மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

ஆளுநர் ஆய்வு: ஆதரவும்! எதிர்ப்பும்!

ஆளுநர் ஆய்வு: ஆதரவும்! எதிர்ப்பும்!

தமிழக ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோகித் நேற்று (நவம்பர் 14) கோவையில் வளர்ச்சிப் பணிகள் குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருடன் ஆய்வு நடத்தினார். தமிழக அமைச்சர்கள் கூட இல்லாமல் நடந்த இந்த ஆய்வு ஆளுநரின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று கூறி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. இதுகுறித்து தலைவர்கள் கூறிய கருத்துகளையும், அறிக்கைகளையும் காண்போம்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு நடத்தியிருப்பது, தொடர்ந்து மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையாக அமைந்துள்ளது, இது மாநில உரிமைகளில் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் வேதனையளிக்கிறது. அந்த நடவடிக்கையை இன்று திருப்பூர் மாவட்டத்தில் மேலும் தொடர்கிறார் என்பது கவலையளிக்கிறது.

சுயாட்சி குரல் கொடுத்து வரும் தமிழகத்தில் மத்திய பாஜக அரசும், ஆளுநரும் போட்டி போட்டுக்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்ளும் இந்த அரசியல் சட்டவிரோத முயற்சிக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.முழுக்க முழுக்க மத்திய அரசின் ஏஜெண்டாக, அலங்காரப் பதவியில் அமர்ந்திருக்கும் ஆளுநர் மாநில நிர்வாகத்தில் தலையிட்டு ஆய்வு செய்வது என்பது மத்திய - மாநில அரசுகளிடையே நிலவும் உறவுக்கும் உகந்தது அல்ல.

எனவே அரசியல் சட்டம் அளிக்காத அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஏற்கனவே திக்குத்தெரியாத காட்டில் நிற்கும் அரசு நிர்வாகத்தை மேலும் சிதைத்து, பொறுப்புள்ள அரசு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்குப் பேரிடரை ஏற்படுத்தி விட வேண்டாம் என்றும், இது போன்ற ஆய்வுகளை உடனடியாகக் கைவிடுமாறும் தமிழக ஆளுநரைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறுகையில், "ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் இந்த ஆய்வுகள் அதிர்ச்சியளிக்கிறது" என்றார். இதற்குப் பதிலளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், "ஆளுநரின் இந்த ஆய்வை வரம்பு மீறிய செயலாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆலோசனை நடத்தவே ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூற முடியாது" என்றார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த கருத்துக்கு டிடிவி தினகரன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில், " இதுபோன்ற ஆய்வுகளை அமைச்சர்கள் வரவேற்பது வெட்கக்கேடானது. இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய எடப்பாடி பழனிச்சாமி சுயநலத்தோடு மட்டுமே உள்ளார். பழனிச்சாமியின் அரசு தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, மாநிலத்தின் நலன்களை அடகு வைக்கத் துளியும் தயங்காது என்பதையே இந்த ஆய்வு உணர்த்துகிறது. மாநில சுயாட்சியை எல்லா நிலைகளிலும் உறுதிப்படுத்துவதே அதிமுகவின் கொள்கை. துணை நிலை ஆளுநரின் தலையீட்டால் எப்படி புதுச்சேரியில் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்ததோ, அதே நிலை தமிழகத்திற்கும் வரலாம். அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அரசு நிர்வாகத்தில் ஊடுருவும் பிஜேபியின் பாணி போல இது" என்று கூறியுள்ளார்.

ஒரு அரசையே உருவாக்கக் கூடியவர் ஆளுநர். அப்படிப்பட்டவர் அரசு அதிகாரிகளைச் சந்தித்து ஆய்வு நடத்தியது நல்லது தான். ஆய்வின் போது தவறு இருப்பதாக அவர் கூறினால் அதைத் திருத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கும். ஆளுங்கட்சியைப் பற்றி குறை சொல்வது தான் எதிர்கட்சிகளின் வேலை. ஆளுநர் யாரையும் பார்க்காமல் சென்று விட்டால் அதையும் குற்றம் சொல்வார்கள். ஆளுநர் ரப்பர் ஸ்டாம்ப் போலச் செயல்படுகிறார் என்று குறை கூறுவார்கள் என்று அதிமுக சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜ் கூறியுள்ளார். அதிமுக எம்.எல்.ஏவின் கருத்துக்கு மாறாக, "ஆளுநரின் செயல்பாடுகள் மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளதாகவும், ஜெயலலிதா இருந்திருந்தால் ஆளுநர் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி இருக்க முடியுமா" என்றும் அதிமுக எம்.பி அன்வர் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர்களை வைத்து ஆட்சி செய்ய மத்திய அரசு முயன்று வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“அரசில் ஆளுநர் தலையிடும் நோய் தமிழகத்துக்கும் பரவியுள்ளது. மாநில அரசை கட்டுப்படுத்த ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களை மத்திய பாரதிய ஜனதா அரசு பயன்படுத்துகிறது” என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆளுநர் ஆய்வு செய்தது தவறில்லை என குறிப்பிட்டுள்ள அவர் தன்னிச்சையாக முடிவு எடுப்பது தான் தவறு என தெரிவித்துள்ளார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017