மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

கே.எம்.கோபால்: கலையுலகின் தாந்திரீகச் சிற்பி!

கே.எம்.கோபால்: கலையுலகின் தாந்திரீகச் சிற்பி!

செலின் சார்ச்

சேலத்தில் பிறந்து, தமிழக அரசின் கலைச்செம்மல் விருது (1990), இந்திய அரசின் கலைக்கான உயரிய விருது (1988) எனப் பல உயரிய விருதுகளைப் பெற்றவர். ஜப்பான் (1980), ஆஸ்திரேலியா (1982), ஜெர்மனி (1984), டென்மார்க் (1988), நெதர்லாந்து (1989) என உலகின் பல நாடுகளிலும் கண்காட்சியை நடத்தி, தாந்திரீக ஓவிய மற்றும் சிற்பக் கலையை உலகம் முழுவதும் பரப்பிய கலைஞன். அப்படிப்பட்டவரின் சாதனைகளைப் பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு கலை உலகில் மீண்டும் அறிமுகப்படுத்துவது, அவரோடு இணைந்து பணியாற்றிய மூத்த கலைஞர்களுக்கு மலரும் நினைவாகவும், இளம் ஓவியர்கள் மற்றும் கலைஞர்களுக்கு ஊக்கமாகமும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆரம்ப காலம்: தேவி பிரசாத் ராய் சௌத்ரியின் மாணவர்

சேலத்தில் 1928இல் பிறந்து, சென்னை கவின்கலைக் கல்லூரியில் (Madras School of Fine Arts) அப்போதைய கல்லூரி முதல்வர் தேவி பிரசாத் ராய் சௌத்ரியின் சிறந்த மாணவனாகத் திகழ்ந்த கே.எம்.கோபால், தான் கல்வி கற்ற காலத்திலேயே மைசூர் தசரா கண்காட்சியில் (1950) முதல் பரிசை வென்றவர். தேவி பிரசாத் ராய் சௌத்ரியின் வழிகாட்டலில் பிரித்தானிய அரசின் MBE (Member of British Empire)க்கு விண்ணப்பித்து தேர்ந்தெடுக்கப்பட்டாலும், பெற்றோர் விரும்பாததால் அதைத் தொடர முடியாமல், சென்னையிலேயே தங்கி, ஜெமினி, வாகினி போன்ற திரைக்கூடங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றினார். மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் நெருங்கிய நண்பரான கே.எம்.கோபால், திறம்படத் தபேலா வாசிக்கும் பழக்கம் உள்ளதால், நாட்டியமணிகளான லலிதா, பத்மினி, ராகினி, வைஜெயந்திமாலா ஆகியோரின் நடனங்களுக்குத் தபேலாவும் வாசிக்கத் தொடங்கினார்.

ஓவியக் கலையில் கவனம் செலுத்தாமல் இருக்கும் கே.எம்.கோபாலைக் கண்ட தேவி பிரசாத் ராய் சௌத்ரி, நரசிம்மாச்சாரி என்பவரை அனுப்பி லட்சுமி, சரஸ்வதி, ராஜராஜேஸ்வரி போன்றோரின் ஓவியங்களை வரைந்துதரும் பணியைக் கொடுத்தார். கோபாலின் ஓவியங்களின் தத்ரூபங்களைக் கண்ட நரசிம்மாச்சாரி, தனக்கு ஸ்ரீ சக்கரம் ஒன்றும் வரைந்துத் தரச் சொன்னார். இந்த ஸ்ரீ சக்கரத்தை வரையும் முயற்சியே கோபாலை மீண்டும் ஓவியக் கலைக்கு இழுத்தது. அதிலும் குறிப்பாக தாந்திரீக ஓவியக்கலைக்குள் இழுத்தது.

சோழமண்டலம் கலைஞர்கள் கிராமம்

ஐரோப்பிய நாடுகளில் கலைஞர்களுக்காக தனியான ஊர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவையே கலைஞர்கள் ஒருங்கிணைந்து கலைப் படைப்புகளை உருவாக்க உதவும் என்பதை உணர்ந்த தமிழ்நாட்டு ஓவியர்கள் சென்னைக்கு அருகில் ஈஞ்சம்பாக்கத்தில் சோழமண்டலம் கலைஞர்கள் கிராமம் என்ற ஒன்றை உருவாக்கினர். இதை உருவாக்கிய கலைஞர்களுள் கே.எம்.கோபாலும் ஒருவர்.

இந்தியாவில் கலைஞர்களுக்கான பெரிய அமைப்பு லலிதா கலா அகாடமி. இதனுடைய பிரதிநிதியாகச் சிறப்பாகப் பணியாற்றியவர் கே.எம்.கோபால். சென்னையில் ஓவியம் நுண்கலைக் குழு என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் கே.எம்.கோபாலும் ஒருவர். 1976ஆம் ஆண்டில் மறுமலர்ச்சி ஓவியர் எழுத்தாளர் மன்றம் ஒன்றைத் தோற்றுவித்த கே.எம்.கோபால், சேலம் கண்காட்சியகம் அமையவும் முக்கியக் காரணமானவர்.

பல்துறைக் கலைஞர்கள் இணைந்து ஒரே இடத்தில் இயங்கி, கலைப் படைப்புகளை உருவாக்கினால், அவற்றின் பரிணாமம் மென்மேலும் மேம்படும் என்பதை உணர்ந்த கே.எம்.கோபால், கவிஞர் கண்ணதாசன், மற்றும் சிற்பி கணபதி ஸ்தபதி அவர்களுடன் இணைந்து “கலை மையம்” என்ற அமைப்பைச் சென்னையில் தொடங்கினார். பல்வேறு காரணங்களால் இந்த அமைப்பு பிற்காலத்தில் இயங்காமல் போனது.

ஐரோப்பியப் பயணம்

1988இல் புது டெல்லியில் நடந்த அகில இந்திய ஓவியக் கண்காட்சியில், தேசிய அளவில் முதல் பரிசு பெற்றார் கே.எம்.கோபால். இவரது திறமையைப் பாராட்டி இங்கிலாந்து அரசு, இங்கிலாந்துக்கு வருகை தரும் ஓவியர் என்ற கௌரவத்தைக் கொடுத்தது. அது மட்டுமல்லாமல், ஐரோப்பிய நாடுகள் அனைத்துக்கும் சென்று வருமாறு அழைப்பு விடுத்தது. பிரான்ஸ், நெதர்லாந்து, மேற்கு ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகளுக்குக் கலைப்பயணம் மேற்கொண்ட கே.எம்.கோபால், தான் சென்ற இடமெல்லாம் தாந்திரீக ஓவியங்களின் சிறப்பைப் பற்றி விவரித்து, இந்தியாவின் ஓவியப் பாரம்பர்யத்தை ஐரோப்பிய நாடுகளில் முறையாக அறிமுகம் செய்து வைத்தார்.

கோபால் கண்ட கணபதியம்

ஆரம்ப காலத்தில் பாத்திக் (Batik) எனப்பட்ட துணியின் மேல் வரையும் ஓவிய முறையில் பிரசித்திபெற்ற கே.எம்.கோபால், தன் கொல்லிமலை ஆன்மிகப் பயணத்த்துகுப் பிறகு, சித்தர்களின் வழியில் தாந்திரீக ஓவியங்களைத் தீட்டினார். பிள்ளைத் தமிழில் எழுத்தப்பட்ட பல பழம்பெரும் ஓலைச்சுவடிகளைப் படிப்பதில் புலமைப்பட்ட கே.எம்.கோபால், தமிழர் ஓகக் கலையின் (யோகா) மூலக் குறியீடே கணபதி என்ற விநாயகர் என்பதை அறிந்து கணபதி ஆராய்ச்சியில் இறங்கினார்.

ஓகக் கலையில், வலது மற்றும் இடது நாசி வழியே செல்லும் காற்றுக்கு முறையே சூரிய கலை மற்றும் சந்திர கலை என்று பெயர். இவற்றை உள்ளிழுத்தல், வயிற்றில் தக்கவைத்தல் மற்றும் வெளியிடுதல் போன்றவற்றின் காலத்தை மாற்றித், தண்டுவடத்தின் கீழ் மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி என்ற சக்தியைத் தூண்டி, அதைப் பூலோக இன்பங்களில் சற்றும் விரயம் செய்யாமல், மெய்ப்பொருளை நோக்கி நகர்த்தி, பசி மற்றும் தாகம் அற்ற நிர்விகல்ப சமாதி நிலையை அடைவதே தாந்திரீக ஓகக் கலையின் நோக்கம்.

விநாயகர் வடிவமே ஓகக் கலையின் முதல் குறியீடுதான். ஓகக் கலையை ஒரு குரு தன் சீடனுக்குப் போதிக்கும்போது, அதன் அடிப்படையை உணர்த்துவதற்காக வரைந்த வடிவமே காலப்போக்கில் விநாயகராக வணங்கப்பட்டது. ஓகத்தில் கட்டுப்படுத்தப்படும் மூச்சுக் காற்று, விநாயகரின் துதிக்கை என்றும், மூச்சுக் காற்றை வயிற்றில் நிறுத்துவதைக் காட்டவே பெரிய வயிறு என்றும், மூச்சை உள்ளிழுக்கும்போது வலது கடைவாய் பல்லைக் கடிக்க வேண்டும் என்பதைக் குறிக்கவே, விநாயகர் தன் வலது தந்தத்தை உடைத்துக் கையில் வைத்திருக்கிறார் என்றும், ஓகத்தின்போது உரைக்கும் “ஓம்” என்ற சொல்லே, விநாயகரின் யானைத் தலையின் மூலம் என்றும் நீள்கிறது கே.எம்.கோபாலின் விநாயகர் பற்றிய விளக்கம்.

வேத நூல்கள் கூறும் 1008 கணபதியர்களை இதுவரை ஓவியர்கள் ஓவியங்களில் தீட்டியதில்லை என்பதை அறிந்து, பெயரால் மட்டுமே அறியப்பட்ட விநாயகர்களுக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தார் கோபால். வாழ்வின் படிநிலைகள் 32 என்பதைக் குறிக்க முதல் 32 விநாயகர்கள் உருவத்தை உருவாக்கினார். அவை முறையே 1. பால கணபதி, 2. தருண கணபதி, 3. பக்த கணபதி, 4. வீரக் கணபதி, 5. சக்தி கணபதி, 6. திவ்ய கணபதி, 7. சித்தி கணபதி, 8. உசித்த கணபதி, 9. விக்ன கணபதி, 10. சிப்ர கணபதி, 11. கெரம்ப கணபதி, 12. இலட்சுமி கணபதி, 13. ருத்திர கணபதி, 14. உருத்துவ கணபதி, 15. மகா கணபதி, 16. வர கணபதி, 17. எகட்சர கணபதி, 18. விசய கணபதி, 19. திரி அட்சர கணபதி, 20. விநாசன கணபதி, 21. ஏகாந்த கணபதி, 22. சிருட்தி கணபதி, 23. ஞான கணபதி, 24. உத்தண்ட கணபதி, 25. குந்தி கணபதி, 26. திவ்முக கணபதி, 27. திருமுக கணபதி, 28. சிம்ம கணபதி, 29. துர்க கணபதி, 30. யோக கணபதி, 31. சங்கட்ட கணபதி, 32. வல்லப கணபதி.

விநாயகர் பற்றிய தமது ஆராய்ச்சிக்குக் கணபதியம் என்று கோபால் பெயர் சூட்டினார். கணபதியம்-5 கண்காட்சியை முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் சென்னை லலித் கலா அகடாமியிலும், கணபதியம்-6 கண்காட்சியை பெங்களூரு கர்நாடக சித்ரகலா பரிசத்தில், அப்போதைய துணை முதலமைச்சராக இருந்த எஸ்.எம். கிருஷ்ணா அவர்களும் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் அடையாறுக்கு அருகில் இருக்கும் மத்தியக் கைலாசம் ஆலயத்தில் பாதி விநாயகரும் பாதி ஆஞ்சநேயரும் கொண்ட பிரசித்தி பெற்ற “ஆதி-அந்த பிரபு” சிலையை வடிவமைத்ததும் கே.எம்.கோபால் அவர்களே. ஆதியாக கணபதியையும், அந்தமாக ஆஞ்சநேயரையும் இணைத்த கே.எம்.கோபால், எந்த ஒரு செயலையும் கணபதியை நினைத்துத் தொடங்கினால், ஆஞ்சநேயர் சிறப்போடு முடித்து வைப்பார் என்ற கருத்தினை உணர்த்தவே இந்தச் சிலையை வடிவமைத்தார்.

மக்கள் தங்கள் குறைகளை எந்த ஒரு புரோகிதரின் துணையும் இன்றி இறைவனிடம் நேரே சென்று வழிபட வேண்டும் என்ற கோபாலின் கோரிக்கையாலே, மத்தியக் கைலாசத்தின் ஆதி-அந்த பிரபு சிலைக்கு எந்த புரோகிதரும் அமைக்கப்படவில்லை. இதன் கர்ப்பக்கிரகத்தினுள் எந்தச் சாமானியனும் சென்று வழிபடலாம் என்பது இந்த ஆலயத்தின் சிறப்பு.

தகட்டுப் புடைப்புகள்

கே.எம்.கோபாலின் படைப்புகள் செப்புத் தகடுகளைச் சிறுக சிறுகத் தட்டி அமைக்கப்பட்ட தகட்டுப் புடைப்புகள் ஆகும். தன் திரையுலக கலை இயக்குநர் பணிக்குச் செப்புத் தகடுகளைப் பயன்படுத்திய கே.எம்.கோபால், பிற்காலத்தில் இவற்றைச் சிறுகச் சிறுகக் கிழித்து, பின்னர் அழகாக வளைத்து கணபதி சிலைகளை எளிய வடிவில் படைத்தார். கண், வயிறு, தொப்புள், மார்பு போன்ற உடலின் பாகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க, ஆபரணக் கற்களைப் பதித்து வைத்துத் தனித்துவம் காட்டினார்.

செப்புத் தகடுகளை வளைத்து வளைத்து வேலை செய்த கே.எம்.கோபால், அதனை முறையாக முன்னும் பின்னும் பல்வேறு வடிவில் சிறு உளிகளை வைத்து அடிப்பதால் ஏற்படும் வடிவம் இன்னும் பல்லுயிர் பெற்ற கலை வடிவமாக இருப்பதை உணர்ந்து, உலோகப் புடைப்பு முறையைத் தீவிரமாகத் தன் கலையில் புகுத்தினார். உலோகப் புடைப்பில் இவர் ஏற்படுத்திய சிற்பங்களில், தாந்திரீகக் குறியீடுகளும், ஓகக் கலை மந்திரங்களும், யந்திரங்களும், கணபதி வடிவில் இடம்பெற்றன.

பாதி ஆணும், பாதி பெண்ணுமாக இவர் படைத்த அர்த்த-கணேசுவரி உலோகப் புடைப்பு இந்திய அரசின் 1988க்கான தேசிய விருதைப் பெற்றது. கே.எம்.கோபாலின் ஓவியங்கள், மற்றும் உலோகப் புடைப்புச் சிற்பங்கள், உலகின் பல முன்னணி கலைக்கூடங்களிலும், கண்காட்சியகங்களிலும், மற்றும் இந்தியாவின் முன்னணி வணிக நிறுவனங்களிலும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. போலந்து நாட்டின் ஆசிய பசிபிக் அருங்காட்சியகம், அமெரிக்காவில் செனிவா அருங்காட்சியகம், செர்மனியில் ராய் போகி அருங்காட்சியகம், கெல்னா வில்கெய்ம்ன் அருங்காட்சியகம், அங்கேரியில் பாடு பாசிக் அருங்காட்சியகம், விஜயநகர் ராணி அரண்மனை, நெதர்லாந்து அரசியார் அரண்மனை, பாரீஸில் சோபி லெசுக்காட் இல்லம், புது டெல்லி தேசிய ஓவியக் காட்சிக் கூடம், லலிதாகலா அகடாமி, புது டெல்லி, கர்நாடக சித்திரகலா பரிஷத், சென்னை தேசிய ஓவியக் காட்சிக் கூடம், சேலம் அருங்காட்சியகம், தமிழ்நாட்டில் நீதிபதி ராஜமன்னார் இல்லம், திவான். ராமசாமி அய்யர், முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் இல்லம் என இவரது கலைப்படைப்புகள் இல்லம் கொண்டுள்ள இடங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

கோபால் மறைவும் அதன் பின்னும்

கலைச்செம்மல் முனைவர் கே.எம்.கோபால் மார்ச் 14, 2000 அன்று சேலத்தில் இயற்கை எய்தினார். தான் வாழும் காலம் முழுவதும் கலைக்காகவே வாழ்ந்த இந்த உன்னதக் கலைஞன், தமிழ் பாரம்பர்யக் கலையை நவீன வடிவில் உலகம் முழுவதும் முனைப்போடு கொண்டு சேர்த்தார்.

பிப்ரவரி 6, 2017 அன்று நடைபெற்ற சோழமண்டலம் கலைஞர்கள் கிராமத்தின் 50ஆவது ஆண்டு விழாவில், சென்னையின் ஜெர்மானிய உயர் ஆணையர் ஆச்சிம் பேபிக், கே.எம்.கோபாலின் ஜெர்மானிய தாந்திரீகக் கண்காட்சியைப் பற்றி விவரித்து, “வரிகள் உயிருள்ளவை. அவற்றின் ஆற்றலுக்கு ஏற்ப அவை பல்லாயிரக்கணக்கான் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. பண்டைய இந்தியர்கள் இந்த வரிகளின் குணாதிசயங்களை முழுவதும் உணர்ந்து, தங்களுக்குத் தேவையான சக்திகளை வெளிப்படுத்துமாறு அவற்றை வடிவமைத்தனர். இவ்வடிவங்களை தாந்திரீகத்தில் சக்கரங்கள் என்றும், மண்டலங்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன” எனத் தனது வரிகளைச் சுட்டிக்காட்டினார்.

அதிகாலையில் வீட்டு வாசலைப் பெருக்கி, முற்றத்தில் கோலமிடும் தமிழ்ப் பெண்களை முதல் ஓவியர்கள் என்று வர்ணிக்கும் கே.எம்.கோபால், பாரம்பர்யத்தை முன்னிறுத்தாத எந்தக் கலையும் தன் முழுமையை அடையாது என்பதை முழுவதுமாக உணர்ந்தே, நம் பண்பாட்டையும், பாரம்பர்யத்தையும் தன் கலையில் புகுத்தினார்.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: செலின் சார்ச், லண்டனில் மென்பொருள் துறையில் பணியாற்றும் தமிழ் மற்றும் கலை ஆர்வலர். மறைந்த ஓவியர் & சிற்பி கே.எம்.கோபால் அவர்களின் கடைசி மருமகன். தமிழ் ஓவிய மற்றும் சிற்பக் கலையின் பால் பேரார்வம் கொண்டு, அவற்றை ஆவணப்படுத்துவதில் முனைப்போடு இயங்கிக்கொண்டிருக்கிறார். தொடர்புக்கு: [email protected], www.facebook.com/selingeorge)

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017