மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி -6

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி -6

தமயந்தி

நான் சுதர்சனை சந்தித்த அந்த நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. என்னிடம் முதலில் தயங்கித் தயங்கி தான் பேச ஆரம்பித்தான். ஏதோ ஒன்றை சொல்ல நினைத்து பின் சொல்லாமல் இருக்க தயங்கி தன்னைத் தானே தடுத்துக் கொண்ட போராட்டம் அவனிடம் தெளிவாகத் தெரிந்தது. சுதர்சன் சரியாக பதினைந்து வயதில் இருக்கும் குழந்தையும் இளைஞனுமான பையன். அவனது வலது கை திடீரென வீங்கி மடக்க முடியாமல் கணுக்கை பக்கமாக வீங்குகிறது. மிக நன்றாக படிக்கும் அவன் பரீட்சை எழுத முடியாமல் போக அவனது அம்மாவும் அப்பாவும் அதீத கவலை கொள்கின்றனர்.

அவனது அப்பா ஒரு பல் மருத்துவர். அவனது பெரியப்பா அவர்கள் வாழும் நகரில் உள்ள மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர். பல் வைத்தியருக்கும் அறுவை சிகிச்சை மருத்துவருக்கும் இடையிலான பொருள் ஈட்டு சக்தி நம் அனைவருக்கும் தெரிந்ததே. அதனால் சுதர்சன் தன் பெரியப்பா மாதிரியே அறுவை சிகிச்சை மருத்துவராக வர வேண்டும் என்று சொல்லியே அவனது அம்மா அவனை வளர்த்து வருகிறார். அவனுக்கும் அவனது பெரியப்பாவின் பணம் ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் அவரை மதிப்பதைக் கண்கூடாகப் பார்த்து அதையே லட்சியமாகக் கொள்கிறான். அவனுக்கு திடீரென ஏற்பட்ட இந்த கை வீக்கமும் முடக்கமும் அவனுக்கு மட்டுமல்ல அவனது அம்மா அப்பாவிற்கும் மிகப் பெரிய ஒரு கவலையை ஏற்படுத்தியது.

பார்க்காத வைத்தியமில்லை. சாப்பிடாத மாத்திரை இல்லை. ஆனால், கை வீக்கமோ மடங்கிய விதமோ மாறவில்லை. பின்பே சென்னைக்கு மனோதத்துவ பிரச்னை ஏதுமிருக்குமா என பார்க்க கூட்டி வந்திருக்கிறார்கள். மனநல மருத்துவமனையில் அவனை ஒரிரு நாட்கள் உள் நோயாளியாக சேர்த்துக் கொள்கின்றனர். முதல் நாள் கொஞ்சம் விலகியே இருக்கிறான் சுதர்சன். பின் அடுத்த நாள் மருத்துவர் தன்னுடன் அவனை நீச்சல் குளத்திற்கு கூட்டிப் போயிருக்கிறார். அவனுக்கு நீச்சலின் மேல் பெரிய நேசம் உண்டு. அங்கு தன்னையறியாமல் வீங்கிய கைகளைப் பொருட்படுத்தாமல் கைகள் மடங்கி இருந்தது தானாக விரிந்து நீச்சலடித்திருக்கிறான்.

பின் மருத்துவமனைக்கு வந்து எத்தனை மணி நேரம் கேட்டும் அவன் எதுவுமே பேசவில்லை. மறுபடி வலது கையை மடக்கிக் கொண்டான். வெளிப்படையாக எதுவுமே பேச விரும்பவில்லை அவன். மற்ற மருத்துவமனைகளில் அவன் கை வலிக்கான மருந்து கொடுத்தும் கேட்காததால் அவனுக்கு அனதீஸ்யா கூட கொடுக்கப்பட்டிருக்கிறது. அது கூட நிரந்தர தீர்வல்ல. இரண்டு நாட்களுக்கு மட்டுமே வலியில்லாமல் இருந்திருக்கிறது.. பின் என்ன தான் பிரச்னை என்பதை ஆழ்மன சிகிச்சையின் படி அறிந்த போதே மருத்துவர்களிடம் அவன் மனதை விட்டு நீண்ட நேரம் அழுதிருக்கிறான். அவன் அப்பா தற்கொலை செய்து கொள்ள தூக்கு போட முயற்சித்த போது மடக்கி வைத்திருக்கும் கையால் தான் கத்தி வைத்து கயிறை அறுத்ததாக சொல்லியிருக்கிறான்.

அவனது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சதா பண விஷயங்களில் சண்டை வந்தபடி இருந்திருக்கிறது. எப்போதுமே அம்மா தன் கணவரது அண்ணனை அவரோடு ஒப்பிட்டே பேசியதில் அவரது தன்மானம் காயப்பட்டிருக்கிறது. தொடர்ந்து நடக்கும் சண்டைகள் சுதர்சனின் மனநிலையை வெகுவாக பாதித்திருக்கிறது.

அவன் அப்பா தற்கொலை முயற்சி மேற்கொண்ட போது அவர் கால்களும் உடலும் துடிக்க கதறிய போது அதைப் பார்த்து அவரைக் காப்பாற்ற கத்தி எடுத்து அவரின் கனத்த உடலைத் தாங்கி கயிற்றை அறுத்து காப்பாற்றி இருக்கிறான். அதுவே அவன் கைகள் உதற ஆரம்பித்திருக்கின்றன. அவர்கள் மூவரும் சேர்ந்து நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்ல மாட்டோம் என்று சத்தியம் செய்து கொண்டிருக்கின்றனர். அந்த காட்சியும் உணர்வும் சுதர்சனிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

அப்படி இருக்கும் போது இப்படி இந்த வலது கை வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. எந்தக் கையால் கத்தியால் கயிறை அறுத்தானோ அந்தக் கை. அது வளைந்து மடங்கியது. பின் நிமிர வைக்க முடியவில்லை. மனம் ஒரு விஷயத்திலிருந்து விடுபட விரும்பி வேறொன்றில் ஈடுபடும். மனம் என்பது காற்றின் நீர்குமிழி. பறக்கும் திசைகளிலேயே வெடித்து சிதறும். இதை ஆங்கிலத்தில் Dissociative Disorder என்று சொல்வார்கள். தன் சுய அடையாளத்திலிருந்து விலகி தனக்கு சாதகமான மனநிலையில் மனம் தன்னை இணைத்துக் கொள்வதையே நாம் அப்படி நினைக்கிறோம். சுதர்சனுக்கு கை வீக்கம் வந்தப் பிறகு அம்மாவும் அப்பாவும் அவனை கவனித்துக் கொண்ட விதமும் சண்டையிடாமல் இருந்ததும் மிகவும் பிடித்திருந்திருக்கிறது. அதுவே, அத்தகைய மனநிலையில் அவனை தொடரவும் அதே அவனது அடையாளமாக மாற்றவும் முற்பட்டது.

எல்லாம் சரி. ஆனால், எங்கிருந்து வந்தது அந்த கை வீக்கம்? அவனை கண்காணிக்க ஆரம்பித்தார்கள் . அவன் கழிவறைக்கு சென்று வரும் போது தான் கையில் வீக்கம் தென்பட துவங்குகிறதென்பது தெரிந்த பிறகே அவன் அங்கு கைகளை அடித்து காயப்படுத்திக் கொள்கிறான் என்பதை உணர்கிறார்கள்.

நீண்ட நேர உரையாடலுக்குப் பிறகு அவனது பிரச்னைகளை அறிந்து கொள்ளும் மருத்துவர்கள் அவனுக்கு ஹிப்னாடீஸ் மருத்துவம் மூலமாக சிகிச்சை அளிக்க அவன் மனதில் உறுதியாக நம்பும் அவனது வலக்கை கோளாறு மெல்ல சரியாக ஆரம்பிக்கிறது. மனதை ஹிப்னாடீஸ் செய்வதன் மூலம் எல்லாமே சரியாக தான் இருக்கிறது என்று சுதர்சனை நம்ப வைத்திருக்கிறார்கள்.

சிகிச்சையின் இரண்டாவது நாளே அவன் மிக அழகாக தன் வலது கையால் இருபது பக்கங்கள் எழுத அம்மாவும் அப்பாவும் ஆச்சர்யப்பட்டு போய் இருக்கிறார்கள். அவர்களுக்கும் பிள்ளை முன்னால் சண்டை போடுவதால் உண்டாகும் பாதிப்புகள் எடுத்து சொல்லப்பட்டது. மனதின் பாதிப்பு உடல் வழியாக வெளிப்படுவது தான் மனதின் இயல்பு. பெண்கள் சாமியாடுவது என்பது இதன் ஒரு வெளிப்பாடு தான். மன அழுத்தம் என்பது கூட சாமியாக அடையாளப்படுத்தப்படும் சூழலில் குறிப்பாக ஒரு செயலை புரிந்து கொள்ள கூட பல மாதங்கள் ஆகின்றன.

எதைக் குறித்தும் வெளிப்படையாக உரையாடாமல் மனதிலேயே பூட்டி வைத்து வேறொன்றாக மாறி வேறொரு விதத்தில் வெளிப்படுத்துவது மன அழுத்தத்தின் உச்சக் கட்டம். இன்று சுதர்சன் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். பணம் மட்டும் வாழ்க்கையில்லை என்று அவனது அம்மா அப்பாவும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் சந்திப்போம்... அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை!

தகவல்: டாக்டர் சுனில்குமார் மற்றும் டாக்டர் ஜெயசுதா காமராஜ் - மைண்ட் ஜோன் மருத்துவமனை

எழுத்தாக்கம்: தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது ‘அக்கக்கா குருவிகள்’, ‘சாம்பல் கிண்ணம்’ சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு ‘இந்த நதி நனைவதற்கல்ல’. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் ‘விழித்திரு’ திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

படங்கள்: கூகுள் இமேஜ்

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி!

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி - 2

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி - 3

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி – 4

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயகண்ணாடி 5

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

செவ்வாய் 14 நவ 2017