மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

சிறப்புக் கட்டுரை: தினகரனின் வெற்றி என்ன சொல்கிறது?

சிறப்புக் கட்டுரை: தினகரனின் வெற்றி என்ன சொல்கிறது?

த.நீதிராஜன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்றுள்ள வெற்றியை எப்படிப் புரிந்துகொள்வது என்கிறார்கள் எனது நண்பர்கள். ஊழல் நாற்றம் ஏன் பெரும்பாலான மக்களின் மூக்குக்குத் தெரிவதில்லை என்று குழம்புகிறார்கள் அவர்கள்.

காமராஜர் - கக்கன் காலத்தில் நேர்மையான அரசியலின் பூமிதானே இது? எங்கே போனது அது? நேர்மை அரசியல் எங்கே போனது?

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகியதும் அவை, ஆட்சி மாற்றத்துக்கே காரணமாக அமைந்ததும் வரலாறு.

திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களைப் பற்றி விசாரிக்க 1976இல் அமைக்கப்பட்டது சர்க்காரியா கமிஷன். விஞ்ஞானரீதியான ஊழல் நடந்திருக்கிறது என்றது அது.

எம்.ஜி.ஆர் ஆட்சியின் ஊழல்கள் பற்றி கருணாநிதி பட்டியல் வாசித்தார். பாத யாத்திரை போனார். பத்தாண்டுகளுக்கும் மேல் இடைவிடாத போராட்டம் நடத்தினார்.

ஜெயலலிதா ஆட்சி கால ஊழல்களை “விஞ்ஞானரீதியற்ற” முறையில் செய்யப்பட்ட ஊழல்கள் என்றும் சொல்லலாம். அதிமுக ஆட்சிக் கால ஊழல்கள்தான் ஜெயலலிதாவின் ஆவியையும் தற்போது சிறையில் அடைத்துள்ளன.

ஆதரவாளர்களுக்குத் தாராளமாக உதவிகள் செய்த எம்.ஜி.ஆரின் இயல்பு அவரது ஆட்சியின் ஊழலுக்கான நியாயப்படுத்தலாக மக்களிடம் பதிந்திருக்கலாம். ஊழலை எதிர்க்காத அல்லது அதில் இணைந்துகொண்ட ஆளுமைகளை எம்.ஜி.ஆரின் தாக்கம் உருவாக்கியிருக்கிறது.

ஊழல் ஆதரவு மனப்பான்மையின் வேர்

இன்று அரசியல்வாதிகளில் பலரின் வீடுகளுக்குத் தொகுதி மக்கள் சென்று ஒரு கல்யாணப் பத்திரிகை வைத்தால் குறைந்தது ஐயாயிரம் ரூபாய் மொய் உத்தரவாதம். அவர்களின் வீட்டு வாசலில் ஆம்புலன்ஸ் வண்டி நிற்கும். மக்களின் அழைப்புக் குரலுக்கு ஏற்ப அது ஓடி ஓடி சேவை செய்யும்.

பணக்காரர்களிடம் வாங்கி ஏழைகளுக்குச் செலவழிக்கும் இந்த ராபீன்ஹூட் ஊழல் பாணி அரசியலின் தத்துக் குழந்தைதான் டி.டி.வி.தினகரன் என்று சொல்லலாமா?

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும் என்ற நிலை வந்தது. ஜனநாயகமும் அதிகாரமும் பரவலாகியது உண்மைதான். அதே நேரத்தில் ஊழலின் பிரமாண்டம் விரிவடைந்திருப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.

அது நடந்து 15 வருடங்கள் இருக்கும். பல்லாவரம் நகராட்சி தேர்தலில். ஒரு வேட்பாளர், “வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறேன். ஜெயித்தால் நாலு காசு சம்பாதித்துக்கொள்வேன்” என்று வீடுவீடாகக் காலில் விழுந்தார். செய்தி சேகரிக்கையில் எனக்குள் பதிந்த காட்சி இது.

உள்ளாட்சி உறுப்பினர்களுக்கும் மக்களுக்குமான உறவைப் பாருங்கள். ரேஷன் கார்டோ, சாதிச் சான்றோ இரண்டு நாள்கள் லீவு போட்டு அலைய வேண்டும். வேறு ஒருவர் நமக்காக இதை செய்து தந்தால் அவருக்கு ஐந்நூறோ ஆயிரமோ கொடுத்துவிடலாம் என்பது மக்களின் பொதுவான மனநிலை.

கீழ் மட்ட ஊழலோடு மக்கள் செய்கிற இந்த சமரசம்தான் மேல்மட்ட ஊழலை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத மனப்பான்மைக்கான வேர். இதுதான் தினகரன் வெற்றி எனும் ரகசியத்தின் சாவியாக இருக்க வேண்டும்.

ஊழல்: ஒதுங்கலும் எதிர்ப்பும்

ஊழலற்ற அரசியலே தமிழகத்தில் இல்லையா என்று கேட்பீர்கள். இருக்கத்தான் செய்கிறது. இறுகிப்போன கட்டமைப்பாக ஊழல் நடைமுறைகள் தற்போது மாறியிருக்கின்றன. இந்த நடைமுறைகளில் ஒருவர் பங்கேற்கலாம் அல்லது ஒதுங்கி நிற்கலாம். அதற்கு மாறாக அதை எதிர்த்தால் மதுரையின் லீலாவதி கதிதான்.

ஊழல் இல்லாத அரசியல்வாதிகள் என்றும் நேர்மையான அதிகாரிகள் என்றும் சிலரை அழைப்போம். அவர்கள் யார்? ஊழல் நடைமுறைகளில் இருந்து ஒதுங்கி நிற்பவர்கள்தான். அதை எதிர்த்து நிற்பவர்கள் அல்ல.

சென்னையில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் எஸ்.கே.மகேந்திரன். கம்யூனிஸ்ட்காரர். “முன்னாடி இருந்த எம்.எல்.ஏ மாதிரியே நீயும் லஞ்சப் பணத்தை மாதாமாதம் பிரிச்சுக்கொடுத்திருண்ணா” என்று அவரிடம் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் கூறியிருக்கிறார்கள்.

“கம்யூனிஸ்ட்கள் இதெல்லாம் வாங்க மாட்டோம்பா” என்றிருக்கிறார் அவர்.

“நீ வாங்கலேன்னா பரவால்லைண்ணா. உம் பங்கையும் சேர்த்து நீயே பிரிச்சுக் குடுத்திரு நாங்களா பிரிச்சுகிட்டா சண்டை வரும்” என வற்புறுத்தியிருக்கிறார்கள். பொதுக்கூட்ட மேடைகளில் இதைச் சொல்லிக் கிண்டல் செய்தார் மகேந்திரன்.

இன்னொருவர் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்த தேவி. அவரும் கம்யூனிஸ்ட்தான். அவரது தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் “உனது பங்கை வாங்கிட்டு போ” என்று சொல்லி வற்புறுத்தினார். வாங்க மறுத்த தேவிக்கும் வற்புறுத்திய எம்.எல்.ஏ.வுக்கும் நடந்த சண்டை நக்கீரன் இதழில் சிறப்புக் கட்டுரையாக வந்தது.

கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்ல. வேறு சில கட்சிகளிலும் ஊழலிலிருந்து ஒதுங்கி நின்ற அரசியல்வாதிகள் தமிழகத்தில் இருக்கவே செய்கின்றனர். ஆனால், இவர்கள் எல்லாம் விதிவிலக்குகள். ஊழல் அரசியல்வாதிகள் எண்ணிக்கைதான் இங்கே அதிகம்.

தமிழகத்தின் ஊழல் அரசியலுக்கு ஊடகங்களும் காரணம். ஊடகங்கள் அதிமுக ஆட்சியில் ஊழல் என்று பேசும். பிறகு திமுக ஆட்சியில் ஊழல் என்று பேசும். ஆனால், அமைப்புரீதியாக வளர்ந்து இறுகிப்போயிருக்கும் ஊழலைப் பேசாது.

பணநாயகத்தின் வெற்றியா?

தினகரனின் இருப்பிடங்கள்மீது மத்திய அரசு சமீபத்தில் நடத்திய வருமான வரிச் சோதனைகளை அரசியல் கட்சிகள் கண்டித்தன. மார்க்சிஸ்ட் கட்சியும் கண்டித்தது. அரசியல்ரீதியான பழிவாங்கல் நடவடிக்கை என்ற மற்ற கட்சிகளின் கருத்தை அது பின்தொடர்ந்தது. ஏற்கெனவே ஊழலுக்கு இணங்கிய மனப்பான்மையோடு தமிழக மக்கள் இருந்தனர். அவர்களின் மனநிலையை அரசியல் கட்சிகளின் தினகரன் ஆதரவு அறிக்கைகள் மேலும் நியாயப்படுத்தின. ஊழல் கறை படிந்த மற்ற அரசியல் கட்சிகள் தினகரனை ஆதரிப்பதைக்கூட மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஒப்பீட்டளவில் நேர்மையான ஓர் அரசியல் கட்சி ஊழலுக்கு எதிரான தனது குரலின் வீரியத்தைக் குறைப்பதும் சமூக மனப்பான்மையில் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆர்.கே.நகரில் பணநாயகம் வெற்றி பெற்றுவிட்டது என்று மட்டும் பேசிவிட்டு அதைக் கடந்துவிட முடியாது.

தினகரனின் வெற்றியில் வேறு சில அம்சங்களும் உள்ளன. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அரசாங்கச் செயல்பாடுகள் வீரியமில்லாமல் போனது, மாநில அரசை மத்திய அரசு ஆட்டிவைக்கும் போக்கு, தினகரனை விரட்டி விரட்டி வேட்டையாடியது, தினகரன் அதை அசராமல் எதிர்கொண்டது ஆகியவை உதவியிருக்கலாம். இரட்டை இலைச் சின்னத்தையும் கட்சிப் பெயரையும் ஆளும் அணியினருக்குக் கிடைக்கச் செய்வதில் பாஜக செய்துள்ள தந்திரங்கள் குறித்த ஐயங்கள் எல்லாம் மக்களிடம் தினகரன் மீது அனுதாபத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவும் முன்முயற்சிகள் எதுவும் இல்லாமல் தானாக வந்து வெற்றி நமது மடியில் விழுந்துவிடும் என்று அண்ணாந்து பார்க்கிற மனநிலையில் இருந்ததும் தினகரனுக்கு உதவியிருக்கிறது.

இப்படிப்பட்ட காரணங்களால் வெற்றி பெற்றிருக்கும் தினகரன், புதிய உதயமா, நீர்க்குமிழியா என்பது தெரிவதற்கு ஒன்றும் ரொம்பக் காலம் ஆகாது. பொறுத்திருப்போம்.

(த.நீதிராஜன், பத்திரிகையாளர், காயிதேமில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected]).

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017