மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

குறுக்கு வழியில் டாஸ்மாக்: குவியும் கண்டனங்கள்!

குறுக்கு வழியில் டாஸ்மாக்: குவியும் கண்டனங்கள்!

தேசிய நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை அமைக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஊரகச் சாலைகளாக மாற்றி டாஸ்மாக் கடை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பான வழக்கில், சண்டிகர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினைச் சுட்டிக்காட்டி தேசிய சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றிக்கொள்ளலாம் என்றும், மதுக்கடைகளைத் திறக்க அனுமதியளித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்னும் சில நாள்களில் தமிழகத்தில் புதிய மதுக்கடைகள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில் டாஸ்மாக் அமைப்பது தொடர்பான தமிழக அரசின் முடிவுக்குத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலின்

மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று 2016 சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்துவிட்டு, பல வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டனர். அதுபோல புதிதாக மதுக்கடைகளைத் திறப்பதற்காக, உச்ச நீதிமன்றம் வரை ‘குதிரை பேர’ அரசே ஓடோடிச் சென்று வாதிட்டுக் கொண்டிருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. இதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். முன்பு மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை எதிர்த்து தாய்மார்கள் தன்னெழுச்சியாகக் கடும்போராட்டம் நடத்தி வந்தனர்.

ஆனால், பெண்கள் என்றும் பாராமல் இந்த ‘குதிரை பேர’ அரசு காவல்துறையை ஏவி, காது கேட்காத அளவுக்கு அறைந்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டாலும், தாய்மார்களின் போராட்டம் தணியவில்லை. குடிமக்களின் துயரத்தையும், அவர்களின் உடல்நலத்துக்கு விளைவிக்கும் கேடுகளையும் புரிந்துகொள்ள மறுத்து இந்த அதிமுக அரசு தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

எனவே டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் முடிவை ‘குதிரை பேர’ அரசு உடனடியாகக் கைவிட்டு, ஏழை - எளிய நடுத்தரக் குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டும்.

தினகரன்

டாஸ்மாக் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகுத்த பாதையில் தமிழக அரசு செல்லவில்லை. இந்த விவகாரத்தில் மக்கள் நலம் சார்ந்து சிந்திக்காமல் அரசு செயல்பட்டு வருகிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ்

நகரப்பகுதிகளில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு அனுமதி அளிக்கும் முடிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது தெரிந்தும் நகரப் பகுதிகளில் சாலையோரங்களில் மதுக்கடைகளை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதிப்பது வியப்பளிக்கிறது. தமிழ்நாட்டில் நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை அகற்றுவதற்கான முயற்சியில் சிறிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. மதுவை ஒழித்து மக்களைக் காக்க வேண்டும் என்பதுதான் பாமகவின் நோக்கம் ஆகும். அதிலிருந்து பாமக ஒருபோதும் பின் வாங்காது.

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்துவதற்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. அதை உணர்ந்து மதுவுக்கு எதிராக தீவிரமான போராட்டங்களை பாமக நடத்தும்; வெற்றி பெறும்.

தமாகா தலைவர் வாசன்

ஏற்கனவே இருக்கின்ற மதுபானக்கடைகளைப் படிப்படியாக நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையாக தொடர்கிறது. இச்சூழலில் தேவையில்லாமல் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் தரத்தை மேம்படுத்த முயற்சிக்காமல், அதைக் குறைக்கும்விதமாக உள்ளாட்சிச் சாலைகளாக மாற்றி, மக்கள் வாழ்வில் இருளை ஏற்படுத்துகின்ற மதுபானங்களை விற்பதில் தமிழக அரசு அதிக அக்கறை காட்டக் கூடாது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017