மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

அகப்பட்ட ஆணி சங்கர்!

அகப்பட்ட ஆணி சங்கர்!

கடலூர் மாவட்டத்தில் பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த தாலிகளை அறுத்துவந்த ஆணி சங்கரிடம் 14 வழக்கில் சுமார் 50 சவரன் தாலிச் சரடுகளையும் செயின்களையும் மீட்டுள்ளார்கள் கடலூர் போலீஸார்.

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து செயின் அறுப்புகளும் பூட்டிய வீட்டுக்குள் கொள்ளையடிப்பதுமாக இருந்ததை, நமது மின்னம்பலம்.காம் தமிழின் முதல் மொபைல் பத்திரிகையில், நவம்பர் 9ஆம் தேதி காலைப் பதிப்பில், ‘ ஐபிஎஸ் படித்த டாப் டென் கொள்ளையன்’ என்ற தலைப்பிலும், நவம்பர் 13ஆம் தேதி வெளியான காலைப் பதிப்பில், ’பிறந்த நாள் கொண்டாடிய கொள்ளையர்கள்: வளைத்த போலீஸ்’ என்ற தலைப்பிலும், ஆணி சங்கர் பற்றி செய்திகள் வெளியிட்டிருந்தோம்.

சங்கர் தனியாகச் சென்று, சாலையில் நடந்து செல்லும் பெண்களிடமும் வீட்டு வாசலில் கோலமிடும் பெண்களிடமும் செயின் அறுத்துவந்தவன், தனது திருட்டுத் தொழிலை விரிவுபடுத்த, புதுச்சேரியில் புதிய இளைஞர்கள் 10 பேரை இணைத்துக்கொண்டு, திருட்டு பைக்கில் புறப்பட்டான்.

கடலூர் மாவட்டத்தில் மட்டும் ராமநத்தம், ஆவினங்குடி, திட்டக்குடி, வேப்பூர், சிறுப்பாக்கம், பென்னாடம், நெல்லிக்குப்பம் பகுதியில் மட்டும் 14 பெண்களிடம் தாலி செயின்களும் மைனர் செயின்களும் அறுத்திருக்கிறான். இப்போது ஆணி சங்கரை கைது செய்திருக்கும் கடலூர் எஸ்.பி. விஜயகுமார் கட்டுப்பாட்டில் இயங்கும் டெல்டா டீம், இதில் மொத்தம் 50 பவுன்களை மீட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் இல்லாமல், விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டங்களில் செயின் பறிப்பு வழக்கில், ஆணி சங்கரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.

அதென்ன ஆணி சங்கர்? அந்தக் கதையே ரொம்ப சுவாரஸ்யமானது.

சங்கரின் அப்பா பெயர் நடேசன். மண்ணுடையார் தெரு, அரியநாச்சி, கழுதூர், திட்டக்குடி தாலுகா, கடலூர் மாவட்டம்தான் அவன் முகவரி.

சங்கர், திருட்டு வழக்கில் சிறைக்கு செல்லும்போது, சிறைக்குள்ளிருக்க பிடிக்காமல் ஆணிகளை விழுங்கிவிடுவான். அதுவும் ஒன்று, இரண்டு விழுங்கமாட்டான். ஐந்துக்கும் மேற்பட்ட ஆணிகளை விழுங்கிடுவான். அவனுக்கு மட்டும் சிறைக்குள் ஆணி எங்கிருந்து கிடைக்குமோ?

சிறை நிர்வாகம் பயந்துபோய், அருக்கில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள், வயிற்றுப் பகுதியில் குடலில் இருக்கும் ஆணிகளை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் எடுக்க முடியும் என்பதால்... சென்னை, தஞ்சாவூர் அழைத்துச் செல்வார்கள்.

ஆணிகள் எடுக்கும் வரையில் மருத்துவமனையில் இருந்தபடி வெளி உணவுகளைச் சாப்பிடுவான், அதுக்குள் பிணையும் கிடைத்துவிடும். இதுதான் சங்கரின் ஆணி பிளான். இதனால்தான் அவனுக்கு ஆணி சங்கர் என்ற பெயர் வந்தது.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சங்கர் ஆணிகளை விழுங்கிவிட்டு பலமுறை சிகிச்சைக்கு வந்துள்ளதாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். ஒருமுறை மருத்துவமனைக்கு வந்தபோது எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் ஏழு ஆணிகள் வரிசையாக இருந்ததைப் பார்த்து ஆச்சர்யமடைந்தார்கள் மருத்துவர்கள்.

“சங்கர் சிறைக்கு வரும்போதே ஆணிகளை சங்கர் கண்களில் படாமல் பார்த்துக் கொள்வோம். தேவையில்லாத ஆணிகளைச் சிறையில் இருந்து அகற்றி விடுவோம். ஆனால், சங்கரைப் பார்க்கச் சிறைக்கு வரும் பார்வையாளர்கள் வாழைப் பழத்தில் ஆணிகளை மறைத்து எடுத்துவந்து அவனுக்குக் கொடுப்பதும் நடந்திருக்கிறது” என்கிறார்கள் சிறை அதிகாரிகள்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017