மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

சித்தராமையா கையில் மகதாயி பிரச்சனை!

சித்தராமையா கையில் மகதாயி பிரச்சனை!

”மகதாயி நதிநீர் பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க, கர்நாடக அரசு தயாராக உள்ளது. இந்தப் பிரச்சினையில் பிரதமர் உடனே தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்” என்று கூறியிருக்கிறார் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா.

கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு இடையே, மகதாயி நதிநீரைப் பகிர்ந்துகொள்வதில் பிரச்சினை இருந்துவருகிறது. இதிலிருந்து பெறும் நீரை மல்லபிரபா என்ற நதிக்குக் கொண்டுசெல்ல கலசா – பண்டூரி கால்வாய் திட்டத்தைச் செயல்படுத்த எண்ணியது கர்நாடக அரசு. இந்த கோரிக்கையை நடுவர் மன்றத்திடமும் தெரிவித்திருந்தது. ஆனால், நடுவர் மன்றம் இதனை நிராகரித்துவிட்டது.

இந்த நிலையில், கோவா மாநில அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி டிசம்பர் 15ஆம் தேதிக்குள் மகதாயி நதி நீரை வடகர்நாடகாவுக்குப் பெற்றுத்தருவேன் என்று வாக்குறுதி அளித்தார் பாஜக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா. கோவா மற்றும் மகாராஷ்டிராவில் பாஜக அரசே ஆட்சியிலிருப்பதால், இது சுலபமானது என்றும் கருதப்பட்டது. ஆனால், கோவாவில் பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைத்திருக்கும் பிற கட்சிகள், இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனையடுத்து, மகதாயி நதிநீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அறிவித்தார் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர். அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர், கர்நாடகாவுக்கு மகதாயி நதி நீரைத் தர முடியாது என்று வெளிப்படையாக அறிவித்தார்.

இதனால், கர்நாடகாவில் பாஜக தலைமை அலுவலகத்துக்கு எதிரே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வடக்கு கர்நாடகாவில் உள்ள 6 மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டமும் நடத்தப்பெற்றது. இந்த விஷயத்தைக் கையிலெடுத்திருக்கிறார் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கவுள்ள அம்மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இப்போதே பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறார்.

நேற்று (டிசம்பர் 28) தும்கூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தபோது, அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, ”மகதாயி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண, கர்நாடக அரசு தயாராக உள்ளது. இந்த விவகாரத்தில் விவசாயிகள், எதிர்க்கட்சியினரையும் அழைத்துச்சென்று, பிரதமரைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். உடனே, பிரதமர் இதில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும்” என்று தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்து பேசியவர், “டிசம்பர் 15ஆம் தேதிக்குள் விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி சொல்வதாகத் தெரிவித்தார் எடியூரப்பா. அதற்குப் பதிலாக, அவர் விஷத்தைக் கொடுத்துவிட்டார். கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரும் எடியூரப்பாவும் சேர்ந்து அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு நான் வருகிறேன் என்று சொன்னதற்கு, தேர்தலுக்குப் பிறகு வாருங்கள் என்று அவர் கூறினார். இவர்களது நாடகத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

விவசாயிகளிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதிலிருந்து தப்ப முயற்சி செய்கிறார் எடியூரப்பா. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க நாங்கள் தயார்” என்று கூறினார் சித்தராமையா.

மகதாயி விவசாயிகள்யைக் கையிலெடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்துவிடலாம் என்ற எடியூரப்பாவின் கணக்கு தப்பாகிவிட்டது; அதனைச் சரியாகத் தன் கையில் எடுத்துக்கொண்டார் சித்தராமையா என்று மகிழ்ச்சியில் இருக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017