மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

திமுக - காங்கிரஸ்: அதிகரிக்கும் இடைவெளி!

திமுக - காங்கிரஸ்: அதிகரிக்கும் இடைவெளி!

21ஆம் தேதி வழங்கப்பட்ட 2ஜி வழக்கின் தீர்ப்பில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து தமிழகம் வந்த இவர்களுக்குச் சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மூன்று நாள்கள் பயணமாக கடந்த 27ஆம் தேதி நீலகிரி சென்ற ஆ.ராசா, அங்கு பொதுமக்கள் மத்தியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒரு பகுதியில் பேசிய ஆ.ராசா,

“2ஜி என்றால் என்னவென்றே தெரியாதவர்களெல்லாம் அதைப் பற்றி பேசினர். மன்மோகன் சிங் ஆட்சி நல்ல ஆட்சி. ஆனால், அவராலேயே அதைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. அவருக்கும் 2ஜி குறித்துப் புரியவில்லை. என்னைக் கைது செய்தால் பிரச்னை தீர்ந்துவிடும் என்று எண்ணினார். அதற்கான விளைவை அவரே அனுபவித்தார்” என்று பேசினார்.

இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், “நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் களங்கம் துடைக்கப்பட்டுள்ளது. இதோடு இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க நான் விரும்புகிறேன். இதற்கு மேல் கருத்து சொல்ல எதுவுமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஆ.ராசாவின் இந்தப் பேச்சு பலருக்கும் வியப்பை ஏற்படுத்திய நிலையில், ஸ்டாலினுக்குத் தெரியாமல் ஆ.ராசா இப்படி பேசியிருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

நாம் ஏற்கனவே மெல்ல தேயும் மெகா கூட்டணி என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில், திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான தூரம் அதிகரித்து வருவதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். இந்த நிலையில் 2ஜி வழக்கிலிருந்து விடுதலை பெற்ற பிறகு ஊட்டிக்குச் சென்ற ஆ.ராசா முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்து தெரிவித்தது காங்கிரஸ் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

“2ஜி வழக்கால் திமுக மாநில ஆட்சியைத்தான் இழந்தது. ஆனால், காங்கிரஸோ மத்தியில் ஆட்சியமைக்கும் வாய்ப்பையே இழந்தது. அதிக இழப்பு காங்கிரஸ் கட்சிக்குத்தான். ஆ.ராசா பேச்சு பற்றி அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினும் கருத்து தெரிவிக்காத நிலையில், திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பது தேவையில்லாதது. மேலும் அடுத்த மாதம் ஆ.ராசா 2ஜி வழக்கில் தனது அனுபவங்கள் பற்றி ஒரு புத்தகத்தையும் எழுதி வெளியிட உள்ளார். அதில் காங்கிரஸ் மீதும் மன்மோகன் சிங் மீதும் இன்னும் பல குற்றச்சாட்டுகளை அடுக்கக்கூடும். அதுவரை காத்திருக்காமல் இப்போதே திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும்” என்று தமிழகத்திலிருந்து டெல்லி தலைமைக்குக் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017