மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் - 20

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் - 20

நாடாளுமன்றமும் நீதிமன்றமும்!

தமிழ்நாடு பார் கவுன்சிலின் முன்னாள் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ஆர்.கே.சந்திரமோகன், வழக்கறிஞர்களுக்கான பிரச்னைகள் பற்றியும், வழக்கறிஞர் சமூகத்துக்கான பிரச்னைகள் பற்றியும் அதற்குத் தீர்வு கண்ட விதம் பற்றியும் மின்னம்பலம் மூலம் வாசகர்களிடம் தொடர்ந்து பகிர்ந்துவருகிறார்.

வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் யார் வாக்களிக்கலாம், யார் வாக்களிக்க முடியாது என்பது பற்றியெல்லாம் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. வழக்கறிஞர்கள் தங்கள் கல்விச் சான்றிதழைச் சரிபார்ப்புக்காகப் பதிவு செய்ய வேண்டும் என்று புதிய விதிமுறைகள் புகுத்தப்பட்டன. தனியார் சட்டக் கல்லூரிகள் முறைகேடாக சட்டப் பட்டப் படிப்புகள் நடத்துவதாகவும் அதை முறைப்படுத்த வேண்டும் என்றும் புகார்கள் எழுந்தன. இவ்வாறு வழக்கறிஞர் யார், அவர் முறைப்படி படித்த வழக்கறிஞர் தானா என்ற விவாதங்கள் எல்லாம் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கும் நிலையில்தான்...

அகில இந்திய பார் கவுன்சில் தலைவரான மனன் மிஸ்ராவுக்கு பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞரான உபாத்யாயா என்பவர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

அது என்னவென்றால், ‘நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். அவர்கள் அரசிடம் ஊதியம் பெறுபவர்கள். எனவே, அவர்கள் நீதிமன்றங்களில் வழக்கறிஞர் தொழிலை செய்ய அனுமதிக்கக் கூடாது’ என்பதுதான்.

மேலும், ‘இந்திய வழக்கறிஞர் சங்கச் சட்டம் 49ஆம் பிரிவு அரசிடம் ஊதியம் பெறும் ஊழியர்கள் வழக்கறிஞராக நீதிமன்றத்தில் பணிபுரிவதைத் தடை செய்திருக்கிறது. ஏற்கெனவே 1996ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘நீதிமன்றச் சட்டங்களின்படி ஒரு மருத்துவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாதாடக் கூடாது. ஒருவேளை அவர் சட்டம் படித்திருந்து மருத்துவப் பணியிலிருந்து முறையாக விலகிவிட்டுதான் வழக்கறிஞராகப் பணி செய்ய முடியும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறை அரசு ஊழியர்களான மக்கள் பிரதிநிதிகளுக்கும் வேண்டும்’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதை விசாரிக்க ஒரு குழு அமைத்துள்ளார் பார் கவுன்சில் தலைவர் மனன் மிஸ்ரா.

இந்த விவகாரம் பற்றி ஆர்.கே.சந்திரமோகனிடம் கேட்கும்போதுதான், தான் பார் கவுன்சில் தலைவராக இருந்தபோது எம்.பிக்களாக இருக்கும் வழக்கறிஞர்களைக் கூட்டி டெல்லியில் தனி கூட்டம் நடத்திய அந்த முக்கியமான நிகழ்வை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“நான் பார் கவுன்சில் தலைவராக இருந்தபோது நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் இருக்கும் எம்.பிக்களில் வழக்கறிஞர்களாக இருப்பவர்களை மட்டுமே அழைத்து டெல்லியில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். அநேகமாக 2007ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தியா ஹேபிடட் சென்டர் என்ற இடத்தில் அந்தக் கூட்டம் நடந்தது.

அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூட்டம். இந்தக் கூட்டத்தில் அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த முக்கியமான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். அப்போது சபாநாயகராக சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள் பதவி வகித்தார். அவர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். எல்.கே.அத்வானி, மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவ், ரவிசங்கர் பிரசாத் போன்ற வழக்கறிஞர்களான எம்.பிக்கள் சுமார் 115 பேர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். பிரபலமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அடிப்படையில் வழக்கறிஞர்கள் என்ற விவரம் எங்களுக்கு அந்தக் கூட்டம் நடத்தும்போதுதான் தெரிந்தது.

அந்தக் கூட்டத்தில் நாங்கள் இந்தியாவில் வழக்கறிஞர்களுக்கான நலத்திட்டங்கள், உரிமைகள் பற்றி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும், விவாதிக்க வேண்டும், புதிய நலத்திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்று எம்.பி.க்களாக இருக்கும் வழக்கறிஞர்களிடம் அழுத்தமான கோரிக்கை வைத்தோம். குறிப்பாக வழக்கறிஞர்களுக்கான இன்ஷூரன்ஸ் திட்டத்தை இந்தியா முழுமைக்குமாகச் செயல்படுத்த கோரினோம். நாட்டின் முக்கிய பிரச்சினையான நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்கப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு முக்கியமான ஆலோசனைகளைத் தெரிவித்தோம்.

அதாவது ஒட்டுமொத்த இந்திய வழக்கறிஞர் சமூகத்துக்காக நாடாளுமன்றங்களில் உறுப்பினர்களாக இருக்கும் வழக்கறிஞர்கள் வாதாட வேண்டும் என்பதற்காகவே இந்தக் கூட்டம். அது பெருமளவிலான பயனைத் தந்தது. இதுபோன்ற ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் அடிக்கடி நடத்தினால்தான், வழக்கறிஞர் சமூகத்துக்கும் அரசுக்குமான ஒரு பாலமாக வழக்கறிஞர்களாக இருக்கும் எம்.பி.க்கள் செயல்பட முடியும்.

ஆனால்... மக்கள் பிரநிதிகள் வழக்கறிஞர்களாக இருக்கக் கூடாது என்பது அபத்தமான வாதம். ஆரோக்கியமற்ற வாதம். அதை நாங்கள் என்றும் ஏற்றுக்கொள்ள மாட்டோம், எப்போதும் எதிர்ப்போம் என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன். ஏனெனில் நாடாளுமன்றம் செல்பவர்கள் நீதிமன்றம் செல்லக் கூடாது என்று சொல்வது அடிப்படையற்ற வாதம்.

இன்னும் சொல்லப் போனால் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் வழக்கறிஞர்கள்தான் ஒட்டுமொத்த வழக்கறிஞர்களுக்கான குரலாக நாடாளுமன்றத்தில் முழங்க முடியும்.

எனவே நாங்கள் அன்றைக்கு நடத்திய கூட்டம் போன்று தொடர்ந்து நடத்தினால் வழக்கறிஞர் சமூகத்தின் பல சிக்கல்களைத் தீர்க்க முடியும். நாடாளுமன்றத்துக்கும் நீதிமன்றத்துக்கும் ஆரோக்கியமான ஒரு தொடர்பு இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார் மூத்த வழக்கறிஞரான ஆர்.கே.சந்திரமோகன்.

அடுத்து இன்னொரு முக்கியமான பிரச்சினை பற்றி பேசப் போகிறோம். காக்கிச் சட்டைகளுக்கும் கறுப்பு கோட்டுகளுக்கும் அப்படி என்னதான் வாய்க்கால் தகராறு?

விவாதிப்போம்.

(விளக்கு ஒளிரும்)

இருட்டறையில் ஒரு விளக்கு!-1

இருட்டறையில் ஒரு விளக்கு!-2

இருட்டறையில் ஒரு விளக்கு!-3

இருட்டறையில் ஒரு விளக்கு!-4

இருட்டறையில் ஒரு விளக்கு!-5

இருட்டறையில் ஒரு விளக்கு!-6

இருட்டறையில் ஒரு விளக்கு!-7

இருட்டறையில் ஒரு விளக்கு!-8

இருட்டறையில் ஒரு விளக்கு!-9

இருட்டறையில் ஒரு விளக்கு!-10

இருட்டறையில் ஒரு விளக்கு!-11

இருட்டறையில் ஒரு விளக்கு!-12

இருட்டறையில் ஒரு விளக்கு!-13

இருட்டறையில் ஒரு விளக்கு!-14

இருட்டறையில் ஒரு விளக்கு!-15

இருட்டறையில் ஒரு விளக்கு!-16

இருட்டறையில் ஒரு விளக்கு!-17

இருட்டறையில் ஒரு விளக்கு!-18

இருட்டறையில் ஒரு விளக்கு!-19

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017