மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

இதுதான் ’ரியல்’ ராகுல்

இதுதான் ’ரியல்’ ராகுல்

’குஜராத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இயங்கும் ராகுலின் செயல்பாடுகளே அவரது உண்மையான முகம்’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார் காங்கிரஸை சேர்ந்த சாம் பிட்ரோடா. ‘பப்பு என்பது பணம் வாங்கிக்கொண்டு இயங்கும் ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களால் உண்டாக்கப்பட்ட பிம்பம்’ என்றிருக்கிறார்.

குஜராத் சட்டமன்றத் தேர்தலையொட்டி, அம்மாநிலம் முழுவதும் சுற்றிச்சுழன்று பிரசாரம் செய்து வருகிறார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி. அவருக்கு எதிராக பாஜக பிரசாரக்குழு தயார் செய்த விளம்பரப்படத்தில் ‘பப்பு’ என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. ஆனால், அம்மாநில தேர்தல் ஆணையம் இதற்கு ஒப்புதல் தரவில்லை. ‘பப்பு’ (சிறுவன்) என்ற வார்த்தையானது, ராகுல் என குறிப்பிடாமல் அவரைக் கிண்டல் செய்வதற்காக சமூக வலைதளங்களில் பயன்படுத்தப்படும் பெயர் ஆகும். இதனையடுத்து, அந்த வார்த்தைக்குப் பதிலாக வேறு வார்த்தையை மாற்றப்போவதாக அறிவித்திருக்கிறது பாஜக தரப்பு.

இந்த விவகாரம் சர்ச்சையாக மாறிவரும் நிலையில், ‘தற்போது தேர்தல் பிரசாரத்தில் மிகத் தீவிரமாக இயங்குவதுதான் ராகுலின் உண்மையான முகம். அவர் பப்பு அல்ல’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார் காங்கிரஸை சேர்ந்த சாம் பிட்ரோடா. காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் பிரிவுக்கான தலைவராக இருந்துவரும் இவர், மறைந்த ராஜிவ்காந்தியின் நெருங்கிய நண்பர்.

சமீபத்தில் ராகுல் அமெரிக்கப்பயணம் மேற்கொண்டது முதல் அங்குள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாடியது வரை, அனைத்தையும் திட்டமிட்டவர் இவர்தான். அதோடு, தற்போது குஜராத்தில் காங்கிரஸ் மேற்கொண்டுவரும் பிரசாரத்திற்கான செயல்திட்டங்களையும் இவரே வகுப்பதாகக் கூறப்படுகிறது.

”பப்பு என்பது பணம் வாங்கிக்கொண்டு கருத்து சொல்லும் ஊடகங்களும் சமூக ஊடக அன்பர்களும் உருவாக்கிய செயற்கையான படைப்பு. அதனால், எந்தவித சார்பும் இல்லாத மக்களிடம் ராகுலை பேசவைக்க நினைத்தோம். ரியல் ராகுல்காந்தி எப்படியிருப்பார் என்று உலகிற்கு உணர்த்த விரும்பினோம். பெர்க்லி பல்கலைகழகத்தில் அவரைப் பேசவைத்தோம். இப்போது ராகுலின் எண்ணங்களை, அவரது தொலைநோக்குப் பார்வைகளைப் புரிந்து, இந்த உலகம் வியக்கிறது” என்றிருக்கிறார் இவர்.

’பெர்க்லியில் நடந்த கூட்டம் திட்டமிடப்பட்ட ஒன்று. ஆனால், அங்கு பேசியவர்கள் யாரும் முன்கூட்டியே திட்டமிட்டு பேசவில்லை’ என்கிறார் இவர். குஜராத் பிரசாரத்தின்போது, ராகுல் பல கோவில்களுக்குச் சென்று வருகிறார். இதனை பாஜக பலமாக விமர்சித்துவருகிறது. ‘இது மிதமான இந்துத்வா பாணியா’ என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்று பதிலளித்திருக்கிறார் பிட்ரோடா.

‘சூரத் வணிகர்களுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அரசின் மிரட்டலால், அவர்கள் பின்வாங்கிவிட்டனர். இது அபாயகரமானது. ராகுலுக்கும் மதம் உண்டு. ஆனால் அவர் எல்லோரையும் நேசிப்பவர்” என்றிருக்கிறார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017