மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

சிறப்புக் கட்டுரை: பணமதிப்பழிப்பால் தொடரும் பணியிழப்புகள்!

சிறப்புக் கட்டுரை: பணமதிப்பழிப்பால் தொடரும் பணியிழப்புகள்!

சிந்து பட்டாச்சார்யா

பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. இந்த நடவடிக்கையால் வேலைவாய்ப்புகள் குறைந்தன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பணமதிப்பழிப்பு நடவடிக்கை இந்தியாவின் அமைப்பு சாரா துறை, சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றைக் கடுமையாகப் பாதித்தது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. பணமதிப்பழிப்பு அறிவிப்புக்கு முன்பிருந்தே வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது மோடி அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்தது. பணமதிப்பழிப்பு அறிவிப்பால் வேலைவாய்ப்புகளில் கடும் தாக்கம் ஏற்படும் என்பதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்பே உணர்ந்திருக்க வேண்டும்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கை என்ற ஒரே நடவடிக்கையால் ஏராளமான ஒப்பந்தப் பணியாளர்கள், தினசரிக் கூலிப் பணியாளர்கள் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள அமைப்பு சாராத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் ஆகிய அனைவரின் நிலையும் கேள்விக்குறியாகியது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பிறகு, அதிகமாக வேலைவாய்ப்புகளை வழங்கும் ஜவுளித்துறை, கட்டுமானத்துறை, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளுக்கு பலத்த அடி விழுந்தது.

எஃப்.ஐ.சி.சி.ஐயின் சமீபத்திய பொருளாதார சர்வே அறிக்கையில், “இந்தியாவில் ஏராளமான இளம் தலைமுறையினர் இருப்பதால் வேலைவாய்ப்புகளின் குறைபாடு ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ’மேக் இன் இந்தியா’, ’ஸ்கில் இந்தியா’ போன்ற திட்டங்களை மோடி அரசு தொடங்கினாலும்கூட, அவற்றைத் தொழில்துறை கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாகச் சேர்க்கப்பட வேண்டுமென்று கருதுகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் 40 சதவிகித தொழிலாளர் சக்தி மட்டுமே விவசாயம் அல்லாத பணிகளில் வேலைபுரிகின்றனர் என்பதை நினைவுகூர வேண்டும். இதிலும் பெரும்பான்மையானவர்கள் அமைப்பு சாராத் துறையிலேயே ஊதியம் பெறுகின்றனர். இந்த ஊதியங்கள் வரி வசூல் அமைப்புக்குள் வருவதில்லை. அமைப்பு சாரா துறையைச் சேர்ந்த பணியாளர்கள் தங்களின் பணியை அவ்வப்போது மாற்றிவிடுவதால் அவர்களின் ஊதியம் குறித்த தகவல்களும் இருப்பதில்லை. வேலையின்மை விகிதம் மிக அதிகமாக இருப்பதையே இது காட்டுகிறது.

சி.எம்.ஐ.இயின் (சென்டர் ஃபார் மானிடரிங் இந்தியன் எகானமி) நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயலதிகாரியுமான மகேஷ் வியாஸ் பேசுகையில், “தொழிலாளர் அமைச்சகத்தின் தகவலின்படி 2011-12ஆம் ஆண்டில் அமைப்பு சார்ந்த துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 29.6 மில்லியனாக இருந்ததாகத் தெரிகிறது” என்கிறார். இதே ஆண்டில் வேலையின்மை பற்றிய தேசிய மாதிரி சர்வே அமைப்பின் கணக்கீட்டின் படி, பணிபுரியும் நபர்களின் மொத்த எண்ணிக்கை 303.5 மில்லியனாக சி.எம்.ஐ.இ. மதிப்பிட்டிருந்தது. இதையெல்லாம் வைத்துப் பார்த்தால், இந்தியாவில் உள்ள மக்களில் 10 சதவிகிதத்துக்கும் குறைவான மக்கள் மட்டுமே அமைப்பு சார்ந்த துறையில் பணிபுரிகின்றனர் என்று புரிகிறது. அல்லது இந்திய மக்களில் 90 சதவிகிதப் பேர் நிலையான வேலையில் இல்லை எனக் கொள்ள வேண்டும்.

2017ஆம் ஆண்டில் ஜனவரி - ஏப்ரல் காலகட்டத்தில் 404.7 மில்லியன் பேருக்கு வேலைக் கிடைத்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக மகேஷ் கூறுகிறார். அதாவது, ஐந்தாண்டுக் காலத்தில் பணி பெற்ற நபர்களின் எண்ணிக்கை 101.2 மில்லியனாக இருக்க வேண்டும் அல்லது ஒவ்வோர் ஆண்டுக்கும் சராசரியாக 20 மில்லியன் நபர்களுக்கு வேலைக் கிடைத்திருக்க வேண்டும் என்பது விளங்குகிறது. இதிலிருந்து, பணமதிப்பழிப்பு இருந்தாலும் இல்லையென்றாலும் இந்தியாவை அச்சுறுத்தும் அளவுக்கு வேலையின்மை பிரச்னை உருவெடுத்துள்ளது என்பது விளங்குகிறது. சராசரியாக இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 10 முதல் 15 மில்லியன் வேலை தேடும் நபர்கள் வெளிவருகின்றனர்.

இவ்வளவு சிக்கல்களையும் மொத்தமாகக்கொண்டு பார்க்கிறோம். வேலையின்மைக்கும் பணமதிப்பழிப்புக்கும் தொடர்புடைய ஒரு அதிகாரபூர்வத் தகவல் கூடவா கடந்த 12 மாதங்களில் வெளிவரவில்லை? சொல்லப்போனால் வேலையின்மை குறித்து போதிய தகவல்கள் இல்லை என்று நடப்பு ஆண்டில் அரசு அமைப்பான நிதி ஆயோக் கூட தெரிவித்திருந்தது. மேலும், இதுபற்றிய தகவல்கள் சேகரிப்பை மேம்படுத்த வேண்டுமென்றும் நிதி ஆயோக் வலியுறுத்தியது. பணமதிப்பழிப்பு நடவடிக்கை முடிவடைந்து ஓராண்டு காலம் ஆகியும் கூட வேலையின்மை இடையூறுகள் தொடர்ந்து வலுவடைந்து வருவதாக வியாஸ் கூறுகிறார். அக்டோபர் மாதத்தில் இந்திய நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்துள்ளது.

வேலையின்மை குறித்த பி.எஸ்.இ - சி.எம்.ஐ.இயின் மாதாந்திர தகவலின் படி, 2016ஆம் ஆண்டில் நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களிலேயே வேலையின்மை மிக மோசமாக இருந்துள்ளதாகத் தெரிகிறது. மொத்த வேலையின்மை விகிதம் நவம்பர் மாதத்தில் 6.55 சதவிகிதமாகவும், டிசம்பர் மாதத்தில் 6.42 சதவிகிதமாகவும் இருந்துள்ளது. பிறகு மேலும் கீழுமாக இறங்கி ஜூலை மாதத்தில் 3.39 சதவிகிதமாகவும், அக்டோபர் மாதத்தில் 5.68 சதவிகிதமாகவும் இருந்துள்ளது.

அமைப்பு சாரா துறையில் மட்டுமல்ல, கார்ப்பரேட் துறையில் கூட வேலைவாய்ப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 7 சதவிகிதமாக இருக்கும் நிலையில், வேலைவாய்ப்புகளின் வளர்ச்சி விகிதம் 1.5 முதல் 2 சதவிகிதமாக உள்ளது.

பணியிழப்புகள் குறித்து அரசு தரப்பிலும் பல தருணங்களில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று ஜவுளித்துறை இணையமைச்சர் அஜய் தம்தாவும் இதை ஒப்புக்கொண்டுள்ளார். ஜவுளி ஆலைகள் மூடப்படுவதால் பணியிழப்புகள் ஏற்படுவது குறித்து மக்களவையில் அஜய் தம்தா பதிலளிக்கையில், “ஜவுளித்துறை ஆணையர் அலுவலகத்தின் தகவலின்படி, 610 பருத்தி மற்றும் ஆடை ஆலைகள் மூடப்பட்டுள்ளது. 30.6.2017ஆம் தேதி வரை இந்த ஆலைகளில் 3,00,697 ஊழியர்கள் பணிபுரிந்துள்ளனர்” என்று தெரிவித்தார். இந்த வேலைவாய்ப்புகளுக்கும் பணமதிப்பழிப்புக்கும் உள்ள தொடர்பு குறித்தும், ஆலைகள் மூடப்பட்ட காலகட்டம் குறித்தும் அமைச்சர் தரப்பில் தெளிவுபடுத்தப்படவில்லை.

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கும் வேலையிழப்புகளுக்கும் தொடர்பு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இருந்தாலும் அதை ஏற்காத வகையில் எத்தனைக் காலத்துக்கு அரசு தொடர்ந்து இருட்டடிப்பு செய்துகொண்டே இருக்கும்?

நன்றி: ஃபர்ஸ்ட் போஸ்ட்

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017