மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

சிறப்புக் கட்டுரை: அம்பானிக்கே இந்த நிலையா?

சிறப்புக் கட்டுரை: அம்பானிக்கே இந்த நிலையா?

சுராஜீத் தாஸ் குப்தா

2005ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி அம்பானி சகோதரர்கள் சொத்துகளைப் பிரித்துக்கொண்டு தனியாகப் பிரிந்தனர். திருபாய் அம்பானியால் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் இன்போஃகாம் அனில் அம்பானிக்குக் கொடுக்கப்பட்டது. பின்னர் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொலைத்தொடர்புத் துறையில் நீண்ட காலமாக இயங்கிவரும் இந்நிறுவனத்தின் செல்போன் நெட்வொர்க் சேவையை நிறுத்தியுள்ளது. இந்தத் துறையில் இந்நிறுவனம் வெகுவாக வருவாய் ஈட்டியிருந்தாலும், அதிக கடன் சுமையையும் பெற்றது.

இந்தியத் தொலைத்தொடர்புத் துறை அத்தியாயத்தில் இந்நிறுவனத்துக்கும் முக்கிய பங்கு உண்டு. இந்தியத் தொலைத்தொடர்புச் சந்தையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பல வருடங்கள் முன்னணி வகித்தது. பிறகு ஏன் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது? தற்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்புத் துறையில் ஒரு முக்கிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ஜியோ அறிமுகமானபோதே ஆறு மாதங்கள் இலவச சேவை, விலைக்குறைப்புச் சலுகைகள் என அதிரடியாகச் சந்தையில் இறங்கியது. இதை மற்ற நிறுவனங்கள் எதிர்பார்க்கவில்லை. பல முன்னணி நிறுவனங்களுக்கு இது கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷனைப் பொறுத்தவரையில், டாடா முதல் சிஸ்டமா வரையிலும், டெலினார் முதல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் வரை பல பயனாளர்களும் ரிலையன்ஸ் ஜியோ சேவையைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஜூன் 2016ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு 9.54 சதவிகிதச் சந்தைப் பங்கு இருந்தது. இதன் மதிப்பு அக்டோபர் 2017இல் 5.20 சதவிகிதமாகக் குறைந்தது. அதன் வருவாய் சந்தைப் பங்கு 2016-17ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 6 சதவிகிதத்துக்கும் கீழாகச் சரிந்தது. இது மேலும் சரிந்து 2017-18ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 4 சதவிகிதத்துக்கும் கீழாகச் சென்றது.

இதையடுத்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் இந்த ஆண்டு அக்டோபரில் தனது 2ஜி மற்றும் 3ஜி சேவையை நிறுத்துவதாக அறிவித்தது. ஒரே மாதத்தில் அந்த நிறுவனம் 10 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்தது. அதேநேரத்தில் போட்டி நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், ஐடியா, வோடஃபோன், பி.எஸ்.என்.எல் ஆகிய நிறுவனங்கள் 13.5 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றன. ஜியோவின் தாக்கத்தால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் கடன் சுமை ரூ.45,000 கோடிக்கும் அதிகமானது. 2016-17ஆம் நிதியாண்டில் மட்டும் இந்நிறுவனத்துக்கு ரூ.2,390 கோடி இழப்பு ஏற்பட்டது. அதேபோல 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் இது மேலும் அதிகரித்து ரூ.2,821 கோடியாக இருந்தது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சந்தையில் முக்கிய நிறுவனமாகவே திகழ்ந்தது. 2010ஆம் ஆண்டில் 17 சதவிகிதச் சந்தைப் பங்குடன் இரண்டாவது இடத்தில் இந்நிறுவனம் இருந்தது. மேலே கூறியது போல, அனில் அம்பானிக்குத் தொலைத்தொடர்பு நிறுவனம் குடும்பச் சொத்தாகத்தான் கிடைத்தது. சி.டி.எம்.ஏ. முறை தொழில்நுட்ப வளர்ச்சியில் பின்னடைவைச் சந்தித்தது. இதையடுத்துதான் இரு ஆண்டுகளுக்கு முன்பு ஜி.எஸ்.எம். சேவைகளை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் அறிமுகப்படுத்தியது. இந்நிறுவனம் ஜி.எஸ்.எம். சேவையை அறிமுகப்படுத்தியபோது, அப்போது சந்தையில் இருந்த மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் 60 சதவிகிதம் குறைவான கட்டணத்தில் களமிறங்கியது. விரைவில் 100 மில்லியன் எண்ணிக்கையை எட்ட வேண்டும் என்ற இலக்கோடு களம் கண்டது. இதன் அணுகுமுறை 3ஜியிலும் அவ்வாறே இருந்தது. ரூ.5,800 கோடி செலுத்தி, டெல்லி, மும்பை உள்ளிட்ட 13 வட்டாரங்களில் 3ஜி அலைவரிசையைப் பெற்றது.

இருப்பினும் போட்டி கடுமையானது. 2008ஆம் ஆண்டில் தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா தொலைத்தொடர்புத் துறையில் புதிய உரிமங்கள் வழங்கினார். இதனால் போட்டி நிறுவனங்களின் எண்ணிக்கை 7லிருந்து 14ஆக அதிகரித்தது. 2012ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் 2ஆவது இடத்தை வோடஃபோன் நிறுவனத்திடம் இழந்தது. அடுத்த இரண்டாண்டுகளில் மேலும் 4 இடங்கள் பின்னோக்கிச் சென்றது. 2016ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 10 சதவிகிதமாகச் சரிந்தது. அப்போதுதான் ஜியோ சந்தையில் புகுந்தது. ஏற்கெனவே ரிலையன்ஸ் கம்யூனிகேஷனின் சந்தை மதிப்பு குறைந்துகொண்டே வந்தது.

ஆய்வாளர்கள் கூறுவது யாதெனில், இந்நிறுவனத்தின் கடன் மதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்ததற்கு ஒரு முக்கிய காரணமும் உண்டு. 8 வருடத்துக்கு (2009-10) முன்பு இந்நிறுவனத்தின் கடன் மதிப்பு ரூ.25,000 கோடியாக மட்டுமே இருந்தது. 2016-17ஆம் நிதியாண்டில் இதன் மதிப்பு ரூ.45,000 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் கடன் மதிப்பு 2009ஆம் ஆண்டு முதல் அதிகரித்து வந்துள்ளதே தவிர, சந்தை மதிப்பு மற்றும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயரவில்லை. சந்தை மதிப்பு தொடர்ந்து சரிந்துகொண்டே வந்துள்ளது. 2011-12ஆம் நிதியாண்டில் ரூ.20,000 கோடியாக இருந்த வருவாய் 2016-17ஆம் நிதியாண்டில் ரூ.22,000 கோடியாக மட்டுமே அதிகரித்துள்ளது. 3ஜியில் இந்நிறுவனத்தின் வருவாய் மதிப்பு அதிகரிக்கவேயில்லை.

இதற்கு முக்கிய காரணமாக ஆய்வாளர்கள் கூறுவது, இந்நிறுவனம் கடந்த மூன்று வருடங்களில் குறைந்த அளவிலான மூலதனத்தை மட்டுமே இத்துறையில் முதலீடு செய்துள்ளது என்கின்றனர். இதனால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் இத்துறையிலிருந்து வெளியேற்றப்பட்டு ஒரு சிறிய அறைக்குள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். ஆனால், மற்ற நிறுவனங்களோ 4ஜி நெட்வொர்க் சேவையை அதிகப்படுத்த டவர்களை அதிகமாக அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 2020ஆம் ஆண்டில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்கான முயற்சியிலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஜியோ நிறுவனம் சந்தையை இவ்வளவு வேகமாக மாற்றும் என்று யாருக்கும் தெரியாது.

ஆய்வுகள் மற்றொன்றையும் சுட்டிக்காட்டுகின்றன. 2013ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் சன் நெட்வொர்க்குடன் டிடிஹெச் சேவையில் இணைந்து செயல்பட ஒப்பந்தத்தில் ஈடுபட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி 26 சதவிகிதப் பங்கை ரூ.1,500 கோடியில் ஏற்றுக்கொள்ளப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், ரிலையன்ஸ் நிறுவனம் அவ்வாறு செய்யவில்லை. அதற்குப்பிறகு இந்த வருடம் எந்தவொரு பணமும் பெறாமல் மற்றொரு நிறுவனத்துக்குப் பங்குகளை அளித்துள்ளது. அந்நிறுவனம் ரிலையன்ஸின் கடனுக்கு மட்டும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பே பங்கு நிதி அமைப்பான டிபிஜி மற்றும் டில்மேன் ஆகிய நிறுவனங்களிடம் டவர்களையும், ஃபைபர் சொத்துகளையும் ரூ.30,000 கோடிக்கு விற்க ஒப்பந்தம் மேற்கொண்டது. இது ஸ்பெக்ட்ரம் விற்பனையில் இருந்த எதிர்பார்ப்பைவிட மிக அதிகமாகும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

நன்றி: பிசினஸ் ஸ்டேண்டர்டு

தமிழில்: பிரகாசு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017