மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

சிறப்புக் கட்டுரை: மழைக் காலங்களில் கால்களின் பராமரிப்பு!

சிறப்புக் கட்டுரை: மழைக் காலங்களில் கால்களின் பராமரிப்பு!

தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால் அங்காங்கே மழைநீர், கழிவுநீரோடு கலந்து பல இடங்களிலும் சாலைகளிலும் அசுத்தமான நீராக தேங்கியிருக்கிறது. வேலைக்குச் செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்வோர் என அனைவரும் மழையில் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இந்த மழைக் காலத்தில் நம்முடைய கால்களை நன்றாகப் பராமரிக்க வேண்டும். நம்முடைய கால்களை மழைக் காலங்களில் எவ்வாறு எப்படி பராமரிக்கலாம் என்று கூறுகிறார், தோல்நோய் சிறப்பு நிபுணர் சீ.சங்கீதா.

மழைநீர், தூயநீர் ஆகும். அதனால்தான் மழைநீர் சேகரிப்பு திட்டம் என்றெல்லாம் நாம் கடைப்பிடித்து வருகிறோம். அந்த மழைநீர் அளவுக்கு அதிகமாகப் பெய்து கழிவுநீரோடு கலக்கும்போது பல நோய்கள் பரவுகின்றன. தொற்று நோய்கள் பரவ பல வழிகள் உள்ளன. குடிநீர், உணவு, குளியல், கை கழுவும்போது உபயோகிக்கும் மாசு படிந்த தண்ணீர் மூலம் பரவும்.

சேற்றுபுண்:

காலில் சேற்றுபுண் வருவதற்கு முக்கியக் காரணம், அதிக நேரம் தண்ணீரில் இருப்பதுதான். மழைக் காலங்களில் பல பேருக்கு இந்த சேற்றுபுண் பிரச்னை இருக்கும். அசுத்தம் கொண்ட நீரீலோ அல்லது தேங்கியுள்ள மழைநீரிலோ உள்ள கிருமிகளால் சேற்றுபுண் காலில் ஏற்படுகிறது. காலை அதிக நேரம் தண்ணீரில் வைத்திருந்தால் சேற்றுபுண் வரும். தண்ணீரில் தொடர்ந்து காலை நனைக்காமல் இருக்க வேண்டும். அப்படி மழைநீரில் கால்களை வைத்திருக்கும்போது, பிறகு கால்களை மென்மையான துணியைக்கொண்டு ஈரம் இல்லாமல் விரல்களுக்கு இடையில் துடைக்க வேண்டும்.

பிறகு சேற்றுபுண் வராமல் இருக்க அதற்கான பவுடர்களை காலில் வைத்துவந்தால் சேற்றுபுண் வராது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலில் சேற்றுபுண் வராமல் பார்த்துகொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு அதிக அளவு சேற்றுபுண் ஏற்படும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தண்ணீரில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

மழைக் காலங்களில் எங்கு சென்றாலும் காலணிகளை அணிந்துகொண்டுதான் செல்ல வேண்டும். தோல் மருத்துவரிடம் சென்று அதற்கான களிம்பு, பவுடர், மாத்திரை மூலம் சரிசெய்து விடலாம்.

சொறி மற்றும் காலில் ஓட்டை ஏற்படுதல்:

மழைநீரிலோ அல்லது நீரிலோ அதிக நேரம் இருக்கும்போது சேற்றுபுண் போல இல்லாமல் காலில் ஓட்டை ஓட்டையாக இருக்கும். அங்காங்கே காலின் தசையை அரித்தது போன்றும் இருக்கும். இது பாக்டீரியாவினால் வரக்கூடியது. விரல்களுக்கு இடையில் குதிகால் மற்றும் கட்டை விரல்களுக்கு அடியில் உள்ள பாதம் என எல்லா இடங்களிலும் அதிக நேரம் நீரில் இருப்பதால் ஓட்டை போல ஏற்படும். அசுத்தம் கலந்த நீரிலோ, மழைநீரிலோ அதிக நேரம் இருப்பதால் கால்களில் சொறி, சிரங்கு மற்றும் அரிப்பு ஏற்படும். அசுத்தம் கலந்த நீரிலோ, மழைநீரிலோ அதிக நேரம் இருப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஏற்படும்போது நாம் தோல் மருத்துவரை அனுகி, அதற்கான களிம்புகளைப் போட்டு கொள்ள வேண்டும். சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

நகங்களைப் பராமரித்தல்:

நகசுத்தி என்பது தண்ணீர் நகங்களுக்கு இடையில் உள்ளே இருந்தால் அது வீங்கி, வலி ஏற்படும். இதைத்தான் நகசுத்தி என்பார்கள். இது தண்ணீரில் உள்ள பாக்டீரியாவினால் வரக்கூடியது. நகங்களுக்கு இடையில் தண்ணீர் செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நகங்களுக்கு இடையில் நீர் செல்லும்போது நகங்களில் வீக்கம் ஏற்படும். இவற்றால் நகச் சொத்தையும் வரலாம். நகச் சொத்தையைக் காளான் நோய் தொற்று என்பார்கள். இதனால் நகங்கள் சுருங்கி கொண்டும், கறுப்பாக மாறியும் இருக்கும். இதனால் சில நேரங்களில் நகங்கள் விழுவதற்கும் வாய்ப்பு உள்ளது. விரல்களில் நகசுத்தி ஏற்படும்போது அந்த விரலில் எலுமிச்சைப் பழத்தை வைத்தால் வீக்கமும் வலியும் குறையும். அசுத்தம் கலந்த மழைநீரை நகங்களுக்கு இடையில் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

குதிகால் வெடிப்பு:

காலில் எண்ணெய் பசை இல்லையென்றால் குதிகாலில் வெடிப்பு ஏற்படும். உடலின் எடை அதிகமாக இருந்தாலும் காலில் வெடிப்பு ஏற்படும். அசுத்தம் கலந்த மழைநீரில் காலை வைப்பதால் அதில் உள்ள வெடிப்புகளில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் மேலும் வெடிப்புகள் ஏற்படலாம். வெடிப்புகளில் சுத்தம் செய்யும் பிரஷ் வைத்து சுத்தம் செய்யலாம். வெதுவெதுப்பான நீரில் காலை வைத்து பிரஷ்ஷை வைத்து சுத்தம் செய்து, அதற்கான களிம்பை வைத்து சரி செய்யலாம்.

கை விரல், கால் விரல்களுக்கு இடையில், உள்ளங்காலில் கறுப்பாக தடிமனாக இருக்கும். பிறகு அரிப்பு ஏற்பட்டு சொரியும்போது, புண்ணாக மாறும். தோல் மருத்துவரிடம் சென்று அதற்கான களிம்பு, பவுடர், மாத்திரை மூலம் சரிசெய்து விடலாம். காலில் உள்ள விரல்களிலும் பாதத்திலும் ஏதேனும் அடிப்பட்டு காயம் அல்லது கீறல் போன்று இருந்தால் அவை அசுத்தும் கலந்த மழைநீரில் படும்போது, அதனால் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. அப்படி காயம் உள்ளவர்கள் இதுபோன்ற மழைநீரில் கால்களை நனைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். பிறகு காயம் ஆறுவதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அசுத்தம் கலந்த நீரிலோ, மழைநீரிலோ அதிக நேரம் இருப்பதால் படர்தாமரை போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.

சர்க்கரை நோய்... பாதப் பராமரிப்பு

மழைநீரில் தொடர்ந்து பாதங்களை நனைத்தால் பல்வேறு கிருமிகள் பாதம் வழியாக உடலில் செல்ல வாய்ப்பு உள்ளது. டைபாய்டு, காலரா, லேப்டோ ஸ்பைரோசிஸ் (Leptospirosis) மற்றும் பல்வேறு பேராசைட் (Parasite) நோய்கள் வரும். பொதுவாக, மழைநீரில் நடக்கும்போது உயரமான முழங்கால் வரை உள்ள காலணி (ஷூ) அணிந்து கொள்வது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் பாதங்களைக் கவனமாகப் பராமரிக்க வேண்டும். சர்க்கரை நோய் இருப்பவர்கள் பாதங்களைத் தினமும் இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும். சுடுநீரில் சுத்தம் செய்யக் கூடாது. அவர்களுக்கு நரம்பு தளர்ச்சி இருக்கும். அதனால், அவர்களுக்கு உணர்வு குறைவாக இருப்பதால் காலில் புண் ஏற்பட வாய்ப்பு இருக்கும். காலணிகளை வீட்டில் இருக்கும்போதும் அணிந்துகொண்டு இருக்க வேண்டும். நகங்களை ஒட்ட நறுக்கக் கூடாது. ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் இருப்பதால் கொழுப்பு குறைந்த உணவு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மது அருந்துதல், புகை பிடித்தலைத் தவிர்க்க வேண்டும். உடல் பருமனைக் குறைக்க வேண்டும். சர்க்கரை நோயினால் ஏற்படும் பாத விளைவுகளை நாம் முன்னரே அறிய பல கருவிகள் மற்றும் வழிமுறைகள் உண்டு. அதை முன்னரே அறிந்து நம் கால்கள் வெட்டப்படுவதைத் தடுக்க வேண்டும்.

நீண்ட நேரம் தண்ணீரில் இருப்பதால் உடலில் படிப்படியாக ஏற்படும் மாற்றங்கள்:

முதலில் Cold Shock (கோல்ட் ஸாக்). தண்ணீர் உடலில் உறிஞ்சுவதினால் தோல் குளிர்ச்சி அடைந்து ஒரு பெருமூச்சு வரும் இது சில நிமிடங்கள் நீடிக்கும்.

இரண்டாவது Cold Incapacitation. இப்போது மூச்சு அதிவேகமாக எடுக்கும். சில பேர் மயக்கம் அடைந்து விழவும் வாய்ப்பு அதிகம். ரத்த குழாய்கள் சுருங்கி இதயம் அதிக வேலை செய்ய வைக்கிறது. இது 5-15 நிமிடங்கள் நீடிக்கும்.

மூன்றாவதாக உடல் மிக குளிர்ந்த நிலையை அடைகிறது Hypothermia என்பதாகும். 30 நிமிடங்களுக்கு பிறகு இந்த நிலை வரும்.

நான்காவதாக இதயம் பலம் இழந்து செயலற்றதாக ஆகிறது. இதற்கு Circulatory Collapse என்பார்கள். அதிக நேரம் கால்கள் தண்ணீரில் இருப்பதால் ஏற்படும் பாதிப்புக்கு Immersion Foot (Trench Foot) என்பார்கள். இதனால் பாதத்தில் உள்ள தோல், ரத்தக் குழாய்கள், நரம்புகள், தசைகள் பாதிக்கப்படுகின்றன. நரம்புகளுக்கு, தசைகளுக்குப் போகும் ரத்த குழாய்கள் சுருங்கி தோல் நிறம் மாறி தடித்து அழுகிவிடும் நிலை அடைகின்றன. சிலருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. குளிரினால் முகத்தில், கை மற்றும் பாதத்தில், தோலில் கொப்பளம் ஏற்படுத்தி, அழுகி அதுவே விழுந்து விடும் நிலையை Frost Bite என்கிறோம். குளிரினால் ஏற்படும் இந்தப் பாதிப்புக்குக் குளிர் ஏற்பட்டிருக்கும் அனைத்து பகுதிகளும் சூடுபடுத்த வேண்டும். கம்பளி அணிந்து கொள்வது நல்லது. உடலை தேய்த்து சூடு ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அதனால் உடலில் காயம் ஏற்பட்டு தோல் சேதம் ஆகிவிடும்.

பராமரிப்புகள்:

தொடர்ந்து அதிக நேரம் மழைநீரில் இருப்பதால் உடலில் நோய் கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளது. அதிக நேரம் மழைநீரில் நமது காலை வைத்திருக்கும்போது சேற்றுப்புண், நகச் சொத்தை மற்றும் சொறி, அரிப்பு போன்ற பிரச்னைகளும் ஏற்படும். அவை காலில் வராமல் இருக்க கால்களில் ஈரம் இல்லாமல் துடைத்து வைத்து கொள்ள வேண்டும். பிறகு, அந்த தொற்றுநோய்கள் வராமல் இருக்க அதற்கான களிம்பு, பவுடர்கள் வைத்து சரி செய்யலாம். சுடுநீரில் உப்பு சேர்த்து காலை வைத்தால் அந்தக் கிருமிகள் அதிக அளவு பரவாது. தோல் மருத்துவரிடம் சென்று அதற்கான களிம்பு, பவுடர், மாத்திரை மூலம் சரிசெய்து விடலாம்.

கட்டுரையாளர்: ரஞ்சிதா ரவி

படங்கள்: கூகுள் இமேஜ்

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017