மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

காங்கிரஸ் ஏன் ஊமையாக இருக்கிறது?

காங்கிரஸ் ஏன் ஊமையாக இருக்கிறது?

’காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்த திட்டங்களுக்கு யார் யாரோ போட்டி போட்டு உரிமை கொண்டாடிக் கொண்டிருக்க... அவற்றுக்கு உண்மையாக சொந்தம் கொண்டாட வேண்டிய காங்கிரஸ் கட்சி ஏன் ஊமையாக இருக்கிறது?’ என மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை வைத்துக் கொண்டே மேடையில் கடுமையாக சாடியிருக்கிறார் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கோவா மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளருமான டாக்டர் செல்ல குமார்.

இந்திரா காந்தி நூற்றாண்டு நிறைவு விழாவும் நேரு பிறந்தநாள் விழாவும் நேற்று (நவம்பர் 14) சென்னை அம்பத்தூரில் நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய டாக்டர் செல்லகுமார்,

’’ சமீபத்தில் போலியோ ஒழிப்பு பற்றி மோடியின் சாதனையாக பாஜக விளம்பரம் வெளியிட்டது. அதை எதிர்த்து பாமக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, அன்புமணி மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோதுதான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டதாக பெருமைப்பட்டுக் கொண்டார்கள்.

ஆனால் உண்மை நிலை என்ன?

1980 களில் இரண்டு லட்சம் பேர் போலியோ நோயாளிகள் இந்தியாவில் இருந்தார்கள். பிரதமர் இந்திரா காந்தி, அவருக்குப் பின் ராஜீவ் காந்தி எடுத்த படிப்படியான சுகாதார நலத் திட்டங்களால் 2005 ஆம் ஆண்டு இந்தியாவில் போலியோ பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 2 ஆயிரமாகக் குறைந்தது. 2012 பிப்ரவரியில் குலாம் நபி ஆசாத் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது வெறும் 740 பேர்தான் போலியோவால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இதன் அடுத்த கட்டமாகத்தான் 2014 மார்ச் மாதம் போலியோ இல்லாத இந்தியா என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் இதை எங்கே சொல்லியிருக்கிறது?

மேலும்... பாமக இளைஞரணி டாக்டர் அன்புமணி மேடையில் பல்வேறு பேசுகிறார். 108 ஆம்புலன்ஸ் அவரது உள்ளத்திலே தோன்றியது போல பேசுகிறார். அதையும் நாம் வாய்மூடி மௌனியாக அமைதியாக ஊமையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எண்ணிப் பார்க்க வேண்டாமா? 108 ஆம்புலன்ஸ் திட்டம் எப்போது யாரால் கொண்டுவரப்பட்டது?

2005 ஆம் ஆகஸ்டு 15 அன்று ஆந்திரா காங்கிரஸ் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டியால் துவக்கப்பட்ட திட்டம்தான் இது.

அந்தத் திட்டத்தின் பயனைப் பார்த்த அன்றைய தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம், ‘108 ஆம்புலன்ஸ் திட்டம் ஆந்திர காங்கிரஸ் முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்டு ஏழை எளியவர்களுக்கு பயனாக இருக்கிறது. இதை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்’ என்று பரிந்துரை செய்தார்.

அதன்பிறகு கொண்டுவரப்பட்டு திட்டம்தான் 108 ஆம்புலன்ஸ் திட்டம். இது கொண்டுவரப்பட்டபோது அன்புமணி மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். மற்றபடி இதன் முன்னோடி காங்கிரஸ் முதல்வர் மறைந்த ராஜசேகர ரெட்டி என்பதை எங்கேயும் எப்போதும் தமிழக காங்கிரஸார் தலை நிமிர்ந்து சொல்ல வேண்டும்’’ என்று பேசினார் டாக்டர் செல்லகுமார்.

இப்படி இவர் பேசியபோது மேடையில் காங்கிரஸின் முன்னாள் மாநிலத் தலைவரும் அன்புமணியின் மாமனாருமான கிருஷ்ணசாமியும் அமர்ந்திருந்தார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017