மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

சிறப்புக் கட்டுரை: ஃபேஸ்புக்கிலும் ஆதார்தான் ஆதாரமா?

சிறப்புக் கட்டுரை: ஃபேஸ்புக்கிலும் ஆதார்தான் ஆதாரமா?

- சிவா

கடந்த சில தினங்களாக ஃபேஸ்புக்கில் புதிய அக்கவுன்ட் திறக்க லாக்-இன் செய்தவர்களுக்கு அதிர்ச்சியான தகவல் காத்திருந்தது. “உங்கள் நண்பர்கள் சுலபமாக உங்களை அறிந்துகொள்ள ஆதார் கார்டில் இருக்கும் பெயரைப் பயன்படுத்துங்கள்” என்ற அறிவிப்பு, பெயரைப் பதிவு செய்யும் விண்டோவில் காணப்பட்டது. கடந்த சில மாதங்களாக ஆதார் அட்டையால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய மக்கள் ஃபேஸ்புக்கும் இதற்கு விதிவிலக்கல்ல என்று கொதித்துப் போய்விட்டனர். விவரம் அறிந்து ஊடகங்களும், நெட்டிசன்களும் ஃபேஸ்புக்கைக் குறிவைத்து நடத்திய விவாதங்களினால் ஃபேஸ்புக்கின் தயாரிப்பு மேலாளர் டாய்ஷி ஒஷினோ விளக்கமளித்துள்ளார்.

டாய்ஷி கொடுத்துள்ள விளக்கத்தில் “ஆதார் கார்டின் தகவல்கள் கட்டாயம் என்று நாங்கள் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. உங்கள் நண்பர்கள் சுலபமாக அறிந்துகொள்ள உண்மையான பெயரைப் பயன்படுத்துங்கள் என ஓர் அறிவிப்பு மட்டுமே இருக்கிறது. மிகச் சிறிய அளவில் நடத்தப்பட்ட அந்த சோதனை தற்போது முடிந்துவிட்டது” என்று கூறியிருக்கிறார்.

இதுபோல ஆதார் தகவலைக் கேட்ட வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நிலைதான் தற்போது ஃபேஸ்புக்குக்கு ஏற்பட்டுள்ளது. யாருமே அவர்களது ஆதார் படிவத்திலிருக்கும் பெயர்களைத் தர சம்மதிக்கவில்லை. மாறாக, Free Basics என்ற பெயரில் இந்திய மக்களின் இணைய சேவைப் பயன்பாட்டைக் கட்டுக்குள் கொண்டுவர நினைத்தவர்கள் எப்படி திருப்பி அடிக்கப்பட்டார்களோ அப்படியே அடிக்கப்பட்டிருக்கிறது ஃபேஸ்புக். ஃபேஸ்புக்கின் இந்த முயற்சியைப் பாதிக்கும் காரணிகள் பல அதன் அடிப்படையிலேயே இருக்கின்றன.

நம்பகத்தன்மை

ஃபேஸ்புக்கை நம்பி எவ்விதத் தகவலையும் நாம் கொடுக்க முடியாது. ஃபேஸ்புக் தன்னை மக்களுக்கான சமூக ஊடகம் என்று முன்நிறுத்திக் கொண்டாலும், அது முழுக்க முழுக்க பிசினஸ் சார்ந்த ஒரு தளம் என்பதை அதனாலேயே கூட மறுக்க முடியாது. இதை நிரூபிக்கும் தரவுகளை ‘ஃபேஸ்புக் யூசர்களின் தகவல்கள் பயன்படுத்தப்படும் விதம்’ என்ற அதன் அறிவிப்பிலேயே கொடுத்திருக்கிறது.

ஒரு ஃபேஸ்புக் யூசர் பதிவு செய்யும் வார்த்தைகள், போட்டோக்கள், வீடியோக்கள், தனிப்பட்ட முறையில் இன்பாக்ஸில் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள், உணவு உண்ணும்போது குறிப்பிடப்படும் இடங்கள் என அனைத்தையும் ஃபேஸ்புக் சேகரிக்கிறது. இவற்றைச் சேகரிப்பதன் மூலம் ஒருமுறை நாம் சென்ற இடத்துக்கு அருகில் திரும்பச் செல்லும்போது ‘இந்த இடத்துக்கு நீங்கள் போகிறீர்களா?’ என்று கேட்டு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் விளம்பர நிறுவனமாகவே ஃபேஸ்புக் மாறுகிறது. முதலில் இணையதள ஷாப்பிங் நிறுவனங்களுக்கு உதவிக்கொண்டிருந்த ஃபேஸ்புக் மேலே குறிப்பிட்டதுபோல அனைத்து விதமான தனியார் நிறுவனங்களுக்குமான விளம்பர ஆயுதமாக மாறியது. இது இன்று நேற்றல்ல ஃபேஸ்புக் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அதன் ஆயுதமாக இருக்கிறது.

தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் (ஹார்வார்டு பல்கலைக்கழக மாணவர்கள்) இயங்கிய ஃபேஸ்புக், வளர்ச்சியடைந்த காலத்தில் ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் இடம்பெற்றது. குறிப்பிட்ட நிறுவனத்தின் மொபைலிலிருந்து இத்தனை யூசர்கள் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். எனவே, ஃபேஸ்புக் அப்ளிகேஷனை உங்கள் மொபைல் விற்பனையின் போதே Defaultஆக வைத்துவிடுங்கள் எனத் தொடங்கியது அந்த விளம்பரம்.

ஆதாரின் குறைகளும்... ஃபேஸ்புக்கின் கட்டுப்பாடுகளும்...

கறையான் உருவாக்கிய புற்றில் பாம்பு குடியேறிய கதையாகத்தான் ஃபேஸ்புக் - ஆதார் கூட்டணி இருக்க முடியும். ஃபேஸ்புக் தன்னை மிகப் பெரிய நிறுவனமாக வளர்த்துக்கொள்ள, சகட்டு மேனிக்கும் ஆள் சேர்த்தது. ஓர் அக்கவுன்ட் உருவாக்க அத்தனை பெரிய மெனக்கெடல்கள் ஒரு காலத்தில் இல்லை. ஆனால், இப்போது நம்பிக்கைக்குரிய நிறுவனமாகத் தன்னை முன்னுறுத்த, ஒரிஜினல் அக்கவுன்ட்டுகளையும், தொடர்ந்து இயங்கக்கூடிய மக்களையும் மட்டுமே வைத்துக்கொண்டு தேவையில்லாதவர்களை நீக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. இதன் பொருட்டு அனைவரிடத்திலும் அடையாள அட்டையைச் சமர்ப்பிக்குமாறு தொடர்ந்து கேட்டு வருகிறது ஃபேஸ்புக். அப்படி யூசர்களால் சமர்ப்பிக்கப்படும் அடையாள அட்டையின் உண்மைத்தன்மை குறித்து எவ்வித உறுதிபடுத்துதலையும் ஃபேஸ்புக்கில் செய்ய வாய்ப்பில்லை.

உதாரணத்துக்கு, டிரைவர் லைசென்ஸ் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை ஃபேஸ்புக்கில் சமர்ப்பித்தால் ஆர்.டி.ஓ அலுவலகத்திலோ, அரசாங்கத்திடமோ அந்த அடையாள அட்டையின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் எண்ணம் ஃபேஸ்புக்குக்கு இல்லை. நாளையே ஏதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டு குறிப்பிட்ட யூசரின் ஃபேஸ்புக் தகவல்கள் மீட்டெடுக்கப்பட்டால், அந்த யூசர் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகச் சொல்லி மேலும் ஒரு புகார் கொடுத்துவிட்டு ஃபேஸ்புக் நகர்ந்துகொள்ளும். அத்துடன், சமீபத்தில் ஆப்பிளில் அறிமுகப்படுத்தப்பட்ட Face ID எனப்படும் முகத்தை ஸ்கேன் செய்து லாக்-இன் செய்துகொள்ளும் விதத்தில் ஃபேஸ்புக் தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்திய நாட்டில் கொடுக்கப்படும் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மக்களின் முகம் எப்படியிருக்கிறது என்பது தெரியும். பத்து ஆதார் கார்டை வைத்துவிட்டு, போட்டோவைப் பார்த்து ஆதார் அட்டையைக் கண்டுபிடிக்கச் சொன்னால் பத்து வருடங்கள் எடுத்துக்கொள்ளும் அளவுக்குத்தான் அதில் முகங்கள் பதிந்திருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் ஃபேஸ்புக் அந்த போட்டோக்களை அடையாளமாக எடுத்து என்ன செய்யுமென்பது மில்லியன் லைக்ஸ் கேள்வியானால், அவர்களுக்கு போட்டோக்கள் முக்கியமல்ல என்பது பதிலாகிறது. அதிலிருக்கும் உண்மையான தகவல்களே தேவை.

ஃபேஸ்புக் அக்கவுன்ட் உருவாக்க மொபைல் நம்பர் இருந்தால்போதும் என்ற நிலையிலிருந்து, இன்று அடையாள அட்டை, நண்பர்களின் அங்கீகாரம் வரை ஃபேஸ்புக் கேட்கிறது. இதுபோலவே ஆதாரின் உண்மைப் பெயரைக் குறிப்பிடச் சொல்லிக் கேட்கும் ஃபேஸ்புக், நாளை ஆதார் அட்டையையே கேட்டாலும் ஆச்சர்யமில்லை. ஏன், அரசாங்கமும் அதற்கு உதவ வாய்ப்பு இருக்கிறது. Free Basics என்ற திட்டம் ஃபேஸ்புக்கின் மூலமாக இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்துக்கும் இணையதளச் சேவையைக் கொண்டுசெல்வதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ஒவ்வொரு பகுதி மக்களும் எதைப்பற்றி அறிந்தால் போதும் என அந்நிறுவனம் நினைக்கிறதோ, அதுமட்டுமே காட்சிப்படுத்தப்படும் என்ற நிலை இருந்ததால் மொத்தமாக எதிர்க்கப்பட்டது. அதுபோலவே, இப்போதும் ஆதார் கார்டின் பெயர் கேட்கப்பட்டதற்கே ஃபேஸ்புக்கின் தயாரிப்பு மேலாளர் பதில் சொல்லும் அளவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017