மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

டிஜிட்டல் திண்ணை: ‘இதோடு எல்லாம் முடியலை!’

டிஜிட்டல் திண்ணை: ‘இதோடு எல்லாம் முடியலை!’

விவேக் வீட்டுக்குள் நடந்தது என்ன?

மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

“எடப்பாடியும் பன்னீரும் இணைந்தாலுமேகூட இருவருக்கும் இடையே புகைச்சல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அண்மையில் தேனியில் நடந்தஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அந்த புகைச்சல் வெளிப்படையாகவே தெரிந்தது. ‘வருங்கால முதல்வர் ஓ.பி.எஸ். வாழ்க...’ என அந்தக்கூட்டத்தில் சிலர் கோஷங்களும் போட்டனர். விழாவில் பன்னீர் பேசி முடித்ததும் அவரது ஆதரவாளர்கள் எழுந்து கிளம்ப ஆரம்பித்துவிட்டனர். பன்னீருக்கு சொந்த மாவட்டமான தேனியில் தனது செல்வாக்கை காட்டுவதற்காகத்தான் இப்படியான வேலையைப் பன்னீரும் அவரது ஆதரவாளர்களும் செய்தார்கள் என்றும் சொல்கிறார்கள்.

அதனால்தான் அந்தக் கூட்டத்தில் எடப்பாடி பேசும்போது, ‘நானும் பன்னீரும் இரட்டைக் குழல் துப்பாக்கிபோல இணைந்தே செயல்பட்டுவருகிறோம்’என்று சொன்னார். ஆனாலும், அதை பன்னீர் ஆட்கள் யாரும் ரசிக்கவில்லை. ‘பேருக்காக அண்ணனை நிதி அமைச்சர் ஆக்கிட்டு எல்லாவேலைகளும் ஜெயக்குமாரே பார்த்துட்டு இருக்காரு. அவரைத் திட்டமிட்டே எடப்பாடி புறக்கணிக்கிறாரு. ரெட்டைக் குழல் துப்பாக்கின்னு சொன்னதெல்லாம் வெறும் வேஷம்...’ என்று புலம்புகிறார்கள் பன்னீர் ஆதரவாளர்கள்.

தேனியில் மட்டுமல்ல... தேனிக்கு அடுத்து, நெல்லையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிலும், பன்னீர் பேசி முடித்ததும் ஒரு கூட்டம்தானாக விழாத் திடலிலிருந்து வெளியே போனது. இதையெல்லாம் எடப்பாடி கவனித்துக்கொண்டுதான் இருந்தார். சென்னைக்கு வந்த பிறகு தனக்கு நெருக்கமானவர்களிடம் இதையெல்லாம் சொல்லிப் புலம்பியிருக்கிறார் எடப்பாடி.

‘நான் மேடையில் உட்கார்ந்திருக்கும்போதே, வருங்கால முதல்வர் ஓ.பி.எஸ். வாழ்கன்னு கோஷம் போடுறாங்க. அவரும் அதைப் பார்த்து சிரிச்சிட்டு கை ஆட்டிட்டுப் போறாரு... அவரு சொல்லாமலா இவங்க அப்படி கோஷம் போடுவாங்க? என்னை அவமானப்படுத்துற மாதிரி அவர் பேசிமுடிச்சதும் ஒரு கூட்டம் அப்படியே எழுந்து வெளியே போறாங்க. போகட்டும் . இதனால எனக்கு என்ன நஷ்டம் வரப் போகுது. அண்ணன் எப்போசாவான் திண்ணை எப்போ காலி ஆகும்னு எங்க ஊரு பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க. அவரு அப்படித்தான் நினைக்கிறாரு போல இருக்கு!’என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். இந்த உரசலை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்திருக்கிறார் டிடிவி தினகரன்” என்று முடிந்தது அந்தஸ்டேட்டஸ்.

அதற்கு லைக் போட்ட வாட்ஸ் அப், “தர்ம யுத்தம் முடிந்து ஈகோ யுத்தம் தொடங்கிடுச்சு போல!” என்று கமெண்ட் போட்டு விட்டு அடுத்த மெசேஜ்ஜை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது.

“முதல் முறையாக மீடியாவுக்கு பேசி இருக்கிறார் இளவரசியின் மகன் விவேக். ‘திருமணத்தின்போது மனைவிக்கு போட்ட நகைக்கு கணக்குகேட்டார்கள்! மனைவியின் நகைகளுக்கு உரிய ஆவணங்கள் உள்ளன. இந்த ரெய்டைப் பெரிதுபடுத்த வேண்டாம்...’ என்று சொன்னார் விவேக். மீடியாவுக்கு எதுவுமே பேச வேண்டாம் என்பதுதான் முதலில் விவேக் கருத்தாக இருந்தது. ஆனால், விவேக் மாமனார் பாஸ்கர்தான், ‘உங்க தரப்பை நீங்க சொல்லிடுங்க. இல்லைன்னா ஒவ்வொருத்தரும் அவங்க யூகங்களை எழுதிட்டு இருப்பாங்க...’ எனச் சொன்னாராம். அதன் பிறகுதான் பிரஸ் மீட்டுக்குத் திட்டமிட்டார் விவேக். அவர் பேச நினைத்ததை மட்டுமே பேசினார். எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவே இல்லை.

‘இது அம்மாவோட ஸ்டைல். அம்மா சொல்ல நினைக்கிறதை மட்டும் சொல்லிட்டுப் போயிடுவாங்க. தினகரன் பிரஸ் மீட்ல பார்த்தீங்கன்னா அவரா பேசுவாரு... அவரா சிரிச்சுக்குவாரு... அரை மணி நேரம் பிரஸ் மீட் நடத்துவாரு... ஒரு தலைவர்னா அது விவேக் மாதிரி இருக்கணும். விவேக்கைப் பார்த்தாவது தினகரன் தெரிஞ்சுக்கணும்!’ என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர் விவேக் ஆதரவாளர்கள்.

இந்த ரெய்டுக்குப் பிறகு விவேக்கிற்குத் தனியாக ஒரு ஆதரவுக் கூட்டம் உருவாக ஆரம்பித்துள்ளது. அதாவது தினகரனை ஒதுக்கிவிட்டு விவேக்கைமுன்னிலைப்படுத்த அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களே திட்டமிட ஆரம்பித்திருப்பதாகவும் சொல்கிறார்கள்” என்று முடிந்த மெசேஜுக்கு செண்ட்கொடுத்தது வாட்ஸ் அப். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.

“விவேக் வீட்டுக்குள் விசாரணையில் என்ன நடந்தது?” என்ற கேள்வியை ஃபேஸ்புக் போட்டது.

பதிலை வாட்ஸ் அப் டைப்பிங் செய்ய ஆரம்பித்தது. “சில ஆவணங்களில் கையெழுத்துப் போடச் சொல்லி வருமான வரித்துறை அதிகாரிகள் விவேக்கிடம் கேட்டிருக்கிறார்கள். ‘தம்பி இதுல கையெழுத்து போட்டுட்டா உங்களுக்கு நல்லது’ என்று மிரட்டல் தொனியில்கூடப் பேசியதாகச்சொல்கிறார்கள். ‘நான்கு நாட்கள் இல்லை... இன்னும் 40 நாட்கள் வேணும்னாலும் ரெய்டு நடத்துங்க. வீட்டுக்குள்ளேயே என்னை அடைச்சுவெச்சுருங்க. அப்படியெல்லாம் என்னால் கையெழுத்துப் போட முடியாது. நீங்க விசாரணைக்குக் கூப்பிடுங்க… நான் வரேன். கணக்கு கேளுங்க...பதில் சொல்றேன். ஆதாரங்களைக் கொடுக்கிறேன். உங்க விருப்பத்துக்கு என்னால் எதுவும் செய்ய முடியாது’ என அதிரடியாகவே பேசினாராம் விவேக். இதெல்லாம் உடனுக்குடன் டெல்லிக்கும் சொல்லப்பட்டிருக்கிறது.

ரெய்டு முடிந்து அதிகாரிகள் கிளம்பும்போது, ‘தம்பி இதோடு எல்லாம் முடிஞ்சுபோச்சுன்னு நினைக்காதீங்க... நீங்க திரும்ப விசாரணைக்கு வரவேண்டி இருக்கும். நாங்களும் வருவோம்’ என்று சொன்னார்களாம். ‘நீங்க சொல்லுங்க, நான் ரெடியாகத்தான் இருக்கேன்’ என சிரித்தபடியேசொல்லி அனுப்பியிருக்கிறார் விவேக். இதில், விவேக் மனைவி கீர்த்தனாதான் படு அப்செட் ஆகிவிட்டாராம். அவரை சமாதானப்படுத்துவதற்குவிவேக் ரொம்பவே சிரமப்பட்டுவிட்டதாகவும் சொல்கிறார்கள்” என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ்அப்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017