மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

பணமதிப்பழிப்பு: முற்றுகையிடும் ஆபத்துகள் - பகுதி 7

பணமதிப்பழிப்பு: முற்றுகையிடும் ஆபத்துகள் - பகுதி 7

பேராசிரியர் டி. நரசிம்ம ரெட்டி

(பணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்ட ஓராண்டு நிறைவை ஒட்டி வெளியாகும் மினி தொடர்)

மிகப் பெரிய ஊழல் மோசடிகள் அரசியல் களத்தை ஆக்கிரமித்துக்கொள்ளத் தொடங்கியதிலிருந்து, “ஊழலுக்கு எதிரான இந்தியா” போன்ற இயக்கங்கள் (ஐ.ஏ.சி) ஊழல் பிரச்னையைக் கையில் எடுத்துக்கொண்டன. ஊழல் ஆட்சிகளுக்கு எதிராக மக்கள் கருத்தைத் திரட்டுவதில் இவை முனைந்தன. மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதற்கான இந்தச் சூழலைத் தனது அரசியல் இமேஜை வளர்த்துக்கொள்வதற்கான மிகப் பெரிய வாய்ப்பாகக் கருதினார் மோடி. 2014 மக்களவைத் தேர்தலின் ஆரம்ப கட்டப் பிரசாரத்திலேயே அலங்கார, ஆடம்பர வார்த்தைகளில் ஊழலுக்கும் கறுப்புப் பணத்துக்கும் எதிராகப் பேசத் தொடங்கிவிட்டார்.

கறுப்புப் பண ஒழிப்பு என்னும் பிரசாரம்

2014ஆம் ஆண்டு பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் ஊழல் மற்றும் கறுப்புப் பண ஒழிப்புதான் ‘உடனடி’ நடவடிக்கையாக இருக்கும் என்பது பிரதான முன்னுரிமையாகக் காட்டப்பட்டிருந்தது. “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைமையில் நடத்தப்பட்ட அத்தனை பரந்து விரிந்துவிட்ட ஊழல், ‘தேசிய நெருக்கடியாக’ மாறிவிட்டது’’ என்றுதான் அந்த அறிக்கை தொடங்கியது. “ஊழலுக்கான வாய்ப்பைக் குறைப்பதற்காக நாங்கள் கறுப்புப் பணம் உருவாவதைக் குறைப்பதை உறுதிசெய்வோம்” என்றும் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதோடு, “வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தைக் கண்டுபிடித்து, இந்தியாவுக்குக் கொண்டுவருவதாக பாரதிய ஜனதா கட்சி உறுதி ஏற்றுள்ளது” என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. “நாங்கள் இந்த நோக்கத்திற்காகச் சிறப்புப் பணிக் குழு (Task Force) அமைத்து, இதற்குத் தேவையான சட்டங்களைத் திருத்துவோம் அல்லது புதிய சட்டங்கள் இயற்றுவோம்” என்றும் அதில் இருந்தது.

மக்களிடையே ஊழல் மற்றும் கறுப்புப் பணப் பிரச்னைகளுக்கு எதிராக இருந்த கோபத்தை எதிரொலிக்கும் விதமாகத் தேர்தலில் ஊழல் ஒழிப்புக்கு அதிக இடமும் முக்கியத்துவமும் வழங்கப்பட்டது. தேசிய ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கான பிரசாரப் பாதையை அமைத்துக்கொடுத்தார் மோடி. வாடகைக்கு அமர்த்தப்பட்ட தனி விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் நாடு முழுவதும் அவர் மேற்கொண்ட சூறாவளிப் பிரசாரம் அதானி போன்றோர் வழங்கிய நிதி உதவி மூலமே நடைபெற்றது என்பது வேறு விஷயம்.

காங்கிரஸ் மாபெரும் ஊழல்களுக்கு ஆதரவாக இருந்தது என்பதே மோடியின் பிரசாரத்தின் முக்கியக் கருவாக இருந்தது. தனது அரசின் திட்டங்களில் முதன்மையானது ஊழலுக்கு எதிரான போர்தான் என்பதை செயலில் காட்ட விரும்பினார் மோடி. எனவே 2014இல் பதவி ஏற்ற முதல் நாளான மே 28ஆம் தேதியே வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் சிறப்பு விசாரணை குழு (எஸ்.ஐ.டி.) ஒன்றை அமைத்தார்.

எல்லா ஆயுதங்களையும் முறியடித்த அஸ்திரம்

இது உண்மையில் மிகவும் பரிதாபமானது. 2014இல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு (2009-2014) இயற்றிய திருப்புமுனைச் சட்டங்களின் நீண்ட பட்டியல் இடம்பெற்றிருந்தது. உணவுப் பாதுகாப்பு, நிலம் கையகப்படுத்தல், பாலியல் துன்புறுத்தல், லோக்பால், லோக் ஆயுக்தா, ஆர்.டி.இ., என்.ஜி.டி., தெரு வியாபாரிகள், கைகளால் கழிவுகளை அப்புறப்படுத்தும் முறையை ஒழித்தல் ஆகியவை இவற்றில் அடங்கும். ஊழல் குறித்து பாஜக முக்கியத்துவம் ஊழல் மீதான மக்களின் சினம் குன்றாமல் பார்த்துக்கொண்டது. அதே வேளையில் அதனை ஒழிக்கப்போகும் கட்சி பாஜக என காட்டிக்கொள்ளவும் இது பயன்பட்டது.

நாளடைவில் இந்தக் கட்சியின் திட்டம் மெல்ல மெல்ல பிரதமர் மோடிஎன்கிற ஒற்றை மனிதரின் திட்டமாக வடிவம் பெற்றது. 2015 ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் உரையாற்றும்போது, “இந்த நாடு ஊழலிலிருந்து விடுபட… நாம் இதை மேலிருந்து தொடங்க வேண்டும்…. ஊழல் ஒரு கரையான் போன்றது. இது மெதுவாக ஆனால் எல்லா இடங்களிலும் பரவுகிறது. இதைச் சரியான நேரத்தில் மருந்தின் மூலம் சரிசெய்துவிடலாம்… நிறைய வேலை செய்ய வேண்டியுள்ளது… உங்களுடைய ஆதரவுடன், நான் ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவேன் என்று உறுதி கூறுகிறேன்” என்று கூறினார் பிரதமர்.

புதிய கறுப்புப் பணச்சட்டம், கடுமையான அபராதங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. 2015ஆம் ஆண்டு பட்ஜெட்டின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் சட்டவிரோத சொத்துகள் இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றைப் பறிமுதல் செய்வது, மொரீஷியஸ், சிங்கப்பூர், சைப்ரஸ் மற்றும் ஸ்விட்சர்லாந்து நாடுகளோடு உள்ள இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தங்களை மீளாய்வு மற்றும் மறுபரிசீலனை செய்தி திருத்தி அமைத்தவற்றை உள்ளடக்கிய பண மோசடித் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. பி. நோட்டுகள் மூலம் வெளிநாட்டுத் தனியார் நிதி நிறுவனங்கள் முதலீடு செய்வது மூலம் செபி (SEBI) குறுக்கீடு மூலம் கட்டுப்படுத்தப்பட்டன.

இந்த அனைத்து நடவடிக்கைகளுமே முக்கியமானவைதான் என்றாலும் இதில் இவற்றில் எதுவுமே, ஊழல் பேர்வழிகளின் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர அரசு ஏதோ செய்கிறது என்பதாகப் பொதுமக்களின் கவனத்தைக் கவரவில்லை. மேலும், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை மீட்டுக் கொண்டுவருவதில் அரசாங்கத்தால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்ற உணர்வும் பொதுமக்களிடையே பரவியது. ஊழலுக்கு எதிராக வடிவமைக்கப்பட்ட அலை மறையும் ஆபத்து எழுந்தது.

அப்போதுதான், சரிந்து கொண்டிருக்கும் தனது புகழைத் தூக்கி நிறுத்த, ஊழல், கறுப்புப் பணத்தை அறவே ஒழித்துக் கட்டும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும் பணமதிப்பழிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

புனிதப் பணியை மேற்கொள்ளும் ரட்சகர்?

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி அன்று பிரதம மந்திரி, பணமதிப்பழிப்பு நடவடிக்கை முடிவை அறிவித்தார். அப்போது முந்தைய அரசின் தீமைகளை எடுத்துக் கூறி, அவற்றைக் களைவதுதான் தனது அரசின் பணி என்றார். மேலும், இந்தச் செயல்பாட்டில் ஆட்சி நிர்வாகம் அல்லது அரசு என்பதைவிட ஒரு புனிதப் பணியை மேற்கொண்டிருக்கும் மோடி என்ற தோற்றம் உருவானது. இதன் மூலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசோடு தொடர்புடைய ஊழல் மட்டுமல்லாமல், முடிவெடுக்கத் தெரியாது என்னும் அதன் இமேஜ், பலவீனமான தலைமை, கொள்கை முடக்கம் ஆகியவையும் வெளிப்படுத்தப்பட்டன.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பணமதிப்பழிப்பு என்ற வலுவான முடிவு எடுக்கப்படுகிறது என்றார் மோடி. மேலும் அவர், நாட்டின் சராசரிக் குடிமகன் எப்போதுமே அநீதியை ஏற்றுக்கொள்வதைவிட அசவுகரியத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதை நான் எப்போதும் கண்டு வந்திருக்கிறேன் என்றும் கூறினார். “மக்கள் எப்போதும் நேர்மையின்மைக்கு ஆதரவு தந்ததில்லை. நமது நட்டைத் தூய்மைப்படுத்த, ஊழலுக்கு எதிராக, கறுப்புப் பணத்திற்கு எதிராக, கள்ளப்பணம், பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் சில நாட்கள் தங்களுக்கு ஏற்படப்போகும் கஷ்டங்களைத் தாங்கிக்கொள்ள மாட்டார்களா என்ன? இந்த மகாயாகத்தில் ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்பார் என்று எனக்கு நம் மக்களின் மீது முழு நம்பிக்கை உள்ளது” என்றார் மோடி. நீங்கள் ஒருமைப்பாட்டின் கொண்டாட்டத்தில், நம்பகத்தன்மையின் கொண்டாட்டத்தில் கைகோர்த்துக்கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுத்தார். அவரது ஒட்டுமொத்த பேச்சும் நேர்மை, தூய்மை, நம்பகத்தன்மை, தார்மிகம், ஒருமைப்பாடு ஆகியவை குறித்தே மையம் கொண்டிருந்தன.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒரு சில வாரங்களில், அதன் விளைவுகளால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அசவுகரியம் குறித்து மக்கள் குறை கூறும்போதுகூட, அந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு பதில், தனக்கு எதிராகத் தீய சக்திகள் பிரசாரம் செய்வதாகவே மோடி காட்ட விரும்பினார். “எனக்கு எதிராக எந்த மாதிரியான சக்திகள் செயல்படுகின்றன என்பது எனக்குத் தெரியும்… என்னை அவர்கள் சும்மா விடப்போவதில்லை. என்னை அவர்கள் அழித்துவிடுவார்கள்” என்று கூறினார். மேலும், இந்த நாட்டை எழுபது ஆண்டு காலமாகக் கொள்ளை அடித்தவர்கள் என்று அவர் இவர்களைக் கூறினார். “நான் ஒரு ஃபக்கீர், என்னை அழிக்க அவர்கள் திரண்டுள்ளனர்” என்றும் கூறினார். “அவர்கள் என்னை தொந்தரவு செய்தால், நான் எல்லாவற்றையும் நிறுத்திக்கொண்டு ஒன்றும் செய்ய மாட்டேன் என்று நினைத்தார்கள். ஆனால், என்னை உயிரோடு எரித்தாலும்கூட நான் இவற்றைச் செய்யாமல் இருக்க மாட்டேன்” என்றெல்லாம் உணர்ச்சி பொங்கப் பேசினார்.

இதனால் மக்களின் உணர்ச்சிகள் தட்டி எழுப்பப்ப்பட்டன. சுத்தப்படுத்துவதற்கான இந்தத் தலைவரின் உறுதியில் மக்கள் நம்பிக்கை கொண்டனர். இதனால், தாங்கள் இன்னலுற்ற போதும் மக்கள் இவரை ஆதரித்தார்கள். விமர்சகர்கள் முன்வைக்கும் பகுப்பாய்வுகளைவிட இவரது பேச்சுத் திறனால் மயங்கிய மக்கள் இவரை ஏற்றுக்கொண்டனர் என்பது பலருக்கு ஆச்சரியம் அளித்தது.

(‘பணமதிப்பழிப்பு, ஊழல், கறுப்புப் பணம்: உண்மை கடந்த சகாப்தத்தில் (Era of Post-Truth) சந்தர்ப்பவாத அரசியலில் முற்றுகையிடும் ஆபத்துகள்’ என்னும் தலைப்பில் பேராசிரியர் டி.நரசிம்ம ரெட்டி 22-09-2017 அன்று விஜயவாடா சித்தார்த்தா அகாடமி ஆடிட்டோரியம் அரங்கில் வழங்கிய ஆய்வுரையின் ஏழாம் பகுதி இது. நரசிம்ம ரெட்டி, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பொருளாதாரப் பேராசிரியர். இதன் அடுத்த பகுதி நாளை வெளியாகும் – ஆசிரியர்.)

தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்

பணமதிப்பழிப்பு: முற்றுகையிடும் ஆபத்துகள் - பகுதி 1

பணமதிப்பழிப்பு: முற்றுகையிடும் ஆபத்துகள் - பகுதி 2

பணமதிப்பழிப்பு: முற்றுகையிடும் ஆபத்துகள் - பகுதி 3

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017