல காம்போதி கீர்த்தனை ஆகியவையும் இக்கருத்தை உறுதிசெய்தன.

வசுதா ரவி சவுக்க காலம் மற்றும் மத்திம காலத்தில் மட்டுமின்றி துரித காலத்திலும் தனது முத்திரையாக விளங்கும் அதே இனிமையுடன் பாடும் திறனை அவரின் வர நாரத நாரயண என்ற விஜயஸ்ரீ ராக தியாகராஜ கீர்த்தனை எடுத்துக்காட்டியது.

மோகனம் என்னும் வாகனம்

கச்சேரியின் உச்சமாக அமைந்தது மோகனம். அது ஏறி அமர்ந்த உடன் பரவசம் அளிக்கும் வாகனம். மெதுவாக ஆரம்பித்து மெல்ல உச்சத்திற்குச் சென்று தள்ளு முள்ளு இல்லாமல் சீராக இறங்கும் ஸ்வரங்களைக் கொண்ட இந்த அற்புத ராகத்தில் அமைந்த தியாகராஜரின் அத்தனை கீர்த்தனைகளும் சிலிர்ப்பூட்டுபவை. நம்ப முடியாத பேரழகையும் எதிர்பார்க்காத பெரும் வாய்ப்பையும் எதிர்கொள்ளும் தருணங்களில் மனதில் தோன்றும் இனம் தெரியாத இன்ப உணர்வுகளை இசை வடிவில் வெளிப்படுத்தும் இந்த ராகத்தை அதன் மெருகு குறையாமல் இனிமையாகப் பாடி மகிழ்வித்தார் வசுதா ரவி. குறிப்பாக மங்கள கர ரூப என்ற இடத்தில் செய்த நீண்ட நிரவல், ஸ்வரக் கோர்வைகள், அதற்கேற்ப எம். ராஜீவ் இசைத்த வயலின் பின்னணி, இணைந்தும் தனி ஆவர்த்தனமாகவும் விஜய நடேசன் வெளிப்படுத்திய மிருதங்க ஒத்துழைப்பு ஆகிய அனைத்தும் கச்சேரியின் சிறப்பம்சங்களாகத் திகழ்ந்தன.

கச்சேரியின் பிற்பகுதியில் பாடிய, ‘வரவழைக்க எனக்குத் தெரியும்’ என்ற கர்னாடக தேவ காந்தாரி ராகப் பாடல், புரந்தரதாசரின் ‘கிருஷ்ணா என பாரதே’ என்ற தேவர்னாமா இறுதியாக இடம் பெற்ற லால்குடியின் தில்லானா ஆகியவையும் இசை மீது வசுதா ரவிக்கு உள்ள வசமான பிடிப்புக்கு உத்தரவாதமாக அமைந்தன.

கொசுறு:

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017